டைனோசர்கள் உடலுறவும் பிறப்புறுப்பும் - விலகாத மர்மங்களுக்கான சில விடைகள் இதோ

டைனோசர்கள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஜாரியா கோர்வெட்
    • பதவி,

நாங்கள் பிரிட்டனில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் உள்ளோம். இந்த பல்கலைக்கழகத்தில் பரிணாம வளர்ச்சி துறை பேராசிரியராக உள்ளவர் ஜேக்கப் விந்தெர், புதை படிம எச்சங்கள் விவகாரத்தில் நிபுணத்துவம் பெற்றிருப்பவர்.

இவருடைய அறை, அருங்காட்சியகம் மற்றும் நூலகம் இரண்டும் சேர்ந்த கலவை போன்று இருந்தது. எங்களுக்கு இடையிலான உரையாடலின்போது, பேசக் கூச்சப்படும் ஒரு விஷயம் பற்றி பேசினார் விந்தெர்.

சீனாவின் லியானிங் மாகாணத்தின் யிக்ஸியன் ஃபார்மேஷன் எனும் பிரபலமான தொல்லியல் தளத்தில், ஒருவகை டைனோசரான டைரனோசர் இரண்டின் எச்சங்கள், பண்டைய குளம் ஒன்றில் அருகருகே நெருக்கமாக இருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அந்த இரு டைரனோசர்களும் உடலுறவு கொண்டிருந்ததா என்பதை விந்தெர் அறிய முற்படுகிறார்.

நவீன அறிவியல் தொழில்நுட்பங்கள் வாயிலாக, டைனோசர்களின் வாழ்க்கை குறித்த நுணுக்கங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து வருகின்றனர். இவை சில தசாப்தங்களுக்கு முன்பு நினைத்துக்கூட பார்க்க முடியாததாக இருந்தது.

டைனோசர்களின் உடலமைப்பு, அவை எப்படி தன் இரையைத் தேடின என்பது குறித்த பல்வேறு தகவல்கள் இந்த அறிவியல் தொழில்நுட்பங்களின் வாயிலாக தெரியவந்துள்ள போதிலும், டைனோசர்கள் எப்படி உடலுறவு கொண்டிருக்கும் என்பது குறித்து இதுவரை எதுவும் தெரியவில்லை.

அதுமட்டுமல்ல, ஆண் டைனோசர்கள் மற்றும் பெண் டைனோசர்களை எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது, அவற்றுக்கு என்ன மாதிரியான பிறப்புறுப்புகள் இருந்தன என்பது குறித்தும் ஆராய்ச்சியாளர்களால் இன்னும் கண்டறிய முடியவில்லை. இந்த அடிப்படை புரிதல்கள் இல்லாமல் அவற்றின் உயிரியல் அமைப்பு மற்றும் நடத்தைகளை கண்டறிவது மர்மமாகவே இருக்கிறது. ஆனால், டைனோசர்கள் உடலுறவு கொண்டிருக்கும் என்பது மட்டும் உறுதியாக இருக்கிறது.

டைனோசர்களின் பிறப்புறுப்பு குறித்த மர்மங்கள்

டைனோசர்

பட மூலாதாரம், Wikimedia Commons/ Ghedoghedo

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரு டைனோசர்களின் எச்சங்கள் குறித்து எங்களிடம் பேசிய விந்தெர், "அவை ஒன்றோடொன்று விலகிச் செல்வது போன்று இருந்தன. அவற்றின் வால்கள் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டிருந்தன. இரண்டும் உடலுறவில் ஈடுபட்டிருக்கும்போது இறந்திருக்கலாம்" என தெரிவித்தார்.

மற்ற உதாரணங்களுக்குள் செல்வதற்கு முன்பே, இந்த கோட்பாடு மிகவும் சந்தேகத்துக்கிடமானது எனவும், இன்னும் பிரசுரிக்கப்படாத, யோசனை அளவிலேயே இருப்பதாகவும் விந்தெர் ஒப்புக்கொள்கிறார். அந்த இரண்டு டிரைனோசர்களும் உடலுறவு கொண்டிருந்தால், இதுவரை புதைபடிம எச்சமாக கண்டறியப்படாத மென்மையான உறுப்பு பற்றிய தகவல்கள் வெளிவரலாம். அதாவது, டைரனோசர்களுக்கு ஆண்குறிகள் இருந்திருக்கலாம் என்பதுதான் அது.

டைனோசர்களின் பாலினம் குறித்த தெளிவற்ற உண்மைகள் குறித்த மற்றொரு ஆதாரம் பற்றியும் விந்தெர் பகிர்ந்துகொண்டார்.

டைனோசர்கள்

பட மூலாதாரம், Getty Images

144 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புவரை பரவிய கிரெட்டாசியஸ் காலத்தில், வடகிழக்கு சீனாவில் அழிந்துபோன பறவைகளின் புதைபடிமங்கள் கொண்ட ஜெஹோல் பயோட்டா என அழைக்கப்படும் பகுதி குறித்து அவர் விளக்கினார்.

ஒருவகை டைனோசரான சிட்டாகோசரஸ் குறித்து பேசினார் விந்தெர். இப்போது ஒரு பெண் சிட்டாகோசரஸ் ஒரு வெயில் காலத்தில் தன் காட்டை விட்டு வெளியேறி, அங்குள்ள ஏரி ஒன்றில் தண்ணீர் அருந்த செல்கிறது என வைத்துக்கொள்வோம். அந்த பெண் சிட்டாகோசரஸ் 3 அடி நீளம் (91 செ.மீ.) கொண்டது. ஏரியில் தண்ணீரை அருந்தும்போது அதில் தவறி விழுந்து மூழ்கிவிடுகிறது என நினைத்துக்கொள்ளுங்கள்.

அந்த சிட்டாகோசரஸின் புதைபடிம எச்சங்கள் குறித்து விளக்கிய விந்தெர், அதன் வால்பகுதிக்குக் கீழே கருநிறத்தில் வட்டமாக இருந்த தோல்பகுதி குறித்து விளக்கினார். அந்த டைனோசரின் பிறப்புறுப்பு பகுதியான இது, அனைத்துத் தடைகளையும் கடந்து, ஆரம்பகால கிரெட்டாசியஸ் காலத்திலிருந்து பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறது. இக்காலம், 16 லட்சம் சராசரி மனித ஆயுட்காலத்திற்கு சமமானதாகும்.

விந்தெர் அலுவலகத்தில் உள்ள சிட்டாகோசரஸ் எச்சம் உண்மையானது அல்ல, அதன் மாதிரியாகும்.

சிட்டாகோசரஸின் பின்பகுதியில் உள்ள இந்த உறுப்பு நமக்கு சொல்வது என்ன?

டைனோசர்களின் சந்ததியினரான பறவைகள், முதலைகள் போன்றே இதற்கும் மலத்துவாரம் உள்ளது. இந்த உறுப்பு, பாலூட்டிகளை தவிர்த்து, நிலத்தில் வாழும் அனைத்து முதுகெலும்பிகளுக்கும் இருக்கும். இந்த துவாரம் பல்வேறு பயன்பாடுகளை கொண்டதாகும். அதன் வழியாக மலம் கழித்தல், சிறுநீர் கழித்தல், உடலுறவு கொள்ளுதல் மற்றும் இனப்பெருக்கம் செய்தல் உள்ளிட்டவை நிகழும். இது புதிய கண்டுபிடிப்பு அல்ல, ஆனால், தன்னுடைய பரிணாமத்தில் வந்த உயிரினங்களைப் போன்றே டைனோசர்களுக்கும் அதே உடற்கூறியல் இருந்ததை யாரும் முன்பு உறுதி செய்ததில்லை.

சிட்டாகோசரஸின் வால் பகுதிக்கு அடியில் மெலானின் நிறமி இருப்பதை சுட்டிக்காட்டி விளக்கிய விந்தெர், மெலானின் பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டது என தெரிவித்தார்.

அதிகமான மெலனின் செறிவு காரணமாக பெரும்பாலான விலங்குகள், மனிதர்களுக்கு பிறப்புறுப்பை சுற்றி கருப்பு நிறம் ஏற்படுகிறது. மனிதர்களைப் போன்று டைனோசர்களுக்கும் அப்படித்தான்.

டைனோசர்

பட மூலாதாரம், Zaria Gorvett

டைனோசர்களின் இனச்சேர்க்கை உத்தி

"அவை பார்வை வாயிலாக சமிக்ஞை செய்திருக்கலாம்" எனக்கூறும் விந்தெர், அவற்றின் பார்வைத்திறன் குறித்து விளக்கினார்.

பறவைகளைப் போன்று டைனோசர்களுக்கும் கருப்பு - வெள்ளை தவிர்த்து மற்ற வண்ணங்களையும் அறியும் மிகச்சிறப்பான பார்வைத் திறன் இருந்திருக்கும் என யூகிக்கும் விந்தெர், "அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஏன் அவை தன் மலத்துவாரம் வாயிலாக இணையை ஈர்த்திருக்கக் கூடாது?" என கேட்கிறார்.

கேள்விக்குரிய சிட்டாகோசரஸ் ஆணா அல்லது பெண்ணா அல்லது அவை எந்தவித பாலியல் உறுப்பை கொண்டிருந்தன என்பதைச் சொல்ல முடியாது. உடலுறவு கொள்வதற்கு டைனோசர்கள் இரு சாத்தியமான உத்திகளை கொண்டிருக்கலாம். ஒன்று, பெண் டைனோசரின் மலத்துவாரத்தில், ஆண் டைனோசர் தன் விந்தணுக்களை நேரடியாக வெளியேற்றுவது (பறவைகளைப் போன்று), மற்றொன்று, ஆண் டைனோசர்களுக்கு ஆண்குறி இருந்திருந்தால், அதன் வாயிலாக உடலுறவு கொள்வது (முதலைகளை போன்று).

டைனோசர்களின் பிறப்புறுப்புகள் குறித்த இந்த தகவல்கள் போதுமானவையாக உள்ளது. ஆனால், அதன் இனப்பெருக்கம் குறித்த மற்ற அம்சங்கள் என்ன? அதன் இனச்சேர்க்கை சடங்குகள் என்னவாக இருந்தன? இரண்டும் சண்டையிட்டிருக்குமா அல்லது நடனம் புரிந்திருக்குமா? ஆண் - பெண் டைனோசர்கள் இரண்டும் வித்தியாசமாக இருந்திருக்குமா? எதிர்பாலினத்தை ஈர்க்கும் அம்சங்கள் என்ன என்பதை நாம் எப்படி சொல்வது?

குயின் மேரியில் உள்ள லண்டன் பல்கலைக்கழகத்தின் பரிணாம சூழலியலாளர் ராப் னெல், டைனோசர்களின் புதைபடிம எச்சங்களில் இதுகுறித்து சில தடயங்கள் இருப்பதாக எனக்கு உறுதியளித்தார்.

"டைனோசர்களிடத்தில் 'விசித்திரமான சில அம்சங்கள்' இருப்பதாக சிலர் கூறுவார்கள். அவைதான் டைனோசர்களின் கவர்ச்சிகரமான ஒரு அங்கமாக இருந்திருக்கும். ஸ்டெகோசரஸ்களின் முதுகுப்புறத்தில் எலும்பாலான தட்டுக்கள், ஸ்பைனோசரஸ்களின் படகு போன்ற வடிவிலான முதுகு, டிரைசெரடாப்கள் மற்றும் செராடோப்சியன்களில் உள்ள மடிப்புகள் மற்றும் கொம்புகள், ஹாட்ரோசரஸ்களில் உள்ள பெரிய முகடு உள்ளிட்ட அனைத்தும், தன் இணையை கவர்வதற்கான அம்சங்களாகும்," என்கிறார் அவர்.

கடந்த காலங்களில் பழங்கால ஆராய்ச்சியாளர்கள் டைனோசர்களின் இந்த அம்சங்கள் தன் இணையை கவர்வதற்கானவையாக இருந்திருக்கும் என்பதை விளக்குவதில் தயக்கம் காட்டியதாக ராப் னெல் குறிப்பிடுகிறார். அதேசமயம் இந்த அம்சங்கள் அவற்றுக்கானதுதான் என்பதை அவர்கள் யூகித்திருந்தாலும், அதனை அறிவியல்பூர்வமாக நிரூபிக்கவில்லை என தெரிவித்தார்.

பாலின இருவகைமை (dimorphism) என்று ஒன்று உள்ளது. அதாவது ஒரு உயிரினத்தின் ஆண் - பெண் இரண்டும் வெவ்வேறு மாதிரியாக இருப்பது. இரு பாலினங்களும் வெவ்வேறு உடலியல் அம்சங்களை கொண்டிருக்கும்போது ஆண் இனம், பெண் இனத்தை நோக்கி கவரப்படுவது வழக்கமானது.

டைனோசர்

பட மூலாதாரம், Getty Images

ஆனால், இந்த அம்சம், டைனோசர்களை புரிந்துகொள்வதில் அவ்வளவாக பயன்படாது. ஏனெனில், ஆண் - பெண் டைனோசர்களை இன்னும் ஆராய்ச்சியாளர்களால் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. அவற்றின் புதைபடிம எச்சங்களில் அவர்கள் வித்தியாசங்களை உணர முடிந்தாலும், அவர்கள் வெவ்வேறு பாலினத்தை பார்க்கிறார்களா அல்லது வேறு இனத்தைப் பார்க்கிறார்களா என்பது தெரியவில்லை.

நெருப்புக்கோழிகள் போல இருந்ததா டைனோசர்?

2009ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், டைனோசர் இனமான டிரைசெராடாப்களின் மண்டை ஓடு எச்சங்களில் உள்ள காயங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இது பாலியல் போட்டியில் ஏற்பட்ட சண்டைகளால் ஏற்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

"டைனோசர்கள் உடலுறவு குறித்து வித்தியாசமாக நினைப்பதற்கு எந்த காரணங்களும் இல்லை" என ராப் னெல் குறிப்பிடுகிறார்.

2016 ஆம் ஆண்டில் கொலரடாவில் ஆராய்ச்சியாளர்கள் பாறைப் படுகையொன்றில் தோண்டியபோது, பண்டைய குட்டைகளைப் போன்ற விசித்திரமான தொட்டிகளை கண்டுபிடித்தனர்.

அதுகுறித்த இன்னும் நெருக்கமான, விரிவான ஆய்வு கிரெட்டாசியஸ் காலத்தைச் சேர்ந்த டிரைனோசர்களின் கீறல்கள், மூன்று கால் தடங்கள் போன்ற தனிச்சிறப்புகளை வெளிப்படுத்தியது. இவை தற்செயலானவை அல்ல, அவை டைனோசர்களுடையது. அவை இன்றைய நெருப்புக்கோழிகளின் தடங்களின் பெரும் வடிவம் போன்று இருந்தது.

பெண் நெருப்புக்கோழிகள் மிகவும் தேர்ந்தெடுத்து இணை சேர்வதற்கு விரும்பும், இதனால் ஆண் நெருப்புக்கோழிகள் அவற்றை கவர்ந்திழுக்க நீண்ட நடனம் புரிய வேண்டும். இதில், ஓடுதல், இறக்கைகளை அசைத்தல் போன்றவையும் அடங்கும். அதேபோன்று, டைனோசர்களும் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இதனையே செய்திருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.

டைனோசர்கள் இணைசேரும் சடங்குகளின் இத்தகைய நகைச்சுவையான விவரணைகள் குறித்து மேலதிகமானவை கிடைக்கவில்லை எனக்கூறுகிறார் ராப் னெல்.

டைனோசர்களின் வாழ்க்கை குறித்து முன்பு நினைத்துக்கூட பார்க்க முடியாத தகவல்களை சமீப ஆண்டுகளில் நாம் அறிந்துவருகிறோம். யாருக்குத் தெரியும், இன்னும் சில தசாப்தங்களில் டைனோசர்கள் என்ன மாதிரியான பிறப்புறுப்புகளை கொண்டிருந்தன என்பதைக்கூட நாம் அறியலாம்.

(பிபிசி ஃப்யூச்சர் பகுதியில் ஸரியா கோர்வெட் என்பவர் எழுதியது)

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: