தமிழ்நாடு இந்தியாவின் சிறந்த மாநிலம் : புள்ளிவிவரம் கூறுவது என்ன? -விரிவான தகவலகள்

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி ஒட்டுமொத்தச் செயல்பாட்டில் தமிழக அரசு முதலிடத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாடு சிறந்து விளங்குவதாகக் கருதப்படும் பல பிரிவுகளில், பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இது ஏன்?

கடந்த சில நாட்களுக்கு முன்பாக மத்திய அரசின் நிர்வாகச் சீர்திருத்தத் துறை மற்றும் பொதுக் குறை தீர்ப்புத் துறை மாநில அரசுகளின் நிர்வாகம் குறித்த தரவரிசைப் பட்டியல் ஒன்றை Good Governance Index என்ற பெயரில் வெளியிட்டது.

தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், ஆந்திரப் பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்கள், மலைப்பிரதேச மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என மூன்று வகைகளில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, அவை தரவரிசைப்படுத்தப்பட்டன.

இதில் பெரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு உட்பட 18 மாநிலங்கள் இடம்பெற்றிருந்தன. இவற்றில் ஒட்டுமொத்தச் செயல்பாட்டின் அடிப்படையில் தமிழ்நாடு 18 மாநிலங்களிலும் சிறந்த மாநிலமாக தரவரிசைப்படுத்தப்பட்டிருக்கிறது. கடைசி இரு இடங்களில் உத்தரப்பிரதேசமும் ஜார்க்கண்டும் இடம்பெற்றிருக்கின்றன. யூனியன் பிரதேசங்களின் பட்டியலில் நல்லாட்சி தரும் சிறந்த மாநிலமாக புதுச்சேரி இடம்பெற்றுள்ளது.

ஒட்டுமொத்த செயல்பாடு தவிர முக்கியமான பத்து பிரிவுகளின் கீழும் மாநிலங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. விவசாயம் மற்றும் அதன் துணைத் தொழில்கள், வர்த்தகம் மற்றும் தொழில்துறை, மனிதவள மேம்பாடு, பொது சுகாதாரம், பொது உள்கட்டமைப்பு, பொருளாதார மேலாண்மை, சமூக நலன் மற்றும் மேம்பாடு, நீதித் துறை மற்றும் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், மக்களை மையப்படுத்திய ஆட்சி ஆகியவைதான் அந்த பத்துப் பிரிவுகள்.

இந்தப் பத்துப் பிரிவுகளில் தமிழ்நாடு பொது உள்கட்டமைப்பு, நீதித் துறை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. பொது சுகாதாரத்தில் கேரளாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. ஆனால், வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் 14வது இடம்தான் தமிழ்நாட்டிற்குக் கிடைத்திருக்கிறது.

அதேபோல, சமூக நலத் துறையில் 7வது இடமும் மனித வள மேம்பாட்டுத் துறையில் ஐந்தாவது இடமும் கிடைத்திருக்கிறது.

"ஒட்டுமொத்தமாக முதல் மூன்று இடங்களில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா இருப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால், தனித்தனிப் பிரிவுகளில் புள்ளிகளை எடுத்துப்பார்த்தால் ஆச்சரியமளிக்கிறது. குறிப்பாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை பிரிவுகளில் தமிழ்நாட்டிற்கு 14வது இடமும் மகாராஷ்டிரத்திற்கு 11வது இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த இரு மாநிலங்களும்தான் இந்தியாவிலேயே அதிக தொழில்மயமான மாநிலங்கள். தொழிற்சாலைகளே பெரிதாக இல்லாத ஜார்க்கண்ட் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது" எனச் சுட்டிக்காட்டுகிறார் புள்ளியியல் வல்லுனரான ஆர்.எஸ். நீலகண்டன்.

மனித வள மேம்பாட்டுத் துறையில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கும் நிலையில், தெலங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் பிஹாருக்கும் கீழே மதிப்பிடப்பட்டுள்ளன. 100 சதவீத எழுத்தறிவு பெற்ற கேரளாவுக்கு 4வது இடமே கிடைத்திருக்கிறது.

