டிமார்போஸ் சிறுகோள் மீது மோதிய நாசாவின் டார்ட் விண்கலம் - விண்வெளி அறிவியல் அதிசயம்

டிமார்போஸ் இலகுவான பாறைகளால் ஆனது என்று கணிக்கப்படுகிறது.

பட மூலாதாரம், NASA/JHU-JPL

படக்குறிப்பு, டிமார்போஸ் இலகுவான பாறைகளால் ஆனது என்று கணிக்கப்படுகிறது.
    • எழுதியவர், ஜோனாதன் ஆமோஸ்
    • பதவி, அறிவியல் செய்தியாளர்

அமெரிக்க விண்வெளி ஆய்வு முகமையின் 'டார்ட்' விண்கலம் விண்ணில் உள்ள ஒரு சிறுகோளில் மோதி, அந்த முயற்சியில் தன்னைத்தானே அழித்துக்கொண்டது.

நாசாவால் திட்டமிடப்பட்ட இந்த மோதல் வேண்டுமென்றே செய்யப்பட்டது. பூமியை அச்சுறுத்தும் விண்வெளிப் பாறைகளை பாதுகாப்பாக, வேறு வழிக்கு திசைமாற்ற முடியுமா என்பதை சோதிக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

டிமார்போஸ் (Dimorphos) எனப் பெயரிடப்பட்ட 160 மீட்டர் அகலமுள்ள சிறுகோள் மீது டார்ட் மோதியது. Double Asteroid Redirection Test என்பதன் சுருக்கமே DART ஆகும். இரட்டை சிறுகோள்களை திசைமாற்றும் பரிசோதனை என்பது இதன் பொருள்.

சிறுகோள் மீது விண்கலம் மோதும் வரை, டார்ட் விண்கலத்தின் கேமரா நொடிக்கு நொடி விண்ணில் இருந்து பூமிக்கு படங்களை அனுப்பிக்கொண்டே இருந்தது.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழத்தின் பயன்முறை இயற்பியல் (Applied Physics) ஆய்வகத்தை (JHU-APL) தளமாகக் கொண்ட கட்டுப்பாட்டாளர்கள், டார்ட் விண்கலத்தின் கேமராவில் டிமார்போஸ் சிறுகோள் முழுமையாகத் தெரிந்ததால் மகிழ்ச்சியடைந்தனர். டிமார்போஸின் சரியான மையத்திலிருந்து வெறும் 17 மீட்டர் தொலைவில் உள்ள ஓரிடத்தில் சென்று டார்ட் மோதியதாக ஆரம்பகட்ட மதிப்பீடுகள் கூறுகின்றன.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

நாசாவின் விண்வெளி சோதனை வெற்றியா இல்லையா?

தங்கள் சோதனை முறையாகப் பலனளித்ததா என்பதை நாசா தலைமையிலான இந்த ஆய்வில் பங்கேற்ற விஞ்ஞானிகள் உறுதியாக அறிய இன்னும் சில வாரங்கள் ஆகும். ஆனால் குறிப்பிடத்தக்க ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதாக நாசாவின் கோள்கள் அறிவியல் பிரிவின் இயக்குநரான டாக்டர் லோரி கிளேஸ்.

"மனிதகுலத்தின் ஒரு புதிய சகாப்தத்தை நாம் தொடங்குகிறோம். ஆபத்தான மற்றும் அபாயகரமான வகையில் ஏற்பட வாய்ப்புள்ள சிறுகோள் மோதலில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் திறனைக் கொண்ட ஒரு சகாப்தத்தினுள் நாம் நுழைகிறோம். இதற்கு முன் இப்படி ஒரு திறன் இருந்ததில்லை," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

தங்கள் கோளின் பாதுகாப்புக்கு ஒரு தீர்வு உள்ளது என்பதால் பூமியில் இருப்பவர்கள் நிம்மதியாகத் தூங்கலாம் என்று JHU-APL மிஷன் சிஸ்டம்ஸ் இன்ஜினியர் முனைவர் எலினா ஆடம்ஸ் கூறியுள்ளார்.

இலக்கு வைக்கப்பட்ட இரட்டை சிறுகோள்கள்

Dimorphos: Nasa

பட மூலாதாரம், NASA/JHU-APL

படக்குறிப்பு, டிமார்போஸ் (பெரிதாகத் தெரிவது) மற்றும் டிடிமோஸ் சிறுகோள்கள்.

இந்த மோதலுக்கு பின் டிடிமோஸ் (Didymos) எனப்படும் மற்றொரு சிறுகோளைச் சுற்றி, டிமார்போஸ் சிறுகோள் சுற்றுப்பாதையில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்வதன் மூலம் டார்ட் திட்டத்தின் வெற்றியை ஆராய்ச்சியாளர்கள் தீர்மானிப்பார்கள்.

பூமியில் உள்ள தொலைநோக்கிகள் மூலம் இந்த இரு விண்பாறைகளுக்கு இடையே உள்ள தொலைவில் உண்டாகும் மாற்றங்கள் கவனிக்கப்படும்.

மோதலுக்கு முன், டிமார்போஸ் சிறுகோள் 780 மீட்டர் அகலமுள்ள டிடிமோஸ் சிறுகோளை சுற்றிவர சுமார் 11 மணிநேரம் 55 நிமிடங்கள் எடுத்தது. இந்த மோதலுக்கு பின் இது சில நிமிடங்களாவது குறைய வேண்டும்.

பூமியிலிருந்து 1.1 கோடி கி.மீ தொலைவில் இருந்து அனுப்பப்பட்ட படங்களின் சான்றுகளின் அடிப்படையில், அனைத்தும் சரியாக நடந்தாகவே தோன்றுகிறது.

மணிக்கு 22,000 கி.மீ வேகத்தில் நகர்ந்த டார்ட் விண்கலம் முதலில் சிறிய பாறையையும் பெரிய பாறையையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டியுருந்தது. அதில் உள்ள நேவிகேஷன் சாஃப்ட்வேர் மூலம் சிறுகோள் மீது நேருக்கு நேர் மோதுவதை டார்ட் உறுதி செய்தது

இரண்டு சிறுகோள்களின் வடிவங்கள் வெவ்வேறாக இருந்ததை டார்ட் அனுப்பிய படங்கள் மூலம் விஞ்ஞானிகளால் காண முடிந்தது.

'இது மிகவும் கியூட்டாக இருக்கிறது'

ஆய்வாளர்கள் எதிர்பார்த்தபடி டிடிமோஸ் வைர வடிவத்தைக் கொண்டிருந்தது. அதன் மேற்பரப்பில் பாறைகள் இருந்தன; சில மென்மையான பகுதிகளும் இருந்தன.

டார்ட் விண்வெளி திட்டத்தின் மாதிரிப் படம்

பட மூலாதாரம், NASA/JPL-APL

படக்குறிப்பு, டார்ட் விண்வெளி திட்டத்தின் மாதிரிப் படம்

டார்ட்டின் கேமரா அமைப்பின் விஞ்ஞானி டாக்டர் கரோலின் எர்ன்ஸ்ட் டிமார்போஸைப் பார்த்ததில் மிகவும் உற்சாகமாக இருந்தார்.

"இது அழகாகத் தெரிகிறது; இது சிறிய நிலவு போல உள்ளது; இது மிகவும் கியூட்டாக இருக்கிறது," என்று அவர் கூறினார்.

விண்கலம் கொண்டு மோதப்படுவதற்கு டிமார்போஸ் மற்றும் டிடிமோஸ் ஆகிய இரட்டை சிறுகோள்கள் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன. பரிசோதனைக்கு முன்பு பூமியில் சுற்றுவட்டப் பாதையில் இவற்றின் சுற்றுவட்டப் பாதை இல்லை. மேலும், விண்கலம் மோதியபின் அவற்றின் சுற்றுப்பாதையில் உண்டாகும் ஒரு சிறிய மாற்றம் ஆபத்தை அதிகரிக்காது என்று உறுதிசெய்யப்பட்டது. ஆனால் நமக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய விண் பாறைகள் உள்ளன.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

பூமி மீது சிறுகோள்கள் மோதி பேரழிவு உண்டாகுமா?

பூமியுடன் மோதினால் பேரழிவை உண்டாக்க வல்ல 95% சிறுகோள்களை வானியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். (ஆனால், அவற்றின் பாதை வேறாக இருப்பதால் அவை பூமியுடன் மோத வாய்ப்பில்லை.) எனினும், பூமி மீது மோதி அழிவை உண்டாக்க வல்ல, ஒரு பிராந்தியம் அல்லது நகரத்தின் அளவே உள்ள, ஒப்பீட்டளவில் சிறிய விண் பொருட்கள் கண்டறியப்படவில்லை.

டிமார்போஸ் அளவுல்ல ஒரு பொருள், சுமார் ஒரு கிலோ மீட்டர் அகலமும், இருநூறு மீட்டர் ஆழமும் உள்ள ஒரு பள்ளத்தை உண்டாக்கும். அருகில் உள்ள பகுதிகளில் சேதம் கடுமையாக இருக்கும். எனவே ஒரு சிறுகோள் சற்று மெதுவாக அல்லது வேகமாக செல்லும்படி தூண்டப்படுமா என்று சோதிக்கவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பூமியுடன் மோதும் என்று எதிர்பார்க்கப்படும் வின் பொருட்களின் திசை பல ஆண்டுகளுக்கு முன்பே மாற்றப்பட்டால் அதன் வேகத்தில் பெரிதாக மாற்றம் இருக்க வேண்டியதில்லை.

விழுந்து அழிந்த டார்ட் - அடுத்து என்ன நடக்கும்?

டார்ட் அனுப்பிய கடைசி படங்களில் ஒன்று இது.

பட மூலாதாரம், NASA/JHU-APL

படக்குறிப்பு, டார்ட் அனுப்பிய கடைசி படங்களில் ஒன்று இது.

டார்ட் திட்டத்தின் கீழ் மோதலை மேற்கொண்ட விண்கலத்தில் இருந்து படங்கள் பெறப்படுவது நின்றுபோனாலும், விண்கலத்திலிருந்து சிறுகோள்களைக் கண்காணிக்கும் வேறு ஒரு விண்கலத்தில் இருந்து கூடுதல் படங்களைப் பெற முடியும்.

இத்தாலியில் உருவான, சிறிய 'கியூப்சாட்' வகை விண்கலம், டார்ட் விண்கலம் கிளம்பிய மூன்று நிமிடங்களுக்குப் பின் தொடர்ந்து செல்லத் தொடங்கியது. இந்த இரண்டு விண்கலன்களுக்கும் இடையே 50 கி.மீ. எனும் பாதுகாப்பான தூரம் இருந்தது.

'லிசியாக்யூப்' (LiciaCube) எனும் இந்த சிறிய விண்கலத்தின் தரவுகள் அடுத்த சில நாட்களில் மீண்டும் பூமிக்கு அனுப்பப்படும்.

டார்ட் மோதலின்போது உண்டான பாறைத் துகள்களின் படத்தை இந்த விண்கலம் பதிவு செய்திருக்க வேண்டும்.

ஹெரா (Hera) மிஷன் எனும் திட்டத்தின்கீழ் ஐரோப்பிய விண்வெளி முகமையின் மூன்று விண்கலங்கள் டிடிமோஸ் மற்றும் டிமார்போஸ் ஆகியவற்றில் உண்டான மாறுதல்களைக் கண்டறிவதற்கான ஆய்வுகள் அடுத்த நான்கு ஆண்டுகளில் தொடங்கும்.

சிவப்புக் கோடு
காணொளிக் குறிப்பு, வானத்தில் புதிய விண்வெளி நிலையம் அமைக்க ரஷ்யா திட்டம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: