You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கால்பந்து விளையாட்டில் சாதிக்க போராடும் வீராங்கனை நந்தினியின் கதை #iamthechange
- எழுதியவர், சிவக்குமார் உலகநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
(Be the Change என்றார் காந்தி. Iam the Change என்கிறார்கள் இவர்கள். ஒன்று மற்ற ஒரு வெளியிலிருந்து சுயம்புவாக எழுந்து வந்து எல்லோருக்குமான உந்துதலாக மாறி நிற்கும் நம்பிக்கை மனுசிகளின் கதைகளை பிபிசி தமிழ் தொகுத்துள்ளது. அதன் 21வது அத்தியாயம் இது.)
எந்த ஒரு ஆதாரமும், பின்னணியும் இல்லாமல் வென்றவர்கள் மற்றும் வெல்ல நினைப்பவர்கள்தான் இந்த பூமியின் எல்லா துயரங்களையும், அவநம்பிக்கைகளையும் உடைத்து சாதித்து காட்டுவோம் என்ற நம்பிக்கையைத் தூண்டுகிறார்கள்.
ஒரு கார்கூட எளிதில் நுழைய முடியாத மிக சிறிய சாலையில் வாடகை வீட்டில் வசித்து வரும் 23 வயது பெண் நந்தினி அப்படிப்பட்டவர்தான்.
மிகவும் எளிய பின்னணியில் பிறந்து வாழ்ந்து வரும் நந்தினி, தன் வயதையொத்த ஆண், பெண்களிடம் இருந்து மாறுபட்டு நிற்பது அவரது கால்பந்து விளையாட்டு திறமையால்தான்.
''எனக்கு எல்லாமே கால்பந்து விளையாட்டு மட்டுமே. இடி மழை, சுள்ளுனு அடிக்கிற வெயில், கொட்டுற பனி எல்லாத்தையும் இதுக்காக தாங்கிப்பேன். எழுந்திருக்கவே முடியாத காய்ச்சல் வந்தாலும், கோல்-னு மைதானத்தில் எப்போதும் ஒலிக்கும் குரல்கள் என்னை எழுந்திருக்க மட்டுமில்லை ஓடவே வைச்சிரும்'' தனது விளையாட்டின் மீதுள்ள தீராத காதலை வார்த்தைகளாக நம்மிடம் வெளிப்படுத்தினார் நந்தினி.
2018-ஆம் ஆண்டில் ஒடிசாவில் நடந்த தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்பை நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ்நாடு வென்று சாதனை படைத்தது. இந்த அணிக்குத் தலைமை தாங்கியது நந்தினி.
''மறக்கவே முடியாத வெற்றி அது. பள்ளி, பல்கலைக்கழக, தேசிய அணிகளில் விளையாடி பல வெற்றிகளைக் குவித்த போதிலும், முதல்முறையாகத் தமிழக அணி தேசிய அளவிலான சாம்பியன்ஷிப்பை வென்றது மிகவும் மகிழ்ச்சியை அளித்தது'' என்று கூறினார்.
''என் ஆதர்ச வீரர் மெஸ்ஸி; அவரது அற்புதமான ஷாட்கள், ஆட்ட நுணுக்கங்களை நாள் முழுவதும் என்றாலும் பார்த்து கொண்டிருப்பேன்'' என்று சிரித்து கொண்டே கூறும் நந்தினிக்கு மெஸ்ஸி போல ஆட வேண்டும் என்பதே நீண்ட நாள் கனவு.
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
மகளிர் கால்பந்துக்கு தேவையான அங்கீகாரம் அரசு மற்றும் ரசிகர்கள் தரப்புகளிலிருந்து இன்னமும் முழுமையாக கிடைக்க வேண்டும் என்பது இவரது விருப்பமாக உள்ளது.
உலகப்புகழ்பெற்ற கால்பந்து விளையாட்டில் சாதிக்கத் துடிக்கும் வீராங்கனைக்கு ஏராளமான சவால்கள், போராட்டங்கள் இருப்பது இயல்பான ஒன்று.
ஆனால், இந்தியாவில் விளையாட்டு ரசிகர்களின் மனதில் தனது இருப்பை பதிவு செய்ய இந்திய கால்பந்துதுறையே கடுமையாக போராடும்போது நந்தினியின் போராட்டம் இன்னமும் இரட்டிப்பாகிறது.
பள்ளிக்காலத்தில், முதலில் தடகள விளையாட்டில் ஆர்வம் செலுத்திய நந்தினி, தனது ஆசிரியையின் உத்வேகத்தால் கால்பந்து விளையாட்டில் காலடி எடுத்துவைத்ததாக நினைவுகூர்ந்தார்.
மிகவும் எளிய குடும்ப பின்னணி, பொருளாதார சிக்கல்கள், தந்தையின் இழப்பு என எல்லா இடர்பாடுகள், தடைகளைத் தாண்டி நந்தினிக்கு உத்வேகம் அளிப்பது கால்பந்து விளையாட்டும், மைதானமும்தான்.
''ஆம், என்னை உயிர்பிப்பது கால்பந்து மைதானத்தில் கேட்கும் கரகோஷமும், கோலை நோக்கி பாயும் பந்துதான். இதுவே தொடர்ந்து என்னை இயக்கிக் கொண்டிருக்கிறது. கால்பந்துக்காக ஓடும் வாழ்க்கை எனக்குப் பிடித்திருக்கிறது. நிச்சயம் சாதிப்பேன். தேசிய அளவிலும், மகளிர் கால்பந்தை மேலும் மேம்படுத்தவும் தொடர்ந்து போராடுவேன்'' என்று நம்பிக்கையுடன் மிளிர்கிறார் நந்தினி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: