டெல்லி நிர்பயா கூட்டுப் பாலியல் வல்லுறவின் 10 ஆண்டுகள்: மாறிய பெண்களின் வாழ்க்கை

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், திவ்யா ஆர்யா
- பதவி, BBC 100 Women
எச்சரிக்கை: இக்கட்டுரையில் பாலியல் வன்கொடுமை குறித்த விளக்கங்கள் உள்ளன.
10 ஆண்டுகளுக்கு முன் இந்த மாதத்தில் டெல்லியில் நடந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைச் சம்பவம், இந்தியாவில் அதுவரை அதிகம் பேசப்படாமல் இருந்த பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து தேசிய அளவில் விவாதத்தை ஏற்படுத்திய முக்கிய தருணமாகும்.
23 வயதான ஜோதி சிங், டெல்லி பேருந்து ஒன்றில் ஓட்டுநர் மற்றும் 5 நபர்களால் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஊடகங்களால் நிர்பயா அல்லது 'பயமற்றவள்' என்று அழைக்கப்படும் ஜோதி, அவர்களை எதிர்த்துப் போராடினார். ஆனால் பேருந்தில் இருந்து நிர்வாணமாக தூக்கி எறியப்பட்டதால் ஏற்பட்ட தீவிர உள் காயங்கள் காரணமாக, தாக்குதல் நடந்த இரண்டு வாரங்களில் உயிரிழந்தார்.
நாடு முழுவதும் ஏற்பட்ட அதிர்ச்சி விரைவில் கோபமாக மாறியது. டெல்லியில் நூற்றுக்கணக்கான இளம் பெண்களும், ஆண்களும் நீதி கேட்டு கடும் குளிரில் ஊர்வலம் சென்றனர். தண்ணீர் பீரங்கி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அந்தக் கூட்டத்தை காவல்துறையினர் கலைத்தனர்.
அந்த தாக்குதல் குறித்து நினைக்கும் போது பயம்தான் எனக்கு முதலில் நினைவுக்கு வருகிறது. அவள் சித்திரவதை செய்யப்பட்டது குறித்த அறிக்கைகளைப் படிக்கும்போது என் உடலில் படர்ந்த பயம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. டெல்லி தெருக்களில் நிறைய துன்புறுத்தல்களை நான் சந்தித்திருப்பதால், என்னை மிகவும் போர்க்குணமிக்கவளாகக் கருதினேன். ஆனால் இந்தச் சம்பவம் என்னை அச்சுறுத்தியது.
2012ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டங்களால் பெண்களுக்கு எதிரான வன்முறையின் வரையறைகளை அங்கீகரிக்கும் வகையில் சட்ட திருத்தம், உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் காவல்துறையினருக்கு தண்டனை, மற்றும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உட்பட கடும் தண்டனைகள் என குறிப்பிடத்தக்க அளவு மாற்றங்கள் ஏற்பட்டன.
ஆனால், ஒரு தசாப்தத்திற்குப் பிறகும் பெண்களுக்கு ஆபத்தான சூழல்கள் இந்தியாவில் இன்னும் உள்ளன. கடந்த தசாப்தத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 50 சதவிகிதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது.
பாலியல் வல்லுறவுக்கு எதிரான நீதிக்கான போராட்ட களத்திற்கு தான் இழுக்கப்பட்டதாக பார்க்கிறார் ஜோதி சிங்கின் (நிர்பயா) தாய் ஆஷா தேவி.

பட மூலாதாரம், Getty Images
அவரது அனுபவம் தனது மகளின் நினைவாக 'நிர்பயா ஜோதி அறக்கட்டளை'யை அமைக்க அவருக்கு உத்வேகம் தந்தது. வல்லுறவுக்கு ஆளானவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பெயரைக் குறிப்பிடக்கூடாது என இந்தியச் சட்டம் கூறுகிறது. ஆனால், 2015ஆம் ஆண்டு தனது மகளின் பெயரைப் பகிரங்கப்படுத்த முடிவு செய்த ஆஷா, "கொடூரமான குற்றங்களைச் செய்பவர்கள்தான் வெட்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் அல்ல" என்று கூறினார்.
ஆஷா தனது மகளுக்கான நீதிக்காக மட்டும் பிரசாரம் செய்யவில்லை. பெண்களுக்கு எதிரான வன்முறையால் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கும் ஆதரவாக உள்ளார். தற்போது ஆஷாவை தேடி பலர் வருகின்றனர்.
"சில சமயங்களில் அவர்களுக்கு நம்பிக்கை தேவைப்படும். மற்ற சமயங்களில் சிக்கலான நீதித்துறை செயல்முறை அவர்களுக்கு அச்சத்தை தரும். அதனால் நான் கற்றுக்கொண்டதைப் பகிர்ந்து சட்ட உதவிக்கு அவர்களுக்கு வழிகாட்டுகிறேன்" என்று டெல்லியில் உள்ள தனது சிறிய குடியிருப்பில் ஆஷா என்னிடம் கூறினார்.
ஆஷா வாழ்க்கையோடு தொடர்புடைய பல நபர்களில், ஒரு சிலரிடம் நான் பேசினேன்.
அதில் ஒருவர், ஜோதியின் மரணத்தின் போது மாணவியாக இருந்த சீமா குஷ்வாஹா. ஜோதி மீதான தாக்குதலை அடுத்து தனது நண்பர்களுடன் டெல்லி போராட்டத்தில் சீமா கலந்து கொண்டார். அவருடன் தங்கியிருந்த 20 பேரில் குடும்பத்தினர் வற்புறுத்தியதால் பாதி பேர் சொந்த ஊர்களுக்கு திரும்பிய நிலையில், சீமா நகரத்திலேயே தங்கி, படிப்பைத் தொடர்ந்தார்.

பட மூலாதாரம், Getty Images
சட்டம் படித்துக் கொண்டிருந்த சீமா, ஜோதியின் வழக்கில் நீதிமன்ற விசாரணைகளுக்குச் செல்லத் தொடங்கினார். 2020ஆம் ஆண்டு குற்றவாளிக்கு மரண தண்டனை தீர்ப்பை உறுதி செய்யக் காரணமாக இருந்த சட்டக் குழுவில் ஒருவராகவும் அவர் இருந்தார்.
உச்ச நீதிமன்ற விசாரணையில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டதும், சீமா நேராக ஆஷாவின் வீட்டிற்கு ஓடிச் சென்று ஜோதியின் படத்திற்கு முன்னால் மண்டியிட்டு, தன் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாக கூறினார்.
"மொத்த இந்தியாவும் கவனித்துக் கொண்டிருந்தது. குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவது முக்கியமானதாக இருந்தது" என்று சீமா கூறுகிறார்.
படிக்காதவர்கள், ஏழைகள், வேலை வாய்ப்பற்றவர்கள் தான் பெரும்பாலும் பாலியல் வல்லுறவில் ஈடுபடுகிறார்கள் என்ற கட்டுக்கதைகள் ஊடாக நாடு முழுவதும் பெரும் எதிர்ப்புகள் எழுந்ததால். கொடூரமான பாலியல் வல்லுறவு மற்றும் கூட்டு வல்லுறவு ஆகியவற்றுக்கு மரண தண்டனை விதிக்க 2013ஆம் ஆண்டு அரசு எடுத்த முடிவு ஒரு ஜனரஞ்சக நடவடிக்கையாகும்.
நிர்பயா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரும் இந்தக் கட்டுக்கதைக்குள் பொருந்தினாலும், அந்நியர்களால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படுவதில்லை என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
95 சதவிகிதத்திற்கும் அதிகமான பாலியல் வல்லுறவு வழக்குகளில், குற்றம் இழைத்தவர்கள் பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டார் மற்றும் உடன் பணிபுரிபவர்கள் என நன்கு அறிமுகமானவர்கள் என்று இந்திய அரசின் குற்றத் தரவுகள் கூறுகின்றன.

இத்தகைய தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் பங்கஜ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) குடும்பமும் ஒன்று. அவரது 13 வயது சகோதரி வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு பண்ணையில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார்.
பங்கஜ்தான் சகோதரியின் உடலை முதன்முதலில் கண்டார். ரத்தத்தில் நனைந்திருந்த அந்த இளம்பெண்ணின் உடை கிழிந்து, பலமுறை கத்தியால் குத்தப்பட்டு, கழுத்தில் மூங்கில் குச்சி செருகப்பட்டிருந்தது.
ஜோதி வல்லுறவு செய்யப்படுவதற்கு முன் கோடையில் நடந்த இந்த தாக்குதல், ஜோதிக்கு நடந்ததைப் போலவே கொடூரமானது. அந்தத் தாக்குதலுக்குப் பிறகு எடுக்கப்பட்ட சில படங்களை பங்கஜ் என்னிடம் காட்டினார். அவை என்னால் ஒருபோதும் பார்க்க முடியாத படங்கள்.
இது கிழக்கு இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்களில் ஒன்றான, தலைநகரில் இருந்து வெகு தொலைவில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தில் நடந்தது. உள்ளூர் செய்தித்தாள்களில் மட்டுமே இந்தச் செய்தி வெளியானது.
"அவளுக்கு நடந்தது வெளியுலகிற்கு தெரியவில்லை. எந்தக் கோபமும், நீதிக்கான அழைப்புகளும் இல்லை" என்று அவரது சிறிய மண் வீட்டில் அமர்ந்தபோது பங்கஜ் என்னிடம் கூறினார்.
அந்நியர்களால் வல்லுறவு செய்யப்பட்ட ஜோதியைப் போல அல்லாமல், அவரது சகோதரியின் வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வரும் ஏற்கனெவே தெரிந்தவர்கள். பக்கத்து வீட்டுக்காரர், பள்ளி முடிந்ததும் பாடம் கற்றுத்தந்த ஆசிரியர் உட்பட மொத்தம் நால்வர் கைது செய்யப்பட்டனர்.
"ஆசிரியரைக் கைது செய்த போது காவல்துறையினர் தவறாக கைது செய்கிறார்கள் என்று நினைத்தேன். ஏனென்றால் தன்னுடைய மாணவர்களிடம் ஆசிரியருக்கு புனிதமான உறவு இருந்தது" என்று பங்கஜ் என்னிடம் கூறினார்.
"அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு தாக்குதலுக்கு பயன்படுத்திய கத்தியை மீட்க உதவிய போதுதான் நான் அதை நம்பினேன்" என்றும் அவர் கூறினார்.

அந்த நால்வரும் கீழமை நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், அதை எதிர்த்து அவர்கள் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கில் 2021ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் அவர்களை விடுவித்தது. குற்றம் கொடூரமானதாக இருந்தாலும், குற்றவாளிகளுக்கு எதிரான சாட்சியங்களை அளிப்பதில் விசாரணை அதிகாரிகள் மோசமாகத் தோல்வியடைந்தனர் என்று உயர் நீதிமன்றம் கூறியது.
சாட்சியங்களை சேகரிப்பது மற்றும் பதிவு செய்வதில் காவல்துறை அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலே பல பாலியல் வல்லுறவு வழக்குகளில் இருந்து குற்றவாளிகள் தப்பிக்கவும், பின்னர் குற்றம்சாட்டப்பவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆபத்து ஏற்படவும் காரணமாக அமைகின்றன. பங்கஜ் விஷயத்திலும் இதுதான் நடந்தது.
அவர்கள் கிராம சந்தைக்கு வந்து தங்கள் வாழ்க்கையை அழித்ததற்காக தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பங்கஜ் என்னிடம் கூறினார்.
எனினும், தன் முயற்சியை பங்கஜ் கைவிடவில்லை. கையில் ஒரு செய்தித்தாள் துண்டுடன் சகோதரிக்கு நீதி கோரி டெல்லி சென்றார். அவர் மிகவும் கவனமாக கையில் வைத்திருந்த செய்தித்தாள் துண்டியில் ஆஷா தேவி பற்றிய கட்டுரை இருந்தது.
ஆஷாவின் சந்திப்பு பங்கஜுக்கு ஒரு முக்கிய கதவைத் திறந்தது. ஜோதியின் வழக்கை எதிர்த்துப் போராடிய மூத்த வழக்கறிஞர் ஒருவர், அவரது சகோதரி வழக்கின் கொலையாளிகளை உயர் நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து தற்போது மேல்முறையீடு செய்துள்ளார்.
"அவர்களுக்கு மீண்டும் மரண தண்டனை கிடைக்கும் என்று எனக்குத் தெரியும். நீதித்துறை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது" என்று பங்கஜ் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
இந்திய நீதித்துறை மெதுவாக இருக்கலாம். ஆனால் பாலியல் வல்லுறவு வழக்குகள் ஊடக கவனத்தையும், பொதுமக்களின் அனுதாபத்தையும் பெறுவதால் அத்தகைய வழக்குகளில் சிறப்பாகவே செயல்படுகிறது. இங்கு குறைந்த அளவில் கவனம் பெறுவது வீடுகளுக்குள் நடக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைதான். விகிதாச்சார அளவில் இவை இன்றும் அதிகமாக உள்ளன.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் முதன்மையானது குடும்ப வன்முறை. பாலியல் வல்லுறவு வழக்குகளை விட இவை நான்கு மடங்கு அதிகம்.
அதில், பாதிக்கப்பட்ட ஒருவர்தான் 45 வயதான சினேகா ஜாவாலே.
தனது கணவர் கூடுதல் வரதட்சனை கேட்டு தன்னை அடிக்கடி அடித்ததாகவும், 2000, டிசம்பர் 24ஆம் தேதி நடந்த சம்பவம் அழிவுகரமாக இருந்ததாகவும் சினேகா ஜாவாலே பிபிசியிடம் தெரிவித்தார்.
"ஓர் இரவில், ஆத்திரத்தில் அவர் மண்ணெண்ணெய் ஊற்றி என் முகம், மார்பு மற்றும் கைகளில் தீ வைத்தார்" என்று சினேகா ஜாவாலே கூறுகிறார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, தன்னைத் தாக்கியது தனது கணவர்தான் என சினேகா குடும்பத்தினரிடம் தெரிவித்தார். ஆனால் அவர் செல்வாக்கு மிக்கவர். சினேகா குடும்பத்தினர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. மாறாக, உறவினர்களிடம் சினேகா இறந்துவிட்டதாகச் சொன்னார்கள்.
குடும்ப வன்முறையை எதிர்கொள்ளும் பெண்களைப் பற்றிய பல கதைகளைக் கேட்ட பத்திரிகையாளரான எனக்கும்கூட இது அதிர்ச்சியாக இருந்தது. பெற்றோர் தங்கள் மகள்களை இந்த மோசமான நிலையில் எப்படி கைவிட முடியும்?

சினேகா எதிர்கொண்ட வன்முறை அவரது வீட்டின் நான்கு சுவர்களுக்குப் பின்னால் மறைத்து வைக்கப்பட்டது. ஆனால் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நிர்பயா மீதான தாக்குதல் அதை வெளிக்கொண்டு வந்தது.
2013ஆம் ஆண்டு 'நிர்பயா' என்ற மேடை நாடகத்தில் நடிக்க சினேகாவுக்கு அழைப்பு வந்தது. பெண்களுக்கு எதிரான வன்முறை விஷயத்தில் சமூகத்தின் மௌனத்தை உடைக்கும் நோக்கத்தை கொண்ட அந்த மேடை நாடகம், உயிர் பிழைத்த உண்மையான சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டது.
அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு, சினேகா தனது கதையை உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். அந்த நாடகக் குழுவில் இருந்தவர்களில் சினேகா மட்டுமே தொழில்முறை நடிகர் அல்லாதவர்.
"நாடகம் எனக்கு பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தது. அது என்னை மாற்றியது," என்கிறார் சினேகா.
"எங்கள் நடிப்பு முடிந்ததும், பார்வையாளர்கள் பலர் தங்களுடைய சொந்தக் கதைகளை என்னிடம் பகிர்ந்துகொண்டார்கள். அது எனக்கு நிகழ்ந்த அதிர்ச்சியைக் கடக்க உதவியது. இனி நான் தனிமையை உணரமாட்டேன். மனவேதனையைக் கடந்து, உதவியை நாடி, நீதிக்காகப் போராடும் பயணத்தில் இந்தத் தனிமை என் உரையாடல்களில் மீண்டும் மீண்டும் இடம்பிடித்துக் கொண்டிருந்தது," என்கிறார் சினேகா.

பர்கா பஜாஜ், ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவி எண்ணைத் தொடங்கினார். உளவியலாளர் மற்றும் மனநல மருத்துவருமான பர்கா ஏற்கனவே அமெரிக்காவில் பாலியல் தாக்குதலில் இருந்து தப்பியவர்களுடன் இணைந்து பணிபுரிந்தார். ஆனால் நிர்பயா வழக்கு அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக இருந்தது.
2012ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வடகிழக்கு இந்தியாவில் அவர் ரயிலில் தனியாக பயணம் செய்து கொண்டிருந்தார். அவரது பெட்டியில் வேறு பெண்கள் இல்லை. ஜோதிக்கு நடந்தது அவருக்கு நினைவில் வந்ததும் பயம் ஏற்பட ஆரம்பித்தது. காலணிகளை அணிந்து கொண்டும், மிளகாய் பொடியை கையில் வைத்துக் கொண்டும் தூங்க அவர் முடிவுசெய்தார். ஒருவேளை ஆபத்து ஏற்பட்டால் அழைக்க எந்தவித உதவி எண்ணும் இல்லை என்பதை அப்போதுதான் அவர் உணர்ந்தார்.

"அதை உணர்ந்ததும் ஆக்கப்பூர்வமான ஒன்றை உருவாக்கினேன். என்னை எதுவாலும் தடுக்க முடியாது," என்று பர்கா என்னிடம் தெரிவித்தார்.
அந்நியர்களால் ஏற்படும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகும் பெண்களுக்காக உதவி எண்ணை அவர் தொடங்கினாலும், கடந்த 9 மாதங்களில் பெரும்பாலான அழைப்புகள் வீட்டு வன்முறையிலிருந்து தப்பிக்க முயற்சிக்கும் பெண்களிடமிருந்தே அவருக்கு வந்தன.
"நமக்கு தேவையானது பெண்கள் திருமண உறவிலிருந்து வெளியேறும்போது அவர்களுக்கு ஆதரவளிக்கும் சிறந்த மாநில உள்கட்டமைப்பு மற்றும் சட்டப் போராட்டத்தை நடத்த முடிவு செய்யும் போது எளிமையாக கிடைக்கக் கூடிய சட்ட ஆலோசனை" என்று பர்கா கூறுகிறார்.
அமைப்பு ரீதியான நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டும் என்ற உணர்வுதான், சீமா இப்போது அரசியலுக்குள் இறங்கியிருப்பதற்கான காரணம்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் தலித்துகளின் உரிமைகளுக்காகப் போராடும் பகுஜன் சமாஜ் கட்சியில் சீமா இணைந்தார்.
பிறப்பால் தலித்தான சீமா நீதிக்காக, குறிப்பாக பாலின நீதிக்காக போராடுபவர். மேலும் தனது சமூகத்திற்கான சம உரிமைகளுக்காக போராடுவதில் நம்பிக்கை கொண்டவர். சாதி மற்றும் பாலின சமத்துவத்தை செயல்படுத்துவதில் ஓர் அரசியல்வாதியாக மிகவும் திறம்பட செயல்பட முடியும் என்று அவர் நம்புகிறார்.

பட மூலாதாரம், Getty Images
"பாலியல் வன்முறை ஒரு பிரச்னை, ஆனால் சமூகத்தில் சமத்துவமின்மை , திருமண கட்டமைப்புகள், அரசியல் ஆகியவை மாற வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.
நிர்பயாவின் தாய் ஆஷா தேவி, பெண்களின் பாதுகாப்பிற்கான உடனடி மாற்றத்தை கொண்டு வருவது கடினம் என்பதை ஒப்புக்கொள்கிறார்.
"நாங்கள் மற்ற பெண்களுக்காக மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று நினைத்தோம். ஆனால் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை" என்று அவர் கூறுகிறார்.
"நான் படிக்காதவள். ஆனால் நான் ஒரு போராளி, என் மகளுக்கு நீதி வழங்குவதாக உறுதியளித்தேன்," என்றும் அவர் கூறுகிறார்.
"மற்றவர்களின் வலியைக் கேட்பது அதிர்ச்சியளிக்கிறது, ஆனால் நீதிக்கான அவர்களின் நீண்ட, தனிமையான போரில் சிலர் எனக்கு ஆதரவாக இருந்தது போல அவர்களுடன் நிற்பது எனக்கு அமைதியைத் தருகிறது" என்றும் அவர் கூறுகிறார்.


பிபிசி 100 Women - ஒவ்வோர் ஆண்டும் உலகெங்கிலும் உள்ள 100 ஊக்கமளிக்கும் மற்றும் செல்வாக்குமிக்க பெண்கள் குறித்து பிபிசி வெளியிட்டு வருகிறது.2012 டெல்லி கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு வினையாற்றும் விதமாக, ஊடகங்களில் பெண்களின் கதைகளை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட பிபிசி 100 Women இப்போது அதன் பத்தாவது ஆண்டில் உள்ளது.
#BBC100Women என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தி இது குறித்த சமூக ஊடக விவாதங்களில் உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












