You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சீனா கொன்ற 10 லட்சம் பன்றிகள்: பொருளாதார மந்தநிலை தீவிரமானது எப்படி?
- எழுதியவர், அனா நிக்கோலாசி டா கோஸ்டா
- பதவி, பிபிசி
கடந்த பத்தாண்டுகளில் சீனாவின் பொருளாதாரம் மந்தமாகி வருகிறது. ஆனால் சமீபத்தில் வெளிவந்த சீனாவின் பொருளாதாரம் குறித்த சில தரவுகள் அந்நாட்டிற்கு புதிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் முதலீட்டாளர்களை பதற்றப்படுத்துவது எது? அதற்கு சீனா எவ்வாறு பதிலளித்துள்ளது?
2008ஆம் ஆண்டு உலக பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் வளர்ந்த நாடுகள் அதிலிருந்து விரைவில் மீண்டெழுந்த சமயத்தில், தனியொரு பாதையில் பயணித்த சீனா, உலக பொருளாதார வளர்ச்சியின் முக்கிய இயந்திரமாக மாறியது.
அமெரிக்காவுக்கு அடுத்து உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக விளங்கி வரும் சீனா, 1990களில் இருந்தே குறைந்த வேகத்திலே பொருளாதார வளர்ச்சியை கண்டு வருகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஆறு சதவீதத்திற்கு மேலாகத் தக்கவைப்பது என்பது சாதாரணமான விடயமல்ல என சீனாவின் பிரதமர் லீ கெகியாங் கூறிய சில வாரங்களிலேயே அந்நாட்டின் தொழில்துறை உற்பத்தி 2002க்கு பிறகு மிகவும் மோசமான நிலையை கடந்த ஆகஸ்டு மாதம் அடைந்தது.
உள்நாட்டுப் பிரச்சனைகள், அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் மற்றும் பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட அனைத்தும் சேர்ந்து சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளன.
"சீனாவின் பொருளாதார மந்தநிலை குறிப்பிடத்தக்க நிலையை நோக்கி செல்கிறது" என்று கூறுகிறார் முன்னணி சந்தை மதிப்பீட்டு நிறுவனம் ஒன்றின் மூத்த பொருளாதார நிபுணரான டோமி வு.
"உள்நாட்டு பொருளாதாரம் பலவீனமடைதல் மற்றும் வெளிப்புறச் சூழல் மோசமடைதல், அதாவது உலகளாவிய மந்தநிலை மற்றும் அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தக பதற்றங்கள் ஆகிய இரண்டும் சீனாவின் பொருளாதார மந்தநிலையில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன."
உலகின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகிக்கும் சீனாவின் பொருளாதாரத்தில் ஏற்படும் எவ்வித ஏற்றத்தாழ்வும், சர்வதேச அளவில் கவலை தரும் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியது.
பீட்டர்சன் இன்ஸ்டிடியூட் ஃபார் இன்டர்நேஷனல் எகனாமிக்ஸை சேர்ந்த கேரி ஹுஃபாவர், சீன வளர்ச்சியில் ஒரு சதவீத வீழ்ச்சி என்பது உலகின் வளர்ச்சியில் இருந்து 0.2 சதவீதத்தை குறைக்கும் என்று கூறுகிறார்.
சீனாவில் என்னதான் நடக்கிறது?
சீன அரசின் தரவுகள் தெளிவற்ற பார்வையை அளிக்கின்றன.
2002ஆம் ஆண்டுக்கு பிறகு மிகவும் குறைந்த வளர்ச்சியை நோக்கி சீனாவின் தொழிற்துறையும், சில்லறை வர்த்தகத்துறையும் சென்றுக்கொண்டிருக்கிறது.
சென்ற ஆண்டோடு ஒப்பிடுகையில் கடந்த ஆகஸ்டில் சீனாவின் ஏற்றுமதி ஒரு சதவீதம் குறைந்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவுக்கான சீனாவின் ஏற்றுமதி 16 சதவீதம் குறைந்துள்ளது, இருநாடுகளுக்கிடையேயான வர்த்தகப் போரின் விளைவுகளை காண்பிக்கிறது.
2000ஆவது ஆண்டின் நடுப்பகுதியிலேயே சீனாவின் இரட்டை இலக்க வளர்ச்சி முடிவுக்கு வந்துட்ட நிலையில், சமீபத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலையானது படிப்படியாக ஏற்பட்ட ஒன்றேயாகும்.
"தற்போதைய சூழ்நிலையில், சீனாவின் பொருளாதாரம் முற்றிலுமாக வீழ்ந்துவிட்டதாக கூற முடியாது. சீனா பல்வேறு துறைகளில் வளர்ச்சியடைவதற்கான வாய்ப்புகள் இன்னும் இருக்கின்றன" என்று கூறுகிறார் எச்எஸ்பிசியின் ஆசிய பிராந்திய பொருளாதார நிபுணர் ஃபிரடெரிக் நியூமன்
பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் முயற்சிகள் பலனளிக்குமா?
வரிக் குறைப்புக்கள் மூலமாகவும், நிதி அமைப்பில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமாகவும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு இந்தாண்டு சீன அரசு முயற்சித்தது.
பல ஆண்டுகளாக பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கு உள்கட்டமைப்பு செலவினங்களை பெரிதும் நம்பியிருந்த சீன அரசு, அதே பாணியை தொடருவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, உள்கட்டமைப்பு துறை முதலீட்டுக்கு அடுத்ததாக வளர்ச்சியை அளிக்கும் வரி குறைப்பில் சீன அரசு இறங்கியுள்ளது.
நிதி மற்றும் பணவியல் கொள்கையின் மூலம் பொருளாதார வளர்ச்சியை தூண்டுவதற்கு சீன அரசு மேலும் பல நடவடிக்கைகளை எடுக்கும் என்று தான் எதிர்பார்த்ததாக கூறும் வு, தற்போது எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் போதாது என்று கவலைப்படுகிறார்.
"அடுத்த ஆண்டுக்குள் வளர்ச்சியை உறுதிப்படுத்த பல உதவிகள் இன்னும் வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால், இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், வளர்ச்சியை உறுதிப்படுத்தும் அளவுக்கு கொள்கை ரீதியிலான நடவடிக்கைகளை அதிகாரிகள் முடுக்கிவிடவில்லை."
வர்த்தகப் போரினால் ஏற்பட்ட வீழ்ச்சி என்ன?
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையிலான வர்த்தகப் போர் ஓராண்டிற்கும் மேலாக தொடரும் நிலையில், இன்னும் பல வரிவிதிப்புகள் இருக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் கூடுதல் வரிவிதிப்பிலிருந்து வரும் பாதிப்பு பலவீனமான யுவானால் ஓரளவிற்கு ஈடுகட்டப்பட்டுள்ளது என்று கூறும் பொருளாதார நிபுணர் ஜூலியன் எவன்ஸ்-பிரிட்சார்ட், அதே நேரத்தில் சீனா மற்ற ஆசிய நாடுகள் வழியாக அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் வரிகளைத் தவிர்ப்பதற்கு முயற்சித்து வருவதாக கூறுகிறார்.
உலகளாவிய ஏற்றுமதியில் சீனாவின் பங்கு கடந்த ஆண்டு ஒப்பீட்டளவில் வளர்ச்சியடைந்துள்ளது என்று கூறும் அவர், சீன ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மற்ற நாடுகளை விட குறைவாகவே வெளிப்பட்டுள்ளது என்பதைக் காட்டுவதாக கூறுகிறார்.
அதே சூழ்நிலையில், இந்த நிச்சயமற்ற சூழ்நிலையை சமாளிக்க முடியாமல் மேற்கத்திய வணிக நிறுவனங்கள் சீனாவிலிருந்து தங்களது உற்பத்தி மையங்களை வேறு நாடுகளுக்கு மாற்றுவதற்குரிய வழிகளை ஆராய்ந்து வருகின்றன.
"இவ்விரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகப் போர் இன்னும் எத்தனை காலத்திற்கு இழுத்துக்கொண்டே செல்கிறதோ, அத்தனை நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியே செல்லும் நிலையை உண்டாக்கும். அதன் மூலம், முதலீட்டிற்கு தகுந்த நாடு என்ற சிறப்பு நிலையை சீனா இழக்கும்" என்று ஜூலியன் கூறுகிறார்.
குறைந்தபட்சம் சீனாவின் உள்நாட்டு சந்தையின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்காவது அந்நாட்டில் உற்பத்தியை தொடரும் தெரிவு குறித்து பல்வேறு நிறுவனங்களும் ஆலோசித்து வருகின்றன.
சீனாவில் உள்ள அமெரிக்க வர்த்தக சபை 2019ஆம் ஆண்டு நடத்திய ஆய்வின்படி, அதன் 65 சதவீத உறுப்பினர்கள், அமெரிக்கா - சீனாவுக்கிடையேயான வர்த்தக பதற்றங்கள் தங்களின் நீண்டகால வணிகத் திட்டங்களை பாதித்துள்ளதாக கூறியுள்ளனர். இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில், நான்கில் ஒரு பகுதியினர் சீனாவில் முதலீடு செய்யும் முடிவை தாமதப்படுத்தியுள்ளதாக அந்த ஆய்வு மேலும் கூறுகிறது.
பன்றிக் காய்ச்சல் ஏற்படுத்திய தாக்கம் என்ன?
சீனா முழுவதும் கடந்த ஆண்டு பரவிய பன்றிக் காய்ச்சல் அந்நாட்டின் பொருளாதார சிக்கலுக்கு மற்றுமொரு காரணமாக அமைந்துவிட்டது.
பன்றி இறைச்சி உற்பத்தியில் உலகின் முன்னணி நாடாக உள்ள சீனா, இந்த நோயின் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட பன்றிகளை கொன்றும் பெரிய அளவில் பலன் கிட்டவில்லை.
இதன் காரணமாக, பன்றி இறைச்சியில் ஏற்பட்ட பற்றாற்குறை, அதன் முந்தைய ஆண்டின் விலையை விட 46.7 சதவீதம் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்தது.
"பன்றி இறைச்சியின் விலை கிட்டத்தட்ட இரண்டு மடங்கு ஆனது, சீனாவின் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை பெரிதும் பாதித்தது" என்று ஹுஃபாவர் கூறுகிறார்.
சீனர்களின் முக்கியமான உணவுப்பொருளாக விளங்கும் பன்றி இறைச்சி, அந்நாட்டின் ஒட்டுமொத்த இறைச்சி நுகர்வில் 60 சதவீதத்தை தாண்டுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்