கருவில் உள்ள சிசுவை மாசுபாட்டில் இருந்து காப்பது எப்படி?

கருவுக்குள் இருக்கும் குழந்தையை மாசுபாடு எப்படி பாதிக்கிறது?

பட மூலாதாரம், Science Photo Library

    • எழுதியவர், கமலேஷ்
    • பதவி, பிபிசி

குழந்தைகள் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்காமல் வெளியே சென்று ஓடியாடி, தூய்மையான காற்றை சுவாசித்து விளையாடுவது அவர்களின் உடல்நலத்திற்கும், மனநலத்திற்கும் நல்லது என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால், இந்தியா உள்பட பல நாடுகளில் அபரிதமாக அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசுபாடு தற்போது மக்களின் உயிரையே அழிக்குமளவிற்கு சென்றுள்ளது நிரூபணமாகியுள்ளது.

குறிப்பாக, அதிகரித்து வரும் மாசுக்களின் அளவு குழந்தைகளுக்கு பல்வேறு விதமான நோய்களை ஏற்படுத்துவதுடன், அவர்களது உடல், மனநல வளர்ச்சிக்கு பெருந்தடையாக உள்ளது.

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின்படி, கடந்த 2016ஆம் ஆண்டு மட்டும் சுற்றுச்சூழல் மாசுபாட்டின் காரணமாக இந்தியாவில் ஐந்து வயதிற்குட்பட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

கருவுக்குள் இருக்கும் குழந்தையை மாசுபாடு எப்படி பாதிக்கிறது?

பட மூலாதாரம், Getty Images

குறிப்பாக 2.5 மைக்ரோ மீட்டர் விட்டம் அளவுள்ள பி.எம் 2.5 என்று அழைக்கப்படும் நுண் மாசு துகள்களின் விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதே இந்தியாவில் ஏற்படும் குழந்தைகள் இறப்பிற்கு முக்கிய காரணமென்று அந்த அறிக்கை கூறுகிறது. காற்றில் கலந்துள்ள மாசு துகள்களை சுவாசிக்கும்போது அவை உடலினுள்ளே சென்று உயிரை பறிக்கும் அளவுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

குழந்தைகளின் உயிரை வாங்கும் கொடிய மாசுபாடு

காற்றில் கலந்துள்ள மாசுபாட்டின் காரணமாக 2016ஆம் ஆண்டு, இந்தியாவில் 60,987 பேரும், நைஜீரியாவில் 47,674 பேரும், பாகிஸ்தானில் 21,136 பேரும், காங்கோவில் 12,890 பேரும் உயிரிழந்துள்ளனர்.

கருவுக்குள் இருக்கும் குழந்தையை மாசுபாடு எப்படி பாதிக்கிறது?

பட மூலாதாரம், Getty Images

உயிரிழந்தவர்களில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையே மிகவும் அதிகமாக உள்ளது. அதாவது, இந்தியாவில் உயிரிழந்த 60,987 குழந்தைகளில் 32,889 பெண் குழந்தைகளும், 28,097 குழந்தைகளும் அடக்கம். சுற்றுச்சூழல் மாசுபாட்டின் காரணமாக பிறந்த குழந்தைகள் மட்டுமல்லாது தாயின் கருவிலிருக்கும் குழந்தைகள் கூட பாதிக்கப்படுகின்றன.

சுற்றுச்சூழல் மாசுபாடு என்பது எவ்வித பாகுபாடுமின்றி அனைவரையும் பாதிக்கிறது என்பது உண்மையென்றாலும், அது குழந்தைகளையே அதிகளவில் தாக்குவது இந்த தரவுகளின் மூலம் நிறுவுறப்பட்டுள்ளது. இந்நிலையில், பிறந்த குழந்தையை மட்டுமல்லாது, தாயின் கருவிற்குள்ளிருக்கும் குழந்தையை கூட மாசுபாடு எப்படி பாதிக்கிறது என்ற கேள்வி எழுகிறது.

என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும்?

மாசுபாட்டின் தாக்கம் என்பது பிறந்த குழந்தைகளுக்கும், ஒன்று முதல் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் இடையே வேறுபட்ட விளைவுகளை உண்டாக்குவதாக மருத்துவர்கள் நம்புகின்றனர். பிறந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக இருப்பதால் மாசுபாட்டின் காரணமாக ஏற்படும் நோய்களை எதிர்க்க முடியவதில்லை.

புது டெல்லியிலுள்ள தனியார் மருத்துவமனையை சேர்ந்த நுரையீரல் சிறப்பு மருத்துவரான சப்ராவிடம் இதுகுறித்து கேட்டபோது, "பிறந்த குழந்தைகளுக்கு நோயெதிர்ப்புத் திறன் குறைவாக இருக்கும். அதுமட்டுமின்றி, வளர்ச்சியடையாத நிலையிலிருக்கும் குழந்தைகளின் நுரையீரலில் எளிதாக மாசு துகள்கள் நுழைந்து ஒவ்வாமை, இருமல், சளி, மூச்சு சார்ந்த பிரச்சனையை உருவாக்குகிறது. நாள்பட்ட நிலையில் மூச்சு பிரச்சனை தீவிரமாகி ஆஸ்துமாவாகிறது" என்று கூறுகிறார்.

கருவுக்குள் இருக்கும் குழந்தையை மாசுபாடு எப்படி பாதிக்கிறது?

பட மூலாதாரம், EPA

"வீட்டிற்கு வெளியே இருக்கும் மாசுபாடுகளை விட வீட்டிற்குள்ளே அல்லது வசிப்பிடத்தில் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடு பிறந்த குழந்தைகளுக்கு அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதாவது, வீடுகளில் சமைப்பது, ஏ.சி, வாசனை திரவியம், புகைப்பிடித்தல், ஊதுவத்தியின் மணம் போன்றவற்றின் காரணமாகவும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, சமைப்பதற்காக கிராமப் பகுதிகளில் பயன்படுத்தப்படும் விறகுகளிலிருந்து வெளிப்படும் புகை குழந்தைகளின் நுரையீரலில் மோசமான பிரச்சனையை உண்டாக்குகிறது."

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

வெளிப்பகுதியில் ஏற்படும் மாசுபாட்டின் காரணமாக உயிரிழப்பதை போன்றே, கடந்த 2016ஆம் ஆண்டு மட்டும் வீடு உள்ளிட்ட வசிப்பிடங்களில் ஏற்படும் மாசுபாட்டின் காரணமாக 66,890 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

அதற்கான காரணம் குறித்து சப்ராவிடம் கேட்டபோது, "பிறந்த குழந்தைகள் பெரும்பாலும் வீட்டிற்குள்ளேயேதான் இருக்கின்றன. அவை சிறிது நடக்க ஆரம்பித்ததும் தனது தாயுடன் சமையல் அறையில் அதிகளவிலான நேரத்தை கழிக்கின்றன. எனவே, வெளியிடங்களை விட மோசமான மாசுபாட்டில் சிக்கி குழந்தைகள் அதிகளவில் இறக்கின்றன" என்று அவர் கூறுகிறார்.

வளர்ந்த குழந்தைகள்

கருவுக்குள் இருக்கும் குழந்தையை மாசுபாடு எப்படி பாதிக்கிறது?

பட மூலாதாரம், Getty Images

குழந்தைகள் சிறிது வளர தொடங்கிய பிறகு, வீட்டிற்கு வெளியே சென்று விளையாட தொடங்குகிறார்கள். எனவே, அவர்களுக்கு மாசுபாட்டின் காரணமாக ஏற்படும் தாக்கம் குறித்து குழந்தைகள் நல மருத்துவர் தீரனிடம் கேட்டபோது, "மாசுபாடு மிகவும் அதிகளவில் இருக்கும் காலை நேரத்தில் குழந்தைகள் பள்ளிக்கு செல்கிறார்கள். எனவே, இவர்கள் வீடு உள்ளிட்ட வசிப்பிடங்களிலுள்ள மாசுபாட்டை விட வெளியிடங்களில் ஏற்படும் மாசுபாட்டினால் அதிகம் பாதிப்படைகிறார்கள். தற்காலத்தில் சிறு வயதிலேயே குழந்தைகள் கண்ணாடி அணியும் சூழ்நிலைக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்" என்று அவர் கூறுகிறார்.

"வளர்ந்த குழந்தைகளுக்கு பிறந்த குழந்தைகளை விட நோயெதிர்ப்புத் திறன் அதிகளவில் இருந்தாலும், மாசுபாடு வயது வித்தியாசமின்றி அனைவரையும் தாக்குகிறது. ஏற்கனவே, சுவாச பிரச்சனை கொண்ட குழந்தைகளுக்கு மாசுபாடு அதிதீவிர பிரச்சனைகளை உண்டாக்கும் வாய்ப்புள்ளது" என்று அவர் மேலும் கூறுகிறார்.

கருவிற்குள்ளிருக்கும் குழந்தையின் நிலை

தாயின் கருவிற்குள்ளிருக்கும் குழந்தை கூட சுற்றுச்சூழல் மாசுபாட்டின் காரணமாக பாதிக்கப்படுவதாக இந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

இதுகுறித்து டெல்லியிலுள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மகப்பேறு மருத்துவர் அனிதாவிடம் கேட்டபோது, இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, மாசுபாடு தாயின் கருவிலிருக்கும் குழந்தையையும் பாதிக்கும் என்பது உண்மையே என்கிறார்.

கருவுக்குள் இருக்கும் குழந்தையை மாசுபாடு எப்படி பாதிக்கிறது?

பட மூலாதாரம், Getty Images

"காற்று மாசுபாட்டின் காரணமாக கரு உருவான உடனோ அல்லது முதல் மாதத்திலோ தாயின் கருவிற்குள் இருக்கும் குழந்தை பெரும்பாலும் பாதிப்படைகிறது. கருவுற்றிருக்கும் பெண் மாசடைந்த காற்றை சுவாசிக்கும்போது அதிலுள்ள தீமை விளைவிக்கும் துகள்கள் அவரது உடலில் வந்து சேர்கிறது. அந்த துகள்கள் பெரும்பாலும் நுரையீரலில் சென்று தங்குகிறது அல்லது இரத்தத்தில் கலந்து நஞ்சுக்கொடியை சென்றடைகிறது. கருவிற்கு அருகிலிருக்கும் நஞ்சுக்கொடியின் மூலமே குழந்தைக்கு தேவையான சத்துகள் எடுத்துச்செல்லப்படுகிறது."

"அசாதாரணமான மாசுக்கள் நஞ்சுக்கொடியை அடைந்து, அங்கு வீக்கம் ஏற்படுவதால் அந்த பகுதியில் வெள்ளை இரத்த அணுக்கள் வளருவதால் அதன் வழியே குழந்தையின் வளர்ச்சிக்கு எடுத்துச்செல்லப்படும் இரத்தத்தின் பாதையில் தடை ஏற்படுகிறது."

"அந்த இரத்தத்தில்தான் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான சத்துகள் எடுத்துச்செல்லப்படும் என்பதால் குழந்தையின் வளர்ச்சிக்கும் தடை ஏற்படுகிறது. இறுதியில் அந்த குழந்தை உடல்ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ பாதிப்படைந்த ஒன்றாக பிறக்கிறது. சரியான அளவில் இரத்தம் நஞ்சுக்கொடியை அடையவில்லை என்றால் குழந்தை விரைவில் முதிர்ச்சியடைந்து, முன்கூட்டியே பிறக்கும் சம்பவங்களும் நடக்கிறது" என்று அவர் மேலும் கூறுகிறார்.

குழந்தைகள் இறக்கும் அனைத்து சம்பவங்களுக்கும் மாசுபாடே காரணமென்று கூறமுடியாதென்றும், கருவுற்ற பெண்ணிற்கு ஊட்டச்சத்து குறைபாடு இருந்தாலோ அல்லது வேறு ஏதாவது பிரச்சனைகள் இருந்தாலோ கூட அது கருவை பாதிக்கும் என்று அவர் விளக்குகிறார்.

கருவுக்குள் இருக்கும் குழந்தையை மாசுபாடு எப்படி பாதிக்கிறது?

பட மூலாதாரம், Getty Images

தற்காப்பு வழிமுறைகள்

  • கருவுற்ற பெண்ணை மாசுபட்ட காற்றை சுவாசிப்பதிலிருந்து தடுப்பதின் மூலம் குழந்தையை பாதுகாக்க முடியும்.
  • வீடுகளில் ஏற்படக்கூடிய மாசுபாட்டை தவிருங்கள்.
  • பிறந்த குழந்தைக்கு தாய் பாலூட்டுங்கள். இது நோயெதிர்ப்புத் திறனை அதிகரிக்கும்.வைட்டமின்-சி நிறைந்த ஆரஞ்சு, கொய்யா, எலுமிச்சை போன்றவற்றை கொடுத்து குழந்தைகளின் நோய் எதிர்ப்பு அமைப்பின் பலத்தை அதிகரிக்கலாம்.
  • தீபாவளியன்று பாட்டாசு புகையை சுவாசிப்பதையும், விளக்கு, ஊதுவத்தி புகையை சுவாசிப்பதையும் தவிருங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: