பொருளாதாரத்தில் பிரிட்டனை முந்தியதா இந்தியா? உண்மை நிலவரம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், தில்நவாஸ் பாஷா
- பதவி, பிபிசி நிருபர்
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) பிரிட்டனை பின்னுக்கு தள்ளி, உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளது.
சமீபத்திய ப்ளூம்பெர்க் தரவுகளின்படி, 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் இந்தியா பிரிட்டனை முந்தியது. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தரவுகளின் அடிப்படையில் ப்ளூம்பெர்க் இதனை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில், இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் இந்தியாவின் பொருளாதாரம் 854.7 பில்லியன் டாலராக இருந்தது. பிரிட்டனின் பொருளாதாரம் 816 பில்லியன் டாலராக இருந்தது.
இந்த ப்ளூம்பெர்க் மதிப்பீடுகளின்படி, அடுத்த சில ஆண்டுகளில் பிரிட்டன் பொருளாதாரத்தையே இந்தியா முந்திவிடும். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற நினைப்பதாக பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Bloomberg.com
தனிநபர் வருமானத்தில் மிகவும் பின் தங்கியுள்ள இந்தியா
பிரிட்டனின் மக்கள் தொகை சுமார் 7.5 கோடி. இந்தியாவின் மக்கள் தொகை தற்போது சுமார் 138 கோடியாக உள்ளது.
இந்த நிலையில், பிரிட்டனை விட இந்தியா பெரிய பொருளாதாரமாக மாறுவது பெரிய விஷயமல்ல என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதேவேளை, இந்தியா இன்னும் வளமையின் அடிப்படையில் பிரிட்டனை விட இருபது மடங்கு பின்தங்கியிருக்கிறது என்பதுதான் இதன் பொருள்.
அதெப்படி?
இதுகுறித்து, மூத்த பத்திரிகையாளரும் பொருளாதார ஆய்வாளருமான எம்.கே.வேணு கூறுகையில், "பொருளாதாரத்தின் மொத்த அளவில் இந்தியா பிரிட்டனை பின்னுக்குத் தள்ளும். அது நிச்சயம் நடக்கும். ஆனால், மக்களின் பொருளாதார நிலைதான் முக்கியம். தனிநபர் வருமானத்தை பொறுத்தவரையில், அது பிரிட்டனில் ஓர் ஆண்டுக்கு 45 ஆயிரம் டாலராக உள்ளது. இதுவே, இந்தியாவில் ஓர் ஆண்டுக்கு சுமார் 2 ஆயிரம் டாலர் மட்டுமே உள்ளது," என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
மேலும் "உண்மையாக இந்த ஒப்பீட்டை செய்ய வேண்டுமானால், அதில் தனிநபர் வருமானம் பற்றிய தகவல் இருக்க வேண்டும். அந்த அளவில் இந்தியா இன்னும் பிரிட்டனை விட மிகவும் பின்தங்கியுள்ளது. தனிநபர் வருமானத்தில் இந்தியா இன்னும் பின்தங்கிய நாடுகளில்தான் உள்ளது. அப்படியிருக்க பொருளாதாரத்தில் இந்தியா பிரிட்டனை முந்திவிட்டது என்று கூறுவது தவறு," என்கிறார் வேணு.
ஜே.என்.யு பேராசிரியரும் பொருளாதார நிபுணருமான அருண்குமார் இதுகுறித்து கூறுகையில், "இந்தியாவின் மக்கள் தொகை பிரிட்டனை விட இருபது மடங்கு அதிகம். நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி கிட்டத்தட்ட அவர்களுக்கு சமமாக இருந்தால், தனிநபர் வருமானத்தில் நாம் இருபது மடங்கு பின்தங்கி இருக்கிறோம் என்றுதான் அர்த்தம். பிரிட்டன் மற்றும் இந்தியாவின் பொருளாதாரத்தை ஒப்பிடுவது சரியல்ல. இந்த ஒப்பீடு தவறானது. இந்தியா மற்றும் பிரிட்டனின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒப்பிடலாம். ஆனால் இருநாடுகளின் வளமையை ஒப்பிட முடியாது. தனிநபர் வருமானத்தில் பிரிட்டனை விட நாம் மிகவும் பின்தங்கியுள்ளோம்." என்கிறார்.
சவால்களை மீறி முன்னேறிய இந்தியா
கொரோனா, யுக்ரேன் போர் ஆகிய காரணிகள் இருந்தபோதும் , இந்தியாவின் பொருளாதாரம் முன்னேறியிருப்பது, நமது நாடு சரியான பாதையில் இருப்பதற்கான அறிகுறியாகும் என்று பங்குச் சந்தை கண்காணிப்பு நிறுவனமான கேடியா கேபிட்டலின் ஆராய்ச்சித் தலைவர் அஜய் கேடியா கருதுகிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, " இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், கடந்த மாதம்தான் இந்தியா 75வது சுதந்திர தினத்தை கொண்டாடியது. அதற்கு முன்னதாக நாம் வளரும் அல்லது பின்தங்கிய நாடாக பார்க்கப்பட்டோம். ஆனால் இப்போது இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக மாறியுள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் அல்லது 1990களில் இந்தியா எடுத்த நடவடிக்கைகளின் விளைவே இது. இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளது. 90களில் இந்தியாவிடம் அதிக கையிருப்பு இல்லை. ஆனால் இன்று மிகப்பெரிய அந்நியச் செலாவணி கையிருப்புகளை கொண்ட நாடுகளில் இந்தியா நான்காம் இடத்தில் உள்ளது," என்கிறார்.
"பிரிட்டன் மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் சுருங்கி வரும் நிலையில், இந்தியாவின் பொருளாதாரம் சீராக முன்னேறி வருகிறது. அனைத்து சவால்களையும் மீறி, இந்தியா தனது வளர்ச்சி விகிதத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது," என்கிறார் கேடியா.
இது தொடர்பாக எம்.கே.வேணு கூறுகையில், "மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத்தில் தற்போது சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தியாவும் இதன் மூலம் பயனடைந்துள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் இன்னும் முன்னேறி வருகிறது. ஆனால் அடுத்த நான்கைந்து ஆண்டுகளுக்கு இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியடைந்தாலும், தனிநபர் வருமானம் மேற்கத்திய நாடுகளின் நிலையை அடைய நீண்ட காலம் எடுக்கும்." என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
யுக்ரேன் போரால் நடந்த விளைவு
உலகெங்கிலும் உள்ள பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது யுக்ரேன் போர். மேற்கு நாடுகள் மட்டுமின்றி தெற்காசியாவும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொருளாதாரம் நெருக்கடியில் உள்ளது. பல்வேறு காரணங்களால் பாகிஸ்தான் அழிவின் விளிம்பை எட்டியுள்ளது. பல விஷயங்களில் மிகச் சிறப்பாகச் செயல்படும் வங்கதேசத்தின் பொருளாதாரமும் தற்போது சவால்களை எதிர்கொள்கிறது.
அப்படிப் பார்த்தால் தெற்காசிய நாடுகளில் இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் சீராக உள்ளது. இருப்பினும், மற்ற தெற்காசிய நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிட முடியாது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இது குறித்து அஜய் கேடியா கூறுகையில், "தெற்காசியாவைப் பற்றி கூறினால், கடந்த ஓரிரு ஆண்டுகளாக நன்றாக இருந்த பொருளாதாரம்கூட பாதிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். குறிப்பாக யுக்ரேன் போருக்குப் பிறகு, பணவீக்கத்தின் தாக்கம் அனைத்து நாடுகளிலும் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்தியா இத்தகைய தாக்கத்தை பெரிய அளவில் மட்டுப்படுத்தியுள்ளது. எனவே இந்தியாவை இலங்கை, வங்கதேசம் அல்லது பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் பொருளாதாரத்துடன் ஒப்பிட முடியாது. ஏனெனில், இந்த அண்டை நாடுகளை விட இந்தியா மிகப் பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ளது." என்கிறார் அஜய் கேடியா.


மேலும், அருண் குமார் கூறுகையில், "இந்தியாவின் பொருளாதாரத்தை தெற்காசியாவில் உள்ள வேறு எந்த நாட்டுடனும் ஒப்பிட முடியாது. ஏனெனில் இந்தியாவின் உற்பத்தி திறன் இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை விட அதிகமாக உள்ளது." என்கிறார்.
இந்தியா தனது வெளியுறவுக் கொள்கை மற்றும் மூலோபாயத்தின் காரணமாக யுக்ரேன் போரின் தாக்கத்தை பெரிய அளவிற்கு கட்டுப்படுத்த முடிந்தது என்றும் கேடியா கருதுகிறார்.
மேலும் அவர் கூறும்போது, "ஒரு காலத்தில் நாம் மருந்துகளுக்காக பிற நாடுகளைச் சார்ந்திருந்தோம். போலியோ திட்டத்திற்கு வெளியில் இருந்து உதவியைப் பெறுவோம். ஆனால் கோவிட் தொற்றுநோய்களின் போது, இந்தியா தற்சார்பு கொண்ட நாடாக உருவெடுத்தது. கொரோனா தொற்றுநோய் மற்றும் யுக்ரேன் போர் ஆகியவை பொருளாதாரத்தை பாதித்தன. யுக்ரைன் போர் தொடர்பாக இந்தியா நடுநிலை வகித்தது. அதன் பலனை இந்தியா பெற்று வருகிறது.
யுக்ரேன் போர் நீண்ட காலம் நீடிக்கும் என்றும், அதன் தாக்கம் இந்தியாவிலும் இருக்கலாம் எனவும் கூறுகிறார் அருண் குமார்.
"யுக்ரைனில் தற்போது போர் நடந்து வருகிறது. இந்த போருக்கு பின்னால் இரண்டு வல்லரசு நாடுகள் உள்ளன. ஒரு பக்கம் ஐரோப்பாவும் அமெரிக்காவும் யுக்ரேனுடனும், மறுபுறம் ரஷ்யாவும் உள்ளன. இந்த போரில் எந்த தரப்பினரும் தோற்க விரும்பவில்லை. ஒரு தரப்பு தோற்கடிக்கப்பட்டால், அந்த தரப்பு மேலும் தீவிரமான நடவடிக்கையில் இறங்கலாம். இது பொருளாதார நெருக்கடியை மேலும் ஆழப்படுத்தும்." என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
புள்ளிவிவரங்கள் பற்றிய கேள்விகள்
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில், இந்தியா பிரிட்டனை முந்தியுள்ளது. ஆனால் சில ஆய்வாளர்கள் இந்த புள்ளிவிவரங்கள் குறித்து சந்தேகிக்கின்றனர்.
அருண் குமார் கூறுகையில், "2019-20 ஆகிய ஆண்டுகளுக்கு முன்பே, நாம் பிரிட்டனை முந்திவிடுவோம் என்று நினைத்தோம். ஆனால் பின்னர் கொரோனா தொற்றுநோய் காரணமாக, பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. இப்போது பொருளாதாரம் மீண்டும் சரியான பாதையில் உள்ளது என்று அரசு சொல்கிறது. 7.5% வளர்ச்சி விகிதம் உள்ளது. ஆனால் இந்த புள்ளிவிவரங்கள் முறைசார் பிரிவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. அவை முறைசாரா தொழிலாளர்கள் பிரிவைச் சேர்க்கவில்லை." என்கிறார்.
சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகளின் அடிப்படையில், இந்தியாவின் பொருளாதாரம் பற்றிய சமீபத்திய மதிப்பீட்டை ப்ளூம்பெர்க் (Bloomberg) செய்துள்ளது. இது குறித்து கேள்வி எழுப்பிய அருண் குமார், "ஐஎம்எப் தரவுகளின் அடிப்படையில் ஐந்தாவது இடத்திற்கு வந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் சர்வதேச நாணய நிதியத்துக்கு என சொந்த தரவுகள் எதுவும் இல்லை. இந்தியாவில் முறைசார் பிரிவு, அதாவது, கார்ப்பரேட் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஆனால் முறைசாரா பிரிவு பின்னோக்கி செல்கிறது. இதன் அர்த்தம் நமது விநியோகம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. மேல்தட்டு வர்க்கம் நன்றாக இருக்கிறது. அதன் வருமானம் அதிகரித்து வருகிறது. ஆனால் கீழ்தட்டு வர்க்கம் இன்னும் வறுமையில் உள்ளது." என்றும் சந்தேகங்களை எழுப்புகிறார்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் அதிகரித்த பொருளாதார சமத்துவமின்மை
இந்தியாவில் வேலைவாய்ப்புக்கான இணையதளத்தில், 27.5 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். இதில் 94% பேர் மாதந்தோறும் பத்தாயிரம் ரூபாய்க்கும் குறைவாகவே சம்பாதிப்பதாகக் கூறியுள்ளனர்.
இதுகுறித்து, பேராசிரியர் அருண்குமார் கூறுகையில், "உண்மையில், பணவீக்கம் அதிகரித்து வருவதால், அவர்களின் வருமானம் குறைந்துள்ளது. பணவீக்கம் அதிகரிக்கும் போது, முறைசார் ஊழியர்களுக்கு அகவிலைப்படி கிடைக்கும். ஆனால் முறைசாரா பிரிவில், ஊழியர்களுக்கு ஊதியம் அதிகரிக்காது. ஒருபுறம், ஊதியம் பெறுபவர்களின் வாங்கும் திறனும் மேலும் குறைந்திருக்கிறது. மறுபுறம் பணகாரர்களின் செல்வம் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. மொத்தத்தில் ஒட்டுமொத்தமாக நிலைமையும் மோசமாகி வருகிறது." என்கிறார்.
அதேபோல, "இந்தியா பொருளாதாரத்தில் முன்னேறி வருகிறது. ஆனால் அனைவருக்கும் ஒரே மாதிரியான பலன்கள் கிடைப்பதில்லை" என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
"இந்தியாவில் தொழில்துறை உற்பத்தி, சேவைகள், டிஜிட்டல் பொருளாதாரம் அதிகரித்து வருகின்றன. ஆனால், அவற்றின் பலன்கள் எத்தனை பேருக்குச் சென்றடைகின்றன என்பதுதான் கேள்வி. பலரும் பத்தாயிரம் ரூபாய்க்கும் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள். இவர்கள் அன்றாடத் தேவைகளுக்காகப் போராடுகிறார்கள்," என்கிறார் எம்.கே.வேணு.

பட மூலாதாரம், AFP
இந்தியா சந்திக்கவுள்ள சவால்கள்
கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு இந்தியாவில் வேலைவாய்ப்பு நெருக்கடி மிகவும் தீவிரமாகி உள்ளது. இனி இளைஞர்கள் வேலைக்காக வீதியில் இறங்கி போராட வேண்டி இருக்கும். இதுபோல, இந்தியாவின் பொருளாதாரத்திற்கு இன்னும் பல பெரிய சவால்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அருண் குமார் கூறுகையில், "தற்போது இந்தியாவின் பொருளாதாரத்தின் மிகப்பெரிய சவால் வேலையின்மை. இளைஞர்கள் விரக்தியில் உள்ளனர். இந்த இளைஞர்களில் பெரும்பாலானோர் முறைசாரா பிரிவில்தான் வேலை பெற வேண்டும். இப்போது முறைசாரா பிரிவும் நலிவடைந்து வருகிறது. வேலையின்மையும் அதிகரித்து வருகிறது." என்கிறார்.
அதே நேரத்தில், வேலைகளில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருப்பதும் இந்தியப் பொருளாதாரத்தின் முன் உள்ள சவாலாக உள்ளது.
இதுகுறித்து எம்.கே.வேணு கூறுகையில், "உலக விகிதாச்சாரத்துடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் வேலைவாய்ப்பு சந்தையில் பெண்களின் பங்களிப்பு மிகக் குறைவு. 19 சதவீத பெண்கள் மட்டுமே வேலையில் உள்ளனர். உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில், இந்த விகிதம் பத்து சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்காவிட்டால், இந்தியப் பொருளாதாரத்தின் முன் பல சவால்கள் இருக்கும்" என்கிறார் அவர்.
இத்தகைய சவால்கள் இருந்தபோதிலும், இந்தியா நிதி ரீதியாக சரியான பாதையில் செல்கிறது என்று அஜய் கேடியா நம்புகிறார்.
"இந்தியா நிச்சயமாக சவால்களை எதிர்கொள்கிறது. ஆனால் இந்தியா சரியான பாதையில் செல்கிறது என்றே கூறலாம், அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா இதே போன்று முன்னேறும். எனினும், தனிநபர் வருமானத்தில் நாம் இன்னும் பின்தங்கியுள்ளோம். இதற்கு நீண்ட காலம் உழைக்க வேண்டியுள்ளது. ஆனால் இங்கே உள்ள நல்ல விஷயம் என்னவென்றால், நாம் செய்ய வேண்டியது 'இன்னும் நிறைய' இருக்கிறது" என்கிறார் கேடியா.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












