கொரோனா வைரஸ்: 6 மாதங்களில் 10% வரை சரியும் நோய் தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு - அதிர்ச்சி கிளப்பும் ஆய்வு

கொரோனா தடுப்பூசி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கொரோனா தடுப்பூசி
    • எழுதியவர், மிஷெல் ராபர்ட்ஸ்
    • பதவி, சுகாதார ஆசிரியர், பிபிசி ஆன்லைன்

இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களிடம் கொரோனா நோய் தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு குறைவதைக் காண்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

'தி ரியல் வேர்ல்ட்' ஆராய்ச்சியில், கடந்த மே மற்றும் ஜூலை 2021 காலகட்டத்தில், கொரோனா பிசிஆர் சோதனையில் பாசிட்டிவ் வந்தவர்களின் தரவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

ஃபைசர் தடுப்பூசியை இரு டோஸ் செலுத்திக் கொண்டவர்களுக்கு தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு ஒரு மாத காலத்தில் 88 சதவீதமாக இருந்தது. இது ஐந்து முதல் ஆறு மாதங்களில் 74 சதவீதமாக குறைந்திருக்கிறது.

ஆஸ்ட்ராசெனீகா தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களுக்கு கொரோனா தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு தொடக்கத்தில் 77 சதவீதமாக இருந்தது, நான்கு முதல் ஐந்து மாத காலத்தில் இது 67 சதவீதமாக குறைந்திருக்கிறது.

தடுப்பூசிகளின் பாதுகாப்பு குறையும் என்பது எதிர்பார்க்கப்பட்டது தான் என்கிறார்கள் நிபுணர்கள்.

ஒரு பக்கம் கொரோனா தொற்று புதிய பரிமாணங்களை எடுத்து வந்தாலும், மக்கள் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்படாமலும், உயிரிழப்புகள் ஏற்படாமலும் இருப்பது போன்ற விஷயங்களில் கொரோனா தடுப்பூசிகள் சிறப்பாகவே செயல்படுகின்றன.

உயிரை காக்கும் தடுப்பூசிகள்

கொரோனா தடுப்பூசி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் பெண்.

இங்கிலாந்தின் பொது சுகாதார மதிப்பீட்டின் படி கிட்டத்தட்ட 84,600 பேர் கொரோனாவால் மரணித்துள்ளனர். இதுவரை கொரோனா தடுப்பூசி திட்டத்தால் இங்கிலாந்தில் 23 லட்சம் பேர் தொற்றில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளனர்.

இந்த கண்டுபிடிப்புகள், முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு ஏற்படும் புதிய கொரோனா தொற்றுகள் குறித்து விவரிக்கும் என சோ கொரோனா ஆய்வின் முதன்மை ஆய்வாளர் பேராசிரியர் டிம் ஸ்பெக்டார் கூறினார்.

"கொரோனா தடுப்பூசியால், தொற்றுக்கு எதிராக கிடைக்கும் பாதுகாப்பு குறையும் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். அதற்காக தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருக்கக் கூடாது" என்கிறார் டிம்.

"இப்போதும் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள், அதிக அளவிலான பாதுகாப்பை வழங்குகின்றன, குறிப்பாக டெல்டா கொரோனா திரிபுக்கு எதிராக பாதுகாப்பு வழங்குகின்றன. எனவே எத்தனை பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த முடியுமோ அத்தனை பேருக்கு செலுத்த வேண்டும்"

கொரோனா தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு வரும் குளிர் காலத்தில் 50 சதவீதமாக குறையலாம். அப்போது பூஸ்டர் டோஸ்கள் தேவைப்படலாம் என மதிப்பிடுகிறார் டிம்.

ஆனால் மற்ற நிபுணர்களோ வரும் மாதங்களில் கவனமாக கணிப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர்.

கொரோனா தடுப்பூசி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கொரோனா தடுப்பூசி

பிரிட்டன் அடுத்த மாதம் முதல் சிலருக்கு பூஸ்டர் டோஸ் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் ஜே சி வி ஐ என்கிற சுயாதீன ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளுக்காக காத்திருக்கிறது அரசு. இவ்வமைப்போ மூன்றாவது டோஸ் செலுத்திக் கொள்வது தொடர்பாக முடிவு எடுக்க தேவையான ஆதாரங்களைத் தேடி வருகிறது.

"பலருக்கும் மூன்றாவது டோஸ் தேவை இருக்காது. பல மக்களுக்கு ஏற்கனவே இயற்கையாக கொரோனா தொற்று ஏற்பட்டதால் இயற்கையாகவே பூஸ்டர் விளைவுகள் ஏற்படலாம்"

"எனவே எல்லோருக்கும் பூஸ்டர் டோஸ் கொடுப்பதற்கு பதிலாக கவனமாக கணக்கிட்டுக் கொடுக்க வேண்டும். தற்போதைய சூழலில் எல்லோருக்கும் பூஸ்டர் கொடுப்பதால் பெரிய அளவில் தடுப்பூசிகள் வீணாகலாம். அது தார்மீக ரீதியாகவும் சரியாக இருக்காது என நான் கருதுகிறேன். கடந்த முறை போல் இல்லாமல், இந்த முறை தேர்ந்தெடுத்து பூஸ்டர் செலுத்தப்பட வேண்டும் என கருதுகிறேன்" என்கிறார் டிம்.

சமூகத்தில் இருக்கும் தொற்று நிலை, ஒரு நபருக்கு கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்பை எப்போது வேண்டுமானாலும் மாற்றும். எனவே கொரோனா தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு நிலையை உறுதியாக வரையறுப்பது மிகவும் கடினமாகிறது என்கிறார் ரீடிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த செல்லூலார் மைக்ரோபயாலஜி நிபுணரான மருத்துவர் சைமன் க்ளார்க்.

யாருக்கு எப்போது பூஸ்டர் டோஸ்கள் தேவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும், அது மிகவும் அவசியம் என்கிறார் ரீடிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் அலெக்சாண்டர் எட்வர்ட்ஸ்.

"கொரோனா தடுப்பூசி மக்களை பாதிக்கப்படாதவர்களாக மாற்றாது. அதே போல எல்லா தொற்றுகளில் இருந்தும் பாதுகாக்காது. கொரோனா திரிபுகள் உண்மையிலேயே பெரிய தாக்கத்தை பொது சுகாதாரத்தில் ஏற்படுத்துகிறது. இன்னமும் இந்த வைரஸால் பலர் இறந்து கொண்டிருக்கிறார்கள்"

கொரோனா தடுப்பூசி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கொரோனா தடுப்பூசி

"இந்த முழு பாதுகாப்பின்மை மற்றும் காலப்போக்கில் வைரஸுக்கு எதிராக குறைந்து வரும் பாதுகாப்பு ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு நாம் விரைவில் பொது சுகாதார திட்டங்களை வகுக்க வேண்டும்" என்கிறார் எட்வர்ட்ஸ்.

இதே போல ஒரு ஆய்வினை தேசிய புள்ளியியல் அலுவலகம் மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் தடுப்பூசிக் குழு கடந்த வாரம் பிரசுரித்தது.

பிரிட்டனில் டெல்டா திரிபால் பாதிக்கப்பட்ட நான்கு லட்சம் பேரின் கொரோனா பி சி ஆர் பரிசோதனை முடிவில், அறிகுறிகளுடன் கூடிய கொரோனா தொற்றுக்கு எதிராக ஃபைசர் தடுப்பூசி 90% செயல்திறனோடு இருந்ததாகவும், ஆஸ்ட்ராசெனீகா 70% செயல் திறனோடு இருந்ததாகவும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் மூன்று மாத காலத்தில், ஃபைசர் தடுப்பூசியின் செயல் திறன் கணிசமாக வீழ்ச்சி கண்டதாகவும், ஆஸ்ட்ராசெனீகா தடுப்பூசி நிலையாக இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசிகள் மோசமான உடல் நலக் குறைபாடுகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது போன்ற பிரச்சனைகளுக்கு எதிராக நல்ல பாதுகாப்பை வழங்குகிறது என அரசு தடுப்பூசி ஆலோசகர் பேராசிரியர் ஆடாம் ஃபின் கூறினார்.

"கொரோனா தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு குறைவது, லேசான கொரோனா தொற்றுகளை மோசமான தொற்றாகும் நிலைக்கு கொண்டு செல்லுமானால் பூஸ்டர் டோஸ் தேவைப்படும். எனவே நாம் இதை கவனமாக கண்காணிக்க வேண்டும்" என்கிறார் ஆடாம் ஃபின்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :