பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்யக்கோரி முதல்வரிடம் மனு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 கைதிகளை விடுவிக்க வேண்டுமென பேரறிவாளனின் தாயார் அற்புதத்தம்மாள் தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு ஒன்றை அளித்துள்ளார்.

இந்த வழக்கில் சிறையில் இருக்கும் ஏழு கைதிகளின் நன்னடத்தை, உடல்நிலை ஆகியவற்றை மனதில் கொண்டு இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டுமென அற்புதமம்மாள் கோரியிருக்கிறார்.
இந்த வழக்கை விசாரித்த அதிகாரி தியாகராஜன், விசாரித்த நீதிபதி ஆகியோர் தெரிவித்த கருத்துக்களை மனதில் கொண்டு அரசியலமைப்புச்சட்டத்தின் 161வது பிரிவின்படி இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென ஊடகங்களிடம் பேசிய அற்புதமம்மாள் தெரிவித்தார்.
ஆனால், இம்மாதிரியான மனுக்களை சிறையின் காவல்துறை கண்காணிப்பாளர் மூலமாகவே அனுப்புவது சிறந்தது என்கிறார் மூத்த வழக்கறிஞரான ராதாகிருஷ்ணன். அப்போதுதான், அரசு மனுக்களை பரிசீலிக்க மறுத்தால் வழக்குத் தொடர முடியுமென அவர் கூறினார்.
கடந்த 30ஆம் தேதி இதே போன்ற மனுவை பேரறிவாளன் தனது வழக்கறிஞர்கள் மூலம் ஆளுனருக்கு அனுப்பியிருந்தார்.








