இதயத்தை பாதிக்கும் காரணிகள் மூளையையும் பாதிக்கும்

பட மூலாதாரம், Getty
ஆரோக்கியமற்ற அன்றாட பழக்கவழக்கங்கள் ஒருவரின் இதயத்தை மட்டுமல்ல மூளையையும் பாதிக்கும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள். இத்தகைய பாதிப்பு 35 வயது இளைஞர்களுக்குக் கூட ஏற்படக்கூடும் என்றும் இவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
குறிப்பாக, ஆரோக்கியமற்ற அன்றாட பழக்கவழக்கங்கள், ஒருவரின் இதய நோயை அதிகப்படுத்துவதுடன், ஒருவரின் மூளையின் செயற்பாட்டுத் திறனையும் பாதிக்கிறது என்று டொச் நாட்டு ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.
35 வயதுக்கும் 82 வயதுக்கும் இடையிலான 3800 பேரிடம் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களின் நினைவாற்றல், திட்டமிடும் திறன் மற்றும் வாதத்திறமை ஆகியவை பரிசோதிக்கப்பட்டன. இந்த பரிசோதனைகளின் முடிவில், அவர்களின் புகைபிடிக்கும் பழக்கமும், அவர்களிடம் காணப்பட்ட அதிகரித்த கொலெஸ்ட்ரால் கொழுப்பும், அவர்களின் நினைவாற்றல் மற்றும் தேர்வுகளில் தேர்ச்சி பெறும் தன்மையை பாதிப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
இது தொடர்பான ஆய்வின் முடிவுகள் ஸ்ட்ரோக் என்கிற மருத்துவ சஞ்சிகையில் வெளியாகியிருக்கிறது.
மூளையின் செயற்பாடுகள் 45 வயதாகும்போதே கூட சிலருக்கு மங்கத்துவங்குவதாக ஏற்கெனவே மருத்துவ ஆய்வாளர்கள் கண்டறிந்திருந்த நிலையில், 45 வயதுக்கும் முன்பே கூட இத்தகைய பாதிப்புக்கள் ஏற்படுமா என்று இந்த ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர். இந்த ஆய்வில் பங்கேற்றவர்களின் மூளையின் செயற்பாடுகள் பரிசோதிக்கப்பட்டன.
அடுத்தகட்டமாக, பங்கேற்பாளர்களின் இதய நோய்களை அதிகப்படுத்தக்கூடிய பழக்கவழக்கங்களையும் இவர்கள் பட்டியலிட்டனர். புகைபிடிப்பது, அதிகரித்த கொலெஸ்ட்ரால், கூடுதல் ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் மற்றும் உடல்பருமன் ஆகியவற்றை கணக்கிட்டனர்.
இதன் மூலம் சோதனையில் பங்கேற்றவர்களில் ஒவ்வொருவரின் அன்றாட பழக்கவழக்கங்களுக்கும், அவர்களின் நோய்களை அதிகப்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகளுக்கும் உள்ள தொடர்பை கண்டறிந்ததுடன், இவர்களின் மூளைத்திறனை கண்டறியும் பரிசோதனைகளின் முடிவுகளை பொருத்திப்பார்த்தனர்.
இதன் முடிவில், கடுமையான இதய நோய் தாக்கக்கூடிய சாத்தியம் அதிகம் இருக்கும் ஆட்களின் மூளைத்திறன் மற்றவர்களை விட ஐம்பது சதவீதம் குறைவாக இருப்பதை இவர்கள் கண்டறிந்தனர்.
உதாரணமாக, தொடர்ந்து புகைபிடிக்கும் பழக்கம் இருப்பவர்களின் மூளைத்திறனின் செயற்பாடு, புகை பிடிக்காதவர்களின் மூளைத்திறன் செயற்பாட்டைவிட ஏறக்குறைய சரிபாதி குறைவதாக இந்த பரிசோதனைகளில் தெரியவந்திருக்கிறது.
புகைபிடிக்கும் பழக்கமுடைய இளவயதுக்காரர்கள், அதன் பாதிப்புக்கள் வயதான பிறகு தான் தங்களை தாக்கும் என்று நினைக்கிறார்கள், ஆனால் அது சரியல்ல என்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட மருத்துவர் ஹன்னெகெ ஜூஸ்டன்.
இந்த பரிசோதனைகளின் முடிவுகள், இதயத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எல்லா காரணிகளுமே மூளையையும் பாதிக்கவல்லன என்பதை காட்டுவதாக, அல்சைமைர் சொசைடி என்கிற அமைப்பு தெரிவித்திருக்கிறது. எனவே, ஒருவரின் அன்றாட பழக்கவழக்கங்கள் அவரது உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, அவர்களின் அறிவுச் செயற்பாட்டையும் பாதிக்கும் என்பதை இளைய தலைமுறை உணரவேண்டும் என்றும் அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்திருக்கிறது.












