நவீன அறிவியல், பண்டைய அறிவியல்: மத்திய பாஜக அரசின் புதிய முன்னெடுப்பால் சர்ச்சை

பட மூலாதாரம், PIB
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி இந்தி
இந்தாண்டு நவம்பர் முதல் அடுத்தாண்டு மார்ச் வரை, பண்டைய அறிவியல் குறித்து தொடர் கருத்தரங்குகள் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இது நவீன அறிவியலைவிட பண்டைய அறிவியல் சிறந்தது எனக் காட்டுவதற்கான முயற்சி என பரவலாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இஸ்ரோ உள்ளிட்ட இந்திய அரசின் அறிவியல் துறைகள், டேராடூனில் வரும் நவம்பர் 6 முதல் 8ஆம் தேதிவரை 'ஆகாஷ் தத்வா' என்ற பெயரில் கருத்தரங்கு நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கும் நிலையில், இந்த முன்னெடுப்பை பயனற்ற ஒன்று என ஐஎம்எஃப்எஸ் எனப்படும் இந்தியா மார்ச் ஃபார் சைன்ஸ் எனும் அமைப்பு விமர்சித்துள்ளது.
"பஞ்சபூதம் என்ற பழமையான கருத்திலிருந்து நவீன அறிவியல் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் உள்ளது என்ற கருத்து முன்னிறுத்தப்படுவதை நாங்கள் எதிர்க்கிறோம். நவீன அறிவியல் பண்டைய அறிவியலைத் தாண்டிச் சென்றுவிட்டது" என்கிறார் கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயற்பியல் துறையைச் சேர்ந்த சௌமித்ரா பானர்ஜி.
முதல் கருத்தரங்கு தொடர்பான தகவல் குறிப்பேட்டின்படி, ஆகாஷ் (வானம்) பஞ்சபூத கருத்தியலில் முக்கிய ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, நெருப்பு, காற்று, நீர், நிலம் ஆகியவை உள்ளன. இவை கிரேக்க நாகரிகத்திலும் இருந்ததாக ஐஎம்எஃப்எஸ் கூறுகிறது.


"நவீன அறிவியல் 92 சரியான கூறுகளை அடையாளம் கண்டுள்ளது. அதில், இவை அடிப்படையானவைகூட அல்ல" என்கிறார் பானர்ஜி.
'ஆகாஷ் தத்வா' என்பது நிலையான வாழ்க்கை முறைக்கு வழிவகுக்கும் சுதந்திரத்தின் திறன் குறித்து மக்களுக்கு உணர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள சுமங்கலம் என்ற பிரசாரத்தின் ஒரு பகுதியாகும். பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் நிலைத்தன்மை மற்றும் உயிர் வாழ்தலில் முன்னெப்போதும் இல்லாத சவாலை தற்போது எதிர்கொண்டுள்ளன. மனிதர்களின் வசதி மற்றும் பேராசைக்காக இயற்கையைப் பயன்படுத்தும் நவீன மேற்கத்திய அணுகுமுறையே அதிகரித்துவரும் இந்த அச்சுறுத்தலுக்கு காரணம்.
"இயற்கையின் ஐந்து கூறுகளுக்கு இடையே சமநிலையை பராமரிப்பதன் முக்கியத்துவத்தை நம்முடைய பண்டைய அறிவியல் அறிந்திருந்தது. இது அறிவியல்பூர்வமாகவும், கடந்தகால அனுபவத்தின் மூலமும் பெறப்பட்டது" என முதல் கருத்தரங்கு தொடர்பான தகவல் குறிப்பேடு கூறுகிறது.
"பஞ்ச பூதங்கள் என்பது பழமையான கருத்தாகும். இது குறித்து கடந்தகால பாடநூல்களில் கூட குறிப்பிடப்படவில்லை. வாயு என்பது கலவை, நீர் என்பது கூட்டுப்பொருள், பூமியில் ஆயிரக்கணக்கான தாதுக்கள் உள்ளன. வானத்தில் நிறைய வாயுக்கள் உள்ளன என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதை பூதா என்று அழைப்பதை நாங்கள் எதிர்க்கிறோம். இது முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டு காலத்தில் பயன்பாட்டில் இருந்தது. கிரேக்கர்களும் இதை பூதா என்று அழைத்தனர்" என ஐஎம்எஃப்எஸ் அமைப்பின் கர்நாடக ஒருங்கிணைப்பாளர் ஆர்.எல்.மௌரியன் பிபிசி இந்தி சேவையிடம் கூறினார்.
இந்தியாவில் பண்டைய காலத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தை ஐஎம்எஃப்எஸ் மிகவும் பாராட்டுகிறது. அதே நேரத்தில், நவீன அறிவியலில் இருந்து கற்றுக்கொண்டவற்றுடன் நாம் குழப்பிக்கொள்ளக்கூடாது. நவீன அறிவியல் பரப்பப்படுகிறது. அறிவியல் வரலாற்றைக் கற்றுக்கொள்தலின் அடிப்படையிலேயே பண்டைய அறிவை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், தகவல் குறிப்பேட்டில் கூறப்பட்டுள்ளது பண்டைய இந்து அறிவின் மேன்மையை நிலைநிறுத்தும் அறிவியலுக்குப் புறம்பான கருத்துகள்" என்கிறார் பானர்ஜி.
சமஸ்கிருத அறிஞரும் பண்டைய அறிவியல் குறித்து ஆராய்ந்துவரும் சுயாதீன ஆராய்ச்சியாளருமான எம்.ஏ. ஆழ்வார், இத்தகைய கருத்தரங்கு அவசியம் என்று நம்புகிறார். "பஞ்சபூதக் கருத்தியலைப் பொறுத்தவரை உலகக் கண்ணோட்டத்தை நீங்கள் எவ்வாறு பகுப்பாய்வு செய்கிறீர்கள் என்பது மேற்கத்திய மற்றும் இந்திய அறிவின் கண்ணோட்டத்தில் மாறுபட்டது. மேற்கத்திய அறிவியல் இதை மூலக்கூறு அளவில் குறைக்கிறது. ஆனால், இந்தியர்கள் முழு அளவில் அதை ஆய்வுசெய்துள்ளார்கள். முழு அளவுடன் ஒப்பிடும்போது, மூலக்கூறு அளவில் நிறைய வேறுபாடு உள்ளது" என பிபிசி இந்தி சேவையிடம் அவர் கூறினார்.


"இயற்கையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சுனாமி, புவி வெப்பமயமாதல் மற்றும் வேறு சில மாற்றங்களுக்குப் பிறகு நவீன அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் இரு பிரிவினராக உள்ளனர். ஒரு பிரிவினர், இந்திய கலாசாரம், இந்திய அறிவு, இந்திய அறிவியல் ஆகியவற்றை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்கின்றனர். மற்றொரு பிரிவினர், இதை எதிர்க்கின்றனர். அவர்கள் சமஸ்கிருதத்தை இந்துத்துவா என்று நினைக்கிறார்கள். என்னால் ஆங்கிலத்தில் பேச முடியும் என்பதால் நான் கிறிஸ்தவராகிவிடுவேனா அல்லது அலோபதி மருத்துவ முறையைப் பின்பற்றுவதால் நான் கிறிஸ்தவராகிவிடுவேனா? சிலர் யுனானி மருத்துவம் என்னுடைய சளியை குணப்படுத்தும் என்று கூறினார்கள். அது முற்றிலும் இயற்கையானது. அதனால் என்னை இஸ்லாமியராக அடையாளப்படுத்துவீர்களா? நமக்கு பொதுவான பார்வை இருக்க வேண்டும்" என்றும் அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
துருப்பிடிக்காத இரும்புத்தூண்களால் உருவாக்கப்பட்டுள்ள குதுப் மினாரை உதாரணமாக கூறும் ஆழ்வார், "இரும்பினால் உருவாக்கப்பட்டு, நீர் மற்றும் காற்றுடன் தொடர்புகொண்டும் நூற்றாண்டுகளாக இது எப்படி துருப்பிடிக்காமல் இருக்கிறது என்பதை ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நேரம் அது துருப்பிடித்திருக்க வேண்டும், ஆனால் துருப்பிடிக்கவில்லை. பொதுவாக இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளிலேயே இரும்பு துருப்பிடித்துவிடும். இன்றுவரை அதற்கான காரணத்தை ஆராய்ச்சியாளர்களால் கண்டறிய முடியவில்லை" என்கிறார்.
குதுப் மினார் இரும்புத்தூண் துருப்பிடிக்காது. ஏனெனில் இரும்பு உலோகக் கலவையில் அதிக அளவு பாஸ்பரஸ் உள்ளது. அதிகப்படியான பாஸ்பரஸ், இரும்பை எளிதில் உடையக்கூடியதாக மாற்றாது என்கிறார் பானர்ஜி. அதேபோல, பண்டைய காலத்தில் இந்தியா உலோகவியலை உருவாக்கியது என்ற ஆழ்வாரின் கருத்தை மறுக்கும் அவர், உலோகவியல் இடைக்காலத்திற்கு உரியது என்கிறார்.
பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சையின் தலைவராக அறியப்படும் சுஷ்ருதா, உடலின் ஒரு பகுதியில் இருந்து எடுத்த தோலை மற்றொரு பகுதியில் ஒட்டுவதற்கான நுட்பமான அறுவை சிகிச்சையில், அவருக்கு உதவிய உபகரணங்கள் குறித்தும் ஆழ்வார் மேற்கோள் காட்டுகிறார். "எந்த வகையான உலோகம் இந்த ஒட்டுதலுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதற்கு சுஷ்ருதாவின் வரலாற்றில் தனி அத்தியாயம் உள்ளது. இது இந்தியர்களின் படைப்பு. இது அமெரிக்கர்களால் அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பாஜக அல்லது ஆர்எஸ்எஸ் தாக்கம் கொண்டிராதவர்கள்" என்றும் ஆழ்வார் கூறுகிறார்.

பட மூலாதாரம், PIB
"விஞ்ஞான பாரதி ஓர் ஆர்எஸ்எஸ் அமைப்பு. ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் விஞ்ஞானிகளுக்கு அறிவியல் பாடம் நடத்த முயல்கின்றனர்" என்கிறார் மௌரியன்.
"உங்களால் பஞ்சபூதத்தை நிராகரிக்க முடியாது. காற்று இல்லாமல் உங்களால் சுவாசிக்க முடியுமா? ஒரு சில நொடிகளிலேயே நீங்கள் இறந்துவிடுவீர்கள். அதேபோல, பூமி, காற்று, நீர் இல்லாமலும் உங்களால் உயிர் வாழ முடியுமா? வேதங்களின்படி, நம் உடல் ஐந்து கூறுகளால் ஆனது. உணவு என்பது இந்தப் பூமியின் விளைபொருள். இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?" என ஆழ்வார் கேள்வியெழுப்புகிறார்.
"நவீன அறிவியலைவிட பண்டைய அறிவியல் உயர்ந்தது என்று நீங்கள் நம்பினால் நாம் சரியாக அறிவியலைப் படிக்கவில்லை என்று அர்த்தம்" என்கிறார் பானர்ஜி.
இந்தக் கருத்தரங்கு குறித்து இஸ்ரோ செய்தித்தொடர்பாளர் என் சுதீர் குமார் பிபிசி இந்தி சேவையிடம் கூறுகையில், "இது அரசாங்கத்தின் முடிவு. ஆகாஷ் தத்விக்கு விண்வெளித் துறை பொறுப்பு. விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் எங்களை அறிவுறுத்தியுள்ளது" என்றார்.
நெருப்பு, காற்று, நீர், நிலம் என ஒவ்வொரு தலைப்பிலும் நடைபெறும் கருத்தரங்குகள் நான்கு நகரங்களில் வெவ்வேறு துறைகளால் நடத்தப்பட உள்ளன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













