You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ் மொழி: இணைய வெளியில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்குமா தமிழ்நாடு அரசு?
- எழுதியவர், நீச்சல்காரன்
- பதவி, கணினித் தமிழ் ஆர்வலர், சென்னை
(மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் முதல் கட்டுரை இது.)
தமிழ் வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கையில் தமிழில் முன் எழுத்து வைத்தல், பேச்சுப் போட்டி நடத்தல், வணிக நிறுவனங்களின் பற்றுச் சீட்டில் தமிழ் என்று மக்களின் பயன்பாட்டில் தமிழைக் கொண்டு வர மெனக்கெட்டிருந்தனர்.
அதே வேளையில் அரசின் தமிழ்ப் பயன்பாட்டில் குறிப்பாகக் கணினித் தமிழ் பயன்பாட்டில் மெனக்கெட வேண்டியவை பல உள்ளன. தமிழக அரசின் இணையத்தளங்களில் தமிழ்ப் பயன்பாடு, அரசின் தளங்களின் நவீனமயமாக்கல், பொதுத் தகவல் உரிமப் பயன்பாடு என்று இணையப் பயன்பாட்டில் கவனிக்க வேண்டிய பகுதிகளையும் அரசின் கவனத்திற்கு இக்கட்டுரை கொண்டு வருகிறது.
தமிழ்ப் பயன்பாடு
தமிழக அரசின்கீழ் சுமார் 350-க்கும் மேற்பட்ட இணையத் தளங்கள் உள்ளன. பொதுவாக முக்கியத் தளங்களை எல்லாம் தேசிய தகவலியல் மையமும் மற்ற தளங்களை எல்லாம் அந்தந்த துறையினரோ நிர்வகிக்கின்றனர். அவற்றுள் சுமார் 40 சதவீதத்துக்கும் கீழான தளங்களில் தான் தமிழ் இடைமுகமுள்ளன.
இதர தளங்களெல்லாம் ஆங்கிலத்தில் இருக்கும், தமிழ் மட்டும் தெரிந்த ஒருவரால் பயன்படுத்த முடியாது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் உருவான 38 மாவட்ட இணையத்தளங்களும் தமிழில் இடைமுகம் கொண்டதாக உள்ளன.
ஆனால் தமிழக அரசு உருவாக்கிய மாநகராட்சி இணையத்தளங்களில் சென்னையைத் தவிர மற்றவற்றில் முழுமையான தமிழ் இடைமுகமில்லை. கர்நாடகத்தில் மங்களூரு, தாவன்கரே, பெல்லாரி என அனைத்து மாநகராட்சி இணையத்தளமும் கன்னடத்தை முதன்மையாகக் கொண்டுள்ளன. அலுவல் மொழியான தமிழில் தமிழ்நாட்டு உள்ளாட்சி அமைப்புகளின் தளங்களை மாற்ற வேண்டும்.
டைடல் பூங்கா, சிப்காட் உட்படப் பெரும்பாலான தொழில்துறையைச் சேர்ந்த தளங்களில் தமிழ் கொஞ்சமும் இல்லை. தொழிலாளர் துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநரகம், வேலைவாய்ப்புத் தளம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, கல்வியுதவித் தொகைத் தளம் எனச் சராசரி நபர்கள் பயன்படுத்தும் தளங்களில் எல்லாம் தமிழ் இடைமுகம் இல்லை.
நல்வாய்ப்பாகத் தகவல்தொழில்நுட்பத் துறையின் அநேக தளங்களும் தமிழில் உள்ளன. பொது விநியோகக் கடைகளில் அனுப்பப்படும் ரசீது குறுஞ்செய்தியில் பொருட்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் இருக்கும் அது போல கோ ஆப் டெக்ஸ், காதிகிராப்ட், டாம்ப்கால் போன்ற தளங்களில் மின்னங்காடிகள் முழுதும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன.
