உத்தர பிரதேசம்: அக்கா தங்கைகள் நான்கு பேர் மீது அமில வீச்சு

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் அக்கா தங்கைகளான பெண்கள் நான்கு பேர் மீது அமில வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
மூன்று ஆசிரியைகளும் மாணவி ஒருவருமாக இந்த நான்கு சகோதரிகளும் பள்ளிக்கூடத்திலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் அவர்கள் மீது அமிலம் வீசியிருப்பதாகத் தெரிகிறது.
உத்தர பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் ஷம்லி மாவட்டத்தில் காண்ட்லா என்ற ஊரில் இச்சம்பவம் நடந்துள்ளது.
இதில் மோசமான காயம் ஏற்பட்ட பெண்ணொருவருக்கு தில்லியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. காயமடைந்த இன்னொரு பெண் உள்ளூர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற இரண்டு பெண்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இத்தாக்குதலுக்கான காரணம் இன்னும் தெளிவாகவில்லை. தாக்குதல் தொடர்பில் பொலிசார் இதுவரை எவரையும் கைதுசெய்யவும் இல்லை.
அதிகரிக்கும் அமில வீச்சு
தெற்காசிய நாடுகளில் பெண்கள் மீது அமிலத் வீச்சுத் தாக்குதல் நடக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
காதலனையோ, கணவனையோ அல்லது முதலாளியையோ நிராகரிக்கும் பெண்கள் மீது கடைகளில் குறைந்த விலையில் கிடைத்துவருகின்ற ரசாயனங்களைக் கொண்டு இவ்வாறான தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என்று ஆர்வலர்கள் நொந்துகொள்கின்றனர்.
இவ்வாறான அமிலங்கள் கடைகளில் விற்கப்படுவதில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட வேண்டும் என அவர்கள் வாதிடுகின்றனர்.
பெண்களைப் பாதுகாக்க புதிய சட்டம்
பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பில் கடுமையான சட்டம் ஒன்று நாட்டில் அறிமுகமாகியுள்ள ஒரு நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
பெண்களை பாலியல் வன்புணர்ச்சி செய்வோருக்கு மரண தண்டனை, அமிலவீச்சுத் தாக்குதல் நடத்துவோருக்கு பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் இச்சட்டத்தில் அடங்கியுள்ளன.
கடந்த டிசம்பரில் தில்லியில் பேருந்தில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டு தாக்கப்பட்ட யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நாட்டில் பெரும் உணர்வலைகள் எழுந்ததை அடுத்து இந்திய அரசு இந்த புதிய சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.












