சென்னையில் தொடரும் கொலைகள்; இன்றும் ஒரு கொலை
கடந்த சில நாட்களாக சென்னையில் பட்டப்பகலில் ஆட்கள் கொல்லப்படும் சம்பவம் அதிகரித்துள்ள நிலையில், இன்று அதிகாலையில் தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரியும் இளம் பெண் ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார்.

பட மூலாதாரம், AFP
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த ஸ்வாதி என்ற 24 வயதுப் பெண் சென்னையை அடுத்து உள்ள பரனூரில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவந்தார்.
இன்று காலையில் பணிக்குச் செல்வதற்காக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு அவர் வந்த நிலையில், ஒருவர் அவரை அணுகி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, ஸ்வாதியை வெட்டிக் கொன்றார். இது தொடர்பான விசாரணைகளில் காவல்துறை தற்போது ஈடுபட்டுள்ளது.
கடந்த சில நாட்களில் சென்னையில் பட்டப்பகலில் நடக்கும் கொலைகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளன.
கடந்த ஜூன் 5ஆம் தேதியன்று, வழக்கறிஞர் முருகன் என்பவர் பகல் நேரத்தில் கோடம்பாக்கத்தில் வெட்டிக்கொல்லப்பட்டார்.
ஜூன் 16ஆம் தேதியன்று வழக்கறிஞர் அகில்நாத் என்பவர் நடுரோட்டில் வெட்டிக்கொல்லப்பட்டார்.
இந்த இரண்டு கொலைகளிலும் கூலிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரவி என்பவர் ஜூன் 22ஆம் தேதியன்று காலை பத்தரை மணியளவில் நடுரோட்டில் வெட்டிக்கொன்றனர். இந்தக் கொலையை அவரது நண்பர்களே செய்ததாக சிலரை காவல்துறை கைதுசெய்துள்ளது.
ஜூன் 7ஆம் தேதியன்று பரஸ்மல் ஜவன்ராஜ் என்பவர் சென்னை பெரியமேட்டில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது வெட்டிக்கொல்லப்பட்டார்.
மே 30ஆம் தேதியன்று எழும்பூரில் வசித்துவந்த புற்றுநோய் நிபுணரான டாக்டர் ரோகிணி என்பவர் கை-கால்கள் கட்டிப்போடப்பட்டு கொல்லப்பட்டார்.
மே 2ஆம் தேதியன்று சவுகார்பேட்டையைச் சேர்ந்த பாபுசிங் என்பவர் பகலில் சுட்டுக்கொல்லப்பட்டார்.












