டைனோசர் எச்சங்கள்: 12.5 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ஐரோப்பாவின் 'மிகப்பெரிய' டைனோசர்கள்

பட மூலாதாரம், AFP
ஐரோப்பாவின் நிலத்தில் வேட்டையாடும் 'மிகப்பெரிய' டைனோசரின் எச்சங்கள் இங்கிலாந்தின் வைட் தீவில் (Isle of Wight) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் தொல்லுயிரியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள இந்த எச்சங்கள்,12.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாகவும், இது 32 அடி (10 மீ) நீளம் இருந்ததாகவும் கண்டறிந்துள்ளனர்.
இந்த எச்சங்களில் கிடைத்துள்ள எலும்புகள், இரண்டு கால்கள், முதலை முகம் கொண்ட, வேட்டையாடும் 'ஸ்பினோசவுரிட்' வகை டைனோசருக்கு சொந்தமானது.
இந்த ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய பிஎச்.டி மாணவர் கிறிஸ் பார்கர், இது ஒரு பெரிய விலங்காக இருந்திருக்கும் என்கிறார்.
இடுப்பு மற்றும் வால் முதுகெலும்பு பகுதிகளை கொண்டுள்ள இந்த எச்சங்கள், வைட் தீவின் தென்மேற்கு பகுதி கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டன.
அப்பகுதியின் புவியியல் அடுக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த எச்சங்களுக்கு சொந்தமான மாமிசம் உண்ணும் டைனோசரை "வெள்ளை பாறை ஸ்பினோசவுரிட்" ("white rock spinosaurid) என்று அழைக்கப்படுகிறது.

பட மூலாதாரம், CHRIS BARKER DAN FOLKES
"இது ஒரு பெரிய விலங்காக இருந்திருக்கிறது. இதன் நீளம் 10 மீட்டர். இதன் எடை பல டன்கள் இருக்கும்," என்று பார்கர் கூறுகிறார்.
"சில பரிமாணங்களில் இருந்து ஆராயும்போது, இது ஐரோப்பாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய வேட்டையாடும் டைனோசர்களில் ஒன்றாக தோன்றுகிறது. ஒருவேளை, நாம் அறிந்த டைனோசர்களில் மிகப்பெரியதாகவும் இருக்கலாம்."
இது கடல் மட்டம் உயரும் காலகட்டத்தின் தொடக்கத்தில் வாழ்ந்திருக்கும். உணவு தேடுவதற்காக குளக்கரை நீர்நிலைகள், மணற்பரப்புகளில் சுற்றியிருக்கலாம்.
இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட ஆய்வாளர்களில் ஒருவரான டேரன் நைஷ் கூறுகையில், "இது தற்போது உடைந்த துண்டுகளிலிருந்து மட்டுமே அறியப்பட்டிருப்பதால், இதற்கு முறையான அறிவியல் பெயரை நாங்கள் வழங்கவில்லை. இன்னும் கூடுதலான எச்சங்கள் சரியான நேரத்தில் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்", என்றார்.

பட மூலாதாரம், JEREMY LOCKWOOD
இதில் பெரும்பாலான புதைபடிவங்கள் வைட் தீவில் டைனோசர் எச்சங்களை தேடுபவரான நிக் சேஸால் கண்டுபிடிக்கப்பட்டன. அவர் கோவிட் தொற்றுகாலத்திற்கு முன் இறந்துவிட்டார்.
இந்த ஆய்வின் மற்றொரு ஆசிரியரும், போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டனின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் முனைவர் பட்டம் பெற்றவருமான ஜெர்மி லாக்வுட், "நான் இந்த டைனோசரின் எச்சங்களை நிக்குடன் தேடிக்கொண்டிருந்தேன். அதில் துளைகளுடன் கூடிய இடுப்பு பகுதியின் எச்சங்களை கண்டேன். அது ஒவ்வொன்றும் என் ஆள்காட்டி விரல் அளவுக்கு இருந்தன," என்றார்.
"அவை எலும்புகளை உண்ணும் ஒரு வகை வண்டுகளின் இளம் உயிரிகளால் (Larvae) ஏற்பட்டதாக நாங்கள் கருதுகிறோம். இந்த பெரிய விலங்கு, பல பூச்சிகளுக்கு உணவாக மாறியது என்பதை நினைக்க சுவாரசியமாக உள்ளது," என்கிறார்.

பட மூலாதாரம், CHASE FAMILY
'ஸ்பைனோசவுரிட்கள்' வகை டைனோசர்கள் குறித்து ஆய்வு செய்யும் சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் குழு, 2021ஆம் ஆண்டில் இரண்டு புதிய இனங்கள் கண்டுபிடிப்பு குறித்த ஆய்வை வெளியிட்டது. இந்த பணியின் தொடர்ச்சியே தற்போதைய கண்டுபிடிப்பு.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












