பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இந்தியாவில் அதிகரிப்பதைக் காட்டும் 5 வரைபடங்கள்

முகமூடியுடன் பெண்கள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், கீதா பாண்டே
    • பதவி, பிபிசி நியூஸ், டெல்லி

இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த மாதம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதி, பெண்களை குறித்த மனப்பான்மை மாற்றத்துக்கு அழைப்பு விடுத்ததோடு, பெண்கள் மீதான வெறுப்புக்கு எதிராக நாட்டு மக்கள் போராட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

"நமது நடத்தையில் சீர்குலைவு ஏற்பட்டுள்ளது. சில வேளைகளில் பெண்களை அவமதிக்கிறோம். இத்தகைய நடத்தையில் இருந்து விடுபடுவதற்கு உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்" என்று அவர் யோசனை தெரிவித்தார். தினசரி வாழ்க்கையில் பெண்களை அவமதிக்கும் எந்தவிதமான செயல்களையும் விட்டுவிட உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் மக்களிடம் வலியுறுத்தினார்.

பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு மதிப்பளிப்பது குறித்து பிரதமர் மோதி பேசுவது இது முதன்முறை அல்ல.

2014ஆம் ஆண்டு பிரதமர் மோதி ஆற்றிய முதலாவது சுதந்திர தின உரையின்போது, ”பாலியல் வல்லுறவுகளை பற்றி கேள்விப்படும்போது வெட்கத்தால் தலைகுனிய வேண்டியுள்ளது" என்று கூறி இந்தியாவில் நடைபெறும் பாலியல் வல்லுறவுகளை கண்டித்தார்.

பாரதிய ஜனதா கட்சியின் எட்டு ஆண்டுகால ஆட்சிக்குப் பின்னரும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறையவில்லை என்பதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

2020-ஆம் ஆண்டை தவிர, பிற ஆண்டுகளில் ஆண்டுக்கு ஆண்டு இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது தெரிகிறது. 2020-ஆம் ஆண்டு கோவிட் பெருந்தொற்று காரணமாக பல மாதங்கள் இந்தியாவில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்தது. இதுவும் புள்ளிவிவரங்கள் சேகரிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

2021ஆம் ஆண்டின் குற்ற புள்ளிவிவரங்களை கடந்த வாரம் இந்திய அரசு வெளியிட்டது. முன் எப்போதையும் விட பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்திருப்பது இதில் தெரியவந்துள்ளது.

குற்ற விகிதம் அதிகரித்திருப்பது மிகவும் கவலைக்குரியது என்கிறார்கள் செயற்பாட்டாளர்கள். ஆனால், அதிகாரிகளோ பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகமாகவே வெளிக்கொணரப்படுகின்றன என்றும், அதிக பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை இப்போது பதிவு செய்கின்றனர் என்றும் கூறுகின்றனர்.

தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் கடந்த ஆறு ஆண்டுகால அறிக்கைகளை நாங்கள் ஆய்வு செய்தோம். பெண்களுக்கு எதிரான குற்றங்களின் புள்ளி விவரங்களில் கண்டறிந்தவற்றை ஐந்து வரைபடங்களில் விளக்குகின்றோம்.

உயர்ந்து வரும் குற்ற எண்ணிக்கை

குற்ற எண்ணிக்கை

கடந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை இந்திய காவல்துறை பதிவு செய்த 60 லட்சம் குற்றங்களில் 4,28,278 வழக்குகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களுடன் தொடர்புடைவை.

2016ஆம் ஆண்டு 3,38,954 வழக்குகள் என்ற நிலையில் இருந்து ஆறு ஆண்டுகளில் இது 26.35% அதிகமாகும்.

2021ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டுள்ள பெரும்பாலான வழக்குகள் கடத்தல், பாலியல் வல்லுறவு, வீட்டு வன்முறை, வரதட்சணை மரணங்கள், பாலியல் தாக்குதல்கள் என இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

மேலும், 107 பெண்கள் ஆசிட் வீச்சுக்கு உள்ளாகினர். 1,580 பெண்கள் கடத்தப்பட்டனர். 15 சிறுமிகள் விற்கப்பட்டனர். 2,668 பெண்கள் இணைய குற்றங்களில் பாதிக்கப்பட்டனர்.

24 கோடி பேரோடு, அதிக மக்கள் தொகை கொண்ட உத்தர பிரதேசம் 56 ஆயிரத்துக்கும் அதிகமான வழக்குகளுடன் மீண்டும் இந்த பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து ராஜஸ்தானில் 40,738 வழக்குகளும், மகாராஷ்டிர மாநிலத்தில் 39,526 வழக்குகளும் பதிவாகி உள்ளன.

பாலியல் வல்லுறவின் தலைநகரம்

பாலியல் வல்லுறவுகள்

கடந்த ஆண்டு காவல்துறையில் 31,878 பாலியல் வல்லுறவு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதற்கு முந்தைய ஆண்டு வழக்குகளின் எண்ணிக்கையை விட (28,153) அதிகரிப்பை காட்டுகிறது. ஆனால், 2016ஆம் ஆண்டு பதிவான 39,068 வழக்குகளுடன் ஒப்பிடும்போது இது 18% சரிவை சந்தித்திருக்கிறது.

ஆண்டுதோறும் இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான பாலியல் வல்லுறவு வழக்குகள் பதிவாவதால், பாலியல் வல்லுறவின் தலைநகரம் இந்தியா என்ற பெயரைப் பெற்றிருக்கிறது.

ஆனால், இந்தியா மட்டுமல்ல, பல நாடுகளில் இதற்கு இணையாக அல்லது அதிகமாக பாலியல் வல்லுறுவு வழக்குகள் பதிவாகின்றன.

இந்த வழக்குகளால் பாதிக்கப்பட்டோர் அல்லது அதில் இருந்து மீண்டு வந்தோரை நடத்தும் விதத்தால் உலகின் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்கு கெட்ட பெயர் ஏற்படுவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். அத்தகையோர் சமூக மட்டத்தில் மட்டுமின்றி நீதித்துறை, காவல்துறை மட்டத்திலும் கூட சரியாக நடத்தப்படுவதில்லை. மாறாக, அவமதிக்கப்படுகின்றனர்.

சமீபத்திய உதாரணங்களில் ஒன்றாக, ஓர் இஸ்லாமிய பெண் கூட்டு பாலியல் வல்லுறுவு செய்யப்பட்டதுடன் அவரின் 14 குடும்ப உறுப்பினர்கள் அவர் வசித்த அதே பகுதியில் வசித்த இந்துக்களால் 2002ஆம் ஆண்டு குஜராத் வன்முறையில் கொல்லப்பட்டதோடு, தொடர்புடைய குற்றவாளிகள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதை அதீத மனவேதனையோடு பேசியிருக்கிறார்.

பில்கிஸ் பானோ நடத்தப்பட்ட விதம் குறித்த கட்டுரை சர்வதேச ஊடகங்களின் தலைப்பு செய்தியானது. இந்தியா பெண்களுக்கு எதிராக இரக்கமின்றி நடத்து கொள்வதை இது உறுதிப்படுத்துவதாக அமைந்தது.

கற்றுக்கொள்வது என்ன?

சமீபத்தியபுள்ளி விவரங்களின்படி 76,263 பெண்கள் கடத்தப்பட்டிருக்கின்றனர். இது 2016ஆம் ஆண்டு புள்ளிவிவரமான 66,544 என்ற எண்ணிக்கையை விட 14 % அதிகமாகும்.

சில குற்றங்கள் கொலைகள், பணம் கேட்டு கடத்தப்படுதல் ஆகியவற்றோடு தொடர்புடையவை. பலர் பாலியல் தொழிலுக்காகவும், வீட்டு பணிகளுக்காகவும் கடத்தப்பட்டனர்.

கடத்தல் நிகழ்வுகள்

கடத்தப்பட்ட 28,222 பெண்களில் பெரும்பாலானோர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்வதற்காக கடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இதில் பெரும்பாலான வழக்குகள் பொய்யானவை என நிபுணர்கள் கூறுகின்றனர். பெற்றோரின் சம்மதம் இல்லாமல் பல பெண்கள் தங்கள் காதலர்களுடன் சென்று விடுகின்றனர். இதனால், இவ்வாறு பெண்களின் குடும்பத்தினர் வழக்குகளை பதிவு செய்துள்ளனர் என்று அவர்கள் கூறுகின்றனர்.

வீட்டிலேயே எதிரி

கணவர் அல்லது அவரது உறவினரால் கொடுமை என்ற சட்டப்படி பதிவு செய்யப்படுபவை பெரும்பாலும் வீடுகளில் நடக்கும் வன்முறைகள்தான். இந்தியாவில் பெண்களுக்கு எதிராக பதிவாகும் குற்றங்களில் இத்தகைய வழக்குகள்தான் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

2021ஆம் ஆண்டு காவல்துறையினர் 1,37,956 பெண்களிடம் இருந்து புகார்கள் பெற்றுள்ளனர். நான்கு நிமிடங்களுக்கு ஒரு குற்றம் வீதம் பதிவாகி இருப்பது தெரிகிறது. 2016ஆம் ஆண்டில் 1,10,434 பெண்கள் காவல்துறையினரின் உதவி வேண்டி அழைத்துள்ளனர். அத்துடன் ஒப்பிடும்போது இது 27 % அதிகமாகும்.

கணவர் அல்லது உறவினர்களால் கொடுமைப்படுத்தப்பட்ட பெண்கள்

இது போன்ற வன்முறைகள் இந்தியாவில் மட்டும் நடப்பவை அல்ல என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. உலக அளவில் மூன்றில் ஒரு பெண் பாலியல் ரீதியான வன்முறையை எதிர்கொள்வதாக கூறும் இந்த நிறுவனம் இந்தியாவிலும் அதே நிலையே என்று குறிப்பிடுகிறது.

ஆனால், இந்தியாவில் பெண்களுக்கு எதிராக வீடுகளில் நடக்கும் வன்முறையில் பேரமைதி நிலவுகிறது. அனுமதிக்கப்பட்டதாக இருக்கிறது.

அண்மைகால அரசின் புள்ளிவிவர சேகரிப்பில் பங்கேற்ற 40% அதிகமான பெண்களும், 38% அதிகமான ஆண்களும் , ஆண்கள் பெண்களை அடிப்பது சரிதான் என்று சொல்கின்றனர். கணவரின் தாய், கணவரின் சகோதரிகளை மரியாதை இல்லாமல் நடத்துதல் , வீட்டை அல்லது குழந்தையை பராமரிப்பதில் கவனக்குறைவு, கணவரிடம் சொல்லாமல் வீட்டை விட்டு செல்வது, உடல் உறவுக்கு மறுப்பது, சரியாக சமைக்காதது ஆகியவற்றின் காரணமாக கணவர் மனைவியை அடிக்கலாம் என்று அவர்கள் சொல்லி உள்ளனர்.

சட்டத்துக்கு பின்னரும் தீர்வு இல்லை

1961ஆம் ஆண்டு வரதட்சணை சட்டவிரோதம் என்று இந்தியா சட்டம் கொண்டு வந்தபோதும் நூற்றாண்டுகளாகத் தொடரும் கணவர் குடும்பத்தின் பாரம்பரியத்தின்படி பணம், தங்க நகைகள், இதர விலைமதிப்புள்ள பொருட்களை மணமகளின் குடும்பத்தினரிடம் பெறுவது வழக்கமாக பரவியிருக்கிறது.

அண்மைகாலத்தில் வெளியான உலக வங்கியின் புள்ளிவிவரப்படி இந்தியாவின் கிராமப்புறங்களில் நடக்கும் 95% திருமணங்களில் வரதட்சணை தரப்படுவதாக தெரியவந்துள்ளது.

திருமணமான புதுமணப்பெண் போதுமான வரதட்சணை கொண்டு வரவில்லை என கொடுமைப்படுத்தப்படுவதும், ஆயிரணக்கானோர் கணவரால், அவரது குடும்பத்தால் கொல்லப்படுவதும் ஒவ்வோர் ஆண்டும் தொடர்கிறது என வரதட்சணைக்கு எதிரான இயக்கங்களை மேற்கொள்ளும் தன்னார்வலர்கள் கூறுகின்றனர்.

வரதட்சணை மரணங்கள்

1983ஆம் ஆண்டு வரதட்சணை மரணங்களை தடுக்கும் வகையில் வரதட்சணைக் கொடுமைக்கு எதிரான 498ஏ என்ற சட்டப்பிரிவை இந்தியா அறிமுகப்படுத்தியது. ஆனாலும் கூட திருமணம் ஆன புதுமணப்பெண்கள் ஆண்டுதோறும் உயிரிழப்பது தொடர்கிறது.

கடந்த ஆண்டு காவல்துறையின் பதிவின்படி 6,795 வரதட்சணை மரணங்கள் நிகழ்ந்துள்ளன அல்லது சராசரியாக 77 நிமிடத்துக்கு ஒரு வரதட்சணை மரணம் நேரிட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு காவல்துறையின் பதிவின்படி 7,628 வரதட்சணை மரணங்கள் நேரிட்டுள்ளன. இந்த எண்ணிக்கையில் இப்போது 10.92% குறைந்திருக்கிறது.

புள்ளிவிவரங்கள் மற்றும் வரைபடம்; சாதாப் நாஸ்மி, பிபிசி

காணொளிக் குறிப்பு, முக சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்படுவது எப்படி? - மருத்துவர் விளக்கம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: