கொரோனா வைரஸ்: இந்தியாவில் முதல் முறையாக சென்னை சிறுவனுக்கு கோவிட் அதி அழற்சி நோய்க்குறி

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசிக்காக

பெரியவர்களை ஒப்பிடும்போது, சிறியவர்களுக்கு ஏற்படும் கொரோனா தொற்று லேசான பாதிப்புகளையே ஏற்படுத்தும் என்று இதுவரை பொதுவாக நம்பப்பட்டது. ஆனால், கொரோனா தொற்று ஏற்பட்ட 8 வயது சென்னை சிறுவன் ஒருவனுக்கு அதி அழற்சி நோய்க்குறி ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் ‘ஹைப்பர் இன்ஃப்ளமேட்டரி சிண்ட்ரோம்’ (Hyper-inflammatory syndrome) என்று அழைக்கப்படும் இந்த நோய்க்குறி, கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்ட குழந்தை ஒன்றிடம் காணப்படுவது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை.

அதி அழற்சி நோய்க்குறி ஏற்படுகிற நோயாளிகளின் உடல் முழுவதும் அழற்சி ஏற்படும். இன்றியமையாத உறுப்புகளையும் இந்த அழற்சி விட்டுவைக்காது. உடனடியாக சிகிச்சை அளிக்கத் தவறினால் நோயாளிக்கு பல்லுறுப்பு செயலிழப்பு மற்றும் அதிர்ச்சி ஏற்படும். கவாசகி நோயில் ஏற்படுவதைப் போல ரத்தக் குழாய்களில் அழற்சி ஏற்படுவது இந்த நோயால் ஏற்படும் பாதிப்புகளில் ஒன்று.

இந்த நோய்க்குறி ஏற்படுகிறவர்களுக்கு நச்சதிர்வு நோய்க்குறியும் (toxic shock syndrome) சேர்ந்து வரும்.“மனித உடலுக்குள் ஒரு வைரஸ் நுழையும்போது, உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு தன்னிடமுள்ள எல்லா ஆயுதங்களையும் கொண்டு வைரசைத் தாக்கும்.

ஒரு மனித உடல் தீவிர எதிர்வினை ஆற்றும்போது, அந்த நோய்த்தொற்றினை எதிர்ப்பதற்குத் தேவையானதைவிட அதிகமான புரதத்தை உற்பத்தி செய்துவிடும். இதனால், தாம் காப்பாற்றவேண்டிய உடலையே இந்த மிகையான புரதம் பாதிக்கத் தொடங்கும். இப்படித்தான் நச்சதிர்வு நோய்க்குறி குழந்தைகளைத் தாக்குகிறது” என்று பிபிசி இந்தி சேவையிடம் தெரிவித்தார் சென்னை ‘காஞ்சி காமகோடி சைல்ட் டிரஸ்ட்’ மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் எஸ்.பாலசுப்ரமணியன்.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

‘ஜர்னல் ஆஃப் இந்தியன் பீடியாட்ரிக்ஸ்’ என்ற மருத்துவ அறிவியல் சஞ்சிகையில் இது தொடர்பில் வெளியான ஆய்வுக்கு உட்படுத்தப்படாத கட்டுரையை டாக்டர் பாலசுப்ரமணியன், அவரது மருத்துவமனையின் சிறார் அவசர சிகிச்சைப் பிரிவின் தலைவர் டாக்டர் பால ராமச்சந்திரன், அதே மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் டி.எம்.நாகேந்திரன், டாக்டர் ஏ.வி. ரமணன் ஆகியோர் சேர்ந்து எழுதியுள்ளனர்.

வேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த குறிப்பிட்ட 8 வயது சிறுவனுக்கு அதீத காய்ச்சல் கட்டுக்கடங்காமல் சென்றபோது அவன் காஞ்சி காமகோடி சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டான்.

Banner image reading 'more about coronavirus'
Banner image reading 'more about coronavirus'

“குழந்தைக்கு தொடர்ந்து அதிக காய்ச்சல் இருந்தது. தொண்டையும், நாக்கும் சிவந்திருந்தது. உதட்டில் வெடிப்பு காணப்பட்டது. மொத்தத்தில் பார்க்கவே நோயுற்ற தோற்றத்தில் இருந்தான். முன்பு இருந்த மருத்துவமனையில், நோயுற்ற 5ம் நாள் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்தபோது, நோய்த் தொற்று இல்லை என்று முடிவு வந்தது.

அதே சோதனைக் கூடத்தில் 9ம் நாள் செய்த சோதனையில் தொற்று இருப்பதாக முடிவு வந்தது” என்றார் டாக்டர் ராமச்சந்திரன்.அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் இத்தகைய நோய் வந்த குழந்தைகளால் மருத்துவர்கள் கவலையுற்றனர். லண்டன் சவுத் தேம்ஸ் ரிட்ரிவல் சர்வீசில் 8 குழந்தைகளுக்கு கோவிட் தொற்றுடன் இத்தகைய நோய்க்குறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த 8 பேரில் முதல் குழந்தைக்கு ஏப்ரல் மாத நடுப்பகுதியில் இந்த தொற்று ஏற்பட்டதாக புகழ் பெற்ற மருத்துவ அறிவியல் சஞ்சிகையான லேன்சட் மே 7-ம் தேதி வெளியான தமது பதிப்பில் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா வைரஸ்

இதைத் தொடர்ந்து இதே போன்ற நோயாளிகள் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் கண்டுபிடிக்கப்பட்டனர். “எனவே, இது போன்ற நோயாளிகள் இங்கும் இருக்கிறார்களா என்று நாங்கள் பார்த்துவந்தோம்” என்கிறார் டாக்டர் ராமச்சந்திரன்.

கவாசகி நோய் என்பது இதுவரை தெரியாத காரணங்களால் ஏற்படும் நோயெதிர்ப்பு எதிர்வினை. இது இதயம் முதல் கொண்டு எல்லா உறுப்புகளையும் பாதிக்கும். நச்சதிர்வு நோய்க்குறி என்பது பாக்டீரியா தொற்றினால் ஏற்படுகிறது. இதற்கு ஆன்டிபயாடிக் மருந்துகளைக் கொண்டு சிகிச்சை செய்ய முடியும். “இந்த இரண்டு நோயும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து வருகின்றன” என்கிறார் ராமச்சந்திரன்.

பெற்றோர் எப்படி கவனமாக இருக்கவேண்டும்?

“காய்ச்சல் என்பது கவலையளிக்கும் அறிகுறியல்ல. ஆனால், குழந்தை எப்போதுமே மந்தமாகவும், சோர்வாகவும், மிகவும் சுகவீனமாகவும் இருந்தால், உணவு உட்கொள்ளும் அளவும், சிறுநீர் வெளியேற்றும் அளவும் மிக குறைவாக இருந்தால், மிக அதிகமாக வேர்த்தால், தோல், நாக்கு, கண்கள் சிவந்திருந்தால், தோல் உரிந்தால், கடுமையான வயிற்றுவலி இருந்தால் பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லவேண்டும்” என்கிறார் டாக்டர் பாலசுப்ரமணியன்.

பிறகு, குழந்தை இயல்பாக சுவாசிக்கிறதா? ரத்தவோட்டம் இயல்பாக இருக்கிறதா? என்பதை எல்லாம் மருத்துவர் பார்த்து முடிவு செய்வார். “அதி அழற்சி நோய்க்குறிக்கான சிகிச்சை கொரோனா தொற்றுக்கான சிகிச்சை போன்றதல்ல. குழந்தைக்கு தீவிர சிகிச்சை தேவைப்படும். ரத்த அழுத்தம் குறைந்தால், இதயத்துக்கு செல்லும் ரத்தத்தின் அளவு குறையும் என்பதால் திரவங்கள் ஏற்றவேண்டியிருக்கும்” என்கிறார் பாலசுப்ரமணியன்.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் கோவிட்-19 நோய்த் தொற்று உச்சத்துக்கு சென்றுவிட்டதா?

கோவிட் தொற்று எண்ணிக்கை உச்சத்துக்கு செல்லும்போது 19 வயதுக்கு குறைவானவர்களுக்கு இந்த நோய்க்குறி ஏற்படும் என்று தற்போது நம்பப்படுவதால் இந்தக் கேள்வி எழுகிறது.

“இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை உச்சம் தொட்டுவிட்டதாக நாம் நினைக்கவில்லை. ஆனால், வரும் மாதங்களில் குழந்தைகளுக்கு இதுபோன்ற நோய் வருதைக் காண்போம். சில வெளிநாடுகளில் நடந்ததைப்போல அடிவயிற்று வலி ஏற்படும் குழந்தைகளுக்கு உடனடியாக குடல்வால் அறுவை சிகிச்சை செய்துவிடக்கூடாது என்பதை நாம் கவனத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்” என்கிறார் பாலசுப்ரமணியன்.

“கோவிட்-19 உறுதி செய்யப்பட்ட, அதி அழற்சி நோய்க்குறி இருக்கிறதா என்பதை உறுதி செய்யத் தேவையான அனைத்து தகவல்களும் பெறப்பட்ட 345 குழந்தைகளில் 23 சதவீத குழந்தைகளிடம் இந்த நோய்க்கான அறிகுறிகள் இருந்தன. அவர்களுக்கு ஆஸ்துமா உள்ளிட்ட நாள்பட்ட நுரையீரல் நோய், இருதய, ரத்தக்குழாய் நோய், நோயெதிர்ப்பாற்றல் ஒடுக்கம் (immuno suppression) ஆகியவை பொதுவாக இருந்தன” என்று உலக சுகாதார நிறுவனம் ஒரு அறிவியல் உரையில் தெரிவித்தது.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் காணப்படும் நிலைமை உலகின் பிற பகுதிகளில் உள்ள நிலையைப் பிரதிபலிக்கிறதா என தெரியவில்லை என்பதால் உலகம் முழுவதிலும் இருந்து தரப்படுத்தப்பட்ட தரவுகளைத் திரட்டுவது அவசரத் தேவை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்காக உலகம் முழுவதிலும் உள்ள தேர்ந்தெடுத்த மருத்துவர்களைக் கொண்ட பணிக்குழு ஒன்றை உலக சுகாதார நிறுவனம் அமைத்துள்ளது. அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) குழந்தை மருத்துவத் துறையைச் சேர்ந்த மருத்துவர் ராகேஷ் லோதா என்பவரும் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: