தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை என்ன சொல்கிறது?

கோப்புப் படம்

பட மூலாதாரம், FACEBOOK/GETTY IMAGES

படக்குறிப்பு, கோப்புப் படம்

தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் 2018ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த பொதுமக்கள் போராட்டத்தில், 13 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை கடந்த மே மாதம் 18ஆம் தேதி தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணை ஆணையம், துப்பாக்கி சூட்டின் விளைவாக இறப்பு, காயங்கள் ஏற்பட்டதற்கான காரணங்கள், சூழ்நிலைகள், சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு சரியான வகையில் காவலர் படை பயன்படுத்தப்பட்டதா, துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன்பாக உரிய அனைத்து முன்னெச்சரிக்கை நடைமுறைகளும் கடைபிடிக்கப்பட்டனவா என்பதைக் கண்டறியவும் இதுபோன்ற நிகழ்வுகள் வருங்காலத்தில் மீண்டும் நிகழாமல் இருக்க தகுந்த நடவடிக்கைகளை அரசுக்குப் பரிந்துரைக்கவும் அமைக்கப்பட்டது.

வன்முறைக்கு வாய்ப்பு - முன்பே கிடைத்த தகவல்

போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை திட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை தகவல்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மாநில நுண்ணறிவு துறை அனுப்பியுள்ளது. இது திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் (டிஐஜி) கபில்குமார் சராட்கர், காவல்துறை தென் மண்டல தலைவர் (ஐஜி) சைலேஷ்குமார் யாதவ் ஆகியோரின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டது.

அதுமட்டுமின்றி அப்போதைய நுண்ணறிவு துறை தலைவர் (ஐஜி) கே.என்.சத்யமூர்த்தி அப்போதைய முதலமைச்சரை நேரில் சந்தித்து மீன் பிடி தடைக்காலம் இருப்பதால் மீனவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்வதைத் தடுக்கும் பொருட்டு ஒரு பேச்சுவார்த்தை நடத்த வேண்டியதன் அவசியத்தையும் கூறியுள்ளார்.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

இது தொடர்பாக தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போதைய முதல்வர் கூறியிருந்தாலும் எந்த ஆக்கபூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை கூறுகிறது.

"மே 22 அன்று, உயிரிழப்புகள், சொத்துகள் அழிக்கப்பட்டது போன்ற துரதிருஷ்டவசமான சம்பவங்கள் நடைபெறும் வரை நுண்ணறிவு தகவல்கள் குறித்து தனக்குத் தெரியாது என்று மாவட்ட ஆட்சியர் தனது சாட்சியத்தில் கூறியிருப்பது முற்றிலும் வியப்பை ஏற்படுத்துகிறது" என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

காணொளிக் குறிப்பு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு - நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை என்ன சொல்கிறது?

"ஸ்டெர்லைட் போராட்டத்தில் மே 13 முதல் 22 வரை நடந்த படிப்படியான சீரான வளர்ச்சியை எடைபோட்டு யுக்திகளைக் கையாண்டு குழப்பம் விளைவிக்கும் நபர்களை அடையாளம் கண்டு கைது நடவடிக்கையை மேற்கொண்டிருந்தால் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட வேண்டுமென்ற போராட்டக்காரர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டிருக்கும்.

ஆனால், அதை முறியடிக்கும் வகையில் அணுகுமுறை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பது ஆணையத்தின் முன் வைக்கப்பட்ட சான்றுகளில் தெரிய வருகிறது. இது காவல்துறையின் குறைபாடு, மாவட்ட நிர்வாகத்தின் செயலின்மை, அலட்சியம் என்பது தெளிவாகத் தெரிகிறது."

காவல்துறையினர் வீடு புகுந்து தாக்கியுள்ளனர்

"துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த நாளுக்கு முந்தைய நாளான மே 21 முதல் மே 23 வரை பொதுக்கூட்டம் நடத்தவோ, 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடவோ, ஊர்வலமாகச் செல்லவோ கூடாது என்று மாவட்ட நிர்வாகம் பிரகடனம் செய்தது.

தமிழ்நாடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

ஆனால், அந்த பிரகடனம் முறையாக மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டதா என்பது கேள்விக்குரியதாக உள்ளது," என்கிறது அறிக்கை.

மேலும், தடை உத்தரவை பொது மக்களுக்கு தாமதமாக பிரகடனம் செய்திருப்பதாலும் பொதுமக்களுக்கு அதை முறையாக பிரகடனம் செய்யாததாலும், தடை உத்தரவை மக்கள் மீறியதாகச் சொல்வதே தவறு என்கிறது நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை.

Banner

ஆணையத்தின் முக்கிய முடிவுகள்

  • காவல்துறை நிச்சயமாக வரம்பை மீறியுள்ளது. அதன் நடைமுறையில் செய்யத்தக்கனவற்றைச் செய்யாமல் செய்யத் தகாதவற்றைச் செய்திருக்கிறது என்று மட்டுமே ஆணையம் முடிவுக்கு வரவேண்டியுள்ளது.
  • குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்குக் குந்தகமின்றி, 17 காவல்துறை அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும் அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மூன்று வருவாய்த்துறை அலுவலர்கள் மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்கவும் ஆணையம் பரிந்துரைத்தது.
  • விசாரணை ஆணையம் இறந்தவர்களின் உறவினர்கள்/சட்டபூர்வ வாரிசுகளுக்கு 50 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க, காயமடைந்தவருக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க பரிந்துரைத்தது.
  • உயிரிழந்த ஜஸ்டின் செல்வமிதீஷின் உயிரிழப்பை, துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 நபர்களுக்கு இணையாகப் பாவித்து அவர் குடும்பத்தாருக்கு அரசு சார்பில் தகுந்த நிவாரணத்தை வழங்க வேண்டும். அவரது தாயாருக்கு பணி வழங்கவும் பலத்த காயம் அடைந்த காவலர் மணிகண்டனுக்கு மருத்துவ வசதிக்கான நிவாரணம் வழங்கவும் ஆணையம் பரிந்துரைத்தது.
Banner

அதேநேரத்தில், ஸ்டெர்லைட் ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக தூத்துக்குடி நகரின் முக்கியப் பகுதியான எஸ்.ஏ.வி பள்ளி மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதித்து இருப்பதும் விசித்திரமாகவும் புதுமையாகவும் உள்ளது. இது தடை உத்தரவு குறித்த குழப்பத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ்நாடு ஸ்டெர்லைட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

எஸ்.ஏ.வி பள்ளியில் கூடுவதற்கு அனுமதி அளித்ததால் தான் அங்கு ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்காகக் கூடினார்கள். தடை உத்தரவு பிரகடனம் காலதாமதமாகப் பிறப்பிக்கப்பட்டது, முறையாகப் பிரகடனம் செய்யாதது ஆகியவற்றின் மூலம் தடை உத்தரவை மீறிச் செல்ல வேண்டிய நிலையை மாவட்ட நிர்வாகமே மக்களுக்கு ஏற்படுத்தி விட்டது. ஆணையத்தால் விசாரிக்கப்பட்ட கைது செய்யப்பட்ட நபர்களின் சாட்சியங்களில் அனைவரும் ஒருமித்து, "மாவட்ட ஆட்சியர் தடை உத்தரவு பிறப்பித்தது தெரியாது" என்று கூறியுள்ளனர்.

தூத்துக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் சாட்சியத்தில், "தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மே 21ஆம் தேதி 9 மணிக்கு மேல் 144 தடை உத்தரவை பிறப்பித்தார். தடை உத்தரவு பிறப்பித்த விவரம் அவருக்கு மறுநாள், அதாவது மே 22 அன்று காலை 6 மணிக்குத்தான் அவருடைய முகாம் எழுத்தர் உத்தரவின் நகலைக் கொடுத்தபோது தெரிய வந்தது" எனக் கூறியுள்ளார்.

சம்பவத்துக்குப் பிறகு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட போது, படித்த தகுதி வாய்ந்த இளைஞர்களை மட்டுமே குறி வைத்து கைது செய்து, சிறையில் அடைத்திருக்கிறார்கள். அகால நேரத்தில் வீடுகளின் உள்ளே இருந்த இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்து, இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு போட்டிருக்கின்றனர்.

சீருடை அணிந்த மற்றும் அணியாத காவலர்கள், வீட்டிற்குள் நுழைந்து கைது செய்து, கைது செய்யப்பட்டவர்கள் தாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை என்று விளக்கம் எதுவும் தரக்கூட வாய்ப்பளிக்காமல் பல வகையில் தாக்கி இருக்கின்றனர்.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

மே 22: துப்பாக்கிச் சூடு சம்பவம்

மே 22ஆம் தேதி, மதியம் 12 முதல் 1:30 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் உள்ளேயும் வெளியேயும் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக சாட்சியத்தின் வாயிலாக அறிய முடிகிறது. மேலும் ஒரு துப்பாக்கிச் சூடு 3 மணியளவில் திரேஸ்புரத்தில் நடந்துள்ளது. இந்த இரண்டிலும் 12 பேர் இறந்துள்ளனர். அதில் ஒருவர், துப்பாக்கிச் சூடு காயங்களாலும் மிதிபட்டு நசுங்கியதாலும் இறந்திருக்கிறார்.

மறுநாள் மே 23 அன்று அண்ணா நகரில் துப்பாக்கிச் சூடு நடைபெற்று, இளைஞர் ஒருவர் அந்தக் காயங்களால் இறந்திருக்கிறார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் நிவாஸ் மாறன், விசாரணையின்போது 9 காயம்பட்ட நபர்கள் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டதாகவும் அனைவரும் இறந்த நிலையில் கொண்டு வரப்பட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.

இரண்டு நபர்கள் கடுமையான காயங்களுடன் கொண்டு வரப்பட்டதாகவும் அவர்கள் அனுமதிக்கப்பட்ட பிறகு அன்றே இறந்து விட்டார்கள் என்றும் மருத்துவர் நிவாஸ் மாறன் விசாரணையில் கூறியுள்ளார். மேலும், அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட 12 நபர்களும் இறந்துவிட்டர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த 12 நபர்களும் 108 ஆம்புலன்ஸில் கொண்டு வரப்படவில்லை. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் நல்லதம்பி தனியார் மருத்துவமனைக்குச் சொந்தமான தனியார் ஆம்புலன்ஸில் கொண்டு வரப்பட்டுள்ளார்கள். இறந்தவர்கள் போக, கடுமையான காயங்களோடு மரணத்தின் பிடியில் இருந்து தப்பித்து உயிர் பிழைத்தவர்களும் தனியார் ஆம்புலன்ஸில் தான் கொண்டு வரப்பட்டார்களே தவிர, '108' ஆம்புலன்ஸில் கொண்டு வரப்படவில்லை.

"எந்தப் பக்கமிருந்தும் உதவி வருவதற்குரிய அறிகுறிகள் எதுவும் இல்லா நிலையில் காவல் துறை, வருவாய்த்துறை மற்றும் அரசு இயந்திரம் முற்றிலும் வெறும் பார்வையாளராக இருந்த நேரத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் மற்றும் தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஆகியோர் புரிந்த மனிதாபிமான சேவைகள், ஆணையத்தின் சிறந்த பாராட்டைப் பெறத் தகுந்தவை."

கோப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

"போராட்டக்காரர்களைத்துரத்தியபடி துப்பாக்கியால் சுட்டனர்"

ஆணையத்திடம் சாட்சிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளைவில் நடந்த துப்பாக்கிச்சூடு பற்றிக் கூறுவது யாதெனில்,

"ஐஜி சைலேஷ்குமார் யாதவ், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அதன் தலைவாயில் வழியாக நுழைந்தபோது போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்தின் மீது கற்களை எறிந்து, கண்ணாடிகளுக்குச் சேதம் ஏற்படுத்தினார்கள். காவல்துறையினர் அவர்களைத் துரத்தத் தொடங்கினர். அப்போது மற்றொரு கூட்டத்துடன் சேர்ந்து காவல்துறையினர் மீது கற்களை எறிந்தனர்.

அப்போது டிஐஜி அறிவுரைகளின்படி, அவருடைய 'கன்மேன்' சங்கர், ஐந்து முறை 9 மி.மீ பிஸ்டலில் போராட்டக்காரர்களின் மீது சுட்டார். ஆய்வாளர் ரென்னீஸ் அவருடைய பிஸ்டலுடன் ஓடிக்கொண்டு, போராட்டக்காரர்களைச் சுட்டார். ஐந்து நிமிடங்கள் கழித்து, வெள்ளை வேட்டியும் வெள்ளை சட்டையும் அணிந்த ஒரு நபர் ஆவின் பூத்திற்கு எதிரே துப்பாக்கி சூடு காயங்களுடன் கிடந்தார். பிறகு அவர் 'கந்தையா' என்று அடையாளம் உறுதி செய்யப்பட்டது. வளைவிற்கு மேலே சிவப்பு சட்டை அணிந்த ஒருவர் காயம்பட்டுக் கிடந்தார். அவர் 'தமிழரசன்' என அடையாளம் காணப்பட்டார்."

டிஐஜி அளித்துள்ள சாட்சியத்தின்படி, துப்பாக்கிச் சூட்டில் உடனடியாக ஐந்து நபர்கள் இறந்து விட்டனர். ஐஜி சைலேஷ்குமார் யாதவ் இருந்தும் அவருடன் சிறப்பு நிர்வாக நடுவர் சேகர் எந்தவித ஆலோசனையோ பேச்சுவார்த்தையோ நடத்தவில்லை. டிஐஜி பொறுப்புணர்வு இல்லாமல் மனம் போன போக்கில் செயல்பட்டதாகத் தெரிகிறது.

வீடியோ காட்சிகளின் மூலம், கார்த்திக், ஸ்னோலின் மற்றும் ரஞ்சித்குமார், ஆட்சியர் அலுவலகத்திற்குள் காவல்துறையினரால் துப்பாக்கியால் சுடப்பட்டு விழுந்தனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதலாவது துப்பாக்கிச் சூடு 11:57 மணிக்கும் 12.06 மணிக்கும் இடையே நடைபெற்றுள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய அனைவரின் மரணமும் முதலாவது துப்பாக்கிச் சூட்டில் பாய்ந்த தோட்டா காயங்களால் ஏற்பட்டுள்ளது என்று உறுதியாக முடிவு செய்யலாம் என்று ஆணையம் கூறுகிறது.

Banner
காணொளிக் குறிப்பு, சிதம்பரம்: 13 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் – போலீஸ் கண்டுபிடித்தது எப்படி?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: