தமிழ்நாடு அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் எப்படிச் செயல்படுகின்றன?

- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் 2007ஆம் ஆண்டிற்குப் பிறகு அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சியளிக்கும் பயிற்சிப் பள்ளிகள் மீண்டும் செயல்பட ஆரம்பித்துள்ளன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயங்க ஆரம்பித்துள்ள இந்த பள்ளிகள் எப்படிச் செயல்படுகின்றன? ஒரு நேரடி ரிப்போர்ட்.
சென்னை திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி கோவிலை ஒட்டிய துளசிங்கப்பெருமாள் கோவில் தெரு. அங்குள்ள பாரதியாரின் இல்லத்திலிருந்து சில கட்டடங்கள் தள்ளி ஒரு பழைய பாதை. அதில் சென்றவுடன் வலது பக்கம் கண்ணில் படுகிறது அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி மாணவர்களின் விடுதி.
அது ஒரு பள்ளி விடுதிதான் என்றாலும், அங்கு காலை நேரத்தில் தென்படும் காட்சிகள் வித்தியாசமானவை. சந்தியா வந்தனம் செய்வது, திருமண் இட்டுக்கொள்வது என பரபரப்பாக இருக்கிறார்கள் மாணவர்கள். பிறகு புறப்பட்டு, அருகிலேயே இருக்கும் மண்டபத்தை வந்தடைகிறார்கள்.
அங்கிருக்கும் ஆசிரியர் கோகுல் தனது பாடத்தைத் துவங்குகிறார். வைணவப் பாடல்களும் மந்திரங்களும் அந்த மண்டபத்தை நிறைக்கின்றன. ஒரு மாணவர் தான் தங்கியிருக்கும் இடத்திலிருந்து, அந்தப் பள்ளிக்குவர பத்தடி நடந்தால் போதும். ஆனால், இந்தப் பத்தடியை அந்த மாணவர் கடக்கும்போது, பல ஆண்டுகாலமாக நடந்துவந்த மோதலை, போராட்டத்தை அவர் கடக்கிறார்.
தமிழ்நாட்டில் நிறுவனமயமாக்கப்பட்ட கோவில்களில், அர்ச்சகர் பணி நியமனம் என்பது எல்லோராலும் பெறக்கூடிய ஒன்றல்ல. அந்தந்தக் கோவில்களில் வழிவழியாக அர்ச்சனை செய்துவந்தவர்களே இந்தப் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள். எல்லா சாதியினரும் கோவில்களில் இறைவனின் திருமேனியைத் தொட்டு பூசை செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கருத்து நீண்ட காலமாகவே வலியுறுத்தப்பட்டுவந்த நிலையில், 1970களின் துவக்கத்தில் இந்தப் போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாக அறிவித்தார் திராவிடர் கழகத் தலைவர் பெரியார்.
இதையடுத்து, இதற்காக ஒரு சட்டத்தை இயற்றப்போவதாகச் சொன்னார் அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதி. இதற்குப் பிறகு, பல தடைகளைத் தாண்டி 2006ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக்கப்படலாம் என்ற சட்டம் இயற்றப்பட்டது.
இதற்கென அரசாணை ஒன்றும் வெளியிடப்பட்டது. அந்த அரசாணையின் அடிப்படையில், நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு அர்ச்சக மாணவர்களின் தகுதி, பாடத்திட்டம், பயிற்சிக் காலம், கோவில்களில் நடைபெறும் பூஜை முறைகள் ஆகியவற்றை ஆராய்ந்து பரிந்துரைகளை அளித்தது.
இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் சென்னை பார்த்தசாரதி கோவில், திருவரங்கம் ஆகிய இடங்களில் வைணவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளிகளும் மதுரை, திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர் ஆகிய இடங்களில் சைவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளிகளும் உருவாக்கப்பட்டன.

இவர்களுக்கான பயிற்சிகள் 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்டது. அடுத்த 13 மாதங்களில் தமிழ் மந்திரங்கள், பூஜை முறைகள், கோவில்களின் பழக்க வழங்கங்கள் ஆகியவை தொடர்ந்து கற்பிக்கப்பட்டன. ஆனால், இந்தப் பயிற்சிகள் நடப்பது எளிதாக இருக்கவில்லை. பல இடங்களில் ஆகமங்களைக் கற்றுத்தர யாரும் முன்வரவில்லை. பிறகு பல்வேறு தடைகளைத் தாண்டி, இந்த பயிற்சி அர்ச்சகர்கள் தங்கள் வகுப்புகளை முடித்தனர். இவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இதற்குள் இந்த விவகாரம் தொடர்பாக, மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள ஆதி சிவாச்சாரியார்கள் சங்கம் நீதிமன்றத்தை அணுகி, பணி நியமனத்திற்கு தடை உத்தரவைப் பெற்றது. இந்த வழக்கின் முடிவின் அடிப்படயில்தான் அனைத்து ஜாதி அர்ச்சகர்களுக்கான பணி நியமனம் இருக்குமெனச் சொல்லப்பட்டது. இந்த வழக்கில் 2015ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆகமங்களின்படி அர்ச்சகர்களை நியமிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், மதுரையில் உள்ள ஒரு சிறிய ஐயப்பன் கோயிலில் ஓர் அர்ச்சகர் பயிற்சி மாணவருக்கு வேலை தரப்பட்டது. ஆனால், முக்கியமான ஆகமக் கோவில்களில் இந்த மாணவர்களுக்குப் பணி கிடைக்கவில்லை.
அது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் அப்போதைய தமிழ்நாடு அரசு எடுக்கவில்லை.
2021ல் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, 2008ல் பயிற்சியை முடித்த மாணவர்களில் 28 பேரை பல்வேறு கோவில்களில் அரசு நியமித்தது.
இதற்குப் பிறகு மீண்டும் அனைத்து சாதியினருக்கான அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை துவங்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்தது. கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி மேம்படுத்தப்பட்ட 6 அர்ச்சகர் பயிற்சிப்பள்ளிகள் உள்பட 9 பயிற்சிப் பள்ளிகள் முதலமைச்சரால் துவக்கி வைக்கப்பட்டன.
மதுரை, சென்னை, திருவரங்கம், திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர் ஆகிய இடங்களில் அர்ச்சகர்களுக்கான பயிற்சிப்பள்ளிகளும் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஓதுவார் பயிற்சிப் பள்ளியும் கும்பகோணம் நாகநாத சுவாமி கோவிலில் தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சிப் பள்ளியும் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திவ்யப் பிரபந்தப் பாட சாலையும் துவக்கப்பட்டன.
இந்த ஒன்பது பள்ளிகளிலுமே பயில்பவர்களுக்கு மாதம் 3,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுவதோடு, அவை உண்டு - உறைவிட பள்ளிகளாகவும் செயல்படும்.


தற்போது மீண்டும் துவங்கப்பட்ட 6 பயிற்சிப் பள்ளிகளிலும் மொத்தமாக 151 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். இந்த ஆறு பயிற்சிப் பள்ளிகளில் நான்கு பள்ளிகள் சைவ ஆகமங்களைக் கற்றுத் தரும் பள்ளிகளாகவும் 2 பள்ளிகள் (திருவரங்கம், திருவல்லிக்கேணி) வைணவ ஆகமங்களைக் கற்றுத் தரும் பள்ளிகளாகவும் செயல்படுகின்றன. இதில் திருவரங்கப் பள்ளியில் பாஞ்சராத்ர முறைப்படியும், திருவல்லிக்கேணியில் வைகாணச முறைப்படியும் ஆகமங்கள் கற்றுத்தரப்படுகின்றன.
கடந்த 2007ஆம் ஆண்டில் முதல் முறையாக இந்த பயிற்சிப் பள்ளிகள் துவங்கப்பட்டபோது, 240 பேர் தேர்வுசெய்யப்பட்டு, 207 பேர் அந்தப் பயிற்சிகளை முடித்தனர். ஆனால், இந்த முறை மொத்தமாகவே 151 பேர் மட்டுமே தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். அறிவிப்பு வெளிவந்த பிறகு, சேர்க்கைக்கான காலம் குறைவாக இருந்ததும், முந்தைய பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சியை முடித்தவர்களுக்கு பணிகள் கிடைப்பதில் இருந்த சிரமங்களும் இந்த சேர்க்கைக் குறைவுக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இருந்தபோதும் இந்த முறை பயிற்சியை சிறப்பாக நடத்திமுடித்துவிட வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறது அரசு.
இந்த பயிற்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆகமங்கள், ஆன்மீக இலக்கியங்கள் மட்டுமல்லாமல், அர்ச்சகராக இருப்பவர் ஒரு நாளில் கடைப்பிடிக்க வேண்டிய அனைத்தும் கற்பிக்கப்படுகின்றன.
"நித்ய அனுஷ்டானங்களை முதலில் முடிக்க வேண்டும். அதற்குப் பிறகு சன்னிதியை எப்படித் திறக்க வேண்டும், பிறகு கோ பூஜை, வட்டில் ஆவாகனம், சரீர சுத்தி, இறைவனுக்கான தீர்த்தத்தை எப்படிக் கொண்டுவருவது, அதற்கான பாத்திரங்களை எடுத்துச் செல்லும்போது, தீர்த்ததைப் பிடிக்கும்போது, திரும்பக் கொண்டுவரும்போது சொல்லவேண்டிய மந்திரங்கள் என்ன, நித்திய அனுஷ்டானங்களில் இருந்து உற்சவ கால பூஜைகள் எப்படி மாறுபடுகின்றன என்பது, இறைவனை எப்படி சயன அறைக்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்பது போன்ற அனைத்தும் கற்பிக்கப்படுகின்றன" என்கிறார் இங்கு ஆசிரியராக இருக்கும் கோகுல கிருஷ்ணன். இவர் 2007ஆம் ஆண்டில் முதன் முதலில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி துவங்கப்பட்டபோது அதில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலே சொன்னவை தவிர, சைவ பயிற்சிப் பள்ளியாக இருந்தால், சைவ ஆகமமும் வைணவப் பயிற்சிப் பள்ளியாக இருந்தால் வைணவ ஆகமங்களும் கற்றுத்தரப்படுகின்றன. திருவல்லிக்கேணி கோவிலில் வைகாணச ஆகமம் முதன்மையாகவும் பாஞ்சராத்ர ஆகமம் ஓரளவுக்கும் கற்றுத்தரப்படுகிறது.
பிறகு நித்திய அனுஷ்டான பிரபந்தங்கள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. அதன் பிறகு, எந்தக் கோவில்களைச் சார்ந்து இந்த பயிற்சிப் பள்ளிகள் இயங்குகின்றனவோ அந்த கோவில்களின் வரலாறு கற்றுக்கொடுக்கப்படுகிறது. முக்கியமான திவ்யதேசங்களைப் பற்றி, ஆழ்வார்களைப் பற்றி, ஆச்சார்யர்களைப் பற்றியெல்லாம் கற்பிக்கப்படும். மேலும், கிரந்த எழுத்துகளை எழுதப்படிக்க சொல்லிக்கொடுக்கப்படுகிறது. ஓரளவுக்கு சமஸ்கிருதமும் கற்பிக்கப்படுகிறது.
இந்த பயிற்சிப் பள்ளிகளில் அனைத்து சாதியினரும் இணைந்து பயிற்சி பெறலாம் என்றாலும், இதில் பயிற்சி பெறுவோர் பெரும்பாலும் பிராமணர் அல்லாதாராகவே இருக்கின்றனர். திருவல்லிக்கேணி பயிற்சிப் பள்ளியைப் பொறுத்தவரை, 7 மாணவர்கள் படிக்கிறார்கள். இதில் அனைவருமே பிராமணரல்லாதவர்கள். பட்டியலினத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்களும் இதில் படிக்கின்றனர்.

இந்த அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் யக்ஞோபவீதம் எனப்படும் பூணூலை அணிகிறார்கள். இங்கு படிக்கும் மாணவர்கள் ஏழு பேருமே விரும்புவதால், விரைவில் இவர்களுக்கு 'தாப சமஸ்காரம்' (வலது தோளில் பெருமாளின் சக்கரத்தையும் இடது தோளில் சங்கையும் சூடு செய்யப்பட்ட சின்னங்களால் நிரந்தரமாக பொறிப்பது) செய்யப்படவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தியாகராஜன் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை விவசாயியாக இருக்கிறார். ஆன்மீகத்தில் உள்ள ஆர்வத்தினாலேயே இந்தப் பள்ளியில் சேர்ந்ததாகச் சொல்கிறார் தியாகராஜன். "முதலில், பெற்றோர் புரிந்துகொள்ளவில்லை. ஆனால், எல்லோரும் அர்ச்சகராகலாம் என்பது எனக்கு ஈர்ப்புடையதாக இருந்தது. ஆகவே இங்கு வந்து சேர முடிவுசெய்தேன். ஆரம்பத்தில் சிரமமாகத்தான் இருந்தது. பிறகு, ஆசிரியர் வந்து வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே வந்து நானே படிப்பேன். பிறகு இந்த நடைமுறைகள் பழகிவிட்டன" என்கிறார் தியாகராஜன்.

ஆனால், கடந்த முறை அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் படித்து முடித்தவர்களை கோவில்களில் நியமிப்பது என்பது அரசுக்கு பெரும்பாடாக இருந்தது. பல ஆண்டு காலத்திற்கு வழக்குகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இப்போது, இந்து அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் நியமனம் கிடைக்குமென நினைக்கிறாரா தியாகராஜன். "கிடைக்குமென நினைக்கிறேன். இல்லாவிட்டால் தனியார் கோவில்கள் இருக்கின்றன. அது தவிர, கோவில் கும்பாபிஷேகம், பூஜைகள் போன்றவற்றை நடத்த முடியும்" என நம்பிக்கையோடு சொல்கிறார் அவர்.
இதே நம்பிக்கையை எதிரொலிக்கிறார் இங்கு படிக்கும் சென்னையைச் சேர்ந்த மாணவரான ஹரி பிரசாந்த். "அரசே இந்த வாய்ப்பை அளித்திருக்கிறது என்பதால், அரசே வேலை வாய்ப்பை வழங்குமென நினைக்கிறேன். இல்லாவிட்டால், ஆகமங்களைக் கடைப்பிடிக்கக்கூடிய வேறு கோவில்களில் பணியாற்றுவேன்." என்கிறார் அவர். ஒரு அர்ச்சகருக்குத் தேவையான எல்லாவற்றையும் முறைப்படி தாங்கள் படிப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
பல்வேறு பின்னணியில் இருந்து இங்கு வந்து சேரும் மாணவர்களுக்கு அர்ச்சகர்களாக பயிற்சி தருவது எவ்வளவு சவாலான காரியமாக இருக்கிறது? "ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு பின்னணியில் இருந்து வருகிறார்கள். முதலில் சிரமமாகத்தான் இருக்கும். ஆனால், போகப்போக அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். ஏனென்றால், அடிப்படையில் அவர்களுக்கு ஆன்மீக நாட்டம் இருக்கிறது. ஊரில் இருக்கும்போதே ஏதோ ஒரு வகையில் கோவில்களோடு சம்பந்தப்பட்டவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆகவே பெரிய சவால் இல்லை" என்கிறார் கோகுல்.

பொதுவாக இது மாதிரியான அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் தகுந்த மாணவர்களைச் சேர்ப்பதைவிட சிக்கலான விஷயமாக இருப்பது, தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் கிடைப்பது. பிராமணரல்லாதவர்களுக்கு இது போன்ற நடைமுறைகளைக் கற்றுக்கொடுக்க, ஏற்கனவே கோவில்களில் பணியாற்றிவரும் பிராமண அர்ச்சகர்கள் வெகு அரிதாகவே முன்வருகிறார்கள்.
குறிப்பாக, வைகான ஆகம முறையை ஒருவர் தெரிந்துகொள்ள வேண்டுமனால், அவர் ஏற்கனவே ஒரு கோவிலில் வைகாணச சம்பிரதாயப்படி அர்ச்சகராக இருக்கும் ஒருவருக்கு பிறப்பதன் மூலமே தெரிந்துகொள்ள முடியும். இதற்கான புத்தகங்களும் அரிது. இந்த நிலையில்தான், ஏற்கனவே அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பயின்ற கோகுல கிருஷ்ணன் போன்றவர்கள், மேலும் தங்கள் தகுதியை மேம்படுத்திக்கொண்டு, இதனைக் கற்றுக்கொடுக்க வந்திருக்கிறார்கள். வைகாணசத்திற்கான பாடங்களையும் ஓரளவுக்கு இவர் தொகுத்திருக்கிறார்.
"மாணவர்கள் ஆர்வத்துடன் எல்லாவற்றையும் கற்றுக்கொள்கிறார்கள். இந்தப் பள்ளிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். அப்போது கூடுதல் மாணவர்கள் வருவார்கள். இவற்றைக் கல்லூரிகளாகத் தரம் உயர்த்தலாம். தொடர்ந்து இது நடக்கும் பட்சத்தில் இது சாத்தியமாகும்" என்கிறார் இந்தப் பள்ளியின் முதல்வரான சிவராமன்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













