தமிழகத்துக்கு பள்ளிக் கல்வி தரவரிசையில் இரண்டாம் இடம் - நிடி ஆயோக்

தினமணி - பள்ளிக் கல்வித் தரவரிசையில் தமிழகம் இரண்டாம் இடம்

நிடி ஆயோக் வெளியிட்டுள்ள 2016-2017ஆம் கல்வியாண்டுக்கான தேசிய அளவிலான பள்ளிக் கல்வித் தரவரிசைப் பட்டியலில் கேரள மாநிலம் முதலிடத்தையும், தமிழகம் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன என்கிறது தினமணி செய்தி.

அதே வேளையில் உத்தரப் பிரதேசம், பிகார், ஜார்க்கண்ட ஆகிய மாநிலங்கள் கடைசி மூன்று இடங்களில் உள்ளன. நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலங்களின் கல்வித் தரத்தை பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆய்வு செய்து நிடி ஆயோக் வகைப்படுத்தியுள்ளது.

ஆசிரியர் - மாணவர் விகிதம், மாணவர்களின் தேர்ச்சி விகிதம், பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதி, நிதிகளை திறம் பட கையாளுதல் உள்ளிட்ட 44 காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

நிடி ஆயோக் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள பள்ளி கல்வியின் தர வரிசை பட்டியலில் நாடு முழுவதும் பெரும் வேறுபாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது.

பள்ளிக் கல்வியின் தரத்தில் ஒட்டுமொத்த செயல்திறன் மதிப்பெண் பட்டியலில் 20 பெரிய மாநிலங்களில், கேரளம் 76.6 சதவீத மதிப்பெண்ணுடன் முதல் இடத்திலும், உத்தரப்பிரதேசம் 36.4 சதவீத மதிப்பெண்களுடன் கடைசி இடத்திலும் உள்ளன. தமிழகம் 73.4 சதவீதத்துடன் 2ஆவது இடத்தில் உள்ளது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - `முடிவுக்கு வந்த சந்தேகம்`

தமிழ்நாட்டில் இரு சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் அதிமுக பாஜகவின் ஆதரவை பெறவில்லை எனவும், அதனால் இருக்கட்சிகளின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது எனவும் நிலவிய சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது தி நியூ இந்தியன் எக்பிரஸ் செய்தி.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் திங்களன்று அதிகாரபூர்வமாக பாஜகவின் ஆதரவை கோரினர்.

பிரதமரை வரவேற்க விமான நிலையம் சென்றபோது பாஜக பொதுச் செயலர் முரளிதர் ராவை சந்தித்ததாகவும், பின் தொலைபேசி மூலம் நாங்குனேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கு ஆதரவு கோரியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முரளிதர் ராவ் இது தொடர்பாக மேலிடத்திற்கு தகவல் அளிக்கப்படும் என்று கூறியதாகவும் விவரிக்கிறது அச்செய்தி.

தி இந்து - `ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை வாங்குவது இந்தியாவின் உரிமை` என்கிறார் ஜெய்சங்கர்

ரஷ்யவிடமிருந்து ஏவுகணை வாங்குவது இந்தியாவின் உரிமை என்று இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தடை குறித்த அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஜெய் சங்கர் இவ்வாறு பேசியுள்ளார் என்கிறது இந்து நாளிதழ்.

"எந்த ஒரு நாடும் நாங்கள் ரஷ்யாவிலிருந்து எதை வாங்க வேண்டும் என்றும், வாங்ககூடாது என்றும் சொல்வதை நாங்கள் விரும்பவில்லை.

அதை தேர்வு செய்வதற்கான சுதந்திரம் எங்களிடம் உள்ளது." என ஜெய் சங்கர் தெரிவித்ததாக மேலும் விவரிக்கிறது அச்செய்தி.

அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் பாம்பேயோவுடனான சந்திப்பின்போது ஜெய் சங்கர் இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை தெரிவித்தார்.

கடந்த ஆண்டு எஸ்-400 வகை ஏவுகணைகளை, 5.2பில்லியன் டாலர்களுக்கு ரஷ்யாவிடமிருந்து வாங்க இந்தியா ஒப்புக் கொண்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :