கொரோனா வைரஸ்: தடுப்பூசிகள் ஏன் பெண்களின் மாதவிடாயை பாதிக்கின்றன? குழந்தை பெறுவதில் சிக்கல் வருமா?

பட மூலாதாரம், Getty Images
கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னர் தங்கள் மாதவிடாய் சுழற்சி, உதிரப்போக்கு உள்ளிட்டவற்றில் மாற்றம் உண்டாகியுள்ளதாக சில பெண்கள் தெரிவிக்கின்றனர். இதனால் குழந்தை பெறுவதில் சிக்கல் உண்டாகலாம் என்ற அச்சமும் எழுகிறது.
இது தொடர்பாக லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர் விக்கி மலெ பிபிசியிடம் விளக்கம் அளித்தார். இவர் இனப்பெருக்க நோயெதிர்ப்பு நிபுணர் ஆவார்.
கொரோனா தடுப்பூசி செலுத்திய பின் கடுமையான மாதவிடாய் ஏற்பட்டது என்பதால், இந்த உடல்நலக் கோளாறு உங்கள் வாழ்கை முழுவதும் பாதிக்காது என்கிறார் அவர்.
கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் உலகம் முழுவதும் மும்முரமாக நடந்துவரும் சூழலில் இது குறித்து பல கேள்விகள் எழுகின்றன. பெண்களின் மாதவிடாய் மற்றும் மகப்பேறு தொடர்பான கேள்விகள் அவற்றில் சில.
விக்கி உடனான உரையாடலைக் கேள்வி - பதில் வடிவில் தொகுத்து வழங்குகிறோம்.
தடுப்பூசிகள் மாதவிடாயை பாதிக்குமா?
இக்கேள்விக்கு உறுதியான விடை நமக்குஇன்னும் தெரியாது. ஆனால் பலரும் இது குறித்து புகார் கூறி வருகிறார்கள்.
வழக்கத்தை விட மாதவிடாயின் போது அதிக ரத்தப் போக்கு ஏற்படுவதாக அல்லது மாதவிடாய் உண்டாவது கொஞ்சம் தாமதம் ஆவதாகக் கூறுகிறார்கள்.
சில தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டால் குறுகிய காலத்தில் மாதவிடாய் சுழற்சியில் சிறு மாற்றங்கள் ஏற்படும் என்பதை நாங்கள் அறிவோம். அம்மாற்றங்கள் ஓரிரு மாதவிடாய் சுழற்சிகளை மட்டுமே பாதிக்கும் எனவும் நாங்கள் அறிவோம்.
தடுப்பூசிகள்ஏன் மாதவிடாயை பாதிக்கின்றன?
நோயெதிர்ப்பு மண்டலம் பாலியல் ஹார்மோன்களையும், பாலியல் ஹார்மோன்கள் நோயெதிர்ப்பு அமைப்பையும் பாதிக்கும்.

பாலியல் ஹார்மோன்கள் தான் மாதவிடாய் காலத்தில் வெளியேறுகிறது. எனவே நோயெதிர்ப்பு மண்டலத்துக்கு தடுப்பூசி மூலமோ, தொற்று மூலமோ பேரதிர்ச்சி கொடுக்கும் போது ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படுவதைக் காணலாம்.
அது மாதவிடாய் ஏற்படும் காலத்தையும், மாதவிடாய் காலத்தில் உண்டாகும் ரத்தப் போக்கையும் தீர்மானிக்கிறது.
ஒருவேளை உங்கள் கருப்பையில் நிறைய நோயெதிர்ப்பு அணுக்கள் இருக்கலாம்,
தடுப்பூசி செலுத்தியதால் நோயெதிர்ப்பு மண்டலம் செயல்படத் தொடங்கி இது பாதிக்கப்பட்டு இருக்கலாம். அல்லது சாதாரண உடல் நலக்குறைவு காரணமாக மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்பட்டு இருக்கலாம்.
குழந்தை பெறுவதில் பிரச்னைகள் வருமா?
இல்லை, மேற்கண்ட இந்த மாற்றங்களைக் குறித்து புகாரளித்தவர்கள் பெரும்பாலும் இது ஓரிரு மாதங்கள் மட்டும் இருப்பதாகவே கூறுகிறார்கள்.
தங்களின் மாதவிடாய் சுழற்சி மாற்றத்துக்கு உள்ளானால் அது எதிர்காலத்தில் தாங்கள் கருத்தரிப்பது கூட பிரச்னைக்குரியதாகலாம் என கருதுகிறார்கள். எனவே இதைக் குறித்து அவர்கள் கவலை அடைகிறார்கள்.
குறுகிய காலத்துக்கு மாதவிடாய் சுழற்சியை மாற்றும் இத்தடுப்பூசிகள் மகப்பேறு தொடர்பாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
தடுப்பூசி மகப்பேறை பாதிக்கும் என்பது வதந்தி என உலக சுகாதார அமைப்பின் முதன்மை அறிவியலாளர் கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
- கேரளாவை அடுத்து தமிழ்நாட்டிலும் ஜிகா வைரஸ் எச்சரிக்கை: அறிகுறிகள், பாதிப்பு என்ன?
- தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு - மு.க. ஸ்டாலின்
- Sulli Deals: முஸ்லிம் பெண்களை விற்க உருவாக்கப்பட்ட செயலியால் அதிர்ச்சி
- பக்க விளைவுகள் வரவில்லை என்றால் தடுப்பூசி வேலை செய்யவில்லை என்று பொருளா?
- ஆஃப்கனில் இறுகும் தாலிபன் பிடி: இரான், துர்க்மெனிஸ்தான் எல்லைகளை கைப்பற்றினர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












