உடல் முழுக்க கொம்பு முளைத்த அங்கிலோசர்: 16.8 கோடி ஆண்டு பழைய முள் எலும்பு அதிசயம்

அங்கிலோசர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அங்கிலோசர்: கவசம் பூட்டிய காஃபி டேபிள் நகர்ந்து வந்தால் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்குமோ?
    • எழுதியவர், ஜோனாதன் அமோஸ்
    • பதவி, அறிவியல் செய்தியாளர்

குட்டையான, அகலமான காபி டேபிளுக்கு உடம்பெல்லாம் கொம்பு முளைத்து உங்களை நோக்கி நகர்ந்து வருவதாக கற்பனை செய்து பாருங்கள். அதுதான் அங்கிலோசர் (Ankylosaur). டைனோசர் போல அழிந்துபோன ஒரு தொல் பழங்கால விலங்கு.

இது போன்ற அங்கிலோசர் ஒன்றின் உடலில் இருந்த முள் முள்ளாய் நீட்டிக்கொண்டிருக்கும் ஒரு எலும்புத் துண்டு ஒன்றின் புதைபடிவம், ஆப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தை சேர்ந்த ஆய்வாளர் டாக்டர் சூசி மெய்ட்மெண்ட் தன்னிடமுள்ள அற்புதமான இந்த புதைபடிவம் பற்றி விளக்குகிறார்.

அவரிடம் இருப்பது ஒரே ஒரு விலா எலும்பு துண்டுதான். இதில்தான் முள் முள்ளாக நீட்டிக்கொண்டிருக்கிறது.

ஆனால், இதை மட்டுமே வைத்து இது ஒரு புதுமையான கவசம் போர்த்திய டைனோசர் வகையைச் சேர்ந்த விலங்கினுடையது என்றும், இதுவரை கண்டறியப்பட்டதிலேயே மிகப்பழமையான அங்கிலோசர் எலும்பு இது என்றும் எந்த ஒரு தொல்லுயிரியல் அறிஞரும் கூறிவிடமுடியும்.

இது ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மொராக்கோ நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஆப்பிரிக்காவில் அங்கிலோசர் எலும்பு எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில்லை என்பது மிக முக்கியமானது.

"இது ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது பெரிய ஆச்சரியம்தான் என்றாலும் அதைவிடப் பெரிய வினோதம் ஒன்று இதில் உள்ளது. இந்த நீட்டிக்கொண்டிருக்கிற முட்கள் எலும்பிலேயே நேரடியாக சேர்ந்துள்ளன. இதுதான் பெரிய புதிராக உள்ளது," என்றார் டாக்டர் மெய்ட்மெண்ட்.

சாதாரணமாக, விலா எலும்பைச் சுற்றி சதை இருக்கும். அதன் மீது தோல் மூடியிருக்கும். அந்த தோல் மீது கேரடின் என்று சொல்லக்கூடிய நகம் போன்ற ஒரு புரதம் முள்ளாக முளைத்திருக்கும். ஆனால், இந்த அங்கிலோசர் உடலில் விலா எலும்பில் இருந்தே ஈட்டிபோல கொம்புகள் முளைத்திருக்கின்றன. இது மிகவும் வித்தியாசமானது.

இது போன்ற அமைப்பு இருந்தால், அது தசைகள் விரிவடைவதை தடுக்கும், விலங்கு நகர்வதற்கே அது தடையாக இருக்கும். எனவே இது மிகவும் விந்தையானது என்று பிபிசி நியூசிடம் கூறினார் டாக்டர் மெய்ட்மெண்ட்.

அசந்துபோன ஆய்வுக் குழு

"இது போன்ற ஒரு அமைப்பை எந்த ஒரு வாழும் அல்லது அழிந்துபோன முதுகெலும்புள்ள உயிரினங்களிலும் பார்த்ததில்லை. இப்படிப்பட்ட ஓர் உடலமைப்பு புவிக் கோளின் உயிரின வரலாற்றிலேயே முன்னெப்போதும் காணாதது," என்கிறார் அவர்.

