மமூத் யானைகள்: 2 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய 5 யானைகளின் எச்சங்கள் உடல் கண்டுபிடிப்பு

பட மூலாதாரம், DIGVENTURES
இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய மமூத் யானைககளின் உடல் எச்சங்கள் உள்ள இடத்தை நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது சமீப ஆண்டுகளில் பிரிட்டனின் மிகப்பெரிய பனிக்கால கண்டுபிடிப்புகளில் ஒன்று என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
அகழ்வராய்ச்சியாளர்கள் இங்கிலாந்தில் உள்ள ஸ்விண்டன் நகருக்கு அருகில் உள்ள ஒரு சுரங்கத்தில், ஐந்து மமூத் யானைகளின் உடல் எச்சங்களைக் கண்டுபிடித்துள்ளனர். புதைக்கப்பட்டுள்ள ஐந்து யானைகளில், இரண்டு வளர்ந்த பெரிய யானைகள் என்றும், இரண்டு மிக இளம் வயது யானைகள் என்றும், ஒன்று குழந்தை மமூத் யானை என்றும் கண்டறிந்துள்ளனர்.
புதைப்படிமங்களைக் கண்டுபிடிப்போர், நியாண்டர்தால் காலத்து கைக்கோடாரி ஒன்றை கண்டுபிடித்த பிறகுதான் டிக் வெஞ்சர்ஸ் என்கிற அகழாய்வு அமைப்பு அப்பகுதியில் ஆராய்ச்சிப் பணிகளைத் தொடங்கியது.
தாங்கள் கண்டுபிடித்தது மிகவும் அற்புதமான ஒன்று என டிக் வெஞ்சர்ஸ் என்கிற அகழ்வாய்வு அமைப்பின் அதிகாரிகள் கூறினர்.
கண்டுபிடிக்கப்பட்ட மமூத் யானை உடல் எச்சங்கள் ஸ்டெப்பி (Steppe) மமூத் இனத்தைச் சேர்ந்தது என்றும், அது வூலி மமூத் இனத்துக்கு மூதாதையர்களாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மமூத் உடல் எச்சங்களுக்கு அருகில் நியாண்டர்தால் மனிதர்கள் உருவாக்கிய கல் சாதனங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஸ்விண்டனைச் சேர்ந்த சாலி மற்றும் நெவில்லே ஹோலிங்வொர்த் இது குறித்து தெரிவித்த பிறகு தான் டிக் வெஞ்சர்ஸ் தன் அகழாய்வுப் பணிகளைத் தொடங்கியது.
"நாங்கள் நிறைய கடல்சார் புதைபடிமங்கள்தான் கிடைக்கும் என நம்பினோம், ஆனால் எதிர்பார்த்ததை விட குறிப்பிடத்தக்க ஒன்றை கண்டுபிடிப்பது உண்மையிலேயே மிகவும் சிலிர்ப்பூட்டக் கூடிய விஷயம்தான்" என்கிறார் நெவில்லே ஹோலிங்வொர்த்.
"அதையும் தாண்டி, கண்டுபிடித்த ஒன்று மிக முக்கியமான அகழாய்வுத் தளமாக மாறுவது இன்னும் சிறப்பு.

பட மூலாதாரம், DIGVENTURES
"நாங்கள் கண்டுபிடித்த ஒன்றிலிருந்து பலரும் கற்றுக் கொள்வது மற்றும் ரசிப்பதை விட எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி இல்லை" என்கிறார் நெவில்லே ஹோலிங்வொர்த்.
"மமூத் யானைகளின் எலும்புகளைக் கண்டுபிடிப்பது என்பது எப்போதுமே மிகவும் அருமையான விஷயம்தான், ஆனால் மிகுந்த பழமையான, நன்றாக பாதுகாக்கப்பட்ட, நியாண்டர்தால் மனிதர்களின் கல் சாதனங்களுக்கு அருகில் அவை கிடைப்பது வழக்கத்துக்கு மாறானது" என்கிறார் டிக் வெஞ்சர்ஸ் அகழாய்வு அமைப்பைச் சேர்ந்த லிசா வெஸ்ட்காட்.
வண்டு இறக்கைகள், எளிதில் சிதைந்துவிடக் கூடிய நன்னீர் நத்தை ஓடுகள், கல் சாதனங்கள் போன்றவை அத்தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஒரே இடத்தில் ஏன் இத்தனை மமூத் யானைகள் உள்ளன, அவை நியாண்டர்தால் மனிதர்களால் வேட்டையாடப்பட்டனவா அல்லது ஏற்கனவே இறந்த நிலையில் இருந்த விலங்குகளின் உடல் எச்சங்களில் இருந்து இறைச்சியை எடுத்துக்கொண்டார்களா என ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

பட மூலாதாரம், DIGVENTURES
"இந்த கண்டுபிடிப்பு சமீபத்தைய ஆண்டுகளில் பிரிட்டனின் மிக முக்கிய பனிக்கால கண்டுபிடிப்புகளைப் பிரதிபலிக்கிறது" என ஹிஸ்டாரிக் இங்கிலாந்து என்கிற அமைப்பின் முதன்மைச் செயல் அதிகாரி டுன்கன் வில்சன் கூறினார்.
"பிரிட்டனில் மனிதர்கள் குடியேறியது குறித்த விளக்கங்களை புரிந்து கொள்ள இந்த கண்டுபிடிப்புகள் மிகுந்த மதிப்புடையது. அது போக ஆய்வில் மீட்கப்பட்டுள்ள, எளிதில் சிதைந்து போகக் கூடிய சுற்றுச்சூழல் ஆதாரங்கள், முந்தைய காலநிலை மாற்றத்தின் சூழல் குறித்தும் புரிந்து கொள்ள உதவும்" என கூறியுள்ளார் ஹிஸ்டாரிக் இங்கிலாந்து என்கிற அமைப்பின் முதன்மைச் செயல் அதிகாரி டுன்கன் வில்சன்.
மமூத் யானைகளின் உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பகுதி 2,10,000 முதல் 2,20,000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

பட மூலாதாரம், DIGVENTURES
இந்த காலகட்டத்தைச் சேர்ந்த ஆய்வுத் தளங்கள் மிக அரிதாகவே நன்கு பாதுகாக்கப்பட்டு இருக்கின்றன. அகழாய்வாளர்களுக்கும், பழங்கால விலங்குகள் மற்றும் செடிகொடிகளின் புதைபடிமங்கள் குறித்து ஆராய்பவர்கள், அது சார்ந்த சுற்றுச்சூழலைக் குறித்து ஆராயும் விஞ்ஞானிகளுக்கு நியாண்டர்தால் மனிதர்கள், மமூத் யானைகள், பிரிட்டனின் பனியுகத்தில் அதிவேகமாக மாறும் காலநிலையினால் உயிரினங்கள் மீது ஏற்படும் தாக்கங்கள் குறித்த கேள்விகளுக்கு விடை காண இந்த புதிய கண்டுபிடிப்புகள் உதவும் என்று கருதப்படுகிறது.
இந்த கண்டுபிடிப்பு குறித்த காணொளி புதிய பிபிசி ஒன் ஆவணப்படம் 'அட்டன்பரோ அண்ட் மமூத் க்ரேவ்யார்ட்' என்கிற தலைப்பில் தொலைக்காட்சி நிகழ்ச்சியாக 2021 டிசம்பர் 30ஆம் தேதி ஒளிபரப்பப்பட உள்ளது.
பிற செய்திகள்:
- பிரபஞ்ச இருளில் உயிரின் ரகசியங்களைத் தேடப்போகும் ரூ.70 ஆயிரம் கோடி எந்திரம்
- தமிழ் டெக் யூடியூபர்: '10 பேர் பார்த்தால் போதுமென நினைத்தேன். இன்று 30 லட்சம் பேர் பார்க்கிறார்கள்'
- அமிர்தசரஸ் பொற்கோயிலில் அத்துமீறி நுழைந்த இளைஞர் உயிரிழப்பு - நடந்தது என்ன?
- “கொரோனாவின் ஒமிக்ரான் திரிபு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது”: பிரான்ஸ் பிரதமர்
- தரமற்ற உணவால் ஊழியர்கள் இறந்ததாக பரவிய தகவல்: பெண் தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது
- பெண்களின் திருமண வயதை 21 ஆக மாற்ற அமைச்சரவை ஒப்புதல்: எதிர்ப்புக் குரல்கள் எழுவது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












