மதிமுகவை வீழ்த்த திமுக திட்டம்- வைகோ குற்றச்சாட்டு
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தங்கள் கூட்டணியில் சேர்க்க முயல்வது; அது பலிக்காவிட்டால், அந்தக் கட்சியின் நிர்வாகிகளுக்கு பதவி உள்ளிட்ட பல்வேறு ஆசை வார்த்தைகளைக் கூறி ம.தி.மு.க.வை வீழ்த்துவது எனத் திட்டமிட்டு தி.மு.க. செயல்படுவதாக ம.தி.மு.க. பொதுச் செயலளார் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

கட்சியில் பெருபாலானோரின் கருத்துப்படியே தி.மு.க. - அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி தேவையில்லை என முடிவெடுத்ததாகவும் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
1996 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, ம.தி.மு.கவுக்கு மூடுவிழா என தி.மு.க ஏற்பாட்டில் செய்தி வெளியிடப்பட்டதாகவும் 2006ஆம் ஆண்டில் ம.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டு பேருக்கு பதவி ஆசை காட்டி, தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டதாகவும், போட்டி பொதுக் குழுவுக்கு ஏற்பாடு செய்ததாகவும் தி.மு.க. மீது வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
தங்களுடைய மக்கள் நலக் கூட்டமைப்பிற்கு பெரும் வரவேற்புக் கிடைத்திருப்பதாலேயே, ம.தி.மு.கவை சிதைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தி.மு.க. தன் அனைத்து சக்தியையும் பயன்படுத்துவதாக வைகோ குற்றம்சாட்டியிருக்கிறார்.
ம.தி.மு.கவின் திருநெல்வேலி மாவட்டச் செயலாளர்கள் இருவர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர்கள் என நான்கு மாவட்டச் செயலாளர்கள் உள்பட ம.தி.மு.கவைச் சேர்ந்த பலர் தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். இதையடுத்தே இந்தக் குற்றச்சாட்டை வைகோ சுமத்தியுள்ளார்.








