You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸால் இரானில் ஒரே நாளில் 97 பேர் பலி; எல்லைகளை மூடும் உலக நாடுகள் Corona Latest updates
சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இரானில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் 97 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இரானில் இதுவரை மொத்தம் 611 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
12,729 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இரான் சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த புதன் கிழமையன்று செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில் இரான் அரசு இறுதி சடங்கு செய்ய குழிகளை தோண்டுவது போன்ற காட்சிகள் வெளியாகின.
Corona Virus: viral video in Iran
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான சில முக்கிய நிகழ்வுகளை இங்கு தொகுத்துள்ளோம்.
- அமெரிக்காவில் தீவிரமாக பரவிவரும் கொரோனா வைரஸை கட்டுக்குள் வைக்க அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார் அதிபர் டொனால்ட் டிரம்ப். அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,701ஆக உள்ளது. இதுவரை 40 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர். பள்ளிகளை மூடுவது, விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மிகப்பெரிய கூட்ட நிகழ்வுகளுக்குப் பல மாகாண அரசுகள் தடை உத்தரவு பிறப்பித்துள்ளன.
- கொரோனா வைரஸ் தொற்றின் மையப்புள்ளியாக தற்போது ஐரோப்பா இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார். மிகத் தீவிரமான நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்க வேண்டும் என்றும், இந்தத் தீயை எரிய விடாதீர்கள் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
- ஐரோப்பாவிலேயே கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலியில் கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 250 பேர் மரணித்துள்ளனர். இதுவரை அங்கு மொத்தமாக 1,266 பேர் பலியாகியுள்ளனர். 17,660 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- இத்தாலியை அடுத்து மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மற்றொரு நாடான ஸ்பெயினில் வெள்ளிக்கிழமை அன்று பலி எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்து 120-ஐ தொட்டது. அங்கு மட்டும் சுமார் 4,231 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,876ஐ எட்டியுள்ளது. இதுவரை 79 பேர் அங்கு பலியாகி உள்ளனர்.
- ஜெர்மனியில் 3,062 கொரோனா தொற்று நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு இதுவரை 5 மரணங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன.
- ஐக்கிய ராஜ்ஜியத்தில் இதுவரை 798 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 11 மரணங்கள் பதிவாகியுள்ளன.
- உலகளவில் 123 நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 1,33,500ஆக உயர்ந்துள்ளதாகவும், 5000 பேர் இதுவரை பலியாகி இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
- டென்மார்க், செக் குடியரசு, ஸ்லோவெகியா, மால்டா, உக்ரைன், பாகிஸ்தான் மற்றும் ஹாங் காங் உள்ளிட்ட நாடுகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. அதுமட்டுமின்றி, பயணக் கட்டுபாடுகளையும் அறிவித்துள்ளன.
- இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா தொற்றுக்கு மேற்கு டெல்லியை சேர்ந்த 68 வயது பெண்மணி ஒருவர் பலியாகியுள்ளார். இந்தியாவில் பதிவாகும் இரண்டாவது கொரோனா மரணம் இதுவாகும்.
- நியூசிலாந்து நாட்டிற்குள் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென அந்நாடு அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பானது ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் அமலாகும்.
- நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் இந்த அறிவிப்பினை வெளியிட்டார். அவர், "இந்த அறிவிப்பு 16 நாட்களுக்குப் பின் மறு ஆய்வு செய்யப்படும் மற்றும் நியூசிலாந்து துறைமுகங்களில் ஜூன் 30 வரை எந்த கப்பலும் அனுமதிக்கப்படாது," என்றார்.
- நியூசிலாந்தில் 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- அபு தாபியில் உள்ள லூவர் அருங்காட்சியகம் ஞாயிற்றுகிழமையிலிருந்து மார்ச் மாதம் இறுதி வரை மூடப்படுகிறது என அருங்காட்சியகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் அனைத்தும் கொரோனா வைரஸ் காரணமாக மூடப்படுகிறது என ஐக்கிய அரபு எமிரேட் அரசு தெரிவித்துள்ளது.
- வேல்ஸில் 22 புதிய நோயாளிகள் கோரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக வேல்ஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை 60 பேர் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: ஸ்பெயினில் ஒரே நாளில் அதிகரித்த உயிரிழப்பு; அவசர நிலை அறிவிப்பு - அண்மைய தகவல்கள்
- மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திலிருந்து வெளியேறிய பில்கேட்ஸ் - என்ன காரணம் தெரியுமா?
- மலேசியாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற நிகழ்வில் கொரோனா நோயாளி: பலருக்கும் பரவி இருக்கலாம் என அச்சம்
- கொரோனாவால் இலங்கையில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறதா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: