'உலகின் மிகப்பெரிய குடும்பத்தின்' தலைவர் ஜியோனா சானா மரணம்: 39 மனைவிகள், 94 குழந்தைகள்

உலகின் மிகப்பெரிய குடும்பம் என்று கருதப்படும் குடும்பத்தின் தலைவர் ஜினா சானா தமது 76ஆம் வயதில் உயிரிழந்துள்ளார் என்று மிசோராம் மாநில முதல்வர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அவருக்கு 38 மனைவிகள் மற்றும் 89 குழந்தைகள் இருந்ததாக அந்த பதிவில் தெரிவித்துள்ளார் முதலமைச்சர் சொரம்தங்கா.

மிசோராம் தலைநகர் ஐஸ்வாலில் உள்ள ட்ரினிட்டி மருத்துவமனையில் இன்று மதியம் 3 மணிக்கு அவர் இறந்ததாகவும், அவருக்கு நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் இருந்ததாகவும் என்டிடிவி செய்தி தெரிவிக்கிறது.

ஜியோனாவின் குடும்பத்தால் மிசோராம் மாநிலமும், அவரது பக்தாங் லாங்னுவாம் கிராமமும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக மாறின என்று முதலமைச்சர் சொரம்தங்கா தெரிவித்துள்ளார்.

ஆனால், ஜியோனா சானாவுக்கு 39 மனைவிகளும் 94 குழந்தைகளும் உள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இவருக்கு 33 பேரக் குழந்தைகளும் உள்ளனர் என்று இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தாம் தொடர்ந்து திருமணம் செய்து கொள்வது குறித்து குடும்பத்தில் எந்த சண்டையும் ஏற்படவில்லை என்று தமது பேட்டிகளில் அவர் பலமுறை தெரிவித்துள்ளார்.

'சானா பாவ்ல்' எனும் கிறிஸ்தவ மதக்குழுவின் தலைவராக ஜியோனா இருந்துள்ளார் என்றும், அந்த மதக் குழுவைச் சேர்ந்தவர்கள் இவரை 'ஹொடூபா' (தலைவர்) என அழைப்பார்கள் என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியாகியுள்ள செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

'சானா பாவ்ல்' மதக்குழு பலதார மணத்தை ஊக்குவிப்பதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.

குவாங்துவாங்கா (Khuangtuanga) எனும் மத போதகரால் 1942இல் மிசோராம் மாநிலத்தில் இந்த மதக்குழு நிறுவப்பட்டுள்ளது.

1945, ஜூலை 21 அன்று பிறந்த ஜியோனா தமது 17வது வயதில் முதல் திருமணம் செய்துள்ளார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை கூறுகிறது.

இறக்கும் வரை அவரது அனைத்து மனைவிகள் , குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் ஒரே வீட்டில் ஜியோனா சானா வசித்து வந்தார். அந்த வீட்டில் அனைவருக்கும் சேர்த்து ஒரே சமையலறைதான் உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :