மகாராஷ்டிர அமைச்சரவை விரிவாக்கம் - துணை முதல்வரானார் அஜித் பவார்; ஆதித்யா தாக்ரே அமைச்சரானார்

மகாராஷ்டிர மாநில முதல்வராக உத்தவ் தாக்ரே பதவியேற்று ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், இன்று (திங்கள்கிழமை) அமைச்சரவை விரிவாக்கம் நடந்தது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத் பவாரின் அண்ணன் மகனான அஜித் பவார் துணை முதல்வராக பதவி ஏற்றார். மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்ரேயின் மகன் ஆதித்யா தாக்ரே கேபினெட் அமைச்சராக பதவியேற்றார்.

முன்னாள் முதலமைச்சர் அசோக் சவானும் கேபினெட் அமைச்சராக உறுதிமொழி ஏற்றார்.

நவம்பர் 29ம் தேதி பல அரசியல் திருப்பங்களை எதிர்கொண்டு உத்தவ் தாக்ரே முதலமைச்சராக பதவியேற்றார். இந்நிலையில் இன்று அமைச்சரவை மற்றும் துணை முதல்வர் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. மேலும் 35 அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.

தமிழ்நாடு, ஹரியானா, தெலங்கானா, பஞ்சாப், ஆந்திரா போன்ற மாநிலங்கள் போலவே தற்போது மகாராஷ்டிராவிலும் தந்தை முதல்வராக இருக்கும்போது மகன் அமைச்சராக பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

துணை முதல்வர் - அஜித் பவார்

நம்ப முடியாத திருப்பமாக மகாராஷ்டிர மாநில அரசியலில் நவம்பர் 23ம் தேதி பாஜகவின் தேவந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக பதவி ஏற்றார். பாரதிய ஜனதா கட்சிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சில சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்ததாக கூறி, அந்த கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் மகாராஷ்டிராவின் துணை முதல்வராக பதவியேற்றார்.

இதனால், அதிர்ச்சி அடைந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்றும், அவர் மீதும் அவருக்கு ஆதரவளிக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நவம்பர் மாதம் கூறியிருந்தார்.

பிறகு ஒரு வழியாக சிவசேனை உறுப்பினர்களைக் கைப்பற்ற நினைக்கும் பாஜகவை சிவசேனை தலைவர் உத்தவ் தாக்ரே முழுமையாக தடுத்து நிறுத்தினார். நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளின் வியக்கத்தக்க திருப்பங்களுக்கு கதை ஆசிரியராக சரத் பவார் விளங்கினார்.

அஜித் பவார் ஆதரவுடன் சர்ச்சைக்குரிய முறையில் முதல்வர் பதவியேற்ற பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தன் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் பதவி விலகினார். இதனால் அஜித் பவாரும் தன் பதவியில் இருந்து விலகி, தனது உறவினரான சரத் பவாருடன் மீண்டும் சேர்ந்தார்.

இந்நிலையில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் துணை முதல்வர் பதவியேற்பு இன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: