ஓரினச் சேர்க்கை : கூடுதல் நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும்
ஓரினச்சேர்க்கை என்பது சட்டப்படி குற்றம் என கூறி வெளியிட்டிருந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனு மீதான விசாரணையை, கூடுதல் நீதிபதிகளை உள்ளடக்கிய அமர்வு விசாரிக்கும் என இந்திய உச்சநீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை அறிவித்துள்ளது.

பட மூலாதாரம், AFP
ஒருபால் உறவினர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பவர்களால் தொடுக்கப்பட்ட இந்த வழக்கு மீதான விசாரணை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் மற்றும் நீதிபதிகள் ஏ.ஆர்.தாவே மற்றும் ஜே.எஸ்.கேகர் ஆகியோரை உள்ளடக்கிய அமர்வு முன்பாக நடைபெற்றது.
அப்போது சட்டத்தில் உள்ள பிரிவு 377ஐ நீக்க வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட அமர்வு, இது தொடர்பான விசாரணையை மேற்கொள்ள, ஐந்து நீதிபதிகளை கொண்ட அமர்வு ஏற்படுத்தப்படும் என்றும் கூறியது.
இந்தியாவில் செயல்பட்டு வரும் அரசு சாரா அமைப்பான நாஸ் பவுண்டேஷன் அறக்கட்டளை உள்ளிட்ட பிற தன்னார்வலர்கள் தொடுத்திருந்த மனுவில் தான் இந்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டில், ஒருபால் உறவினர்களுக்கு ஆதரவான தீர்ப்பு ஒன்றை நீதிமன்றம் வெளியிட்டிருந்தது. இதனால் நாட்டில் பல்வேறு விவாதங்களும் உண்டாகின. தொடர்ந்து உச்சநீதிமன்றம் கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்ட இது தொடர்பான தீர்ப்பில் ஓரினச்சேர்க்கையில் ஈடுப்படுவது சட்டப்படி குற்றம் என கூறியது.
இதைத் தொடர்ந்தே இந்த மறு சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.








