You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னை தீவுத்திடலை விட்டு வெளியேற்றப்படும் குடியிருப்புவாசிகள் - நடப்பது என்ன?
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
கூவம் நதியை தூய்மைப்படுத்தும் பணியில் ஒரு பகுதியாக, சென்னை நகரத்தின் பழமையான குடிசைப்பகுதியான தீவுதிடலில் வசிக்கும் சுமார் 2,000 குடும்பங்களை பெரும்பாக்கத்திற்கு இடம்மாற்றும் பணி தொடங்கியுள்ளது.
கல்லூரி மற்றும் பள்ளிக்கூட மாணவர்களின் தேர்வுகளை கருத்தில்கொண்டு இடமாற்றம் தள்ளிவைக்கப்பட்டாலும், தீவுத்திடலில் உள்ள குடியிருப்பு பகுதியை அகற்றுவதில் மாற்றமில்லை என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீவுத்திடலில் இருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பெரும்பாக்கம் குடிசைமாற்றுவாரியத்திற்கு இடமாற்றம் செய்தால், தற்போது தினக்கூலியாக வேலைக்குச் செல்பவர்கள்,பூ விற்பது, மீன் வியாபாரம், ஆட்டோ ஓட்டுவது உள்ளிட்ட வேலைகளில் இருப்பவர்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என குற்றச்சாட்டு எழுகிறது. ஒரு சிலர் தீவுத்திடலில் இருந்து வெளியேறி, அரசாங்கம் அளிக்கும் பெரும்பாக்கம் குடியிருப்புக்குச் செல்ல தயாராகவும் உள்ளனர்.
சென்னை நகரத்தின் பழமையான குடிசைப்பகுதிகளில் ஒன்று தீவுத்திடல். இங்குள்ள குடியிருப்புகளில் கழிவறை வசதி கிடையாது, நேரடியாக சாக்கடை நீர் கூவம் ஆற்றில் கலப்பதால், நதிநீர்மாசுபாட்டை தடுக்க இந்த இடமாற்றம் தவிர்க்கமுடியாத ஒன்று என்கிறார்கள் அதிகாரிகள்.
''கடந்த ஆண்டு இடமாற்றத்திற்கு ஒப்புதல் பெற்று குடியிருப்புகள் ஒதுக்கிவிட்டோம். சிலர் வெளியேற மறுக்கிறார்கள். தற்காலிகமாக இடமாற்றம் தள்ளிவைக்கப்பட்டாலும், ஆக்கிரமிப்புப் பகுதியை அகற்றுவதில் மாற்றமில்லை. சென்னையில் பல இடங்களில் குடிசைமாற்றுவாரிய குடியிருப்பு அமைக்கப்பட்டு, முடிந்தவரையில் குடிசைவாசிகளுக்கு குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்துள்ளோம். கூவம்நதிக்கரையை தூய்மைபடுத்தவேண்டும் என்பதால் அங்கே குடியிருப்பு அமைக்கமுடியாது,''என்கிறார்கள் அதிகாரிகள்.
குடிசைப்பகுதியில் இருந்து வெளியேற மறுப்பவர்களில் ஒருவரான உஷா(34) தனது மூன்று பெண் குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்.
''இந்த இடத்திலிருந்து நாங்கள் வெளியேறமாட்டோம். எங்கள் உயிரே போனாலும் நாங்கள் போகமாட்டோம். எங்கள் குழந்தைகளுக்கு படிப்பு வசதி இங்கேதான் உள்ளது. 30 கிலோமீட்டர் தொலைவில் சென்று நாங்கள் எவ்வாறு பிழைப்பு நடத்துவோம்? பூ விற்று சம்பாரிக்கும் 200 ரூபாய் வைத்து நாங்கள் வாழ்கிறோம். என் கணவர் இதயநோயாளி. அவருக்கு மருத்துவவசதி இங்குள்ள அரசு மருத்துவமனையில் காப்பீடு திட்டத்தில் கிடைக்கிறது. என் மகள்களுக்கு பள்ளிக்கூடம் இங்குள்ளது. நாங்கள் வெளியேறுவதற்கு பதிலாக இங்கே எங்களுக்கு குடியிருப்பு வசதி தேவை,''என்கிறார் உஷா.
மேலும் அவர், அரசியல்வாதிகள் பலர் தேர்தல் வரும்போது மட்டும் குடியிருப்பு பகுதி நிரந்தரமாக இருக்கும்என போலியாக வாக்குறுதி கொடுத்ததாக குற்றம்சாட்டினார். ''எங்கள் குடும்பம் சுமார் 60 ஆண்டுகளாக இங்கே இருக்கிறோம். என் பெற்றோர் இங்கேதான் இருந்தார்கள். எங்களை வெளியேற்றி,இந்த நகரத்தை தூய்மை செய்வதாக சொல்கிறார்கள். பெரிய வணிகவளாகம், அடுக்குமாடிகளில் முறையான சாக்கடை வசதிகள் இல்லாமல் இருப்பதை காரணம்காட்டி இதுவரை பணக்காரர்களை வெளியேற்றியதாக வரலாறு இருக்கிறதா? ஏழைகள் என்பதால் பாகுபாடு காட்டுகிறார்கள்,''என்கிறார்.
கடந்த ஒருவார காலத்தில், விசிக தலைவர் தொல்திருமாவளவன், சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், சிபிஐயின் தேசிய கட்டுப்பாடுக்குழு தலைவரான ஆர்.நல்லகண்ணு உள்ளிட்டவர்கள், தீவுத்திடல் மக்களை நேரில்சந்தித்தனர்.
இடமாற்றம் காரணமாக மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை மாநகராட்சி அதிகாரிகள், தலைமைச்செயலர் சண்முகம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்களிடம் எடுத்துரைத்துள்ளார்.
பிபிசி தமிழிடம் பேசிய சிபிஎம் கட்சியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் பெரும்பாக்கத்தில் இருந்து சென்னைக்கு வரும் போக்குவரத்து செலவு தினக்கூலி மக்களின் வருமானத்தைப் பாதிக்கும் என்கிறார். ''இங்குள்ளவர்கள் என்ன வேலை செய்கிறார்கள், இவர்களுக்கு மாற்று இடம் கொடுக்கும்பொழுது அவர்களின் அன்றாட வருமானத்தை பாதிக்காமல் எங்கு மாற்றுவது என அரசாங்கம் யோசிக்கவேண்டும். தற்போது தற்காலிகமாக இடமாற்றத்தை நிறுத்திவைத்துள்ளார்கள். ஆனால் இடமாற்றம் செய்த பின்னர், இவர்களில் பலரும் வேலை கிடைக்காமல், பட்டினி கிடைக்கவேண்டிய சூழல் உருவாகும். இவர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, குடியமர்த்துவதுதான் சிறந்த தீர்வாகும்,''என்கிறார் பாலகிருஷ்ணன்.
பெரும்பாக்கம் செல்வதற்கு தயாரான குடும்பங்கள் சிலரிடமும் பேசினோம். ''ஆக்கிரமிப்பாளர்கள் என எங்களை சொல்கிறார்கள். இந்த சென்னை நகரத்தில் பெரிய மாடிவீடுகளில் உள்ளவர்கள் வாழ்வதற்கு காரணம் எங்களை போன்ற குடிசைவாசிகள்தான் தினமும் வியர்வை சிந்தி உழைக்கிறோம். எங்களை ஊருக்கு வெளியே துரத்துகிறார்கள். இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு நான் யாரிடமும் சண்டையிட தயாராக இல்லை. பெரும்பாக்கத்திற்கு போவது என முடிவுசெய்துவிட்டேன். புதுவருடம் நன்றாக அமையும் என நம்புகிறேன்,''என குழப்பத்துடன் பேசினார் மீனா(38).
இலவச குடியிருப்பு பகுதியில் பள்ளி, மருத்துவ வசதியுடன் மக்களை இடம்மாற்றுவதாக மாநகராட்சி உத்தரவாதம் அளித்துள்ளது. ''இந்தியாவில் பல நகரங்களில் குடியிருப்பு பகுதியை அமைத்து மக்கள் இடமாற்றம் செய்யும் முறையைதான் நாங்களும் பின்பற்றுகிறோம். ஆக்கிரமிப்புப் பகுதியில் வசிப்பதைவிட, பெரும்பாக்கத்திற்குச் செல்ல தயாராக உள்ள மக்களிடம் பேசிப்பாருங்கள். ஆற்றோரம் இருப்பதைவிட, அரசாங்கம் கொடுக்கும் வீடு அவர்களுக்கு உதவியாக இருக்கும். ஊடகங்கள் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்துகிறார்கள்,''என்கிறார் ஒரு மூத்த அதிகாரி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :