ஆர்.நாகசாமி: தொல்லியல் துறை பங்களிப்பும், திருக்குறள் பற்றிய சர்ச்சைக் கருத்தும்

பட மூலாதாரம், NAGASAMY
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
ஞாயிற்றுக் கிழமை சென்னையில் காலமான மூத்த தொல்லியல் அறிஞரான ஆர். நாகசாமி (91) கல்வெட்டு மற்றும் தமிழகத் தொல்லியல் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்தவர். தனது சில கருத்துகளுக்காக கடுமையான விமர்சனங்களுக்கும் உள்ளானவர்.
1930ஆம் ஆண்டு ஆகஸ்ட் பத்தாம் தேதி சம்ஸ்கிருத அறிஞரான ராமச்சந்திரன் மகனாகப் பிறந்தவர் ஆர். நாகசாமி. சென்னைப் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத மொழி மற்றும் இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். பிறகு இந்தியக் கலைகள் என்ற தலைப்பில் புனே பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டமும் பெற்றார்.
1959ல் சென்னை அருங்காட்சியகத்தில் கலை மற்றும் தொல்லியல்துறையின் காப்பாட்சியராக (Curator) பணியில் சேர்ந்த அவர் 1963வரை அந்தப் பணியில் இருந்தார். இதற்குப் பிறகு, தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையில் சிறப்பு துணை அதிகாரியாகச் சேர்ந்தார். 1966ல் தொல்லியல் துறையின் முதல் இயக்குனராக பதவி உயர்வு பெற்று, ஓய்வுபெறும் வரையில் அந்தப் பணியில் இருந்தார்.
இவர் தமது காவலத்தில் தமிழ்நாட்டில் இருந்த பல்வேறு தொல்லியல் தலங்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தினார். புகலூரில் இருந்த முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த சேரர் கால கல்வெட்டு, கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழர்களின் அரண்மனை இருந்ததாக கருதப்படும் இடம், மதுரை திருமலை நாயக்கர் மகால், தரங்கம்பாடியில் உள்ள டச்சுக் கோட்டை போன்ற தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இவரது காலத்தில் குறிப்பிடத்தக்கக் கவனத்தைப் பெற்றன.
மதுரையில் இருக்கும் திருமலை நாயக்கர் மஹாலில் இவரது காலத்தில்தான் ஒலி - ஒளிக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பூண்டியில் வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய காலம் குறித்த அருங்காட்சியகம் உள்ளிட்ட பல மாவட்ட அருங்காட்சியகங்கள், கல்வெட்டியலைக் கற்பிப்பதற்கென மாநில தொல்லியல் துறையின் கீழ் ஒரு நிறுவனம் ஆகியவற்றையும் நாகசாமி உருவாக்கினார்.
சிதம்பரம் நாட்டியாஞ்சலி திருவிழாவும் இவரது முயற்சியின் கீழ்தான் துவங்கப்பட்டது. புகழ்பெற்ற லண்டன் நடராஜர் சிலை வழக்கில் இவரது சாட்சியம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்பட்டது.
லண்டன் நடராஜர் வழக்கு
மண்ணில் புதைந்து கிடந்த 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால நடராஜர் செப்புத் திருமேனி ஒன்று சிலரால் கண்டெடுக்கப்பட்டு கள்ளச் சந்தையில் விற்பனைக்கு வந்தது. இதனை கனடாவைச் சேர்ந்த ஒருவர் வாங்கினார். இந்தச் சிலை 1982ல் கடத்தப்படும்போது லண்டனில் இருந்த அதிகாரிகள் அதனைக் கைப்பற்றினர்.
இந்தச் சிலையைத் திருப்பித் தரக் கோரி இந்திய அரசின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. 1986ல் வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்திய அரசின் சார்பில் துறைசார் நிபுணராக ஆர். நாகசாமி வாக்கு மூலம் அளித்தார். வரலாறு, கலை வரலாறு, தமிழ்நாட்டின் கோவில்கள், சடங்குகள் ஆகியவை குறித்து தமிழ் சங்கப் பாடல்கள், கல்வெட்டுகளை முன்வைத்து விளக்கமளித்தார்.

பட மூலாதாரம், PIB
இவரது "Master Pieces of South Indian bronzes" புத்தகமும் இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாகப் பயன்பட்டது. இந்த வழக்கில் இந்தியாவுக்கு சார்பாக தீர்ப்பளிக்கப்பட்டது. நடராஜர் சிலை இந்தியாவிடம் திரும்பத் தரப்பட்டது. நீதிபதிகள் அவரது வாதம் குறித்து தீர்ப்பிலேயே பாராட்டி குறிப்பிட்டனர்.
திருக்குறள் குறித்த சர்ச்சைக்குரிய நூல்
இந்த நிலையில், 2018ஆம் ஆண்டில் நாகசாமி எழுதிய ஒரு புத்தகம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. "Thirukural - An Abridgement of Sastras" என்ற அந்தப் புத்தகத்தில் வேதங்களின் தாக்கத்திலேயே திருக்குறள் எழுதப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தார் நாகசாமி. இது தமிழறிஞர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. 2018ஆம் ஆண்டில் அவருக்கு பத்மபூஷண் விருதும் வழங்கப்பட்டது.
ஸ்டாலின் எதிர்ப்பு
2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் செம்மொழி விருது தேர்வுக் குழுவில் ஒருவராக ஆர். நாகசாமியை மத்திய அரசு நியமித்தது. அந்தத் தருணத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இந்த நியமனத்திற்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தார். "செம்மொழித் தமிழ் மீது அடர்த்தியான நஞ்சைக் கக்கும் நாகசாமி செம்மொழி தமிழாய்வு விருதுகளை தேர்வு செய்யும் கமிட்டியில் இடம்பெற்றிருக்கிறார். தமிழர்களை - அவர்களின் உணர்வுகளை கிள்ளுக்கீரையாக எண்ணி மத்திய பாஜக அரசு அவமானப்படுத்துகிறது. ஒரு ஆய்வு அல்ல - பல்வேறு ஆய்வுகளை - கலப்படமான, ஆதாரமில்லாத, இட்டுக்கட்டிய தகவல்களின் அடிப்படையில் வெளியிட்டு, சமஸ்கிருதமும், வேதங்களும் தான் தமிழ் மண்ணுக்குச் சொந்தம் என்ற விஷமப் பிரச்சாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கும் ஒருவர் எப்படி செம்மொழித் தமிழாய்வு விருதுகளை பாரபட்சமின்றித் தேர்வு செய்ய முடியும்?" என்று அவர் கேள்வியெழுப்பினார். வேறு சில அமைப்புகளும் அந்த நியமனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களை நடத்தின.
என்ன சொல்கிறார் ரவிக்குமார்?
ஆனால், நாகசாமியின் பங்களிப்பை ஒரு புத்தகத்தை வைத்து மட்டும் மதிப்பிட முடியாது என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான து. ரவிக்குமார். அரசு மரியாதையுடன் நாகசாமியின் உடலை நல்லடக்கம் செய்ய வேண்டும் என்ற இவரது கோரிக்கை சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியது.
"நாகசாமி காலத்தில்தான் தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக கல்வெட்டுகள் பதிப்பிக்கப்பட்டன. கல்வெட்டுகளைப் படிக்கக் கற்றுத்தரும் வகுப்புகளையும் துவங்கினார். எசாலம் செப்பேட்டைப் படித்து, பதிப்பித்தார். சோழர் கால செப்புப் படிமங்களில் மிகுந்த நிபுணத்துவம் வாய்ந்தவர் நாகசாமி" என்கிறார் ரவிக்குமார்.
ஹெர்மன் டீக்கன் சங்க இலக்கியத்தின் பழமை குறித்து கேள்வியெழுப்பியபோது, அதற்கு தகுந்த பதிலளித்தவர் நாகசாமி என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் ரவிக்குமார். லெய்டன் பல்கலைக்கழகப் பேராசிரியரான ஹெர்மன் டீக்கன் 2001ல் South India: Old Tamil Cankam Poetry என்ற நூலை எழுதினார். அந்த நூலில், தமிழின் சங்கப் பாடல்கள் 2 ஆயிரம் ஆண்டு பழமை கொண்டவையல்ல. மாறாக, பாண்டிய மன்னர்கள் காலத்தில் அதாவது 8 முதல் பத்தாம் நூற்றாண்டுவரையிலான காலத்தில் எழுதப்பட்டவை என்று குறிப்பிட்டிருந்தார்.

பட மூலாதாரம், unknown
"யாரும் அதற்குப் பெரிதாக மறுப்புத் தெரிவிக்காத நிலையில், மு. கருணாநிதி முதல்வராக இருந்தபோது 2010ல் நடந்த செம்மொழி மாநாட்டில், விரிவாக அதை மறுத்துப் பேசினார் நாகசாமி. தொல்லியல் துறையில் பணியாற்றிய ஒவ்வொருக்கும் பல கருத்துகள் இருக்கும். புதிய ஆதாரங்கள் வெளிப்படும்போது அவை மாறிக்கொண்டே இருக்கும். ஒருவரது ஒரு காலகட்ட கருத்தைக் கொண்டு அவரது ஒட்டுமொத்த செயல்பாட்டை மதிப்பிட முடியாது. அந்த வகையில் ஆர். நாகசாமி தமிழக தொல்லியல் துறைக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவர்" என்கிறார் ரவிக்குமார்.
ஆர். நாகசாமி இயக்குனராக இருந்த காலகட்டத்தில் கரூர், அழகன்குளம், கொற்கை, கங்கை கொண்ட சோழபுரம், பாஞ்சாலங்குறிச்சி, வசவசமுத்திரம், கொடுமணல், பொலுவம்பட்டி, கோவலன் பொட்டல் ஆகிய இடங்களில் அகழாய்வுகள் நடத்தப்பட்டன.
"Master pieces of South Indian Bronzes", "Siva Bhakti", Tantric Cult in Tamilnadu, "Facets of South Indian Art and Architecture" உள்ளிட்ட ஆங்கில நூல்களையும் தமிழ்மாலை, உத்திரமேரூர், சொல்மாலை, கங்கை கொண்ட சோழபுரம், மாமல்லை உள்ளிட்ட புத்தகங்களையும் எழுதியிருக்கிறார் நாகசாமி.
பிற செய்திகள்:
- இந்திய ஆட்சி பணி விதிகளை திருத்துவது கூட்டாட்சி தத்துவத்தை பாதிக்கும்: மு.க.ஸ்டாலின் கடிதம்
- டோங்கா எரிமலைச் சாம்பல் பூமியைக் குளிர்விக்குமா? விஞ்ஞானிகள் கூறுவது என்ன?
- உக்ரைன் - ரஷ்யா இடையில் போர் பதற்றம் நிலவுவது ஏன்? எளிய விளக்கம்
- மகாராஷ்டிராவில் தாக்கப்பட்ட கர்ப்பிணி காவலர் - என்ன நடந்தது?
- அயோத்தி அருகே 251 மீட்டர் ராமர் சிலை அமைக்க நிலங்களை பலவந்தமாக பறிப்பதாக விவசாயிகள் புகார்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












