'பிபிசி லாட்டரி'யில் பெருந்தொகையான பரிசு: ஏமாந்தார் இந்தியர்

இந்தியாவில் ஒருவர் ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பயணித்து தில்லியிலுள்ள பிபிசி அலுவலகம் வந்திருந்த நோக்கம் வழமைக்கு மாறானது.
'பிபிசி லாட்டரி'யில் தனக்கு பரிசு விழுந்திருப்பதாக நம்பிக்கொண்டு அந்தப் பரிசுத் தொகையை வாங்குவதற்காக அவர் இத்தனை தூரம் வந்திருந்தார்.
ரத்தன் குமார் மல்பிசோய் என்ற இந்த 41 வயது கிராமவாசிக்கு அவருடைய கைத்தொலைபேசியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வந்த ஒரு குறுந்தகவல் விரித்த வலையில்தான் அவர் விழுந்து விட்டார்.
பிபிசியின் தேசிய லாட்டரியில் தனக்கு இரண்டு அல்லது மூன்று கோடி ரூபாய் பரிசு விழுந்திருப்பதாகவும், தனது விவரங்களை தந்தால் பரிசுத்தொகை அனுப்பிவைக்கப்படும் என்றும் அந்த தகவல் கூறியதாகவும் ரத்தன் குமார் சொன்னார்.
அதிகம் படிக்காதவரும் வேலையில்லாமல் திண்டாடும் ஏழையுமான அவர், தான் ஏமாற்றப்படுகிறோம் என்பதையோ தன்னுடைய விவரங்கள் திருட்டுத்தனமாக பெறப்படுகின்றன என்பதையோ உணர்ந்திருக்கவில்லை.
ரத்தன் குமாருக்கு தகவல் வந்த நேரம் பிபிசி ஊழியர்கள் பலருக்கும், ஏன் தமிழோசைக்குமேகூட இவ்விதமாக ஏமாற்றும் குறுந்தகவல் வந்திருந்தது.
எமது நேயர்நேரம் நிகழ்ச்சியில்கூட இப்படியான மோசடிகளால் ஏமாந்துவிட வேண்டாமென நேயர்களுக்கு அறிவுறுத்தியிருந்தோம்.
ஆனால் ரத்தன் குமாரோ, குறுந்தகவல் அனுப்பியவர்களைத் தொடர்புகொண்டு, அவர்களுக்கு தன்னுடைய வங்கிக் கணக்கு விவரங்களையும் அனுப்பியுள்ளார்.
அவர்கள் மோசடியாளர்கள் என்பதை உணராமலேயே கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு காலம் அவர்களுடன் பேசி பரிசுத்தொகையை அனுப்பச்சொல்லி மன்றாடியும் வந்துள்ளார்.
பிபிசியின் "சான்செல்லர்" என்று சொல்லிக்கொண்டு ஒருவர் என்னிடம் பேசுவார். பெருந்தொகையான பரிசு எனக்காக காத்திருக்கிறது என்று என்னிடம் சொல்வார். ஆனால் இந்திய ரிசர்வ் வங்கியில் கணக்கு திறந்து பணத்தை போடுவதற்காக நான் முதலில் 12 ஆயிரம் ரூபாய் பணம் கட்ட வேண்டும் என்று சொல்வார். ஆனால் நான் மிகவும் ஏழை என்றும் என்னிடம் அவ்வள்ளவு பணம் இல்லை என்று நான் கூறி வந்தேன்" என்றார் ரத்தன் குமார்.
தில்லி பயணம்
ஒரு கட்டத்தில் ரத்தன் குமார் பெயருக்கு ஒரு காசோலை அனுப்யுள்ளதாக தொலைபேசியில் பேசிவந்தவர் கூறவே, அந்தக் காசோலையைப் பெற்றுக்கொள்வதற்காகத்தான் ஒரிஸ்ஸாவின் கிழக்குப் பகுதியில் உள்ள தனது கிராமத்திலிருந்து 1700 கிலோமீட்டர்கள் பயணித்து அண்மையில் ரத்தன் குமார் பிபிசியின் தில்லி அலுவலகம் வந்திருந்தார்.
இந்தப் பயணத்துக்காக அவர் தனது நண்பர்களிடம் இருந்து கடன் வாங்கியிருந்தார்.
கடுமையான குளிரில் இரவை ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கழித்திருந்தார்.
ஆனால் ஏமாற்றப்பட்ட ரத்தன் குமார் கடைசியில் வெறுங்கையுடன் ஊர் திரும்ப வேண்டியிருந்தது.
நைஜீரியன் 419 மோசடி
மின்-அஞ்சல்கள், குறுந்தகவல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலம் வெளிநாட்டிலிருந்து பெரிய பரிசு விழுந்திருப்பதாகக் கூறி ஏமாற்றும் மோசடி நைஜீரியன் 419 மோசடி என்று அழைக்கப்படுகிறது.
நைஜீரியாவில் இவ்வகையான மோசடி அந்த எண் கொண்ட சட்டப் பிரிவின் கீழ் வருவதால் அதற்கு அந்தப் பெயர்.
பிபிசி, கொக்கொகோலா போன்ற முன்னணி சர்வதேச நிறுவனங்களின் பெயர்களை வைத்து இப்படியான மோசடிகள் நடத்தப்படுகின்றன.
பெரிய பரிசுத்தொகை அனுப்ப வேண்டும், அதற்கு சிறப்பு வங்கிக் கணக்கு ஆரம்பிக்க வேண்டும், அதற்காக ஒரு தொகையை அனுப்பிவைக்க வேண்டும் என ஏமாற்றுக்க்கார்கள் கோருவது வழக்கம்.












