இலங்கை நாடாளுமன்றத்தை முன்னதாகவே கூட்டினார் அதிபர் மைத்திரிபால சிறிசேன

பட மூலாதாரம், KIRILL KUDRYAVTSEV
இலங்கை நாடாளுமன்றம் நவம்பர் 14ஆம் தேதி கூடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருக்கிறார். இதற்கான அரச வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 26ஆம் தேதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை பதவிநீக்கம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நியமித்தார். இதற்கு அடுத்த நாள், அக்டோபர் 27ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, நவம்பர் 16ஆம் தேதிவரை நாடாளுமன்றத்தை முடக்கிவைப்பதாகவும் அறிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டி மஹிந்த தனது அரசு மீதான நம்பிக்கையை நிரூபிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிவந்தன. ஆங்காங்கே இது தொடர்பான போராட்டங்களும் நடந்துவந்தன.
இந்த நிலையில் நாடாளுமன்றம் மீண்டும் நவம்பர் 5ஆம் தேதி கூட்டப்படலாம் என்ற பேச்சுகள் அடிப்பட்டன. அதற்குப் பிறகு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பேசிய சபாநாயகர் கரு ஜெயசூர்ய பாராளுமன்றம் நவம்பர் 7ஆம் தேதியன்று கூட்டப்படலாம் எனத் தெரிவித்தார். ஆனால், இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
இதையடுத்து மஹிந்த, தனக்குத் தேவையான பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்டும் பொருட்டே நாடாளுமன்றம் கூட்டப்படுவது தள்ளிப்போவதாக ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவந்தன.
இந்த நிலையில்தான், நாடாளுமன்றம் நவம்பர் 14ஆம் தேதி காலை பத்து மணிக்கு கூட்டப்படுமென்ற அறிவிப்பை ஜனாதிபதி ஞாயிற்றுக்கிழமையன்று இரவில் வெளியிட்டார். முந்தைய அறிவிப்பின்படி நவம்பர் 16ஆம் தேதிவரை நாடாளுமன்றம் முடக்கப்பட்டிருந்தது. இப்போதைய அறிவிப்பின் மூலம், இரு நாட்கள் முன்னதாக கூட்டப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












