மலேசிய விமானத்தைத் தேடும் இந்தியக் கடற்படை

மலேசிய விமானத்தை தேடும் இந்தியக் கடற்படை
படக்குறிப்பு, மலேசிய விமானத்தை தேடும் இந்தியக் கடற்படை

காணாமல்போன மலேசிய விமானமான MH 370 த்தை தேடும் பணியில் இந்தியக் கடற்படையின் 4 கப்பல்கள் ஈடுபட்டுவருவதாக இன்று வெளியிடப்பட்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல்கள் ஐ.என்.எஸ் சத்புரா, ஐ.என்.எஸ் சஹ்யத்ரி, ஐ.என்.எஸ் சர்யு மற்றும் ஐ.என்.எஸ் பட்டி மால்வ் ஆகியவை வங்காளப் பெருங்கடல், அந்தமான் கடற்பகுதி மற்றும் அந்தமான் தீவுகளின் மேற்கு பகுதிகளிலும் தேடுதலில் ஈடுப்பட்டுவருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்பரப்பில் நடைபெறும் இந்தத் தேடுதலுடன் ஒருங்கிணைத்து வானிலும் தேடல்கள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி 88 விமானம், இந்திய விமான படையின் சி130ஜே விமானம் மற்றும் ஒரு டோர்னியர் விமானம் ஆகியவை இந்த தேடல்களில் தீவிரமாக ஈடுபட்டுவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானங்களுடன் சேர்த்து ஒரு பி 81 விமானமும் ஒரு சி130ஜே விமானமும் தேடுதலுக்காக மலேசியாவில் பயன்படுத்தப்படுகிறது.

இன்று நண்பகலிலிருந்து இந்த விமானங்கள் சர்வதேச தேடல் படையுடன் சேர்ந்து செயல்ப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புது தில்லியில் உள்ள மலேசியாவின் கடல் சார்ந்த செயல்பாடுகள் மையம் மூலம் மலேசிய அரச கடற்படை மற்றும் விமானப்படையுடன் ஒருங்கிணைந்து இந்த விமான தேடுதல் பணியில் இந்தியா ஈடுபட்டுவருவதாகவும் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.