ஆவின், டாஸ்மாக் போன்ற பெரியவர்களுக்கான தளங்களானாலும் ஊட்டி மலர் தோட்டம், வண்டலூர் உயிரியல் பூங்கா என்று குழந்தைகள் விரும்பும் சுற்றுலா இணையத்தளங்களானாலும் எல்லாம் ஆங்கிலத்தில்தான் உள்ளன. தமிழக அரசின் விற்பனை முனையங்களில் தமிழ் இருப்பது மின்வணிகத்தில் தமிழைப் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அமையும்.
கேரளாவில் கோழிக்கோடு பல்கலைக்கழகம், கேரளா பல்கலைக் கழகம், கண்ணூர் பல்கலைக் கழகம் என்று பெரும்பாலான அரசு பல்கலைக் கழகங்கள் அவர்கள் தாய் மொழியிலும் இணையத்தளத்தைக் கொண்டுள்ளன.
ஆனால் தமிழகத்தில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தைத் தவிர ஏறக்குறைய அனைத்துப் பல்கலைக்கழக இணையத்தளங்களிலும் தமிழைக் காணமுடியவில்லை. ஒரு பல்கலைக் கழகம் தானே வருங்காலத் தலைமுறையை உருவாக்கும் அறிவுச்கூடம். அங்கேயே தமிழை நிறுத்தாமல் பூக்கடைக்கு விளம்பரம் போல தமிழில் பெயர் வைத்தால் சலுகை என்று செய்துவருகிறோம்.
மத்திய அரசின் கல்வி நிலையங்களின் இணையத்தளமே தமிழிலும் வேண்டும் என்று கேட்க வேண்டிய நேரத்தில், தமிழ்நாட்டுக் கல்லூரிகளே தங்கள் தளத்தைத் தமிழில் வெளியிடாமல் இருப்பது செம்மொழிக்கு வந்த சோதனை. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் உட்பட பல்வேறு தேர்வு நடத்தும் அமைப்புகளின் தளங்களில் தமிழ் இடைமுகம் இல்லை. அதனால் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு விண்ணப்பிப்பதில் இடையூறு ஏற்படுகிறது
தரவுப் பயன்பாடு:
இந்தியாவில் பொதுத் தகவல் உரிமச் சட்டம் (GODL) நடைமுறையில் உள்ளது. அதாவது அரசின் தரவுகள் அனைத்தும் பொதுவுரிமத்தில் வெளியிடவேண்டும். அதே போல 2016ல் அரசாணை 105ன் படி தமிழ் வளர்ச்சிக்கான வெளியீடுகள் அனைத்தும் படைப்பாக்கப் பொதுவுரிமத்தில் அறிவிக்கப்பட்டன. ஆனால் நடைமுறையில் தமிழ் இணைய நூலகம் என்ற அருமையான திட்டப் பக்கத்தின் கீழ் காப்புரிமை இடப்பட்டுள்ளன.
இதனால் விக்கிமூலம் போன்று சர்வதேசக் களஞ்சியங்களில் இவற்றைப் பயன்படுத்துவதில் சிக்கலுள்ளது. எனவே மக்கள் தகவல்களைப் பயன்படுத்திக் கொள்ள வகைசெய்யும் படைப்பாக்கப் பொதுவுரிமையை இயன்றவரை அனைத்து அரசுத் தளங்களிலும் வெளியிடவேண்டும். பல வளர்ந்த நாடுகளின் அரசுத் தளங்கள் எல்லாம் பகிர்வுரிமை கொண்டவை. அதாவது அதன் உள்ளடக்கங்களைப் பகிரலாம், பயன்படுத்தலாம் என்று சட்டரீதியான குறிப்பினை இட்டிருப்பார்கள்.
ஊழியர்கள் அனைவருக்கும் தனித் தனி மின்னஞ்சல் வழங்கப்படும் என்று சில வாரங்களுக்கு முன் அரசாணை வெளிவந்தது. அது சிறப்பான அறிவிப்பே, அது ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல் அரசுத் துறையினர் அனைவருக்கும் இதனை வழங்கவேண்டும். எந்தளவிற்குப் பகிர்வுரிமை முக்கியமோ அதே அளவிற்குத் தனியுரிமை முக்கியம். டான்சி, கூட்டுறவு நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், வாரியங்கள் போன்ற பல அரசு அமைப்புகளின் தொடர்பு முகவரியாக ஜிமெயில் மற்றும் யாஹூ நிறுவனப் பெயர்கள் உள்ளன.
சாகித்திய அகாதெமி விருதுகள், குடியரசுத் தலைவர் விருதுகள் என்று அனைத்து விருதாளர்களையும் இணையத்தில் ஆவணப்படுத்தி இந்திய அரசு அங்கீகரிக்கிறது. ஆனால் தமிழகத்தில் இதுவரை விருதளிக்கப்பட்ட தமிழ் ஆளுமைகள் பட்டியல் பொதுவிலும் இல்லை இணையத்திலும் இல்லை.
இது விருது பெற்றவர்களுக்கு மட்டுமல்ல பொதுவாகவே தமிழ் எழுத்தாளர்களுக்குச் சிலை வைப்பதற்கு இணையாக அவர்கள் பங்களிப்பை ஆவணப்படுத்த வேண்டும் என்பதை அனைவரும் உணரவேண்டும். இதுவரை நாட்டுடைமையான ஆசிரியர்கள் பெயர்கள் மட்டுமே உள்ளதே தவிர, அவர்களின் நூல் விவரங்கள் முழுமையாக இல்லை. இவ்வாறு இணையத்திற்குக் கொண்டு வந்து கணினித் தமிழுக்கு வலு சேர்க்கும் பணிகள் ஏராளமுள்ளன.
நவீனமயமாக்கல்:
இணையம் என்பது பார்வையுடையவர்களுக்கு மட்டுமல்ல என்பதால் பார்வை குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகளும் அணுகும் வகையில் மேம்படுத்தப்படவேண்டும். அண்மையில் கொரோனா நன்கொடை தளம் மாற்றுத் திறனாளிகளுக்கு வசதியாக இல்லை என்று ஒரு கடிதத்தைப் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் பட்டதாரிகள் சங்கம் அரசிற்கு எழுதினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்காகவே சர்வதேச அளவில் வலைச் சேர்த்தியத்தின்(W3C) பல நுட்ப வழிகாட்டலை வழங்கியுள்ளது. முறையான பண்புகளுடன் தளவடிவமைப்பு, திரைபடிப்பான், ஒலி வடிவ கேப்சா, ஒளிப்படங்களில் அல்ட் விவரிப்பு போன்று வசதிகளை உறுதி செய்ய வேண்டும். பெரும்பாலான அரசுத் தளத்தில் தேடல் பெட்டியோ தள வரைபடமோ இல்லாமல் தான் உள்ளது.
ஒருங்குறி பயன்பாட்டைப் பின்பற்ற அரசாணை வெளிவந்து பத்தாண்டுகளாகியும் தமிழக அரசின் ஆவணங்கள் பெரும்பாலும் ஒருங்குறியில் இல்லை. சில மாதங்களாக அரசு சில முயற்சிகள் எடுத்து வந்தாலும் ஒருங்குறி பயன்பாட்டை உறுதி செய்யவில்லை. குறிப்பாக அரசின் செய்திக் குறிப்புகள் எல்லாம் பிடிஎப் வடிவில் படமாகவே வெளிவருகின்றன. கூகுள் உட்பட எந்தத் தேடலிலும் செய்திக் குறிப்புகள் பட்டியலாவதில்லை.
ஆனால் இந்தியா அரசின் செய்திக் குறிப்புகள் எல்லாம் ஒருங்குறியில் பல இந்திய மொழிகளில் வெளிவருவது கவனத்திற்குரியது. tahdco.tn.gov.in மற்றும் consumer.tn.gov.in ஆகிய இரு தளத்தில் இன்னும் தமிழ் ஒருங்குறி இல்லாத தமிழே இணையத்தில் உள்ளது.
"தமிழரசு" என்ற தமிழக அரசின் அலுவல்பூர்வ மாத இதழ் அச்சில் மட்டுமே வருகிறது இணையத்தில் வெளிவருவதில்லை. மேலும் அரசின் இதழைக் கட்டணம் கட்டியே மக்கள் படிக்க வேண்டிய நிலை உள்ளது. குறைந்தபட்சம் இணையத்தில் இலவசமாகவும், அச்சில் விலை வைத்தும் கொடுக்கலாம். திருக்கோயில், சொல்வயல், தமிழ்நாடு நுகர்வோர் கவசம் போன்ற சில மின்னூல்களை அரசுத் துறையினர் தொடர்ந்து வெளியிடுவது பாராட்டுக்குரியது. அவற்றை பிடிஎப் வடிவில் மட்டுமல்லாமல் எழுத்து வடிவிலும் வெளியிட்டால் இணைய வளம் பெருகும்.
உலகம் முழுக்க இந்தப் பெருந்தொற்றுக் காலம் கணினிமயத்தை இன்றியமையாததாக மாற்றிவிட்டது. அரசின் நிர்வாகமும் நலத்திட்டங்களும் இணையத்தைத் தவிர்த்துச் செயல்படுத்தவே முடியாத நிலையடைந்துவிட்டது. பொதுவிநியோகம், பள்ளிக்கல்வித் துறை, இந்து சமய அறநிலையத்துறை எனப் பல துறைகள் நவீன நுட்பங்களைப் பயன்படுத்துவது வரவேற்பிற்குரியது. மின்சாரத் துறை, சுகாதாரத் துறை போன்ற துறைகளில் நவீன இணைய நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும்.
இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள் என்பது போல அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இணையத்தளம் உருவாக்க வேண்டும். சமீபத்தில் கோட்டூர்புரத்தில் சூழ்ந்த வெள்ளத்தால் தமிழ் இணையக் கல்விக் கழக இணையத்தளம் சில நாட்கள் செயல்படாமல் இருந்தது. நவம்பர் 26 ஆம் நாளுடன் காலாவதியாகி, புதுப்பிக்கப்படாமல் www.tnwc.in தளம் உள்ளது. bcmbcmw.tn.gov.in, tamilship.com, www.tnphc.com, www.tnlegalservices.tn.gov.in போன்ற தளங்களில் அரசின் தளங்களிலேயே மிகவும் மோசமான வடிவமைப்பைக் கொண்டுள்ளன.
தென்னிந்திய மாநிலங்களில் தமிழக அரசின் tn.gov.in தளம் மட்டுமே கைப்பேசி ஒத்திசைவு இல்லாதது என்பது கூடுதல் செய்தி. இத்தகைய இடையூறுகளை நீக்கி ஒருங்கிணைந்த மேலாண்மை செய்து மின்னிலக்க உலகில் தமிழக அரசின் ஆளுமை மேம்பட வேண்டும்; கலைச் செல்வங்கள் யாவும் தமிழில் இணையத்தில் சேர்த்திட வேண்டும்.
(பொதுவெளியில் நீச்சல்காரன் என்று அறியப்படும் கணினித் தமிழ் ஆர்வலரான கட்டுரையாளர் இராஜாராமன், சென்னையிலுள்ள பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் மென்பொறியாளராக பணிபுரிகிறார்.)
தயாரிப்பு: சாய்ராம் ஜெயராமன், பிபிசி தமிழ்.
பிற செய்திகள்:
- "ஒமிக்ரான் திரிபு: உலக அளவில் தீவிர பாதிப்பு ஏற்படலாம்" WHO எச்சரிக்கை
- வேளாண் சட்ட வாபஸ் மசோதா: எதிர்கட்சிகள் எழுப்பும் கேள்விகள் - உறுதிகாட்டும் விவசாயிகள்
- 'இந்துக்களின் எண்ணிக்கை, வலிமை குறைந்து வருகிறது' - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்
- வைக்கிங் இன வரலாறு: சைவ உணவு உண்ட ரத்த வெறியர்களா இவர்கள்?
- தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய இருவருக்கு கொரோனா - ஒமிக்ரான் திரிபா?
- குடல் நாளத்தை நலமுடன் வைத்திருக்க என்ன சாப்பிட வேண்டும்?
- இலங்கையில் ராணுவ கெடுபிடிக்கு இடையே ''மாவீரர் தினம்'' அனுசரிப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்