You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சப்பை மூக்கு குரங்கு படத்துக்கு வனஉயிர் புகைப்பட விருது
ஒரு சப்பை மூக்கு குரங்கும், அதன் குட்டியும் எதையோ வெறித்து பார்த்துக் கொண்டிருக்கின்றன. எதை என்று தெரியவில்லை. கண்ணெதிரே அழிக்கப்படும் கானகம் குறித்த கவலையாக இருக்கலாம், நகர மயமாக்கலால் தம் நிலம் அபகரிக்கப்படுவது குறித்த சிந்தனையாக இருக்கலாம் என பல யோசனைகள் நமக்கு வரலாம்.
ஆனால் அந்த புகைப்படத்தை எடுத்த புகைப்படக் கலைஞர் மார்சல் வான் ஓஸ்டன், தம் குழுக்கள் இடையே நடக்கும் சண்டையை அந்த குரங்கு பார்ப்பதாக கூறுகிறார்.
அந்த குரங்குகளின் புகைப்படத்திற்குத்தான் இந்த ஆண்டுக்கான சிறந்த காட்டுயிர் புகைப்படத்திற்கான விருது கிடைத்துள்ளது.
லண்டன் நேச்சுரல் ஹிஸ்டரி மியூஸியத்தில் நடந்த நிகழ்வொன்றில் இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.
சீனாவின் சின்லிங் மலைப் பகுதியில் இந்த புகைப்படத்தை மார்சல் எடுத்திருக்கிறார்.
இந்த வகை குரங்குகளின் பழக்க வழக்கங்களை புரிந்துகொள்வதற்காக பல நாட்கள் அவற்றை பின் தொடர்ந்திருக்கிறார்.
அந்த சப்பை மூக்கு குரங்கின் முடியையும், அதன் நீலநிற முகத்தையும் ஒரே படத்தில் கொண்டுவர மெனகெட்டிருக்கிறார்.
பிபிசியிடம் பேசிய மார்சல், "இந்த விருதைப் பெறுவது ஒரு சமயத்தில் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது." என்கிறார்.
இந்த வகை குரங்கள் மட்டுமல்ல, பல உயிரினங்கள் அழிவின் விளிம்பில் இருப்பதாகவும் கூறுகிறார்.
விருது பெற்ற அந்த புகைப்படத்தைதான் மேலே பகிர்ந்திருக்கிறோம்.
இந்த போட்டியில் ஜூனியர்களுக்கான பிரிவில் விருதை பெறுபவர் பதினாறு வயதான ஸ்கை மேக்கர்.
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த மேக்கர், போட்ஸ்வானா சரணாலயத்தில் எடுத்த ஒற்றைக்கால் சிறுத்தை புகைப்படத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
"நான் இந்தப் புகைப்படத்திற்காக பல மணிநேரம் காத்திருந்தேன். சிறுத்தையின் விழிகள் திறக்க வேண்டும், மூடிய விழிகளுடன் படம் எடுக்கக் கூடாது என காத்திருந்தேன். சில நிமிடங்கள் மட்டுமே அதன் விழிகள் திறந்தன. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் இது" என்கிறார் அவர்.
பத்து வயதிற்கும் கீழுள்ள சிறுவர்களுக்கான பிரிவில் அர்ஷ்தீப் சிங்கிற்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது. பஞ்சாப் கபூர்தலா பகுதியில் அவர் எடுத்த ஆந்தை புகைப்படத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.
அதன் சூழலில் விலங்குகள் பிரிவில் கிரிஸ்டோபல் செர்ரானோ விருது பெறுகிறார். ஸ்பெயினை சேர்ந்த கிரிஸ்டோபல், அன்டார்டிகா தீபகற்பத்தில், மீன்கள் பனிக்கட்டி மேல் ஒய்வெடுக்கும் புகைப்படத்தை எடுத்ததற்காக இந்த விருதை பெறுகிறார்.
மேலும் பல்வேறு பிரிவுகளில் விருது பெற்ற புகைப்படங்களை இங்கே பகிர்கிறோம்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்