You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பியாண்ட் எபிகா: 15 லட்சம் ஆண்டு காலநிலை வரலாற்றை ஆராய 3 கிமீ நீள பனிக்கட்டியை எடுக்கும் திட்டம்
- எழுதியவர், ஜோனதன் அமோஸ்
- பதவி, அறிவியல் செய்தியாளர்
பூமியின் 15 லட்சம் ஆண்டு காலநிலைப் பதிவை தன்னகத்தே கொண்டிருக்கும் அண்டார்டிகாவின் மைய பனிக்கட்டியை துளையிட்டு எடுக்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இப்பணியை நிறைவு செய்ய சுமார் நான்கு ஆண்டு காலமாகலாம். இப்பணிக்கு தேவையான இயந்திரங்களை அண்டார்டிகாவின் உயரமான இடங்களின் ஒன்றில் ஐரோப்பாவைச் சேர்ந்த ஓர் அணி பொருத்தும்.
இத்திட்டத்தின் கீழ் சுமார் மூன்று கிலோமீட்டர் நீளமுள்ள பனி உருளையை எடுக்க இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
கடந்த பல்லாண்டு காலத்துக்கு முன் பூமியில் ஏன் பனியுகம் அதிவேகமாக மாறியது என்பதைக் கண்டுபிடிக்க இந்த பனிக்கட்டி உதவலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
"பியாண்ட் எபிகா" (Beyond EPICA) என்றழைக்கப்படும் இந்த திட்டம், EPICA (யூரோபியன் ப்ராஜெக்ட் ஃபார் ஐஸ் கோரிங் இன் அண்டார்டிகா) என்கிற திட்டத்தின் தொடர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.
லிட்டில் டோம் சி என்கிற பகுதியில்தான் இந்த புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது. இப்பகுதி இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டின் கன்கார்டியா ஆராய்ச்சி மையத்திலிருந்து, கிழக்கு பகுதியில் சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 3,233 மீட்டர் உயரம் மற்றும் கடற்கரையிலிருந்து 1,000-க்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தொலைவில் உள்ள லிட்டில் டோம் சி பகுதி வேலை செய்வதற்கு உகந்த சூழலைக் கொண்ட பகுதியல்ல. கோடை காலத்தில் கூட இப்பகுதியின் தட்பவெப்பநிலை -35 டிகிரி செல்ஷியஸுக்கு மேல் வராது.
2019 - 20 காலகட்டத்திலேயே, பனிக்கட்டியை துளையிட்டு எடுக்க உள்ள அணி தங்குவதற்கான இடம் அமைக்கப்பட்டது. தேவையான துளையிடும் கருவிகள் மற்றும் இயந்திரங்களைக் கொண்ட உட்கட்டமைப்பு வசதிகளைப் பொருத்தும் பணியைதான் வருங்காலத்தில் செய்ய உள்ளனர்.
தொழில்நுட்ப வல்லுநர்களோ குறைந்தபட்சம் 100 மீட்டர் ஆழத்திலிருந்து மையப்பகுதி பனிக்கட்டியை எடுக்கும் பணியைத் தொடங்க இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
இப்படி செய்வதன் மூலம், குறைந்த அளவுக்கு மட்டுமே இறுகியுள்ள பனிக்கட்டிகள் அல்லது தளர்ந்த நிலையில் உள்ள பனிகட்டிகளைக் கடந்து, விஞ்ஞானிகளுக்கு ஆர்வமுள்ள நன்றாக இறுகிய, எந்த வித திரவத்தையும் தனக்குள் அனுமதிக்காத பனிக்கட்டியை எடுக்க உதவும்.
அன்டார்டிகாவில் உள்ள ஆழமான பனிக்கட்டியில் சிறிய அளவிலான காற்று குமிழிகள் உள்ளன. இந்த சிறிய காற்று குமிழிகள்தான் வளிமண்டல வரலாற்று விவரங்களைத் தன்னுள் கொண்டுள்ளன.
