5,000 ஆண்டுகளுக்கு முன்பே அமேசானில் வளர்ந்த 'சாக்லேட் தாவரம்'

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஹெலன் பிரிக்ஸ்
- பதவி, பிபிசி
சாக்லேட் தயாரிக்கப்படுவதற்கு மூல தாவரமான கோகோ 5,000 ஆண்டுகளுக்கும் முன்னதாகவே அமேசான் மழைக்காடுகளில் வளர்ந்தது என்று தாவரவியல் சான்றுகள் மூலம் தெரியவந்துள்ளது.
தற்போதைய ஈக்வடார் நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பூர்வக்குடி மக்கள் பயன்படுத்திய பானையிலுள்ள எச்சங்களை ஆய்வு செய்ததில் அவர்கள் சாக்லேட் தயாரிக்கப்படும் கோகோவை உணவு, பானம் அல்லது மருந்தாக பயன்படுத்தியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்புவரை சாக்கலேட் மத்திய அமெரிக்காவில் முதல் முறையாக தோன்றியதாக கருதப்பட்டது.
"இதற்கு முன்னர் கிடைத்த ஆதாரங்களைவிட இந்த தாவரம் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்னரே பயன்படுத்தப்பட்டது இதன் மூலம் தெரியவந்துள்ளது," என்று கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்திலுள்ள மானிடவியல் துறையின் பேராசிரியரான மைக்கல் பிளேக் கூறுகிறார்.
"இதற்கு முன்னர் கிடைத்த பழமையான கோகோ எச்சங்கள் மெக்ஸிகோ, மத்திய அமெரிக்காவில் கண்டெடுக்கப்பட்டன," என்று அவர் மேலும் கூறுகிறார்.
ஈக்வடாரிலுள்ள சாண்டா அனா என்ற பகுதியிலுள்ள தொல்பொருள் ஆய்வு களத்தில் கண்டெடுக்கப்பட்ட அந்த பானையை ஆய்வு செய்தததில் அது 5,300 முதல் 2,100 வருடங்களுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தது என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
கோகோ மட்டுமின்றி அங்கு கிடைத்த சோளம், சர்க்கரை வள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பல வகையான பயிர்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், Getty Images
அந்த இடத்தில் கிடைத்த பானையிலுள்ள எச்சங்கள், டி.என்.ஏ ஆகியவற்றை ஆய்வு செய்ததில், அதில் கோகோவின் விதைகள் பல வகையான பொருட்களுடன் கலக்கப்பட்டு பானமாக குடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
அந்த பானையிலிருந்த ஸ்டார்ச் கோகோவுக்கே தனித்துவமான வகையை சேர்ந்தது என்று இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மற்றொரு ஆய்வாளரான கல்கரி பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் சோனியா சரில்லா கூறுகிறார்.
ஈக்வடாரில் கிடைத்த பானையில் காணப்படும் எச்சம் தென் அமெரிக்காவின் வடமேற்கு பகுதியிலுள்ள அமேசான் பிராந்தியத்தில் காணப்படும் கோகோ மரத்தை ஒத்திருப்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பட மூலாதாரம், FRANCISCO VALDEZ
"இந்த உலகிற்கு அமேசான் அளித்த மற்றொரு பரிசாக இதை கருதுகிறோம். அதுமட்டுமின்றி, அமேசானின் இயற்கை வாழ்விடத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை மற்றொருமுறை இது உணர்த்துகிறது," என்று பிளேக் கூறுகிறார்.
கோகோ விதைகளோ அல்லது நாற்றோ அநேகமாக கடல்வழியாக மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்க பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்க வேண்டுமென்றும் கருதப்படுகிறது.
ஸ்பானிஷ் ஆய்வுப் பயணிகள் 1520களில் கோகோவை கண்டறிந்து தங்களது நாட்டிற்கு எடுத்துச்சென்று பின்னர் ஐரோப்பா முழுவதும் பரவ செய்தனர்.
கோகோவின் தொடக்கக்காலத்தை பற்றிய நம்பிக்கை அளிக்கும் தகவல்களை அளித்துள்ள இந்த ஆராய்ச்சி முடிவு நேச்சர் எக்காலஜி & எவலூஷன் என்ற சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












