வரலாற்று மர்மம்: அசாமில் கிடைத்த மணல் கல் ‘மர்ம’ ஜாடிகள் - இறந்தவர்களை புதைக்க பயன்படுத்தப்பட்டனவா?

பட மூலாதாரம், TILOK THAKURIA
அசாம் மாநிலத்தில், பண்டைய காலத்தில் இறந்தவர்களை புதைக்க பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என கருதப்படும் பிரமாண்ட "மர்ம" ஜாடிகளை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான அசாமில் 4 இடங்களில் இருந்து மொத்தமாக 65 ஜாடிகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை மணல் கற்களால் ஆன ஜாடிகள்.
அவற்றின் வடிவமும் அளவும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவை. சில ஜாடிகள் உயரமாகவும் உருளை வடிவத்திலும் உள்ளன, மற்ற ஜாடிகள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நிலத்தில் புதைக்கப்பட்டுள்ளன.
இதேபோன்ற ஜாடிகள், முன்னதாக லாவோஸிலும் இந்தோனீஷியாவிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
எதற்காக இந்த ஜாடிகள்?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மூன்று பல்கலைக்கழகங்களை சேர்ந்த ஆய்வாளர்களை உள்ளடக்கிய இந்த கண்டெடுப்பு குறித்த தகவல்கள், 'ஏசியன் ஆர்க்கியாலஜி' இதழில் கடந்த வாரம் இடம்பெற்றது.
நார்த்-ஈஸ்டர்ன் ஹில் பல்கலைக்கழகத்தின் திலோக் தகூரியா, குவாஹாட்டி பல்கலைக்கழகத்தின் உத்தம் பதாரி ஆகியோர் இந்த ஆய்வை வழிநடத்தினர்.
"இந்த பிரமாண்ட ஜாடிகளை உருவாக்கியது யார், அவர்கள் எங்கு வாழ்ந்தனர் என்பது குறித்து எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. அதுவொரு மர்மமாகவே உள்ளது," என ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளரும், இந்த ஆய்வுக்குழுவில் இடம்பெற்றவருமான நிக்கோலஸ் ஸ்கோபால் தெரிவித்தார்.
இந்த ஜாடிகள் எதற்காக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதும் தெளிவாக தெரியவில்லை,
"இறந்தவர்களை புதைக்கும் சடங்குக்காக" அவை பயன்படுத்தியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
"நாகா மக்களிடையே (வட-கிழக்கு இந்தியாவை சேர்ந்த இனக்குழுவினர்) இத்தகைய அசாம் ஜாடிகளிலிருந்து மனிதர்களை எரித்த எச்சங்கள், மணிகள் மற்றும் கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட கதைகள் உள்ளன," என ஸ்கோபால் தெரிவித்தார்.

பட மூலாதாரம், TILOK THAKURIA
"ஆனால், தற்போது கண்டெடுக்கப்பட்ட ஜாடிகள் காலியாகவே உள்ளன" என, பிபிசியிடம் பேசிய திலோக் தகூரியா தெரிவித்தார். மேலும் அவை மூடிகள் கொண்டு மூடப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்தார்.
"இதுகுறித்த அகழ்வாராய்ச்சிகளை மேற்கொள்ளுதல் மற்றும் இந்த ஜாடிகளின் அம்சங்கள் குறித்து ஆவணப்படுத்துவதே இந்த ஆய்வின் அடுத்தகட்டமாகும்" என தகூரியா தெரிவித்தார்.
"கி.மு 400 காலகட்டத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம்"
கடந்த காலத்தில் அசாமிலும், அதன் அருகாமை மாநிலமான மேகாலயாவிலும் இதேபோன்ற அகழாய்வு இடங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதுவரை அசாம் மாநிலத்தில் சுமார் 10 இடங்களிலிருந்து 700க்கும் மேற்பட்ட ஜாடிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தக்கூரியா தெரிவித்தார்.
இந்த ஜாடிகள், கி.மு. 400 காலகட்டத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அசாமில் மிகவும் குறைவான பகுதிகளில் மட்டுமே ஆய்வு மேற்கொண்டதாக கூறும் ஆய்வாளர்கள், "அங்கு இத்தகைய இடங்கள் இன்னும் அதிகமாக இருக்கலாம். ஆனால், அவை எங்கு உள்ளன என்பது குறித்து எங்களுக்கு இன்னும் தெரியவில்லை," என்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
"அவற்றை கண்டறிய அதிக காலமானால், அவை அழிக்கப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் ஏற்படுகின்றன. ஏனெனில், அப்பகுதிகளில், காடுகள் அழிக்கப்பட்டு, பயிர்கள் விதைக்கப்படுகின்றன," என ஸ்கோபால் தெரிவித்தார்.
2016 ஆம் ஆண்டில் லாவோஸில் கண்டெடுக்கப்பட்ட ஜாடிகள், ஸியெங் கோவாங் மாகாணத்தில் குறைந்தது 2,000 ஆண்டுகளுக்கு முந்தையை காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
மேலும், ஆய்வாளர்கள் மூன்று வித்தியாசமான இடுகாடுகளை கண்டுபிடித்தனர். மேலே ஒரு பெரிய சுண்ணாம்புத் தொகுதியுடன் குழிகளில் இருந்து எலும்புகள், பீங்கான் பாத்திரங்களில் புதைக்கப்பட்ட எலும்புகள் மற்றும் புதைகுழியிலிருந்து ஒரு உடல் போன்றவற்றை ஆய்வாளர்கள் கண்டெடுத்தனர்.
"அசாம் மற்றும் லாவோஸில் கண்டெடுக்கப்பட்ட ஜாடிகளின் அளவும், அமைப்பும் ஒரே மாதிரியானவை. அதன் வடிவம் மற்றும் அளவில் சில மாறுபாடுகள் உள்ளன. அசாமில் கண்டெடுக்கப்பட்டவை குமிழ் வடிவானவை, லாவோஸில் கண்டெடுக்கப்பட்டவை உருளை வடிவிலானவை," என்கிறார் ஸ்கோபால்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












