அசாமில் குழந்தை திருமணத்துக்கு எதிரான நடவடிக்கையால் பீதியில் மக்கள் - களச் செய்தி

பட மூலாதாரம், Debalin Roy/BBC
- எழுதியவர், ராகவேந்திர ராவ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
"என் மகன் தினக்கூலியாக வேலை செய்து ஒரு நாளைக்கு 300 ரூபாய் சம்பாதிக்கிறான். என் கணவர் கை வண்டி ஓட்டுகிறார். சில சமயம் வருமானம் கிடைக்கும் சில சமயம் கிடைக்காது. இப்போது மகனே சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் போது, வழக்கை நடத்த எங்கிருந்து பணத்திற்கு ஏற்பாடு செய்வது? அரசு ஏன் இப்படி செய்தது என்று தெரியவில்லை. இதற்கு பதில் எங்களை கொன்றிருக்கலாம்."
இதைச் சொல்லும் போது 70 வயதான பரிஜன் பேகத்தின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
குவஹாத்தியில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முகல்முவாவில் வசிக்கும் பரிஜன் பேகத்தின் மகன் மொய்னுல் அலி, மைனர் பெண்ணை திருமணம் செய்த குற்றத்திற்காக அசாம் காவல்துறையினரால் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.
புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
ஆனால் போலீசார் தானாக முன்வந்து நடவடிக்கை எடுத்து பின்னர் கிராம தலைவர்களின் பெயர்களை புகார்தாரர்களாக எழுதிவிட்டதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.
பொருளாதாரத்தில் நலிவடைந்த கிராமப்புறங்களில் பல குடும்பங்களில் குழந்தைத்திருமணங்கள் நடக்கும் போது, யார் யார் மீது புகார் கூறுவார்கள் என்பதும் நினைத்துப்பார்க்க வேண்டிய விஷயம்.
குழந்தை திருமணத்தை நடத்துபவர்கள் அல்லது அதை செய்து கொள்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்ற அசாம் அரசின் இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குழந்தை திருமணத்திற்கு எதிரான நடவடிக்கை
இந்த சம்பவம் ஜனவரி 23 அன்று தொடங்கியது. அசாம் மாநிலத்தில் தாய் மற்றும் குழந்தை இறப்பு விகிதம் அதிகரிப்பதற்கு குழந்தை திருமணமே மிகப்பெரிய காரணம் என்று மாநில அரசு கூறியது.
அசாமில் சட்டபூர்வ திருமண வயதான 18 வயதுக்கு முன் திருமணம் செய்துகொள்ளும் பெண்களின் எண்ணிக்கை சுமார் 32 சதவிகிதம் என்றும் தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் தரவுகளை மேற்கோள்காட்டி அரசு கூறியது.

பட மூலாதாரம், Getty Images
மாநிலத்தில் சுமார் 12 சதவிகித பெண்கள் வயது முதிர்வை அடைவதற்கு முன்பே கர்ப்பமாகின்றனர். இந்த இரண்டு புள்ளிவிவரங்களும் தேசிய சராசரியை விட அதிகம்.
மாநில அரசு அனுமதி வழங்கியவுடன் அசாம் போலீசார், குழந்தை திருமணங்களில் ஈடுபட்டதாகவோ அல்லது நடத்துவதாகவோ குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்யத் தொடங்கினர்.
ஒரு சில நாட்களில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சுமார் 2800 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் பெண்களும் அடங்குவர். மாநில சிறைகளில் ஏற்கனவே கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால், கைது செய்யப்பட்டவர்கள் பல இடங்களில் தற்காலிக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்குகள் குழந்தை திருமணத் தடுப்புச் சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் அதாவது போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? முள்ளிவாய்க்கால் போரில் அவருடன் களத்தில் இருந்த போராளி பேட்டி
- ஏர் இந்தியா - ஏர்பஸ், போயிங் நிறுவனங்களிடமிருந்து 470 விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தால் மீண்டெழுமா?
- இலங்கை தேசிய கபடி அணி தலைவராக முஸ்லிம் வீரர் - வரலாற்றில் முதல் முறை
- பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை ஆய்வு: முதல்வர்கள் ஸ்டாலின், பினராயி, மம்தா கண்டனம்
நள்ளிரவில் கதவைத்தட்டிய போலீசார்
அந்த இரவை நினைத்து பரிஜான் பேகம் இப்போதும் பயப்படுகிறார்.
"இரவு 12 மணிக்கு போலீஸ் வந்தது, நாங்கள் தூங்கிக் கொண்டிருந்தோம்., போலீசார் எங்களை எழுப்பத் தொடங்கினர். போலீசாரைக்கண்டு நான் பயந்துபோனேன். அவர்கள் கதவைத் தட்டத் தொடங்கினர். தாழ்பாளை உடைத்து என்னை இழுத்துச் சென்றனர்."
"இரண்டு பகலும் இரண்டு இரவும் போலீசார் என்னை ஸ்டேஷனில் வைத்திருந்தனர். நான் அழுது கொண்டே இருந்தேன். உன் மகனை கூப்பிடு. இல்லையென்றால் உன்னை விட மாட்டோம் என்று சொன்னார்கள். நான் ஜெயிலுக்கு செல்ல தயார் என்றேன்."
இரண்டு நாட்களுக்குப் பிறகு மொய்னுல் போலீசார் முன் ஆஜரானபோது, பரிஜான் பேகம் விடுவிக்கப்பட்டார். குழந்தை திருமணம் செய்த குற்றச்சாட்டின் பேரில் மொய்னுல் கைது செய்யப்பட்டார்.
பரிஜான் பேகத்தின் வீட்டிற்கு சிறிது தொலைவில் 70 வயதான சம்போர் அலி வசிக்கிறார், சிறையில் இருந்து தன் மகன் ரஃபீக் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையை அவர் இழந்துவிட்டார்.
"எனக்கு என் மகன் வேண்டும். அவன் இல்லாமல் வீடு நடக்காது. எங்களுக்கு பண பலம் இல்லை, எனவே மகனை விடுவிப்பது மிகவும் சிரமம்," என்று அவர் கூறினார்.
"இது எல்லாம் பணத்தின் விளையாட்டு.. என் மகனை அழைத்துச் சென்ற அன்று போலீஸ் மேலும் பலரையும் கைது செய்திருக்கிறது என்று தெரிந்து கொண்டேன்.. நான் என்ன செய்ய முடியும்? எல்லாம் விதிப்படிதான் நடக்கும். மகன் திரும்பி வருவானா இல்லையா என்று என்னால் சொல்லமுடியாது. என்னால் எங்கும் போய்வர முடியாது."

பட மூலாதாரம், Debalin Roy/BBC
சம்போர் அலி நோய்வாய்ப்பட்டுள்ளார். இரவு நேரத்தில் அவரது வீட்டிற்கு போலீசார் வந்தபோது, சத்தம் கேட்டு எழுந்து வருவதற்குள், அவரது மகனை போலீசார் அழைத்துச் சென்றுவிட்டனர்.
'அரசு அநியாயம் செய்கிறது'
ரஃபீக்கின் சம்பாத்தியத்தில்தான் வீடு நடந்து கொண்டிருந்தது. ரஃபீக் கைது செய்யப்பட்ட பிறகு வீடு சின்னாபின்னமாகிவிட்து என்று ரஃபீக்கின் அண்ணி அஞ்சும் கூறினார்.
"ரஃபீக்கிற்கு 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. மாமனாருக்கு உடல்நிலை சரியில்லை. மனைவி கர்ப்பமாக உள்ளார்... வீடு எப்படி நடக்கும்? அரசு செய்திருப்பது நல்ல காரியமா என்ன? அரசு குழந்தை திருமண தடுப்புச்சட்டத்தை இயற்றியுள்ளது, இத்தனை வருடங்களாக அது என்ன செய்துகொண்டிருந்தது?"
"அரசு தூங்கிகிட்டு இருந்ததா? எந்த நோட்டீஸும் கொடுக்காமல் ஒருவரை எப்படி வீட்டில் இருந்து அழைத்துச் செல்ல முடியும். நாங்கள் எந்த அநீதியும் செய்யவில்லை, அரசு அநியாயம் செய்கிறது."
"அரசு ஏன் இந்த நடவடிக்கையை எடுத்தது என்று எனக்குத் தெரியவில்லை" என்று அவர் கூறுகிறார்.