"எந்தப் புள்ளிவிவரத்திற்கு எவ்வளவு மதிப்பெண்கள் தருகிறார்கள் என்பதைவைத்துதான் இந்தப் பிரச்சனையை விவாதிக்க முடியும். குறிப்பாக தொழில்துறையை எடுத்துக்கொண்டால், 'வர்த்தகம் மற்றும் தொழில்துறைப் பிரிவில் தொழில்நடத்த எளிதான இருக்கும் சூழல் (Ease of doing business)' என்ற அம்சத்திற்கு 90 சதவீத வெயிட்டேஜ் கொடுக்கப்படுகிறது. தவிர, இந்த அம்சத்திற்கு மதிப்பெண் வழங்குவதும் மத்திய அரசுத் துறைகள்தான்" என்கிறார் ஆர்.எஸ். நீலகண்டன்.

ஆகவே, இந்தப் பிரிவில் மத்திய அரசு எந்த மாநிலத்திற்கு Ease of doing businessல் அதிக புள்ளிகளை வழங்குகிறதோ, அந்த மாநிலம் முதல் சில இடங்களில் பட்டியலிடப்படும். உண்மையிலேயே தொழிற்சாலைகள் அதிகம் உள்ள மாநிலம், கடைசி இடத்தைக்கூட பெறக்கூடும். காரணம், தொழிற்சாலைகள், தொழிலாளர்கள், உற்பத்தி ஆகியவற்றை வைத்து இது மதிப்பிடப்படுவதில்லை என்பதுதான்.

"இந்த மதிப்பீட்டு முறையில், உள்ளீட்டிற்கு (input) அதிக முக்கியத்துவம் தரப்படுகிறதே தவிர, விளைவுகளுக்கோ, உற்பத்திக்கோ கூடுதல் முக்கியத்துவம் தரப்படுவதாகத் தெரியவில்லை" என்கிறார் ஆய்வாளர் ஜெயரஞ்சன்.

கல்வியை எடுத்துக்கொண்டால், எவ்வளவு பேருக்கு கல்வி கொடுக்கப்படுகிறது, எவ்வளவு பேர் எழுத்தறிவுபெற்றிருக்கிறார்கள் என்ற அம்சத்திற்குப் பதிலாக கல்வியின் தரத்திற்கும் மாணவர்கள் இடைநிற்றல் குறைவாக இருக்கும் அம்சத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மிகக் குறைவாக மாணவர்கள் சேர்ந்தாலும், அவர்கள் வெளியேறாமல் இருந்தால்போதும். கூடுதல் புள்ளிகள் கிடைத்துவிடும். இதனால்தான் மனித வள மேம்பாட்டுக் குறியீட்டில் கர்நாடகம், பிகாருக்குக் கீழே இருக்கிறது.

சுற்றுச்சூழலைப் பொறுத்தவரை, 'Climate Change'ஐ எதிர்கொள்ள மாநிலம் தழுவிய ஒரு செயல் திட்டம் இருந்தாலே போதுமானது. 40 சதவீத புள்ளிகள் அதற்கெனத் தரப்படும். அந்தச் செயல்திட்டம், செயலுக்கு வருமா, அதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா என்பதெல்லாம் இந்த மதிப்பீட்டில் பொருட்டே இல்லை.

சமூக நலம் மற்றும் வளர்ச்சித் துறையில் சட்டீஸ்கர், மத்தியப்பிரதேசத்திற்கும் கீழே ஏழாவது இடத்தில் இருக்கிறது தமிழ்நாடு. பொதுவாக சமூகநலத்தில் மேம்பட்டிருப்பதாகக் கருதப்படும் தமிழ்நாட்டைப் பொறுத்தவை இந்த தரவரிசை ஆச்சரியமான ஒன்றுதான்.

"இதற்குக் காரணம், மாநில அரசின் சமூக நலக் கொள்கைகளால் என்ன நடந்திருக்கிறது என்பதை கணக்கில் கொள்ளாமல், வேறுசில புள்ளிவிவரங்களை கணக்கீடுசெய்வதுதான்" என்கிறார் ஜெயரஞ்சன்.

இந்த மதிப்பீடுகளில் வேறு சில விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது இந்த மதிப்பீடுகள் எல்லாமே ஓரிரு ஆண்டுகளில் நடந்த விஷயங்களை வைத்து ஏற்படுபவை அல்ல எனச் சுட்டிக்காட்டுகிறார் ஜெயரஞ்சன்.

"குறிப்பாக பொது சுகாதாரத் துறையில் தமிழகம் முன்னிலையில் இருக்கிறதென்றால், கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழக அரசு சிறிது சிறிதாக சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்தியிருக்கிறது என்று அர்த்தம். இந்த மேம்பாட்டிற்கு, கடந்த பல ஆண்டுகால நிர்வாகங்கள், அரசுகள் அனைத்தும் பொறுப்பு. அவையே பாராட்டத்தக்கவை" என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :