சூப்பர் கண்டம்: 25 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு பூமி எப்படி இருக்கும்?

பூமி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ரிச்சர்ட் ஃபிஷர்
    • பதவி, பிபிசி ஃபியூச்சர்

உலகின் நிலப்பரப்புகள் நிலையானதாகத் தெரியலாம். ஆனால் ரிச்சர்ட் ஃபிஷர் கண்டுபிடித்தது போல பெரிய மாற்றங்கள் எதிர்காலத்தில் வரவுள்ளன.

ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்கு முன்பு, பிளெமிஷ் வரைபடக் கலைஞர் ஜெராடஸ் மெர்கேட்டர் உலகின் மிக முக்கியமான வரைபடம் ஒன்றை உருவாக்கினார்.

இது நிச்சயமாக உலக அட்லஸின் முதல்முயற்சி அல்ல. ஆஸ்திரேலியா விடுபட்டும், அமரிக்கா தோராயமாகவும் வரையப்பட்டிருந்த அந்த வரைபடம் அவ்வளவு துல்லியமாகவும் இல்லை.

அதன் பிறகு, ஜெராடஸ் மெர்கேட்டரின் வரைபடத்தில் இருந்த தவறுகளைத் திருத்தி கண்டங்களின் அமைவிடத்தை சரியாகக் காட்டும் துல்லியமான வரைபடத்தை வரைபட கலைஞர்கள் வரைந்தனர். மெர்கேட்டரின் வரைபடமும், 16 ஆம் நூற்றாண்டில் வரையப்பட்ட மற்ற வரைபடமும் பூமியின் உண்மையான உலகளாவிய படத்தை வெளிப்படுத்தியது. இது அன்றிலிருந்து மக்களின் மனதில் நீடித்து வருகிறது.

அவர், பிளேட் டெக்டோனிக்ஸ் கோட்பாடு (பூமியின் அடிப்பகுதியின் நகர்வுகளை கொண்டு நிலப்பரப்புகள் உருவான கோட்பாடு) உறுதிப்படுத்தப்படுவதற்கு 400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் என்பதால் கண்டங்கள் எப்போதும் இந்த வகையில் அமைந்திருக்கவில்லை என்பது அவருக்குத் தெரியாது.

வரைபடத்தில் ஏழு கண்டங்களின் நிலைகளைப் பார்க்கும்போது, அவை 'நிலையானவை' என்று கருதுவது எளிது.

ஒரு காலத்தில் இந்த ஏழு கண்டங்களும் ஒன்றாகக் கூடியிருந்தன. அது பாஞ்சியா என்ற சூப்பர் கண்டமாக அறியப்பட்டது. அதற்கு முன்பாக மூன்று பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பன்னோடியா, ரோடினியா, கொலம்பியா/நுனா, கெனார்லாந்து மற்றும் ஊர் ஆகிய சூப்பர் கண்டங்களுக்கு ஆதாரங்கள் உள்ளன.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

சூப்பர் கண்டங்கள் சிதறி, சுழற்சி அடைப்படையில் ஒன்று கூடுவதை புவியியல் வல்லுநர்கள் அறிவார்கள். நாம் இப்போது அந்த சுழற்சியின் பாதியில் இருக்கிறோம். எனவே, பூமியின் எதிர்காலத்தில் என்ன வகையான சூப்பர் கண்டம் இருக்கக்கூடும்? நாம் அறிந்த நிலப்பரப்புகள் எவ்வாறு மாற்றியமைக்கப்படும்? நமக்கு முன்பு நான்கு உதாரணங்கள் உள்ளன. அவற்றின்படி பார்த்தால் பூமியில் வசிக்கும் ஜீவராசிகள் ஒருநாள் மிகவும் வித்தியாசமான வேற்றுக்கிரகத்தில் வசிக்கக்கூடும்.

1755ஆம் ஆண்டு ஒரு நவம்பர் மாத சனிக்கிழமை மாலையில், போர்ச்சுகலை நிலநடுக்கம் தாக்கியது. கடந்த 250 ஆண்டுகால வரலாற்றில் மோசமான நிலநடுக்கங்களில் ஒன்றாக அமைந்த இந்த நிலநடுக்கம், 60,000 மக்களின் உயிரைப் பறித்ததுடன், அட்லாண்டிக் கடல் பகுதியில் சுனாமியையும் ஏற்படுத்தியது.

இதில், வித்தியாசமானது என்னவென்றால் சுனாமி ஏற்பட்ட அந்த இடம். "அட்லாண்டிக்கில் பெரிய பூகம்பம் ஏற்படக்கூடாது. இது விசித்திரமாக இருந்தது" என்கிறார் லிஸ்பன் பல்கலைக்கழகத்தின் புவியியலாளர் ஜோவா டுவார்ட்.

பொதுவாக இது மாதிரியான பூகம்பங்கள் பெரிய துணை மண்டலங்களில் அல்லது அதற்கு அருகில் நிகழும். அங்கு கடல் தட்டுகள் கண்டங்களுக்கு அடியில் மூழ்கி, சூடான மேலோட்டத்தில் உருகி, மோதல் மற்றும் அழிவை ஏற்படுத்தும். ஆனால், 1755 ஆம் ஆண்டு நிலநடுக்கம் ஒரு செயலற்ற பகுதியில் ஏற்பட்டது.

2016 ஆம் ஆண்டில் டுவார்டேவும் அவரது குழுவினரும் தற்போது என்ன நடந்து கொண்டிருக்கலாம் என்பதற்கான ஒரு கோட்பாட்டை முன்மொழிந்தனர். அதன்படி, இந்த தட்டுகளுக்கு இடையே உள்ள பிணைப்புகள் விடுபடலாம். மேலும், ஒரு பெரிய முறிவு ஏற்படக்கூடும். அப்படி நடந்தால், மத்தியதரைக் கடலில் இருந்து மேற்கு ஆப்ரிக்கா, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தைக் கடந்து, இந்தப் பகுதிகளுக்கு எரிமலைகள் மற்றும் பூகம்பங்களைக் கொண்டு வருவதற்கு ஒரு துணை மண்டலம் தயாராக உள்ளது.

இது நடந்தால், அது அட்லான்டிக் மூடுவதற்கு வழிவகுக்கும். பசிபிக் தொடர்ந்து மூடப்பட்டால் இறுதியில் ஒரு புதிய சூப்பர் கண்டம் உருவாகும் என்பதை டுவார்டே உணர்ந்துள்ளார். அவர், அதை அவுகா என்று அழைக்கிறார். ஏனெனில் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவின் நிலப்பகுதிகள் அதன் மையத்தில் அமர்ந்திருக்கும்.

வரைப்படம்

பட மூலாதாரம், Davies et al

அவுரிகா பற்றிய தனது கருத்துகளை வெளியிட்ட பிறகு, மற்ற எதிர்கால விஷயங்களைப் பற்றி டுவார்டே ஆச்சரியப்பட்டார். சூப்பர் கண்டம் பற்றி பல புவியலாளர்கள் தங்கள் கருத்தை முன்மொழிந்துள்ளனர்.

அதனால், வேல்ஸில் உள்ள பாங்கோர் பல்கலைக்கழகத்தின் கடல்சார் ஆய்வாளர் மத்தியாஸ் கிரீனுடன் இது பற்றி டுவார்டே விவாதிக்கத் தொடங்கினார். இவர்களுக்கு இது தொடர்பான டிஜிட்டல் மாடல்களை உருவாக்க ஒருவர் தேவைப்பட்டார். "அந்த நபர் மனிதகால அளவுகளில் ஒருபோதும் நடக்காத ஒன்றைப் படிப்பதில் அக்கறை கொண்ட, கொஞ்சம் சிறப்பு வாய்ந்த ஒருவராக இருக்க வேண்டும்" என்று தான் விரும்பியதாக டுவார்டே கூறிகிறார்.

பின்னர், சக ஊழியரான லிஸ்பன் பல்கலைக்கழகத்தின் மற்றொரு புவியியலாளர் ஹன்னா டேவிஸ் அந்த வேலையைச் செய்தார். "கடந்த கால புவியியலாளர்களின் வரைபடங்கள் மற்றும் விளக்கப்படங்களை டிஜிட்டல் வடிவத்தில் மாற்றுவதே எனது வேலை" என்கிறார் டேவிஸ்.

இது நம்ப முடியாத வகையான புதிய விஷயத்தை பற்றியது என்பதால் தங்களுக்கு பதட்டம் இருந்ததாக டேவிஸ் கூறுகிறார்.

அவர்களது இந்த முயற்சி நான்கு காட்சிகளுக்கு வழிவகுத்தது. அவுரிகாவின் விரிவான படத்தை மாதிரியாக்கிக்கொண்டே மற்ற மூன்று சாத்தியக்கூறுகளையும் அவர்கள் ஆராய்ந்தனர். அவை ஒவ்வொன்றும் சுமார் 200 முதல் 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னோக்கிச் செல்கிறது.

முதலாவதாக, தற்போதைய நிலை தொடர்ந்தால் என்ன நடக்கும்? அட்லான்டிக் தொடர்ந்து திறந்திருக்கும் மற்றும் பசிபிக் மூடப்படும். இந்தச் சூழலில் உருவாகும் சூப்பர் கண்டம் நோவோபங்கேயா என்று அழைக்கப்படும். "இப்போது நாம் புரிந்துகொண்டதன் அடிப்படையில் இது மிகவும் எளிமையானது மற்றும் மிகவும் நம்பத்தகுந்தது" என்கிறார் டேவிஸ்.

வரைப்படம்

பட மூலாதாரம், Davies et al

எனினும், வேறு வகையான மாற்றத்திற்கு வழிவகுக்கும் புவியியல் நிகழ்வுகளும் எதிர்காலத்தில் நடக்கலாம்.

ஆர்டிக் பெருங்கடல் மூடப்பட்டு, அட்லாண்டிக் மற்றும் பசிபிக் திறந்த நிலையில் இருக்கும் செயல்முறை 'ஆர்த்தோவெர்ஷன்' என அழைக்கப்படும். இந்தச் செயல்முறை டெக்டோனிக் பரவலின் நிலைகளை மாற்றுகிறது. அன்டார்டிகாவைத் தவிர அனைத்து கண்டங்களும் வடக்கு நோக்கி நகர்ந்து வட துருவத்தைச் சுற்றி நிலைகொள்கின்றன.

இந்தச் சூழலில், அமாசியா எனப்படும் ஒரு சூப்பர் கண்டம் உருவாகிறது.

வரைப்படம்

பட மூலாதாரம், Davies et al

இறுதியாக, அட்லான்டிக்கின் கடற்பரப்பு குறையலாம். கடலின் நடுவில், ஐஸ்லாந்து வழியாக தெற்குப் பெருங்கடல் வரை செல்லும் ஒரு பெரிய மேடு இரண்டு தட்டுகளைப் பிரிக்கிறது. இந்த பரவல் குறைந்தாலோ, நிறுத்தப்பட்டாலோ அல்லது அமெரிக்காவின் கிழக்குக் கரையோரத்தில் புதிய துணைத் தகடு எல்லை உருவானால் பாங்கேயா அல்டிமா எனப்படும் சூப்பர் கண்டம் உருவாகும்.

வரைப்படம்

பட மூலாதாரம், Davies et al

இந்த நான்கு டிஜிட்டல் மாதிரிகள், புவியியலாளர்கள் மற்ற கோட்பாடுகளைச் சோதிக்க ஒரு தளத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளன. எடுத்துக்காட்டாக, அலைகளில் வெவ்வேறு வகையான சூப்பர் கண்டங்கள் ஏற்படுத்தும் விளைவுகளையும், எதிர்காலத்தின் காலநிலையையும் புரிந்துகொள்ள விஞ்ஞானிகளுக்கு இவை உதவக்கூடும்.

"ஒரு சூப்பர் கண்டத்தின் காலநிலையை மாதிரியாகக் காட்ட, 'ஐபிசிசி' எனப்படும் காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழுவின் மாதிரிகளை பயன்படுத்த முடியாது. ஏனெனில் அவை அவ்வாறு வடிவமைக்கப்படவில்லை"என்கிறார் டுவார்டே.

பூமியின் எதிர்கால சூப்பர் கண்டங்களின் மாதிரிகள் எக்ஸோப்ளானெட்டுகளின் காலநிலையைப் புரிந்துகொள்வதற்கான ப்ராக்ஸியாகவும் செயல்படும். "எதிர்கால பூமி முற்றிலும் வேறானது" என்கிறார் டேவிஸ். "நீங்கள் அவுரிகா அல்லது நோவோபங்கேயாவிற்கு மேலேயுள்ள சுற்றுப்பாதையில் இருந்தால், நீங்கள் அதை பூமி என்று அடையாளம் காண மாட்டீர்கள். அதே நிறங்களைக் கொண்ட மற்றொரு கிரகமாக இருக்கும்" என்றும் அவர் கூறுகிறார்.

இந்த நுட்பமான பார்வை மூவரையும் விண்வெளி ஆய்வுகளுக்கான நாசா கோடார்ட் நிறுவனத்தின் இயற்பியலாளர் மைக்கேல் வேவுடன் இணைய வைத்தது. அவர்கள் அந்நிய உலகங்களின் காலநிலையை ஆய்வு செய்ய முயல்கின்றனர். "மிதமான காலநிலை எப்படி இருக்கும் என்பதற்கு எங்களிடம் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. வெளிப்படையான உதாரணம் பூமி" என்று வே கூறுகிறார்.

"எங்களிடம் கடந்த கால காட்சிகள் உள்ளன, ஆனால் எதிர்காலத்திற்குச் செல்வதன் மூலமும், எதிர்காலத்திற்கான இந்த அற்புதமான டெக்டோனிக் மாதிரிகளைப் பயன்படுத்துவதன் மூலமும், இது எங்களுக்கு கூடுதல் விவரங்களை அளிக்கும்," என்றும் அவர் கூறுகிறார்.

அத்தகைய மாதிரிகள் நமக்குத் தேவை. ஏனெனில் தொலைதூரத்திலிருந்து வெளிக்கோள்களை பகுப்பாய்வு செய்யும் போது எதைப் பார்க்க வேண்டும் என்பதை அறிவது கடினமாக இருக்கும். தொலைநோக்கிகள் மூலம் நாம் கண்டங்களைப் பார்க்க முடியாது. மேலும் வளிமண்டல கலவையை மட்டுமே ஊகிக்க முடியும். எனவே, காலநிலை மாறுபாடுகளின் மாதிரிகள் வானியலாளர்கள் கண்டறியக்கூடிய சில முக்கியமான மறைமுக விஷயங்களை வெளிப்படுத்தலாம்.

ஒரு சூப்பர் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி பல மாதங்கள் எடுத்த சூப்பர் கண்டங்களின் காலநிலை மாதிரிகள், நான்கு காட்சிகளுக்கு இடையில் சில குறிப்பிடத்தக்க மாறுபாடுகளை வெளிப்படுத்தியது. அமாசியா மற்ற கிரகங்களை விட மிகவும் குளிர்ச்சியான கிரகமாக இருக்கும். வட துருவத்தைச் சுற்றியுள்ள நிலம் மற்றும் கடல்கள் குளிர்ந்த அட்சரேகைகளுக்கு சூடான நீரோட்டங்களைக் கொண்டு செல்வதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதால், பனிக்கட்டிகள் உருவாகும். அவுரிகா இதற்கு நேர்மாறாக வறண்ட மையத்துடன், அதிக திரவ நீரைக் கொண்ட பிரேசிலின் இன்றைய கடற்கரையை ஒத்ததாக இருக்கும்.

பூமியின் எதிர்காலத்தைப் பொறுத்தவரை, தாங்கள் வடிவமைத்த நான்கு சூப்பர் கண்ட காட்சிகளும் ஊகத்தின் அடைப்படையிலானது என்பதை டேவிஸ் ஒப்புக்கொள்கிறார். எதிர்காலத்தில் இதை மாற்றும் வகையான புவியியல் ஆச்சரியங்கள் நடக்கலாம்.

"என்னிடம் டைம் மிஷின் இருந்தால் 250 மில்லியன் ஆண்டுகளுகளைக் கடந்துசென்று பார்ப்பேன். நாங்கள் கூறிய இந்த நான்கு மாதிரிகள் போல அந்த சூப்பர் கண்டங்கள் இல்லாவிட்டால் நான் ஆச்சரியப்படமாட்டேன். ஏனெனில் இதில் பல காரணிகள் உள்ளன" என்கிறார் டேவிஸ்.

இருப்பினும், உறுதியாகச் சொல்லக்கூடியது என்னவென்றால், நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் நிலப்பரப்புகள் ஒரு நாள் முற்றிலும் புதிய கட்டமைப்பில் மாற்றியமைக்கப்படும். தனிமைப்படுத்தப்பட்ட நாடுகள் நெருங்கிய அண்டை நாடுகளாக இருக்கும். பூமி இன்னும் அறிவார்ந்த உயிரினங்களுக்கு இடமளித்தால், அவை நியூயார்க், பெய்ஜிங், சிட்னி மற்றும் லண்டனின் பண்டைய இடிபாடுகளுக்கு இடையில் கடலைப் பார்க்காமல் பயணிக்க முடியும்.

લાઇન
YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: