மக்கள் தொகை இன்னும் பெருகினால் பூமி அழிந்து போகுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜாரியா கோர்வெட்
- பதவி, பிபிசி ஃபியூச்சர்
2022அம் ஆண்டின் இறுதியில், பூமியின் மக்கள் தொகை 8 பில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மிகவும் சர்ச்சைக்குரிய பிரச்னைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறதா அல்லது இது ஆரோக்கியமான விஷயமா?
நவம்பர் 15, 2022 அன்று எட்டு பில்லியன் மக்கள் பூமியில் இருப்பார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது.
பெருகும் மக்கள் தொகை "பூமியின் ப்ளேக் நோய்"
மனித குலத்தின் இந்தப் பெருகிவரும் எண்ணிக்கை, இருவேறு பார்வைகளை உண்டாக்கியுள்ளது. அதில் ஒன்று, நமக்கு அதிகமான மக்கள் தொகை தேவை. பில்லியனர் ஜெஃப் பெசோஸ் மக்கள் தொகையைப் பொறுத்தவரை சூரிய குடும்பத்தில் ஒரு மைல் கல்லை அடைவதற்கான வழிகளைத் திட்டமிடுவதாக அறிவித்தார்.
இரண்டாவது, பெருகிவரும் மக்கள் தொகை ஆபத்தானது. பிரிட்டிஷ் இயற்கை வரலாற்றாசிரியர் சர் டேவிட் அட்டன்பரோ போன்றோர், இதை பூமியின் ப்ளேக் நோய் என்று குறிப்பிடுகின்றனர். காலநிலை நெருக்கடி முதல் பல்லுயிர் இழப்பு, தண்ணீர் பிரச்னை, நிலம் மீதான மோதல்கள் என்று நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சுற்றுச்சூழல் பிரச்னையும் கடந்த சில நூற்றாண்டுகளில் பெருகிய இனப்பெருக்கத்தின் மூலமே அறியப்படுகிறது என்பதாக இரண்டாவது பார்வை கூறப்படுகிறது.


1994இல் உலக மக்கள் தொகை 5.5 பில்லியனாக இருந்தபோது, கலிஃபோர்னியாவிலுள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் குழு, மனித இனத்தின் சிறந்த அளவு, 1.5 முதல் 2 பில்லியன் மக்கள்தொகையே என்று கணக்கிட்டது. அதன்படி, பூமியின் தற்போதைய மக்கள் தொகை அதிகமாக உள்ளதா? மனித குலத்தின் எதிர்காலம் என்னவாக இருக்கும்?
பண்டைய காலத்தில் இருந்தே அறிஞர்களிடையே மக்கள்தொகை பற்றிய கவலைகள் இருந்ததாகத் தெரிகிறது. தத்துவஞானி ப்ளாட்டோ, அதுகுறித்துச் சில வலுவான கருத்துகளைக் கொண்டிருந்தார். அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் கடுமையான மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை அவர் நம்பியது மட்டுமின்றி, ஒரு சிறந்த நகரத்தில் 5,040 குடிமக்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்று நினைத்தார்.
கூடுதலாக, "மக்கள் தொகை பிரச்னையா அல்லது அது நுகரப்படும் வளங்களா?" என்ற இன்றளவும் எழுகின்ற விவாதத்தை ப்ளாட்டோ அலசினர். அவருடைய படைப்பான "தி ரிபப்ளிக்"இல் "மக்கள் தங்கள் தேவைகளின் வரம்பை மீறி நுகர்வுக்குச் சரணடைந்து, அதிகமாகச் செலவழிக்கிறார்கள். தார்மீக ரீதியாக நலிந்த இந்த நகர-அரசு நிர்வாகம் இறுதியில் அண்டை நிலங்களைக் கைப்பற்றுகிறது. இது இயற்கையாகவே போரில் சுழல்கிறது. கூடுதல் வளங்கள் இல்லாமல், பெரிய பேராசை கொண்ட அதன் மக்களைத் தக்க வைக்க முடியாது" என்று குறிப்பிடுகிறார்.
அடுத்த 1,500 ஆண்டுகளில், உலக மக்கள் தொகை மூன்று மடங்கு அதிகமானது. இறுதியில் இந்த கவலை பீதியாக மாறியது. அதேவேளையில், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த முயற்சி எடுக்கும் கருதுகோளின் மீதான கடும் விமர்சனங்களும் ஒருபுறம் எழுந்தன.

பட மூலாதாரம், Getty Images
மனித குலத்தின் சர்ச்சைக்குரிய எதிர்காலம்
மக்கள் தொகையைக் குறைப்பது குறித்த கருத்துகள் மீது இருவேறு அணுகுமுறைகள் உள்ளன.
- ஒருபுறம், குறைந்து வரும் கருவுறும் விகிதத்தை பிரச்னையாகக் கருதுபவர்கள் உள்ளனர். 2019ஆம் ஆண்டு நிலவரப்படி, பிரிட்டனில் சராசரியாக 1.65 குழந்தைகள் பிறந்துள்ளனர். இது மக்கள்தொகையை இருக்கும் அளவிலேயே பராமரிக்கத் தேவையானதைவிடக் குறைவான விகிதம். இருப்பினும் மற்ற நாடுகளிலிருந்து இடம் பெயர்ந்தவர்களால், மக்கள் தொகை வளர்ந்து வருகிறது. ஆனாலும், பிறப்பு விகிதம் குறைவது குறித்து மக்கள் தொகை அதிகரிக்க வேண்டும் எனக் கூறுவோர் தங்கள் கவலையை வெளிப்படுத்துகின்றனர்.
- உலக மக்கள்தொகை வளர்ச்சியைக் குறைப்பதை, முற்றிலும் தன்னார்வ வழிமுறைகளின் மூலம் அடைய முடியும் என்பது அதிகரிப்பதை எதிர்ப்பவர்களின் கருத்து. இதற்கு முற்றிலும் தன்னார்வ வழிமுறைகளில், விரும்புவோருக்கு கருத்தடை வழங்குதல், பெண்களுக்கு இதுசார்ந்த கல்வியைக் கற்பித்தல் போன்ற முறைகளைக் கையாள முடியும் என்பது அவர்களின் கருத்து. மேலும், இந்த வழியில் பூமிக்கு நன்மை செய்வதோடு, உலகெங்கிலும் உள்ள ஏழ்மையான மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த முடியென்று நம்புகிறார்கள்.
- இத்தகைய அணுகுமுறையை நம்பும் பிரிட்டனில் இயங்கும் அமைப்பான, பாபுலேஷன் மேட்டர்ஸ், இதுகுறித்து பிரசாரம் செய்கிறது. "எந்தவிதமான மக்கள் தொகை கட்டுப்பாடு அல்லது வற்புறுத்தலையோ, சுய தேர்வை கட்டுப்படுத்துவதையோ நாங்கள் கண்டிக்கிறோம். இது ஒருவரின் தேர்வுக்கான உரிமை பற்றியது. மக்கள் தங்களுக்கு, இந்த பூமிக்கு நல்லது என்று கருதி முடிவெடுக்க உதவ வேண்டும்," என்கிறார் அதன் இயக்குநர் ராபின் மேனார்ட்.

பட மூலாதாரம், Getty Images
- உலகிலுள்ள மக்கள் தொகையைச் சரிசெய்வதிலிருந்து கவனத்தை மாற்ற வேண்டும் என்று மற்றவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஒவ்வொரு நபரும் பயன்படுத்தும் வளங்களின் அளவு நமது கூட்டுச் செல்வாக்கில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதாக வாதிடுகின்றனர். பூமியில் நமது தனிப்பட்ட தேவைகளைக் குறைப்பது, ஏழை நாடுகளின் வளர்ச்சியைத் தடுக்காமலேயே மனித குலத்தின் தடங்களை பூமியில் சுருக்கிவிடும். உண்மையில், ஐரோப்பாவும் அமெரிக்காவும் ஒட்டுமொத்தமாக அதிக மக்கள் தொகை கொண்டிருக்கும்போது, உலகின் குறைவான வளர்ச்சியடைந்த பகுதிகளில் மக்கள் தொகை வளர்ச்சியைக் குறைப்பதில் மேற்கத்திய நாடுகள் காட்டும் ஆர்வம், இனவெறி கருத்துகளைக் கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
- இறுதியாக மற்றுமொரு கண்ணோட்டத்திலான தீர்வும் முன்வைக்கப்படுகிறது. "வெறுமனே எதுவும் செய்யாமல் இருங்கள்" என்ற அந்தக் கண்ணோட்டம், குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடையும், பிறகு அதுவே சுருங்கிவிடும் என்ற உலக மக்கள் தொகையின் மிகவும் நிலையற்ற இயக்கவியலைச் சார்ந்துள்ளது.
மக்கள்தொகை பெருக்கத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் சவால்கள்
மடகாஸ்கர் காட்டில், சிஃபாகா என்ற அறிய லெமூர் வகை உயிரினம் குறித்த பிபிசி ஆவணப்படத்தில், அதன் வாழ்விடம் மிகவும் சுருங்கிவிட்ட பகுதியில், அதைப் படமெடுக்க வருபவர்கள், ஒளிப்படத்தில் அந்த உயிரினத்தின் பின்னணியில் சுற்றியிருக்கும் வணிக தோட்டங்களைத் தவிர்த்துவிட்டு, இயற்கையான காட்டின் மிச்சத்தைக் காட்ட முனைகிறார்கள்.
அந்த ஆவணப்படத்தில் சைமன் ரீவ், இது தவறான புரிதலை - அதாவது இயற்கை உலகின் கம்பீரமான காட்சிகளை வழங்குவதற்காக எடுக்கப்படும் சிரத்தை, அதைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளைத் தவிர்த்துவிடுவதால், மக்களிடையே தவறான புரிதலை ஏற்படுத்துவதாகக் கூறுகிறார். அதிகரித்துள்ள மக்கள் தொகை ஏற்படுத்தியுள்ள அத்தகைய தாக்கங்களை இங்கு காணலாம்.

பட மூலாதாரம், Getty Images
- பல நாடுகளில் மனித பயன்பாட்டிற்காக நிலம் பெரிதும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சாலைகள், கட்டடங்கள் என இழையோடும் விவசாய நிலங்களாக உள்ளன. ஐ.நா உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, பூமியின் நிலப்பரப்பில் 38% உணவு மற்றும் பிற பொருட்களை (எரிபொருள் போன்றவை), மனிதர்களின் கால்நடைகள் ஆகியவற்றுக்குப் பயன்படுகிறது. அந்த அளவு, 12.4 பில்லியன் ஏக்கர்.
- நமது முன்னோர்கள் வேட்டையாடிய மமோத் யானைகள், 450 கிலோ எடையுடைய ராட்சத பறவைகள் ஆகியவற்றுக்கு மத்தியில் வாழ்ந்தனர். இன்று நாம் நிலத்தில் ஆதிக்கம் செலுத்தும் முதுகெலும்பு உயிரினமாக இருக்கிறோம். எடை கணக்குப்படி பார்த்தால், பூமியில் நிலவாழ் முதுகெலும்பு உயிரினங்களில் காட்டுயிர்களின் அளவு 1% மட்டுமே உள்ளது. மனிதர்களின் அளவு 32 சதவீதமும் மீதம் கால்நடைகளுமே உள்ளன.
- மக்கள் தொகை வேகமாக அதிகரித்த, 1970-2020 காலகட்டத்தில், காட்டுயிர்களின் எண்ணிக்கை மூன்றில் இரண்டு பங்கு குறைந்துள்ளதாக உலக காட்டுயிர் நிதியம் (WWF) கண்டறிந்துள்ளது. மனித ஆதிக்கம் அதிகரிக்கும்போது, பல சுற்றுச்சூழல் மாற்றங்கள் நிகழ்கின்றன என்று சிம்பன்சிகள் பற்றிய தனது ஆய்வுகளுக்குப் பிரபலமான பிரைமேட் ஆய்வாளர் ஜேன் குடால் முதல் தொலைக்காட்சி தொகுப்பாளரும் இயற்கை ஆர்வலருமான கிறிஸ் பேக்ஹாம் வரை தங்கள் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர். 2013ஆம் ஆண்டில் சர் டேவிட் அட்டன்பரோ ரேடியோ டைம்ஸுக்கு அளித்த பேட்டியில், "நம் அனைத்து சுற்றுச்சூழல் பிரச்னைகளும் மக்கள்தொகை குறைவாக இருந்தால் எளிதில் தீர்க்கப்படுகின்றன. அதேநேரம், மக்கள்தொகை அதிகமாக இருந்தால் அது மிகவும் கடினமானதாக சில நேரங்களில் சாத்தியமற்றதாக உள்ளன," என்று குறிப்பிட்டார்.
- இந்த எச்சரிக்கைகள், பலரையும் குறைவான குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது அல்லது குழந்தையே பெற்றுக் கொள்ளாதது போன்ற முடிவுகளை எடுக்க வழிவகுத்தது. பல பெண்கள், தற்போதைய காலநிலை நெருக்கடியைச் சமாளிக்கும் வரை, குழந்தை பெற்றுக்கொள்வதை நிறுத்துவாதக் கூறியுள்ளார்கள்.
- டென்னெசியில் உள்ள ரோட்ஸ் கல்லூரியின் இணை பேராசிரியரான ஜெனிஃபர் ஸ்குபா தலைமையிலான குழு மேற்கொண்ட 2019ஆம் ஆண்டு ஆய்வு ஒன்றில், 1990-2006க்கு இடையே 22 ஐரோப்பிய நாடுகளில், 1000-க்கும் மேற்பட்ட பிராந்தியங்களில் உள்ள மக்கள்தொகை வளர்ச்சியின் அளவோடு, நகர்ப்புற நிலப் பயன்பாடு மற்றும் கரிம உமிழ்வுகளோடு பகுப்பாய்வு செய்யப்பட்டது. மேற்கு ஐரோப்பாவில் இந்த சுற்றுச்சூழல் அளவுருக்கள் மீது மக்கள்தொகை "கணிசமான தாக்கத்தை" ஏற்படுத்தியிருந்தாலும் கிழக்கு ஐரோப்பாவில் அது முக்கியமான காரணியாக இருக்கவில்லை என்று ஆய்வுக்குழு முடிவு செய்தது. இதுபோல் பல ஆய்வுகள், மக்கள்தொகை பெருக்கம், சுற்றுச்சூழல் சீரழிவுக்கு வழிவகுப்பதாகக் கூறப்படும் கருத்தை ஆதரிக்கிறது. ஆனால், இயற்கை வளங்களுக்கான தேவை, குறிப்பாக வளர்ந்த நாடுகளில், அதிகமாகவே உள்ளது. இதுவும் சுற்றுச்சூழலில் தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்றும் அதீத நுகர்வு தீவிர பிரச்னையாகி வருவதாகவும் பல சூழலியலாளர்கள் நம்புகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
பொருளாதார வாய்ப்புகள்
பொருளாதாரத்தைப் பொறுத்தவரை மக்கள்தொகை பெருக்கம் நல்ல விஷயமாகப் பார்க்கப்படுகிறது. பொருளாதாரத்தில் ஒரு முக்கியமான கருத்து உண்டு: உங்களிடம் அதிகமான மக்கள் இருந்தால், அதிகமான பொருட்களை உற்பத்தி செய்யலாம், அதிகமான சேவைகளை வழங்கலாம். அவர்கள் அதிக நுகர்வையும் மேற்கொள்வார்கள். எனவே மக்கள்தொகை பெருக்கம் பொருளாதார வளர்ச்சியின் சிறந்த நண்பன்.
இருப்பினும், குறைந்த மக்கள்தொகை வளர்ச்சியால் எப்போதும் பொருளாதார வீழ்ச்சி ஏற்படுவதில்லை. சான்றாக ஜப்பானை எடுத்துக் கொள்ளுங்கள். 1966ஆம் ஆண்டில் பிறப்பு விகிதம் 1.6 ஆகக் குறைந்தபோதும் பொருளாதார வளர்ச்சியில் அது வீழ்ச்சியடையவில்லை.


ஹவாய் பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியர் ஆண்ட்ரூ மேசன், "வாழ்க்கை தரத்தைப் பார்த்தால், மக்கள் சில நேரங்களில் சித்தரிக்கும் அளவுக்கு ஜப்பான் பொருளாதாரம் சரிந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. அவர்களுக்குக் குறைவான குழந்தைகள் உள்ளன. ஆனால், அவர்கள் கல்விக்கு முக்கியத்துவம் அளித்துள்ளனர், மிகச் சிறந்த சுகாதார அமைப்புகளைக் கொண்டுள்ளனர்," என்கிறார்.
ஜப்பானில் சேமிப்பு, முதலீடு ஆகியவை இயல்பாக உள்ளன என்று சுட்டிக்காட்டும் மேசன், "அதனால் மூலதனம் மற்றும் உற்பத்தித் திறன் அதிகரித்துள்ளது," என்கிறார். மேலும் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கு வேறு வழிகள் உள்ளன. குடியேற்றம் பெரும்பாலும் புதிய தொழிலாளர்களுக்கு உதவிகரமான ஆதாரத்தை வழங்குகிறது. இது உலக மக்கள்தொகையில் கூடுதல் எண்ணிக்கையைச் சேர்க்காமல் செய்கிறது என்கிறார் மேசன். அதேவேளையில், குடியேற்றம் சீரற்றதாகவும் உள்ளது. ஒரு நாடு, வேறு நாட்டிலிருந்து தொழிலாளர்கள் வெளியேறுவதால் அதற்கு ஏற்படும் இழப்பிலிருந்து தனது பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
நூற்றாண்டின் இறுதியில் 10 பில்லியனாக உயரும்
பூமி முழுவதும் மனிதகுலம் எந்தளவுக்குப் பரவும் என்பது இன்னும் முடிவாகவில்லை என்றாலும், ஓரளவுக்குக் கணிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று, மக்கள்தொகையைக் குறைப்பதற்கான முயற்சிகளைப் பொருட்படுத்தாமல் இன்னும் சில காலத்திற்கு வளர வாய்ப்புள்ளது.
மக்கள்தொகை மாற்றம் என்பது பிறப்பு விகிதங்களைப் பற்றியது மட்டுமல்ல. மக்கள்தொகையின் அமைப்பும் அதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக குழந்தை பிறக்கும் வயதிலுள்ள மொத்த பெண்களின் எண்ணிக்கை. கருவுறுதல் விகிதம் அதிகமாகவுள்ள நாடுகளில், அந்த மக்கள்தொகையில் இருக்கும் பெண்கள் இனப்பெருக்க வயதை அடையும் வரை மக்கள்தொகை வளர்ச்சியின் முழு தாக்கமும் உணரப்படுவதில்லை.
2014ஆம் ஆண்டின் ஓர் ஆய்வில், கொடிய தொற்றுநோய் பேரிடர், பேரழிவு அல்லது உலகப் போர் போன்ற பெரிய உலகளாவிய இழப்பு ஏற்பட்டாலோ அல்லது பூமியின் ஒவ்வொரு நாட்டிலும் செயல்படுத்தப்படாலோ கூட, 2100ஆம் ஆண்டு அளவில், பூமியின் மக்கள் தொகை 10 பில்லியனாக உயரும்.
இந்த நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில், ஐந்தாண்டு காலத்திற்குள்ளாகவே 2 பில்லியன் மக்கள் உயிரிழக்கும் அளவுக்கு ஒரு பேரழிவு ஏற்பட்டாலும்கூட, மக்கள்தொகை 8.5 பில்லியனாக வளரும். அடுத்து வரவுள்ள ஆண்டுகளில் மனித குலம் இன்னும் மேலாதிக்கம் செலுத்தவுள்ள நிலையில், இணைந்து வாழ்வதற்கும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். அதுவே நம் இனத்தின் மிகப்பெரிய சவாலாக இருக்கலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