விஞ்ஞானிகளால் கார்பன் டை ஆக்ஸைட், வெப்பத்தை தன்னகத்தே கொண்டிருக்கும் மீத்தேன் போன்ற மற்ற பொருட்களைக் குறித்து ஆராய முடியும்.
பனிக்கட்டியின் மூலக்கூறுகளில் உள்ள அணுக்களை பகுப்பாய்வு செய்யும் போது, அதை சூழ்ந்துள்ள வாயுக்கள் கூட பனிப்பொழிவின் போது நிலவிய தட்ப வெப்பநிலை குறித்த விவரங்களை சுட்டிக்காட்டுகின்றன. அந்தப் பனிப்பொழிவுதான் பூமியின் பனியின் அளவு அதிகரிக்க வழிவகுத்தது குறிப்பிடத்தக்கது.
ஆராய்ச்சியாளர்கள் எபிகா மைய பனிக்கட்டியை துளையிட்ட போது, சுமார் எட்டு லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய காலநிலையின் தட்பவெப்ப நிலை மற்றும் வளிமண்டல கார்பன் டை ஆக்ஸைட் விவரங்களை வெளிப்படுத்துவதை கண்டுபிடித்தனர். அது கடந்த பல தசாப்த காலத்தின் முக்கிய காலநிலை விவரங்களாக மாறிப் போனது.
கார்பன் டை ஆக்ஸைட் மற்றும் வெப்பநிலை இரண்டும், ஒன்றோடொன்று தொடர்புடையதாக அதன் சுழற்சி இருந்துள்ளது. எப்போதெல்லாம் பூமி பனியுகத்துக்குச் சென்றதோ, தட்பவெப்பநிலை குறைந்ததோ, அப்போதெல்லாம் வளிமண்டலத்தில் பசுமையில்ல வாயுக்களின் அளவும் குறைந்துள்ளது. எப்போதெல்லாம் வெப்பநிலை அதிகரித்துள்ளதோ, அப்போதெல்லாம் கார்பன் டை ஆக்ஸைடும் இணையாக அதிகரித்துள்ளது.
இந்த சுழற்சி கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஆண்டுக்கு ஒரு முறை நடந்துள்ளது. இந்த சுழற்சி, காலநிலையின் மற்றொரு பதிவில் காணப்பட்டுள்ளது. அப்பதிவு பெருங்கடல்களின் படிமங்களிலிருந்து பெறப்பட்டன. அத்தனை ஆழத்தில் பனியுக சுழற்சி 41,000 ஆண்டுகள் என கொஞ்சம் குறைவாக இருந்துள்ளது.
அந்த காலகட்டத்தில், பூமி சுழலும் அச்சுப் பாதையில் முன்னும் பின்னும் ஆட்டம் கண்டது இந்த சுழற்சி மீது ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் இந்த சுழற்சியில் ஏன் மாறுபாடு ஏற்பட்டது என்பது குறித்து, யாருக்கும் உறுதியாக தெரியவில்லை.
இந்த புதிய பியாண்ட் எபிகா (Beyound EPICA) திட்டத்தின் கீழ் எடுக்கப்படும் மையப் பனிக்கட்டி 15 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய காலநிலை பதிவுகளைக் கொண்டிருக்கலாம்.
"மையப் பனிக்கட்டி, ஒன்பது லட்சம் முதல் 12 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய காலநிலை மற்றும் வளிமண்டலத்தில் இருந்த பசுமையில்ல வாயுக்கள் குறித்த விவரங்களைக் கொடுக்கும் என நாங்கள் நம்புகிறோம். இந்த காலகட்டத்தில் தான் பனிப்பாறை சுழற்சியில் ஏற்படும் அடிப்படை மாற்றம் நிகழ்ந்தது" என ஆராய்ச்சி அணித் தலைவர் கார்லோ பார்பன்டே கூறினார். இவர் இத்தாலியில் உள்ள இன்ஸ்டிட்டியூட் ஆஃப் போலார் சயின்ஸ் ஆஃப் த நேஷனல் ரிசர்ச் கவுன்சில் நிறுவனத்தின் இயக்குநர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
"இந்த மாற்ற காலத்தில் தான் பனியுக சுழற்சி காலம் 41,000 ஆண்டுகளிலிருந்து ஒரு லட்சம் ஆண்டாக மாறியது. இந்த மாற்றம் ஏன் நிகழ்ந்தது என்பதற்கான மர்மத்தை நாங்கள் தீர்த்து வைப்போம் என நம்புகிறேன்" என்கிறார் அவர்.
எட்டு லட்சம் ஆண்டு கால பதிவுகளைக் காண, எபிகா திட்டத்தின் கீழ் 2,774 மீட்டர் ஆழத்துக்கு துளையிடப்பட்டது. லிட்டில் டோம் சி பகுதியில் பெட் ராக் எனப்படும் அடிப்பாறைகள் 2,800 மீட்டர் ஆழத்தில் உள்ளன. புதிய பியாண்ட் எபிகா திட்டத்தின் கீழ் கூடுதலாக தேடப்படும் ஏழு லட்சம் ஆண்டு கால வரலாறு, இந்த கூடுதல் ஆழத்தில் உள்ள பனி அடுக்கில் இருக்க வேண்டும்.
"நம்மிடம் ஏற்கனவே எட்டு லட்சம் ஆண்டுகளுக்கான பனிக்கட்டி இருக்கிறது, எனவே முதல் சில ஆண்டுகள் நம்மிடம் உள்ள பனிக்கட்டிகளையே துளையிடுவது போன்று இருக்கும்" என விளக்கினார் பிரிட்டிஷ் அண்டார்க்டிக் சர்வேயைச் சேர்ந்த ராபர்ட் முல்வனே.
"எட்டு லட்சம் ஆண்டுகளுக்கும் குறைவான பனிக்கட்டிகளை, எதார்த்தத்தில் பல புதிய ஆராய்ச்சி மாணவர்கள் இணையத்தில் வருவது, புதிய குழுக்கள் இதில் ஈடுபடுவது, புதிய பகுப்பாய்வு முறைகள் மேம்படுத்தப்படுவது என பலவற்றையும் பயன்படுத்தலாம்.
"அடி ஆழத்தை அடைவதற்கு முன், நம் தொழில்நுட்பங்கள் சரியாக வேலை செய்கின்றனவா என்பதை உறுதி செய்ய, இந்த வயது குறைவான பனிக்கட்டிகளைப் பயன்படுத்தலாம். அடிஆழத்தில் பனிக்கட்டிகளை பகுப்பாய்வு செய்ய நமக்கு ஒரே ஒரு வாய்ப்பு தான் கிடைக்கும்" என அவர் பிபிசியிடம் கூறினார்.
பியாண்ட் எபிகா திட்டத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் நிதி உதவி செய்கிறது. பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் இதில் பங்கெடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். காரணம் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருந்த காலகட்டத்தில் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பிற செய்திகள்:
- 50 பிறழ்வுகளைக் கொண்ட ஒமிக்ரான் திரிபுக்கு எதிராக தடுப்பூசிகள் வேலை செய்யுமா?
- அதிமுகவில் புதிய விதி - என்ன நடக்கிறது அந்த கட்சியில்?: வைகைச்செல்வன் பேட்டி
- இணைய வெளியில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்குமா தமிழ்நாடு அரசு?
- ஓய்வு பெறுகிறாரா எம்.எஸ்.தோனி? - ஜடேஜாவை சிஎஸ்கே முன்னிலைப்படுத்த காரணம் என்ன?
- வெங்கட் பிரபு மாநாடு கதை சொன்னபோது அதிர்ச்சியாக இருந்தது: எடிட்டர் பிரவீன் பேட்டி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்