ஆர்.கே. நகர் இடைத் தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் செய்தார் ஜெயலலிதா
சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமையன்று பிற்பகல் வேட்புமனு தாக்கல் செய்தார்.

பட மூலாதாரம், BBC World Service
தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சவுரிராஜனிடம் அவர் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
சுமார் ஒன்றரை மணியளவில் ஜெயலலிதா தனது போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து வேட்புமனுத் தாக்கல்செய்யப் புறப்பட்டபோது, அவரது தோழி சசிகலாவும் உடன்வந்தார்.
ஜெயலலிதா தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தபோது, அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
ஜெயலலிதா வேட்புமனுத் தாக்கல் செய்ய வருவதையொட்டி, அவர் வரும் வழியெங்கும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நின்றிருந்தனர்.
ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி துவங்கும், ராயபுரம் பகுதியிலிருந்தே மேள தாளங்களுடன் அ.தி.மு.க. தொண்டர்கள் ஜெயலலிதாவை வரவேற்றனர்.
இதன் காரணமாகப் பல இடங்களில் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது. பாரி முனை பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வேட்புமனுத் தாக்கல் துவங்கிய மூன்றாவது நாளான இன்று ஜெயலலிதாவுடன் சேர்ந்து 10 பேர் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல்செய்தனர். ஏற்கனவே ஐந்து பேர் வேட்புமனுக்களைத் தாக்கல்செய்துள்ளனர்.
வேட்புமனுக்களை 10-ம் தேதி வரை தாக்கல் செய்யலாம். மனுக்களை வாபஸ் பெற 13-ம் தேதி கடைசி நாளாகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
திமுக, பாமக, மதிமுக, தமாகா, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளன. இடது சாரிகள் சார்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறது.
இந்தத் தொகுதிக்கு ஜூன் 27ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.












