மூளை மூட்டம்: மாதவிடாய் நிற்கும் பருவத்தில் பெண்களைத் தாக்கும் உடல்நலக் கோளாறு

மூளை மூட்டம்: மாதவிடாய் நிற்கும் பருவத்தில் பெண்களைத் தாக்கும் உடல்நலக் கோளாறு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், லாரா ப்ளிட்
    • பதவி, பிபிசி முண்டோ

நியூயார்க்கில் உள்ள லெனாக்ஸ் ஹில் மருத்துவமனையின் நரம்பியல் நிபுணரான காயத்ரி தேவியும் அவரது சகாக்களும் ஆரம்ப காலத்தில் ஒரு தவறு செய்தனர். மாதவிடாய் நிற்கும் பருவத்தில் இருந்த ஒரு பெண்ணை அல்சைமர் நோயாளியாக அவர்கள் தவறாகக் கருதினார்கள்.

பல சுற்று சிகிச்சையின் பின்னர், பெண்ணின் உடல்நிலை மேம்பட்டது மற்றும் மருத்துவர் காயத்ரி அல்சைமரின் ஆரம்ப அறிகுறிகள் மறதி மற்றும் கவனச்சிதறல் என்பதை உணர்ந்தார். இந்த அறிகுறிகளுக்கு பின்னால் வேறு காரணங்கள் இருந்தன.

நோயாளியின் மூளைப் பிரச்னைகள் அவருடைய ஈஸ்ட்ரோஜன் (பெண் ஹார்மோன்) அளவுகளில் கடுமையான வீழ்ச்சி காரணமாக இருந்திருக்கலாம். இந்த ஹார்மோன் அளவில் மாதவிடாய் நிற்கும் பருவத்தில் (menopause) அதிக ஏற்ற இறக்கங்கள் காணப்படும். மெனோபாஸ் எனப்படும் இந்தப் பருவம், ஒரு பெண்ணின் கடைசி மாதவிடாய்க்கு ஓர் ஆண்டுக்குப் பிறகு தொடங்குகிறது.

இந்தச் சம்பவம் மருத்துவர் காயத்ரிக்கு மாதவிடாய் நிற்றலுக்கான அறிகுறியைக் குறித்து ஆராய்ச்சி செய்ய ஊக்கமளித்தது. அந்த அறிகுறியின் பெயர் (Brain Fog) மூளை மூட்டம்.

இந்த அறிகுறி பொதுவாகப் பல பெண்களிடம் காணப்பட்டாலும் இதற்கான காரணம் புரியாமல் இருப்பதே சிக்கலை மேலும் பெரிதாக்குகிறது.

நினைவுத் திறன் மீதான தாக்கம்

"மாதவிடாய் நிற்பதற்குச் சற்று முன், ப்ரீ மெனோபாஸ் (pre - menopause) பருவத்தில், (இது சுமார் ஏழு ஆண்டுகள் வரை கூட நீடிக்கலாம்) பல பெண்கள் சொற்களை நினைவில் கொள்வதில் சிரமப்படுகிறார்கள். ஒரே நேரத்தில் பல பணிகளில் கவனம் செலுத்துவதிலும் சிக்கல் ஏற்படுகிறது. நன்றாகப் பேசக்கூடிய பெண்கள், பேசுவதிலும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள், " என்று காயத்ரி தேவி பிபிசியிடம் கூறினார்.

சிகாகோவின் இல்லினோய் பல்கலைக்கழகத்தின் உளவியல், மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் பேராசிரியரும், அமெரிக்க மெனோபாஸ் சொசைட்டியின் முன்னாள் தலைவருமான பாலின் மாக்கி, "நாங்கள் கடைக்குச் சென்று என்ன வாங்க வேண்டும் என்று யோசிப்பது போல," என்று விளக்குகிறார்.

இது தவிர, மூளை மூட்டம், கதை சொல்லும் திறன், உரையாடல்களில் பங்கேற்கும் திறன் ஆகியவற்றையும் பாதிக்கிறது.

தகுந்த கவனம் பெறாத ஒரு சிக்கல்

மாதவிடாய் நிற்கும் பருவத்தில் பெண்களைத் தாக்கும் மூளைக் கோளாறு

பட மூலாதாரம், Getty Images

பேராசிரியர் மாக்கி, "எங்கள் ஆய்வில் மருத்துவ ரீதியாக குறிப்பிடத்தக்க அசாதாரண விஷயங்களை நாங்கள் கண்டறிந்தோம். பெண்களில் 10 சதவிகிதத்தினர் தங்கள் வயதிற்கு மிகக் குறைவான மதிப்பெண்களையே பெற்றனர். ஆனால் இன்னும் பலர் தங்கள் வேலை அல்லது திறனை பாதிக்கும் மிகச் சிறிய சிரமங்களை அனுபவிக்கிறார்கள். பெருமளவில் இது பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், வித்தியாசமும் இருக்கிறது, " என்று தெரிவிக்கிறார்.

மருத்துவர் காயத்ரியின் கூற்றுப்படி, "ப்ரீ மெனோபாஸ் அல்லது மெனோபாஸ் பருவத்தில் இருக்கும் 60% பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் இவர்களுக்குச் சிகிச்சையளிக்க முடியும்."

ஈஸ்ட்ரோஜென் குறைபாட்டால் தாக்கம்

மூளையின் ஹிப்போகேம்பஸ் (hippocampus) பகுதியில் பல ஈஸ்ட்ரோஜன் ரெசெப்டர்கள் உள்ளன. மூளையின் இந்தப் பகுதி நினைவுத் திறனுக்கு மிக முக்கியமானது.

"ஈஸ்ட்ரோஜனில் திடீர் வீழ்ச்சி ஏற்படும் போது, ஹிப்போகாம்பஸில் சில நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன," என்று டாக்டர் காயத்ரி விளக்குகிறார்.

பேராசிரியர் மாக்கி, தமது ஆய்வில் பெண்களுக்குக் கருப்பைகள் (ஈஸ்ட்ரோஜனின் பெரும்பகுதி உற்பத்தி செய்யப்படும் இடம்) அகற்றப்பட்டதாகவும், அவர்களுக்கு ஈஸ்ட்ரோஜன் சப்ளிமெண்ட்ஸ் கொடுப்பதன் மூலம் பயனடைந்ததாகவும் கூறுகிறார்.

ஆனால் ப்ரீ-மெனோபாஸ் பருவத்தில் இருக்கும் அனைத்துப் பெண்களும் இந்த மூளை மூட்டத்தால் பாதிக்கப்படுவதில்லையே ஏன்?

ஏனென்றால் ஈஸ்ட்ரோஜனின் தாக்கம் ஒவ்வொரு பெண்ணுக்கும் வித்தியாசமாக இருக்கிறது.

'ப்ரெய்ன் ஃபாக்' என்ற சொல் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிரிட்டிஷ் மருத்துவர் எட்வர்ட் டில்ட் என்பவரால் உருவாக்கப்பட்டது. இது மாதவிடாய் நின்ற விக்டோரியன் நோயாளிகளுக்கு நினைவு மூட்டம் ஏற்படும் நிலையை குறிக்கிறது, அதாவது அவர்கள் பணப்பையை எங்கே விட்டார்கள் அல்லது வீட்டிற்கு திரும்புவது எப்படி என்பதை மறந்து விடுவார்கள்.

வியர்வையும் நினைவுத் திறனும்

"ஆனால் இது ஈஸ்ட்ரோஜன் மட்டுமல்ல, உறக்கம் தொடர்பான சிக்கல்களையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்" என்று பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியர் ரெபேக்கா தர்ஸ்டன் கூறுகிறார். மெனோபாஸ் பருவத்தில் உள்ள 60% பெண்கள் தூக்கம் குறித்த சிக்கல்கள் இருப்பதைத் தெரிவிக்கின்றனர். இதுவும் நினைவுத் திறனைப் பாதிக்கும்.

மாதவிடாய் நிற்கும் பருவத்தில் பெண்களைத் தாக்கும் மூளைக் கோளாறு

பட மூலாதாரம், Getty Images

உறக்கம் குறைபாடு நினைவு வலையுடன் தொடர்பு கொண்டுள்ளது. இதன் காரணமாக அதிக வியர்வை சுரக்கிறது. அதிக வெப்பம் திடீரென உடல் முழுவதும் பரவி, தோல் சிவந்து, வியர்வை வழியும்.

தூக்கத்தை பாதிப்பதுடன் அதிக வியர்வையே கூட ஒரு பிரச்சனை தான். சில பெண்கள் வியர்வை காரணமாக நள்ளிரவில் விழித்துக் கொள்வதாகப் புகார் கூறுகிறார்கள், பல பெண்கள் வியர்வை காரணமாக இரவில் ஆடைகளையும் படுக்கை விரிப்புகளை மாற்ற வேண்டியிருக்கிறது.

"இந்த அதிக வியர்வையை ஒரு சிறிய அறிகுறியாகக் கருதுகிறோம். ஆனால் இது இதய நோய்க்கான அதிக ஆபத்துடன் தொடர்புடையது, இது மூளை நோய்க்கு வழிவகுக்கும். இது ஹிப்போகாம்பஸின் இருபுறமும் உள்ள இணைப்புகளை பாதிக்கிறது. அதனால் நினைவுத் திறன் பாதிக்கிறது." என்று கூறுகிறார் பேராசிரியர் தர்ஸ்டன்.

மாதவிடாய் நிறுத்தத்தின் போது அதிகரிக்கும் மனநிலை மாற்றங்கள், பதட்டம் மற்றும் மனச்சோர்வு ஆகியவை நினைவகத்தையும் பாதிக்கின்றன.

அறிகுறிகள் ஏன் பேசப்படவில்லை?

இந்த அறிகுறிகள் மிகவும் பரவலாக இருந்தால், அவை ஏன் பேசப்படவில்லை?

பல கலாசாரங்கள் மாதவிடாய் நிறுத்தத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேசாததால், இதற்கான காரணம் விழிப்புணர்வு இல்லாததாகத் தெரிகிறது.

விஸ்கான்சின்-மில்வாக்கி பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியர் கரேன் ஃப்ரிக் விளக்குகிறார், "இந்தப் பிரச்சினைகள் பல ஆண்டுகளாக நீடிக்கக்கூடும், மேலும் பெண்களுக்குத் தாங்கள் இந்தப் பருவத்தில் இருப்பது கூடத் தெரிவதில்லை. அதனால், சுலபமாக எல்லா அறிகுறிகளுக்கும் வேறு காரணங்களைக் கற்பிக்கின்றனர்."

Línea

மெனோபாஸின் அறிகுறிகள் யாவை?

•மாதவிடாய்க் காலம் மற்றும் இடைவெளியில் மாற்றம்

•மாதவிடாய்ப் போக்கில் மாற்றம்

•யோனி வறண்டு போதல்

•உறக்கத்தில் கடினம்

•பதற்றம்

•மூட்டுகளில் வலி மற்றும் விறைப்பு

•மன நிலை மாற்றங்கள்

•எடை குறைதல்

•சிறுநீர்ப் பாதைத் தொற்று

ஆதாரம்: பிரிட்டிஷ் தேசிய சுகாதார சேவை

Línea

பேராசிரியர் ஃப்ரிக், "40 முதல் 50 வயதிற்குட்பட்ட பெண்கள் மிகவும் பிஸியாக இருக்கிறார்கள், வேலைகளில் பிஸியாக இருக்கிறார்கள் அல்லது வீட்டை கவனித்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு வெவ்வேறு வயது குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் பெற்றோரை கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் மன அழுத்தம் இவற்றுக்கு காரணமாக கருதப்பட்டது. பல தொழில்முறைப் பெண்கள் கூட இதைப் பற்றி பேச பயப்படுகிறார்கள். பெண்கள் தங்கள் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க மிகவும் கடினமாக உழைக்கிறார்கள், மேலும் அவர்கள் வயதானவர்களாகவோ பலவீனமாகவோ தங்களைக் காட்டிக்கொள்ள விரும்புவதில்லை," என்று கூறுகிறார்.

மெனோபாஸ் மற்றும் நினைவுத் திறன் ஆகியவற்றுக்கிடையிலான தொடர்பு குறித்து மேலும் ஆய்வுகள் தேவை என்பதில் பி பி சி-யுடன் பேசிய மருத்துவர்கள் ஒருமித்த கருத்து தெரிவிக்கிறார்கள். இந்தத் தேவையற்ற துன்பத்திலிருந்து லட்சக்கணக்கான பெண்களைக் காப்பாற்றுவதற்காக விழிப்புணர்வு உருவாக்கப்பட வேண்டியது தான் மிகவும் அவசியம்.

சிகிச்சை என்ன?

மாதவிடாய் நிற்கும் பருவத்தில் பெண்களைத் தாக்கும் மூளைக் கோளாறு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மூளை மூட்டம் பெண்களின் நினைவு மற்றும் பேச்சுத் திறனை பாதிக்கும்

முதல் கட்டமாக, "பெண்கள் பீதியடையாமல் இருப்பது முக்கியம், ஏனென்றால் அவர்கள் அல்சைமர் இருக்கலாம் என்று நினைக்கிறார்கள். இதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அவர்களுக்கு ஏற்பட்டிருப்பது சாதாரணமான பிரச்சனை தான் என்று அவர்கள் உணர வேண்டும்" என்று கூறுகிறார் பேராசிரியர் மாக்கி.

"இது குறித்த பல ஆய்வுகளின் முடிவுகளும் ஒன்று போலவே இருக்கின்றன. இந்த மன மூட்டம் தற்காலிகமானது தான் என்றும் இது குணப்படுத்தக்கூடியது தான் என்றும் உணர வேண்டும். காரணம், குறைந்த அளவு ஈஸ்ட்ரோஜன் அல்லது ஈஸ்ட்ரோஜன் இல்லாமலே கூட வேலை செய்ய மூளை பழகிக் கொண்டுவிடும் என்று தான் அவை பரிந்துரைக்கின்றன"

"ஆனால் அதிக வியர்வை காரணமாக இரவு முழுவதும் விழித்திருந்தால், உங்கள் மருத்துவரை அணுகவும். ஹார்மோன் மாற்று சிகிச்சை சில சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படுகிறது, குறிப்பாக இளம் பெண்கள் விஷயத்தில். இதனாலான நன்மைகள், அபாயங்களை விட அதிகமாக உள்ளன."

இந்தச் சிகிச்சைக்கு பல பெண்கள் நன்றாக இருப்பதாக மருத்துவர் காயத்ரி ஒப்புக்கொள்கிறார். ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் ஒரு சர்ச்சைக்குரிய ஆய்வு முடிவு வெளியானதைத் தொடர்ந்து, இந்தச் சிகிச்சையின் பயன்பாடு கணிசமாகக் குறைந்தது. இதில், ஹார்மோன் மாற்று சிகிச்சை மார்பகப் புற்றுநோய்க்கு வழிவகுப்பதாகக் குறிப்பிடப்பட்டது. இந்த முடிவு பின்னர் எதிர்த்து முறையிடப்பட்டது.

"நவீன ஹார்மோன் மாற்று சிகிச்சைகள் முன்பை விட அதிக கவனம் செலுத்தியுள்ளன, மேலும் பல வகையான ஈஸ்ட்ரோஜன்கள் உள்ளன. பல சந்தர்ப்பங்களில் அவை நன்மை பயக்கும்." என்று டாக்டர் காயத்ரி கூறுகிறார்.

லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ள பெண்களுக்கும் ஹார்மோன் சிகிச்சை வேண்டாம் என்று முடிவு செய்யும் பெண்களுக்கும் நினைவுத் திறனை மேம்படுத்த வேறு பல வழிமுறைகளும் உள்ளன.

ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி, விளையாட்டு அல்லது மனப்பயிற்சி, ஒரு நல்ல தூக்க வழக்கம், மது அருந்துவதைக் குறைத்தல் மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவு உட்கொள்ளுதல் இவை அனைத்தும் மெனோபாஸ் அறிகுறிகளைக் குறைக்க உதவும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :