உலகின் மிகச் சிறந்த சினிமாவாகத் தேர்வான பாலியல் தொழிலாளி குறித்த படம்

பட மூலாதாரம், Alamy
- எழுதியவர், எல்சா மைஷ்மேன்
- பதவி, பிபிசி நியூஸ்
பெண் ஒருவர் இயக்கிய திரைப்படத்தை நிபுணர்கள் குழுவினர் இதுவரை வெளியான திரைப்படங்களிலேயே மிகவும் சிறந்த படமாகத் தேர்வு செய்துள்ளனர். ஆனால், இந்தப் பெருமையை அறிய அதை உருவாக்கிய பெண் இப்போது உயிருடன் இல்லை.
பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஷாண்டல் அகேர்மான் இயக்கிய ''ஷன் டீல்மன், 23 குவா டு காமர், 1080 ப்ராசெல்'' (Jeanne Dielman, 23 quai du Commerce, 1080 Bruxelles, ) என்ற பிரெஞ்சு மொழித் திரைப்படம் பிரிட்டிஷ் திரைப்பட மையத்தின் 'சைட் அண்ட் சவுண்ட்' இதழின் வாக்கெடுப்பில் முதலிடம் பிடித்துள்ளது.
பெண் ஒருவர் இயக்கிய திரைப்படம் ஒன்று முதல் பத்து இடங்களுக்குள் வருவது இதுவே முதல் முறையாகும்.
ஒவ்வொரு தசாப்தத்துக்கும் ஒருமுறை நடைபெறும் இந்த வாக்கெடுப்பு பன்முகத்தன்மையைக் கொண்டிருப்பதில்லை என்று தொடர்ந்து விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
தொடர்ந்து 40 ஆண்டுகளாக ஆர்சன் வெல்ஸ் இயக்கிய சிட்டிசன் கேன் (Citizen Kane) என்ற ஆங்கிலத் திரைப்படமே சிறந்த படமாகத் தேர்வாகிவந்தது. பின்னர், 2012ஆம் ஆண்டில் ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்கின் வெர்டிகோ (Vertigo) சிறந்த திரைப்படமாகத் தேர்வானது.
2012ஆம் ஆண்டில் 'சிட்டிசன் கேன்' திரைப்படத்தை ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்கின் வெர்டிகோ படம் முந்தியது.
ஷன் டீல்மன் படத்தின் கதை என்ன?

பட மூலாதாரம், Getty Images
ஷன் டீல்மன் கடந்த 1975ஆம் ஆண்டில் வெளியானது. தன் வாழ்வாதாரத்துக்காக பாலியல் தொழிலாளியாக மாறிய பெல்ஜியத்தை சேர்ந்த ஒரு கைம்பெண், தமது வாடிக்கையாளர் ஒருவரைக் கொன்று விடுவது இந்த திரைப்படத்தின் கதையாகும். இந்த திரைப்படம் மொத்தம் மூன்றரை மணி நேரம் ஓடக்கூடியதாகும்.
முந்தைய வெற்றியாளர்களைப் போல இந்த திரைப்படம் விமர்சன உலகிற்கு வெளியே நன்கு அறியப்படவில்லை என்றாலும், இது ஒரு தலைசிறந்த படைப்பு என்றும், பெண்ணியத் திரைப்படத்தின் ஒரு சிறந்த படைப்பு என்றும் பாராட்டப்பட்டது. Jeanne Dielman, 23 quai du Commerce, 1080 Bruxelles, திரைப்படத்தை இயக்கிய ஷாண்டல் அகேர்மான் தனது 65 ஆவது வயதில் 2015ஆம் ஆண்டு மரணமடைந்தார்.
திரை விமர்சகரும் எழுத்தாளருமான லில்லியன் க்ராஃபோர்ட், இந்த தேர்வு குழுவில் ஒருவராகப் பணியாற்றினார். அவர் இந்த படத்தைப் பற்றிக் கூறும்போது, பெண்ணிய சினிமா பற்றி பேசுவோர் கட்டாயம் குறிப்பிட வேண்டிய படமாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.
''சினிமா துறைக்குள் வரவேண்டும் என நினைப்பவர்கள் மட்டும் பார்க்க வேண்டிய படம் என்று ஷன் டீல்மன், திரைப்படம் குறித்து நான் கூற மாட்டேன். நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படங்களில் இதுதான் முதல் படம் எனச் சொல்வேன்,'' என்று பிபிசியிடம் அவர் தெரிவித்துள்ளார்.
முதல் 5 இடங்களுக்குள் வந்த படங்கள் எவை?

பட மூலாதாரம், Alamy
“(சினிமாவை) கற்கும் நோக்கிலும், சினிமாவைப் பற்றி சிந்திக்கும்போதும், பரிசோதனை முயற்சியில் உருவாக்கப்பட்ட படங்களைப் பார்க்க விரும்பும்போதும், பெண்கள் உருவாக்கிய படங்களைப் பார்க்க விரும்பும்போதும், பெண்ணிய சினிமா வரலாறு குறித்துப் பேசும்போதும் இது முற்றிலும் அத்தியாவசியமாக இடம் பெற வேண்டிய திரைப்படம்,” என்று குறிப்பிட்டார்.
பிரிட்டிஷ் திரைப்படநிறுவனத்துக்கான ஒரு கட்டுரையில், பிர்க்பெக் பல்கலைக்கழகத்தின் சினிமா ஆய்வுகளுக்கான பேராசிரியரான லாரா மல்வி, இந்த வாக்கெடுப்பை திடீரென நடந்த மாற்றம் என்று கூறியுள்ளார். இந்த வாக்கெடுப்பானது பிரிட்டிஷ் திரைப்பட நிறுவனத்தின் Sight and Sound என்ற இதழின் சார்பாக 1952ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு தசாப்தத்துக்கும் ஒருமுறை நடத்தப்படுகிறது.
வாக்கெடுப்புக்காகத் தேர்வு செய்யப்படும் சிறந்த 100 படங்கள், வாக்கெடுப்பில் பங்கேற்கும் நிபுணர்கள் ஆகியவற்றில் பன்முகத்தன்மை இல்லை என கடந்த காலங்களில் இந்த அமைப்பு விமர்சனங்களை சந்தித்திருக்கிறது. 2012ஆம் ஆண்டுக்கான வாக்கெடுப்பிற்கு இறுதிசெய்யப்பட்ட 100 படங்களில் பெண்களால் இயக்கப்பட்ட இரண்டு படங்களே இருந்தன. அவற்றில் ஒன்றாக ஷன் டீல்மன் படம் இடம் பெற்றது.
ஜிப்ரீல் டியாப் மெம்பட்டே எனும் கருப்பினத்தை சேர்ந்த இயக்குநரின் டூக்கி பூக்கி (Touki Bouki) என்ற திரைப்படமும் 2012ஆம் ஆண்டு இடம் பெற்றது. சமீப ஆண்டுகளாக வாக்கெடுப்பில் பங்கேற்பவர்கள் எண்ணிக்கையும் பன்முகத்தன்மையும் அதிகரித்துள்ளன. திரைப்பட விமர்சகர்கள், திரைத்துறை வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்கள் என இந்த ஆண்டு 1639 பேரிடம் தலா பத்து படங்களை தேர்வு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த வாக்கெடுப்பில் கடந்த முறை வெற்றி பெற்ற 'வெர்டிகோ' (Vertigo) இரண்டாவது இடத்தையும், 'சிட்டிசன் கேன்' (Citizen Kane) மூன்றாவது இடத்தையும் பிடித்தன. யசுஜிரோ ஓசு இயக்கிய 'டோக்கியோ ஸ்டோரி' படம் நான்காவது இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து வோங் கார் வாய் இயக்கிய 'இன் தி மூட் ஃபார் லவ்' ஐந்தாவது இடத்தைப் பிடித்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













