இந்திய அரசின் கிரிப்டோகரன்சி மசோதா: தனியார் மின் பணத்தின் எதிர்காலம் என்ன?

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அனைத்து தனியார் கிரிப்டோகரன்சிகளைத் தடைசெய்யவும் ரிசர்வ் வங்கியின் அதிகாரபூர்வ டிஜிட்டல் கரன்சியை உருவாக்கவும் புதிய சட்ட முன்வடிவை அறிமுகம் செய்ய இந்திய அரசு முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் விளைவுகள் என்னவாக இருக்கும்.

இந்தியாவின் புதிய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வரும் நவம்பர் 29ஆம் தேதி துவங்கவிருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் 26 புதிய மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஒரு மசோதாவாக கிரிப்டோகரன்சி மற்றும் அதிகாரபூர்வ டிஜிட்டல் கரன்சி ஒழுங்குமுறை மசோதா கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சியை உருவாக்கும் செயல்முறையை வடிவமைப்பதும், நாட்டில் உள்ள எல்லா டிஜிட்டல் கிரிப்டோகரன்சிகளை தடைசெய்வதும்தான் இந்த மசோதாவை கொண்டு வருவதற்கான நோக்கம் என மக்களவையின் பணிப்பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா தொடர்பாக பல கேள்விகள் உள்ளன. ஏனெனில் நிறைய பேர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளனர். அரசு எல்லா கிரிப்டோகரன்சிகளையும் அரசு தடை செய்தால் முதலீடு செய்தவர்களின் கதி என்னவாகும்?

கிரிப்டோகரன்சி தொடர்பான மசோதா பற்றிய தகவல் செவ்வாய்கிழமை வெளியானவுடன் கிரிப்டோ சந்தைகளில் பெரும் சரிவு ஏற்பட்டது. எல்லா முக்கிய கிரிப்டோகரன்சிகளும் சுமார் 15 சதவீதம் அல்லது அதற்கு மேல் சரிவைக் கண்டுள்ளன.

'பிட்காயின்' 17 சதவீதத்திற்கு அதிகமாகவும், 'எத்திரியம்' 15 சதவீதத்திற்கு அதிகமாகவும், 'டெதர்' 18 சதவீதத்திற்கு மேலாகவும் வீழ்ச்சி கண்டுள்ளன.

"கடந்த வருடமே இதனைத் தடை செய்திருக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பின் காரணமாக அது நடக்காமல் போய்விட்டது. இதையடுத்து பல கோடி இந்தியர்கள் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தார்கள். அவர்களைப் பொறுத்தவரை தற்போது வந்திருக்கும் இந்திய அரசின் அறிவிப்பு பேரதிர்ச்சியாகத்தான் இருக்கும். இதனை ஒழுங்குபடுத்த முடியாது என ஆரம்பத்திலிருந்து சொல்லிவருகிறேன். நிதிக்குழுவின் தலைவர் இதனை ஒழுங்குபடுத்துவோம், தடைசெய்ய மாட்டோம் என்று சொல்லிவந்தார். ஆனால், இப்போது அறிமுகப்படுத்தப்படும் மசோதா தனியார் கிரிப்டோகரென்சிகளைத் தடைசெய்யும் என கருதப்படுகிறது. மேலும் அரசே அதிகாரபூர்வமாக டிஜிட்டல் கரன்சி உருவாக்கும் வழிமுறைகளை ஆராயப்போவதாகவும் சொல்லியிருக்கிறது. ஏற்கனவே கிரிப்டோ மூலம் வந்த வருவாய்க்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுவருவதாக சொல்கிறார்கள். அரசு அறிமுகப்படுத்தும் டிஜிட்டல் கரன்சிக்கும் இந்த வரி விதிப்பு தொடருமென்றால், அது வெற்றிபெறாது" என்கிறார் துவக்கத்திலிருந்தே தனியார் கிரிப்டோ கரன்சிகளை விமர்சித்துவரும் காங்கிரசைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீநிவாசன்.

கிரிப்டோ கரன்சிகளை ஒழுங்குமுறைப் படுத்துவது மிக மிக அவசியம். உண்மையில் இதை மிகக் காலதாமதாக செய்கிறார்கள் என்பதுதான் கவலையே என்கிறார் பங்குச் சந்தை வல்லுநரான நாகப்பன்.

"இப்போது வரவிருக்கும் மசோதாவைப் பொறுத்தவரை தனியார் கரன்சிகளைத் தடை செய்யப்போவதாகத் தெரியவில்லை. ஒழுங்குபடுத்தும் என்றே கருதுகிறேன். இதனை ஒழுங்குபடுத்த வேண்டுமென பல ஆண்டுகளாகச் சொல்லிவருகிறேன். இப்படி ஒழுங்குபடுத்தவில்லையென்றால் அது ஈமு கோழி வர்த்தகம் மாதிரி ஆகிவிடும்" என்கிறார் நாகப்பன்.

இந்திய அரசு தனியார் கிரிப்டோகரன்சிக்கு தடை விதித்தால் என்னவெல்லாம் நடக்கும்? "வங்கிகளைப் பயன்படுத்தி ஒரு சாதாரண முதலீட்டாளர் இனி தனியார் கிரிப்டோவை வாங்க முடியாது. கறுப்புப் பணத்தைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் இருந்து வாங்கலாம். பெரும் முதலைகள் வெளிநாடுகளில் இருந்து செய்வார்கள். விபிஎன் மூலமாக கிரிப்டோ எக்சேஞ்சை தொடர்பு கொண்டாலும் உங்கள் வங்கி மூலம் பணத்தை செலுத்த முடியாது. ஆகவே விபிஎன் பயன்படுத்தினாலும் வாங்க முடியாது. வெளிநாட்டிற்கு பணத்தைக் கடத்தி தனியார் கிரிப்டோவை வாங்கலாம். ஆனால், அதை எல்லோராலும் செய்ய முடியாது.

இப்போதுவரை இதில் பணம் முதலீடு செய்தவர்கள் அந்தப் பணத்தை வெளியில் எடுக்க ஒரு குறிப்பிட்ட கால அளவு கொடுப்பார்கள் என கருதுகிறேன். ஆனால், சந்தை இதற்கெல்லாம் காத்திருக்காது. நேற்று இரவு இந்திய அரசின் அறிவிப்பு வந்தவுடனேயே பிட் காயின், ஈதர் போன்றவற்றின் விலை 15-17 சதவீதம் வரை விழுந்துவிட்டது. ஆகவே, சட்டம் இயற்றப்படும்வரை நிச்சயம் பணத்தை அதிலிருந்து வெளியில் எடுக்க முடியும். எவ்வளவு பணம் கிடைக்கிறதோ, அது அவரவர் சாமர்த்தியம்" என்கிறார் ஆனந்த் ஸ்ரீநிவாசன்.

ரிசர்வ் வங்கி வெளியிடவிருப்பதாக சொல்லும் கரன்சிகளுக்கு இதே அளவு ஈர்ப்பு இருக்குமெனச் சொல்ல முடியாது. மற்ற கிரிப்டோகரன்சிகள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தங்களிடம் கரன்சிகள் இருப்பதாகச் சொல்கின்றன. அதனால், அவற்றின் விலை ஏறுகிறது. ரிசர்வ் வங்கி வெளியிடும்போது அப்படியிருக்காது. அதனால், அதன் மீது பெரிய கவர்ச்சி இருக்காது. ஆகவே, அரசின் டிஜிட்டல் கரன்சியின் விலை உயர வாய்ப்பு குறைவு. இதனால் மக்கள் எந்த அளவுக்கு இதில் முதலீடு செய்வார்கள் என்பதைப் பார்க்க வேண்டும் என்கிறார் ஆனந்த் ஸ்ரீ நிவாசன்.

"நாம் ஒரு கடையில் வழக்கமாக பொருளை வாங்குகிறோம். மீதமுள்ள காசுக்கு சில சமயம் அவர்கள் டோக்கன்களைக் கொடுப்பார்கள். திரும்பவும் அங்கே செல்லும்போது அந்த டோக்கனைக் கொடுத்து பொருளை வாங்கலாம். அந்த டோக்கன் அங்கு மட்டும்தான் செல்லும். அதுபோலத்தான் கிரிப்டோ. ஆனால், அதுபோல டோக்கனை வைத்திருப்பவர்கள் அதன் மதிப்பு அதிகம் என தொடர்ந்து அதில் வார்த்தகம் செய்கிறார்கள். திடீரென அந்தக் கடை மூடப்பட்டுவிட்டால் என்ன செய்வது? அதற்குத்தான் ஒழுங்குமுறை தேவை என்கிறோம்" என்கிறார் நாகப்பன்.

இனி தனியார் கிரிப்டோ கரன்சிகளின் எதிர்காலம் என்னவாக இருக்கும்? "அமெரிக்காவில் புதிதாக கன்ட்ரோலர் ஆஃப் கரன்சி என ஒரு பதவியை உருவாக்கியிருக்கிறார்கள். அவர்கள் இனி கிரிப்டோ மீது கவனம் செலுத்துவார்கள். ஒவ்வொரு நாடாக தடைசெய்தால், பிரதானமான தனியார் கிரிப்டோ கரன்சியைத் தவிர மற்றவை அழிந்துபோகும்" என்கிறார் ஆனந்த் ஸ்ரீநிவாசன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :