மெட்டாவெர்ஸ்: குழந்தைகளை ஆபாச மெய்நிகர் ஸ்ட்ரிப் கிளப்களில் அனுமதிக்கும் மெடாவெர்ஸ் செயலி

- எழுதியவர், ஆங்கஸ் க்ராஃபோர்ட் மற்றும் டோனி ஸ்மித்
- பதவி, பிபிசி ந்யூஸ்
வெர்ச்சுவல்-ரியாலிட்டி மெட்டாவேர்ஸில் உள்ள சில செயலிகள் "வடிவமைப்பினால் ஆபத்தானவை" என்று பிபிசி நியூஸ் ஆய்வு விசாரணைக்கு பதிலளிக்கும் வகையில் பிரிட்டனின் குழந்தைகள் பாதுகாப்பிற்கான தொண்டு அமைப்பான NSPCC எச்சரித்துள்ளது.
13 வயது சிறுமியாக தன்னை காட்டிக்கொண்ட ஒரு ஆய்வாளர், மெய்நிகர்-ரியாலிட்டி உலகில் தயார்படுத்தல், பாலியல் ரீதியிலான பொருட்கள், இனவெறி அவமதிப்பு மற்றும் பாலியல் வன்முறை அச்சுறுத்தலைக் கண்டார்.
இந்த கண்டுபிடிப்புகளால் "அதிர்ச்சியும் கோபமும்" அடைந்ததாக குழந்தைகளுக்கான தொண்டு அமைப்பு கூறியது.
ஆய்வுகளில் "ஆபத்துகளின் நச்சு கலவை" கண்டறியப்பட்டுள்ளது என்று ஆன்லைன் குழந்தை பாதுகாப்பு கொள்கையின் தலைவர் ஆண்டி பர்ரோஸ் கூறினார்.
உள்நுழைய குறைந்தபட்ச வயது 13 என்ற நிபந்தனை கொண்ட செயலியை பயன்படுத்தி மெய்நிகர்-ரியாலிட்டி அறைகளைப் பார்வையிட்டார் பிபிசி ந்யூஸ் ஆய்வாளர். அங்கு மாயபிம்பங்கள் பாலுறவை செய்துகாட்டின. அவரிடம் செக்ஸ் பொம்மைகள் மற்றும் ஆணுறைகள் காட்டப்பட்டன. மேலும் பல வயது வந்த ஆண்கள் அவரை அணுகினர்.
மெய்நிகர் ரியாலிட்டி ஹெட்செட்களை அணிந்தவர்கள் அணுகும் கேம்கள் மற்றும் அனுபவங்களுக்கு மெட்டாவேர்ஸ் என்று பெயர். முன்பு கேமிங்கில் மட்டுமே இருந்த இந்த தொழில்நுட்பம், வேலை முதல் விளையாட்டு வரை, கச்சேரிகள் முதல் சினிமா பயணங்கள் வரை பல துறைகளிலும் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக உள்ளது.
மார்க் ஜுக்கர்பெர்க் இது இணையத்தின் எதிர்காலமாக இருக்கலாம் என்று நினைக்கிறார் . இதன்காரணமாகவே அவர் சமீபத்தில் பேஸ்புக்கின் பெயரை மெட்டா என மாற்றினார். நிறுவனம் அதன் Oculus Quest ஹெட்செட்டை உருவாக்க பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்துள்ளது.
அந்த ஹெட்செட், இப்போது மெட்டா குவெஸ்ட் என்று மறுபெயரிடப்பட்டுள்ளது. சந்தையின் 75 சதவிகித பங்கை இது கொண்டுள்ளது என்று கருதப்படுகிறது. இந்த ஹெட்செட்களில் ஒன்றைத்தான் பிபிசி நியூஸ் ஆய்வாளர் மெட்டாவேர்ஸின் ஒரு பகுதியான இந்த செயலியை ஆராயப்பயன்படுத்தினார். VRChat எனப்படும் செயலி, 3D அவதாரங்களுடன் பயனர்கள் ஆராயக்கூடிய ஆன்லைன் மெய்நிகர் தளமாகும்.
இது ஃபேஸ்புக்கால் உருவாக்கப்படவில்லை என்றாலும், ஃபேஸ்புக்கின் மெட்டா க்வெஸ்ட் ஹெட்செட்டில் உள்ள ஆப் ஸ்டோரிலிருந்து வயது சரிபார்ப்பு சோதனைகள் இல்லாமல் பதிவிறக்கம் செய்யலாம். இதற்கான ஒரே தேவை ஃபேஸ்புக் கணக்கு.
பிபிசி நியூஸ் ஆய்வாளர் தனது கணக்கை அமைப்பதற்காக ஒரு போலி சுயவிவரத்தை உருவாக்கினார். அவரது உண்மையான அடையாளம் சரிபார்க்கப்படவில்லை.
VRChat இன் உள்ளே பயனர்கள் சந்திக்கக்கூடிய அறைகள் உள்ளன. இவற்றில் சில சாதாரணமானவை மற்றும் அன்றாடம் மக்கள் சந்திக்கக்கூடியவை. உதாரணமாக மெக்டொனால்டு உணவகம் போன்றவை. ஆனால் போல் டேன்சிங் மற்றும் ஸ்ட்ரிப் கிளப்புகளும் இங்கு உள்ளன.

குழந்தைகள் பெரியவர்களுடன் சுதந்திரமாக கலந்து பழகுகிறார்கள்.
அவதாரங்கள் "நிர்வாணமாக இருக்க முடியும் மற்றும் வெளியே சொல்ல முடியாத விஷயங்களைச் செய்ய முடியும்" என்று ஒருவர் எங்கள் ஆய்வாளரிடம் கூறினார். மற்றவர்கள் " கதாபாத்திரங்களின் சிற்றின்ப நடிப்பு" பற்றி பேசினார்கள்.
பிபிசி நியூஸ் ஆய்வைத்தொடர்ந்து, NSPCC (குழந்தைகள் மீதான கொடுமை தடுப்பு தேசிய அமைப்பு) ஆன்லைன் பாதுகாப்பை மேம்படுத்துவது அவசரமாக செய்யப்படவேண்டிய ஒரு விஷயம் என்று கூறியது.
"நாங்கள் கண்டுபிடித்தது "அசாதாரணமானது" என்று NSPCC ஐச் சேர்ந்த திரு பர்ரோஸ் எங்களிடம் கூறினார்.
" குழந்தைகள் முற்றிலும் பொருத்தமற்ற, உண்மையில் நம்பமுடியாத தீங்கு விளைவிக்கும் அனுபவங்களுக்கு ஆளாகிறார்கள்," என்று அவர் கூறினார்.
முதல் தலைமுறை சமூக ஊடகங்கள் செய்த தவறுகளிலிருந்து தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் கற்றுக் கொள்ளவில்லை என்று அவர் கருதுகிறார்.
"கவனக்குறைவு மற்றும் புறக்கணிப்பு காரணமாக, வடிவமைப்பால் ஆபத்தான தயாரிப்பு இது. பாதுகாப்புக்காக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்ற எந்தப்பரிந்துரையும் இல்லாமல் தயாரிப்புகள் வெளியிடப்படுவதை நாங்கள் காண்கிறோம்," என்று அவர் கூறினார்.
மற்ற பயனர்களைத் தடுக்க பிளேயர்களை அனுமதிக்கும் செயல்முறை இதில் இருப்பதாக மெட்டா கூறுகிறது. மேலும் "இந்த இடங்களில் மக்கள் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதை அறிந்துகொண்டு" பாதுகாப்பு மேம்பாடுகளைச் செய்ய விரும்புவதாகவும் அது தெரிவிக்கிறது.
பிபிசி நியூஸ், பாதுகாப்பு விஷயங்கள் தொடர்பாக பணியாற்றும் ஒருவரிடம் பேசியது. அவர் பல மாதங்கள் VRChat ஐ ஆராய்ந்து இப்போது YouTube இல் தனது வீடியோக்களை வெளியிடுகிறார்.
தாங்கள் அந்தத்தளங்களில் மன அளவில் தயார் செய்யப்பட்டதாகவும் , மெய்நிகர் உடலுறவில் பங்கேற்க கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் கூறும் குழந்தைகளிடம் அவர் பேசியுள்ளார். அவர் தனது குடும்பத்தின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தன் பெயரை வெளியிட விரும்பவில்லை.
மெய்நிகர் ரியாலிட்டி நம்மை அதில் மிகவும் ஆழமாக மூழ்கிவிடச்செய்கிறது. ஆகவே குழந்தைகள் உண்மையில் பாலியல் செயல்களைச்செய்ய தூண்டப்படுகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.
VRChat இல் எனது அனுபவம் - பிபிசி ஆய்வாளர் ஜெஸ் ஷெர்வுட்
இந்த தளங்களில் நாம் எவ்வளவு மூழ்கிப்போய்விடுகிறோம் என்பது எனக்கு ஆச்சரியம் தந்தது. நான் மீண்டும் ஒரு குழந்தையைப் போல உணர ஆரம்பித்தேன். எனவே நான் ஏன் பள்ளிக்குச்செல்லவில்லை என்று வயது வந்த ஆண்கள் கேட்கும்போதும், விஆர் செக்ஸ் செயல்களில் ஈடுபட என்னை ஊக்குவித்தபோதும் அது மனவுளைச்சலை அளித்தது.
VRChat நிச்சயமாக குழந்தைகளின் விளையாட்டு மைதானத்தை விட பெரியவர்களின் விளையாட்டு மைதானமாகவே இருப்பதாக உணர்ந்தேன். ஆம்ஸ்டர்டாமில் உள்ள சிவப்பு விளக்குப் பகுதியில் அல்லது இரவில் லண்டனின் சோஹோ பகுதிகளில் நீங்கள் பார்ப்பதைப் போலவே, நிறைய அறைகள் இளஞ்சிவப்பு நியான் வெளிச்சத்தில் வெளிப்படையாக பாலுறவு செயல்களுக்காகவே செய்யப்பட்டது போல இருந்தன. உள்ளே செக்ஸ் பொம்மைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
அறைகளில் ஒலிக்கும் பிளேயர்களால் கட்டுப்படுத்தக்கூடிய இசை, இது குழந்தைகளுக்கு ஏற்ற இடம் அல்ல என்ற எண்ணத்தை அதிகரிக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
அறைகளைப் பற்றிய அனைத்தும் அச்சத்தை அளித்தது. பெரிய குழுக்களாக தரையில் பாலியல் செயல்களை உருவகப்படுத்தும் கதாபாத்திரங்கள் இருந்தன. குழந்தைகள் விளையாடுவது போல் ஒருவருக்கொருவர் பேசுகிறார்கள் . வயது வந்த ஜோடிகளாக நடிக்கிறார்கள்.
இது மிகவும் அசௌகரியமாக இருந்தது. நம் முன்னே இருக்கும் வழிகள், அங்கேயே இருப்பது, இதே போன்ற ஒரு காட்சி நடந்துகொண்டிருக்கும் வேறு அறைக்குச் செல்வது அல்லது அதில் பங்கேற்பது. பல சந்தர்ப்பங்களில் இவற்றில் பங்கேற்க நான் அறிவுறுத்தப்பட்டேன்.
'மிகக் குறைவான கட்டுப்பாடு'
VR இன் வளர்ச்சிகளை கவனிப்பவர்களும் கவலை கொண்டுள்ளனர்.
கேத்தரின் ஆலன் 'லிமினா இம்மர்சிவ்' என்ற ஆலோசனை நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும் தற்போது இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜிக்கு VR பற்றிய அறிக்கையை எழுதி வருகிறார்.
பல VR அனுபவங்கள் "வேடிக்கையானதாக, கனவுலகை காட்சிகள்" போல இருந்தன என்றும் ஆனால் மற்றவை "மிகவும் அதிர்ச்சிகரமாக மற்றும் மன உளைச்சலை" அளிப்பதாக இருந்தன என்றும் அவரது ஆராய்ச்சி குழு கண்டறிந்துள்ளது.
மெட்டாவுக்குச் சொந்தமான செயலியில் ஏழு வயது சிறுமியை சந்தித்த ஒரு சம்பவத்தை அவர் விவரித்தார்.
ஒரு கும்பல் அவர்கள் இருவரையும் சூழ்ந்துகொண்டு அவர்களை கற்பழிப்பதைப் பற்றி கேலி செய்தனர். குழந்தையை பாதுகாக்க, அந்த ஆண்களுக்கும் குழந்தைக்கும் இடையில் தான் செல்லவேண்டியிருந்ததாக அவர் கூறினார்.
"நான் அதைச் செய்ய வேண்டிய நிலைமை இருந்திருக்கக்கூடாது. ஆனால் கட்டுப்பாடு இல்லாததால் தான் அதைச்செய்யவேண்டி வந்தது." என்றார் அவர்.
பிரிட்டனின் வரவிருக்கும் ஆன்லைன் பாதுகாப்பு மசோதாவில் VR மற்றும் metaverse ஆகியவை பெயரிட்டு குறிப்பிடப்படவில்லை. இந்த மசோதா வரும் மாதங்களில் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது.
ஆனால் இந்தச் சட்டம் விஆர் தொழில்நுட்பத்தை உள்ளடக்கும் என்று கலாச்சார அமைச்சர் நாடின் டோரிஸ் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் தீங்கிழைக்கும் உள்ளடக்கத்திலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் கடமையை, தளங்கள் மற்றும் வழங்குநர்கள் மீது அது விதிக்கும்.
"அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் வரவேற்கத்தக்க இடமாக தன்னை உருவாக்குவதற்கு கடினமாக உழைப்பதாக" VRChat எங்களிடம் கூறியது.
"வேட்டையாடுகின்ற மற்றும் நச்சு நடத்தைக்கு தளத்தில் இடமில்லை" என்று அது கூறியது.
விஆர் இண்டெக்ரிட்டிக்கான மெட்டாவின் தயாரிப்பு மேலாளர் பில் ஸ்டில்வெல் ஒரு அறிக்கையில்,"எங்கள் தயாரிப்புகளைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் நல்ல அனுபவத்தைப் பெற வேண்டும் மற்றும் இதுபோன்ற சூழ்நிலைகளில் உதவக்கூடிய செயல்முறையை எளிதாகப்பெறவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இதன்மூலம் நாங்கள் எளிதில் விசாரித்து நடவடிக்கை எடுக்கமுடியும்,"என்று குறிப்பிட்டுள்ளார்.
" பயனர்கள் பற்றி புகாரளிக்கவும் தடுக்கவும் வீரர்களை அனுமதிக்கும் கருவிகளை கிராஸ் பிளாட்ஃபார்ம் செயலிகளுக்கு நாங்கள் வழங்குகிறோம்," என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
"இந்த இடங்களில் மக்கள் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதைப் பற்றி மேலும் அறிந்துகொண்டு நாங்கள் தொடர்ந்து மேம்பாடுகளைச் செய்வோம்."
VR ஹெட்செட்களில் தங்கள் குழந்தைகள் எந்தெந்த செயலிகளை பயன்படுத்துகிறார்கள் என்பதைச் சரிபார்த்து, முடிந்தால் அவை பொருத்தமானவையா என்பதைத் தாங்களே முயற்சித்துப் பார்க்கும்படி, தொண்டு நிறுவனங்கள் பெற்றோரை அறிவுறுத்துகின்றன.
பயனர்கள் தங்கள் அனுபவத்தை ஃபோன் அல்லது லேப்டாப்பில் ஒரே நேரத்தில் "காஸ்ட்" செய்ய பல செயலிகள் அனுமதிக்கின்றன. எனவே தங்கள் குழந்தை விளையாடும் அதே நேரத்தில் என்ன நடக்கிறது என்பதை பெற்றோர் பார்க்க முடியும்.

பிற செய்திகள்:
- திருச்சியின் முதல் 'மாநகரத் தந்தை' ஆகப்போவது யார்? - மேயர் பதவியைக் கைப்பற்ற திமுக வியூகம்
- குரு கோல்வல்கர்: 'வெறுப்பின் தலைவனா' இந்து தேசியவாதத்தின் மாபெரும் ரசிகரா?
- கியூபாவின் ஃபிடல் காஸ்ட்ரோ நியூயார்க் நகரம் மீது கொண்ட ரகசிய காதல்
- உடலுறவில் இன்பமும் பாதுகாப்பும் - உலக சுகாதார நிறுவனம் அறிக்கை
- பாகிஸ்தானை ஒதுக்கிவிட்டு செளதி அரேபியா இந்தியாவை நெருங்கி வருவது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