அசாமின் தொலைதூர கிராமங்களில் சோகமான சூழல் நிலவுகிறது. கல்வியறிவின்மை மற்றும் வறுமை நிலவும் இப்பகுதிகளில், தலைமுறை தலைமுறையாக நடந்து வரும் குழந்தை திருமணம் புதிய விஷயம் அல்ல.
இப்போது அசாம் அரசின் நடவடிக்கையின் கீழ் நூற்றுக்கணக்கான குடும்பங்களின் மகன்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தங்களின் தவறு என்ன, ஏன் இந்த திடீர் நடவடிக்கை என்பதை இவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
'இவர்கள் கொடிய குற்றவாளிகள் அல்ல'

பட மூலாதாரம், Debalin Roy/BBC
அசாம் அரசின் இந்த நடவடிக்கையால், மாநிலம் முழுவதும் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்தும் பல கேள்விகள் எழுந்துள்ளன.
"குழந்தை திருமணம் சட்டவிரோதமானது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. 2006 ஆம் ஆண்டின் குழந்தை திருமண தடுப்புச்சட்டத்தின் விதிகளின்படி, இது குற்றம். ஆனால் அரசு 2006 ஆம் ஆண்டிலிருந்து எதையும் செய்யவில்லை," என்று குவஹாத்தி உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் அங்ஷுமன் போரா கூறுகிறார்.
"இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு திடீரென்று இப்போது அரசு மக்களை கைது செய்கிறது. இவர்கள் எல்லோரும் ஏழைகள். இப்படியொரு சட்டம் இருப்பதே இவர்களுக்குத்தெரியாது."
"இவர்கள் கொடிய குற்றவாளிகள் அல்ல. அவர்களிடம் விழிப்புணர்வு இல்லை. அவர்கள் மீண்டும் மீண்டும் இதேபோன்ற குற்றங்களைச் செய்யும் குற்றவாளிகள் அல்ல. எனவே இவர்களை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன என்பது எனக்குப்புரியவில்லை. கைது நடவடிக்கை கடைசி வழியாக இருக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் உள்ளன," என்று போரா குறிப்பிட்டார்.
இதனிடையே அசாம் அரசின் இந்த நடவடிக்கை முஸ்லிம்களை குறிவைக்கும் வகையில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் சலசலப்பு நிலவுகிறது.
அரசு இதை மறுத்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 60 சதவிகிதம் பேர் முஸ்லிம்கள் என்றால் மீதி 40 சதவிகிதம் பேர் இந்துக்கள் என்று அரசுடன் தொடர்புடையவர்கள் கூறுகின்றனர்.
பாஜக என்ன சொல்கிறது?
"தங்கள் மாநிலத்தில் இளம்பெண்கள் குழந்தை திருமணம் காரணமாக இறப்பதை, தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த அரசும் விரும்பாது. இன்று இந்தியா முழுவதும் குழந்தை திருமணங்களின் விகிதம் 23 ஆக உள்ளது. ஆனால் அசாமில் இது 32 சதவிகிதமாக உள்ளது," என்று அசாமில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பிரமோத் சுவாமி கூறினார்.
"இது கவலைக்குரிய விஷயம். பெண்கள் அதிகாரம் பற்றி பேசுபவர்களும் இதை கவனிக்க வேண்டும். அரசு எந்த சீர்திருத்தத்தை கொண்டு வந்தாலும், அவர்கள் அதில் சாதி மற்றும் மதத்தை தேட ஆரம்பிக்கிறார்கள். இது சிந்திக்கப்பட வேண்டிய விஷயம்."
தனது பகுதியில் குழந்தை திருமணம் தொடர்பான 250 புகார்கள் வந்துள்ளன என்றும் ஜனவரி 23ஆம் தேதி நடவடிக்கை பற்றிய அறிவிப்பு வெளியானதில் இருந்து இதுவரை 104 புகார்கள் சரியானவை என கண்டறியப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் தனது பெயர் வெளியிடப்படக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் முகல்முவா போலீஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Debalin Roy/BBC
"இந்த 104 வழக்குகளில் இதுவரை 21 பேரை கைது செய்துள்ளோம். அவர்களில் இருவர் இந்துக்கள், மீதமுள்ளவர்கள் முஸ்லிம்கள்," என்று அவர் குறிப்பிட்டார்.
சில பகுதிகளில் புகார் அளிக்கப்படாவிட்டாலும், போலீசார் தானாக முன்வந்து நடவடிக்கை எடுத்து பலரை கைது செய்ததாகவும், கிராமத் தலைவரை புகார் அளித்தவராக ஆக்கிவிட்டனர் என்றும் மக்கள் கூறினர்.
சில ஆவணங்களில் கையொப்பமிடுமாறு போலீசார் கூறியதாக கிராம தலைவர் கூறினார். தாளில் நிறைய ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்ததால் என்ன எழுதியிருக்கிறது என்று கூட புரியவில்லை என்று அவர் கூறினார்.
ஒரு வழக்கில் தான் புகார்தாரராக ஆக்கப்பட்டிருப்பது பின்னர்தான் தெரிய வந்தது. என்றார் அவர். கிராமத்தலைவரின் அடையாளத்தை மறைக்க அவரது பெயர் வெளியிடப்படவில்லை. தன் பெயரை வெளியிட்டால், போலீஸ் தன்னை தொந்தரவு செய்யுமோ என்ற அச்சத்தில் அவர் உள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகளைப்பற்றி பேசுவதற்காக அசாம் காவல்துறையின் ஐஜி (சட்டம் மற்றும் ஒழுங்கு) பிரசாந்த் குமார் புயானிடம் பேச பிபிசி முயன்றது. ஆனால் அவர் நேரம் கொடுக்கவில்லை.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் எப்படி அடையாளம் காணப்படுகிறார்கள்?
போலீசார் எப்படி குற்றவாளிகளை அடையாளம் கண்டனர் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த நடவடிக்கை தொடங்கப்படுவதற்கு பல மாதங்களுக்கு முன்பே இதற்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டதாக பெயர் வெளியிடப்படக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் சில போலீஸ் அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், Debalin Roy/BBC
''மருத்துவமனைகளில் பிரசவம் குறித்த தகவல்களை சேகரித்தோம். இந்த தகவலின் மூலம் எத்தனை மைனர் பெண்களுக்கு பிரசவம் ஆனது என்பது தெரிந்தது. இந்த பெண்கள் குறித்த எல்லா தகவல்களும் மருத்துவமனைகளில் இருப்பதால், அவர்களின் கணவர்களை சென்றடைவது சுலபமாகிவிட்டது," என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
சில வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஆவணங்களைப் பார்த்தாலே அவர்கள் குழந்தைத் திருமணத்தில் ஈடுபட்டது தெளிவாகத் தெரிகிறது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நடவடிக்கையில் 2020, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் குழந்தைத் திருமணங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டுமே கைது செய்யப்படுவதாக அரசுடன் தொடர்புடையவர்கள் கூறுகின்றனர்.
சட்டப்படி குழந்தைத் திருமணம் நடந்த மூன்று ஆண்டுகளுக்குள் போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாவிட்டால், அந்த வழக்குகளில் நீதிமன்றங்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்பதே இதற்குக் காரணம் என சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அசாம் அரசின் நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்ட பலருக்கு திருமணமாகி மூன்றாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் அவர்கள் விடுதலை செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாக சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஒவ்வொரு கிராமத்திலும் அதே கதை
பைஹட்டா பகுதியின் கர்கா கிராமத்தில் இரண்டு இந்து இளைஞர்கள் மீது குழந்தை திருமண வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பட மூலாதாரம், Debalin Roy/BBC
இங்குள்ளவர்களிடம் பேசியபோது, முகல்முவாவின் பரிஜான் பேகத்தின் கதையே ஒவ்வொரு கிராமத்திலும் நடப்பதுபோல் தோன்றியது.
போலீஸ் எப்படி இரவு நேரத்தில் தனது வீட்டிற்குள் நுழைந்து தனது மகன் ஜெய்தேவைப் பற்றி கேட்க ஆரம்பித்தது என்று சபிதா பைஷ்யா எங்களிடம் கூறினார். ஜெய்தேவை காணாததால், போலீசார் சபிதாவின் கணவரை அழைத்துச் சென்றனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு ஜெய்தேவ் போலீஸ் முன் ஆஜரானபோது சபிதாவின் கணவர் விடுவிக்கப்பட்டார்.
குழந்தைத் திருமணத்துக்கு எதிராக அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருந்தால் யாரும் குழந்தை திருமணம் செய்திருக்கமாட்டார்கள். மகனின் சம்பாத்தியத்தில்தான் வீடு நடக்கிறது என்று சபிதா பைஷ்யா கூறினார்.
"மருமகள் எட்டு மாத கர்ப்பிணி. அவளுக்கு ஏதாவது நேர்ந்தால் யார் பொறுப்பு. எனக்கு எதுவும் தெரியாது. எனக்கு என் மகன் வேண்டும். மகன் இல்லாமல் குடும்பம் எப்படி நடக்கும்?"
ஜெய்தேவின் மைனர் கர்ப்பிணி மனைவி எங்களிடம் பேசியபோது அவரால் கண்ணீரை அடக்க முடியவில்லை. ஒரு மனைவி கணவனை பிரிந்தால் எப்படி உணர்வார் என்பதை அரசால் எப்படி புரிந்து கொள்ள முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
"நான் மிகவும் வருத்தமாக இருக்கிறேன். என் கணவரை விடுவிக்க வேண்டும். இது நடக்கும் என்று முன்பே தெரிந்திருந்தால் நாங்கள் திருமணம் செய்து கொண்டிருக்க மாட்டோம், என் கணவர் எப்போது திரும்பி வருவார் என்று நான் நினைத்துக் கொண்டே இருக்கிறேன்."
இந்த நடவடிக்கையை அரசுடன் தொடர்புடையவர்கள் ஒருபுறம் நியாயப்படுத்தினாலும், மறுபுறம் குழந்தைத் திருமணம் போன்ற சமூகக்கொடுமைகளை ஒழிக்க கடும் சட்ட நடவடிக்கைக்கு பதிலாக சமூக விழிப்புணர்வை அதிகரிக்க முயற்சி செய்திருக்க வேண்டுமா என்ற விவாதமும் எழுந்துள்ளது.
"சமூக விழிப்புணர்வு தேவை, ஆனால் அரசியலமைப்பு மற்றும் சட்டத்தால் நாடு நிர்வகிக்கப்படுகிறது. எனவே நாட்டில் அரசியலமைப்பு மற்றும் சட்டத்தை பின்பற்ற வேண்டியது அவசியம் அல்லவா?" என்று பா.ஜ.க, தலைவர் பிரமோத் சுவாமி குறிப்பிட்டார்.
"நாட்டில் யாராவது கொலை செய்தால், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது, சட்டம் கூடாது என்று சொல்ல முடியுமா. நாட்டில் ஒரு சட்டம் இருக்கும்போது, அரசு அதை பின்பற்றினால், அது பற்றி இவ்வளவு விவாதம் அவசியமே இல்லை," என்றார் அவர்.

பட மூலாதாரம், Debalin Roy/BBC
அசாம் அரசு தற்போதுள்ள சட்டத்தை அமல்படுத்துகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் கேள்வி என்னவென்றால், குழந்தை திருமண பிரச்சனையை சமாளிக்க இது மட்டும்தான் ஒரே வழியா?
"இது அவசியமில்லை என்று நான் நினைக்கிறேன். சொல்ல விரும்பிய செய்தியை மக்களை கைது செய்யாமல் வேறு வழிகளில் சொல்லியிருக்கலாம். சட்டம் சமூகத்திற்கானது. சமூகம் சட்டத்திற்காக அல்ல,"என்று வழக்கறிஞர் அங்ஷுமன் போரா குறிப்பிட்டார்.
இந்த இயக்கம் 2026 வரை தொடரும் என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஏற்கனவே தெரிவித்துள்ளார். அசாம் சட்டப் பேரவைக்கு அடுத்த தேர்தல் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ளதால், இந்த நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று அரசின் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இதனிடையே, ஒளியிழந்த தங்கள் குடும்பத்தில் மீண்டும் ஒளி ஏற்படும், பிரிந்து சென்ற மகன்கள் எப்படியாவது மீண்டும் வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் அசாமின் மிகவும் பின்தங்கிய, பொருளாதார ரீதியாக நலிவடைந்த மற்றும் அச்சத்தில் வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள், காத்துக்கொண்டிருக்கின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













