You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிளாஸ்டிக் கழிவுகள்: பெருங்கடலில் மிதக்கும் உணவு சார் கழிவுகள் - தீர்வுதான் என்ன?
- எழுதியவர், ஹெலென் ப்ரிக்ஸ்
- பதவி, பிபிசி சுற்றுச்சூழல் செய்தியாளர்
உணவை பார்சல் செய்து கொடுக்க பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் உணவு சார் பிளாஸ்டிக் பொருட்கள் ஆறுகள், பெருங்கடல்கள் போன்ற நீர் நிலைகளில் குவிந்து கொண்டிருக்கின்றன.
ஆறுகள், பெருங்கடல்கள், நதிக்கரை ஓரங்கள், கடலோரப் பகுதிகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 12 மில்லியனுக்கும் அதிகமான குப்பைகள் கண்டெடுக்கப்பட்டன. அதை விஞ்ஞானிகள் ஆராய்ந்து பட்டியலிட்டனர்.
அதில் பத்தில் எட்டு பொருட்கள் பிளாஸ்டிக்கால் தயாரானவை என அவர்கள் கண்டறிந்தனர்.
இந்த பிளாஸ்டிக் குப்பைகளில் 44 சதவீதம் குப்பைகள், உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்களை பார்சல் எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் தொடர்பானது.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பாட்டில்கள், உணவு பார்சல் கொள்கலன்கள், ரேப்பர்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் போன்றவை இதில் மிகப்பெரிய பங்கைக் கொண்டிருக்கின்றன.
"பைகள், பாட்டில்கள், உணவுக் கொள்கலன்கள், ரேப்பர் போன்றவைகள் உலக அளவில் மனிதனால் உருவாக்கப்பட்ட பொருட்களில் கிட்டத்தட்ட பாதிக்கு மேல் இருக்கின்றன என்பதைக் காணும் போது அதிர்ச்சியாக இருக்கிறது" என ஸ்பெயினின் காடிஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வுத் தலைவர் முனைவர் கார்மென் மோரல்ஸ் கூறினார்.
"நாங்கள் அவற்றை ஆறுகளிலும், ஆழமான கடற்பரப்புகளிலும், கரையோரங்களிலும் மற்றும் கடற்கரைகளிலும் மிதப்பதைக் கண்டோம்."
பிளாஸ்டிக் மாசுபாட்டைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளில் ஸ்ட்ரா, காது குடையும் பருத்தி பட்ஸ்கள் மற்றும் பானத்தை கலக்கப் பயன்படுத்தும் ஸ்டிரர்கள் போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட்டுள்ளன. அவைகளை எளிதில் மாற்றிவிடலாம்.
இந்த நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள், இருப்பினும் உணவு மற்றும் பானங்களை பார்சல் எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கைக் கையாளவும் அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இந்த வகை பிளாஸ்டிக்குகள் பெரும்பாலும் மிகக் குறுகிய காலத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பின்னர் தூக்கி எரிந்துவிடுவதாகவும், அப்படிப்பட்ட பிளாஸ்டிக்கை கையாள்வதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
'நேச்சர் சஸ்டைனபிலிட்டி' என்கிற சஞ்சிகையில், இந்த சிக்கலைச் சமாளிக்க மூன்று சாத்தியமான யோசனைகளை அவர்கள் முன்வைக்கிறார்கள்:
1. உணவு மற்றும் பானங்களை பார்சல் எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளுக்கு பதிலாக, எளிதில் மட்கக் கூடிய பொருட்களில் பார்சல் செய்ய பயன்படுத்தப்படும் கொள்கலன்கள், பாட்டில்கள் மற்றும் பைகளை தயாரிக்கலாம்.
2. பைகள் போன்ற தவிர்க்கக்கூடிய பிளாஸ்டிக்குகளை பயன்படுத்தக் கூடாது என ஒழுங்குமுறை தடைகளை கொண்டு வர வேண்டும்.
3. பார்சல் வாங்கிச் செல்பவர்கள் கொள்கலன்கள் மற்றும் பாத்திர பண்டங்களை, திருப்பிக் கொடுக்கும் வகையில் டெபாசிட் ரீஃபண்ட் திட்டங்களை நடைமுறைப்படுத்த ஆலோசிக்கலாம்.
கடலில் பிளாஸ்டிக் மீன்பிடி வலைகள் மற்றும் கயிறுகள் போன்றவை பெரிய சிக்கலாக இருக்கின்றன என்பதை இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. இப்படி நடுக்கடலில் கைவிடப்பட்ட வலைகள் மற்றும் கயிறுகள் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தாக அமையலாம்.
காடிஸ் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது ஆய்வில் ஐரோப்பாவின் நதிகளிலிருந்து மட்டும் கடலுக்குள் விடப்படும் குப்பைகளைக் குறித்து ஆராயப்பட்டது..
அவ்வாய்வின் மதிப்பீடுகள் படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 307 முதல் 925 மில்லியன் மிதக்கும் குப்பைகளை ஐரோப்பிய நதிகளில் இருந்து கடலுக்குள் வந்து கலக்கின்றன. அதில் 80% பிளாஸ்டிக் கழிவுகள்.
இந்த பிளாஸ்டிக் கழிவுகளில், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பாட்டில்கள், உணவு பார்சல் செய்ய பயன்படுத்தப்படும் கொள்கலன்கள், பிளாஸ்டிக் பைகள் அதிகம்.
துருக்கி 16 சதவீத குப்பைகளை உற்பத்தி செய்திருக்கிறது, இத்தாலி (11%), இங்கிலாந்து (8%), ஸ்பெயின் (8%) மற்றும் கிரீஸ் (7%) என குப்பைகளை எல்லா நாடுகளும் தங்கள் பங்குக்கு குப்பைகளை உற்பத்தி செய்திருக்கின்றன.
பிளாஸ்டிக் நுகர்வைக் குறைக்க நுகர்வோர் ஊக்குவிப்பு நடவடிக்கைகள் தேவை என்கிறார் முன்னணி ஆராய்ச்சியாளர் முனைவர் டேனியல் கோன்சலஸ்.
"நாம் ஒரு குடிமகனின் பார்வையில் இருந்தும், கொள்கை தரப்பிலிருந்தும் செயல்பட வேண்டும்," என அவர் கூறினார்.
பிற செய்திகள்:
- நரேந்திர மோதியின் ‘ஆத்ம நிர்பார்’ முழக்கம் என்ன ஆனது?
- கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இதை நிச்சயம் சாப்பிடக்கூடாது!
- 'சில நாடுகள் உலகின் விதியை நிர்ணயிக்கும் காலம் முடிந்துவிட்டது' - ஜி7 நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை
- 'உலகின் மிகப்பெரிய குடும்பத்தின்' தலைவர் மரணம்: 39 மனைவிகள், 94 குழந்தைகள்
- கொரோனா வைரஸ் திரிபுகள் இன்னும் எவ்வளவு மோசமடையும்?
- யார் இந்த கெளதம் அதானி? இவர் ஆசியாவின் 2ஆவது பெரிய பணக்காரர் ஆனது எப்படி?
- முதியோர்களை குறிவைக்கும் ஆன்லைன் மோசடி கும்பல்: தற்காத்து கொள்வது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்