டாக்டர் மெய்ட்மெண்ட்டின் குழுவினர் இந்த புதைபடிவத்தை பார்த்து அசந்துபோய்விட்டனர். இந்த புதைபடிவம் ஏதேனும் போலியான ஒன்றா என்று அவர்கள் கொஞ்ச நாள்கள் சந்தேகத்தில் இருந்தனர். பிறகு, அங்கிலோசர் இல்லாமல் ஏதேனும் ஒரு பிரும்மாண்ட மீனின் எலும்பாக இது இருக்குமா என்றுகூட யோசித்தனர். ஆனால், விரிவான ஸ்கேனிங் மற்றும் ஆய்வுக்குப் பிறகு இந்த மாற்று யோசனைகளை அவர்கள் கைவிட்டு, இது அங்கிலோசர்தான் என்ற முடிவுக்கு வந்தனர்.

காணொளிக் குறிப்பு, கிடைத்த இந்த அரிய எலும்புத் துண்டினை ஆராய்சியாளர்கள் ஸ்கேன் செய்து பார்த்தனர்.

ஸ்டெகோசர்ஸ்உறவினர்

நிறைய பேருக்கு ஸ்டெகோசர்ஸ் என்ற தொல்பழங்கால விலங்கைத் தெரியும். அவையும் டைனோசர்களில் ஒரு வகையே. மேலே கவசம் போர்த்திய டைனோசர்கள் அவை. அவற்றின் முதலுகெலும்புக்கு இரு பக்கமும் இருந்து தட்டுபோன்ற ஒரு பாகம் வெளியே வரிசையாக இலை இலையாக நீட்டிக்கொண்டிருக்கும்.

லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்துக்கு சென்றால் சோஃபி என்று பெயரிடப்பட்ட பிரும்மாண்டமான ஸ்டெகோசர்ஸ் எலும்புக்கூட்டினைப் பார்க்கலாம்.

சோஃபி, ஸ்டெகோசர் எலும்புக்கூடு.

பட மூலாதாரம், NHM

படக்குறிப்பு, லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது, முழுமையாக கண்டறியப்பட்ட ஸ்டெகோசர் எலும்புக்கூடு. இதற்கு சோஃபி என்று பெயரிடப்பட்டுள்ளது.

அங்கிலோசர்கள் அவற்றின் பரிணாம உறவினர்கள். மிக வெற்றிகரமாக வாழ்ந்தவையும்கூட. கிரெட்டேஷியஸ் யுகம் முழுவதும் இவை வாழ்ந்திருக்கின்றன.

6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு புவியை ஒரு மிகப்பெரிய விண்கல் தாக்கிய நிகழ்வு வரை இந்த இனம் இருந்தது. இந்த விண்கல் தாக்கிய நிகழ்வில்தான் புவியில் இருந்த தாவர மற்றும் விலங்கினங்களில் 75 சதவீதம் அழிந்தன.

அங்கிலோசர்கள் முதல் முதலாக எப்போது தோன்றின என்பது இன்னும் ஆராய்ச்சிக்குரியதாகவே இருக்கிறது. அதனால்தான் இந்த புதிய எலும்புத் துண்டு கண்டுபிடிக்கப்பட்டது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

16.8 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது

இந்த எலும்புத் துண்டு 16.8 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அங்கிலோசருடையது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த காலம் நடு ஜுராசிக் யுகத்தில் வருகிறது.

டைனோசர் வரலாறு தொடர்பான நமது அறிவில் உள்ள முக்கியமான இடைவெளிகளை நிரப்ப இந்த கண்டுபிடிப்பு உதவுகிறது. அங்கிலோசர்கள் உலகம் முழுவதும் பரவியிருந்தன என உறுதியாக வாதிடுவதாகவும் இது உள்ளது.

எலும்பில் ஒட்டி வளர்ந்துள்ள கொம்பு போன்ற கூர்முனைகள்.

பட மூலாதாரம், NHM

படக்குறிப்பு, எலும்பில் ஒட்டி வளர்ந்துள்ள கொம்பு போன்ற கூர்முனைகள்.

"வட பகுதி கண்டங்களில், குறிப்பாக வட அமெரிக்கா, ஆசியாவில், அங்கிலோசர்கள் இருந்தது நன்கு அறியப்பட்டது. ஆனால் தென் பகுதி கண்டங்களில் அவை இருந்தது குறித்து பெரிதாகத் தெரியாது," என்று விளக்கினார் டாக்டர் மெய்ட்மெண்ட்.

"அவை இருந்தன என்று நம்பத் தூண்டும் பல எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நல்ல எச்சத்தைத் தவிர, நம்மிடம் பெரிய ஆதாரங்கள் இல்லை. ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் அங்கிலோசர் புதைபடிவம் இது. தவிர, இது உண்மையிலேயே மிக மிகப் பழைய காலத்தை சேர்ந்தது.

நடு ஜுராசிக் யுகத்தில் ஸ்டெகோசர்கள் இருந்ததால் அங்கிலோசர்களும் அதே யுகத்தில் இருந்திருக்கவேண்டும் என்று நீண்ட காலமாக நாம் சந்தேகித்து வந்தோம். ஸ்டெகோசர்களும் அங்கிலோசர்களும் மிக நெருங்கிய உறவு கொண்டவை. எனவே ஸ்டெகோசர்கள் அப்போது பரிணமித்திருந்தால் அதே காலத்தில் அங்கிலோசர்களும் அப்போதே பரிணமித்திருக்கவேண்டும் என்று கருதுவது அறிவுபூர்வமானதே," என்கிறார் அவர்.

மொராக்கோவின் நடு அட்லாஸ் மலை.

பட மூலாதாரம், NHM

படக்குறிப்பு, மொராக்கோ: ஆப்பிரிக்காவில் இன்னும் பல டைனோசர் கண்டுபிடிப்புகள் நிகழும்.

இந்த புதிய டைனோசருக்கு Spicomellus aferஎன்று பெயரிட்டுள்ளார் மெய்ட்மெண்ட்.

Spicomellus என்பதற்கு முள் விலா என்றும் afer என்பதற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த என்றும் பொருள்.

மொராக்கோவின் நடு அட்லாஸ் மலையைச் சேர்ந்த விவசாயி ஒருவர் இந்த எலும்புத் துண்டினை கண்டுபிடித்தார். இதே இடத்தில்தான் லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியக ஆராய்ச்சியாளர்கள் மிகப் பழமையான ஸ்டெகோசர் புதைபடிவத்தையும் கண்டுபிடித்தனர்.

முள் எலும்பு.

பட மூலாதாரம், NHM

படக்குறிப்பு, முள் முளைத்த எலும்பு - ஓர் உயிரியல் அதிசயம்.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மேற்கொண்டு அகழாய்வுகள் செய்ய முடியாமல் போனது. அதற்கு முன்பே அங்கு சென்று வந்தார் மெய்ட்மெண்ட்.

சகஜ நிலை திரும்பிய பிறகு வேறு அங்கிலோசர் எலும்புத் துண்டுகள் ஏதும் கிடைக்குமா என்று பார்க்க அவர் மீண்டும் மொராக்கோ செல்வார். கிடைத்தால் அவை அங்கிலோசர்களின் அசாதாரண உடற்கூறு குறித்து மேலும் புரிந்துகொள்ள உதவி செய்யலாம்.

இந்தப் புதிய கண்டுபிடிப்பு குறித்த விவரிப்புகள் Nature Ecology & Evolution சஞ்சிகையில் இடம் பெற்றுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :