கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கு எப்போது, எப்படி அகற்றப்படும்?

குப்பை மேடு

கோவையின் சர்ச்சைக்குரிய வெள்ளலூர் குப்பைக் கிடங்கை அகற்றும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் ரீதியாகவும், அப்பகுதியில் இருப்பவர்களுக்கு உடல்நல ரீதியாகவும் அச்சுறுத்தல் உண்டாவதாக விமர்சனத்துக்கு உள்ளான இந்தக் குப்பைக் கிடங்கு எப்போது முழுவதுமாக அகற்றப்படும்?

கோவை மாநகர் வெள்ளலூரில் மாநகராட்சி குப்பை கிடங்கு இயங்கி வருகிறது. கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் தினம்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் வெள்ளலூர் கிடங்கில் தான் குவிக்கப்படுகின்றன. இதனால் வெள்ளலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீர் மற்றும் காசு மாசுபாடு ஏற்பட்டு மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக நீண்ட காலமாக புகார் இருந்து வந்தது.

இந்த நிலையில் வெள்ளலூரில் இயங்கி வரும் குப்பை கிடங்கை அகற்ற வேண்டும் என மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈசுவரன் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் கடந்த 2013ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் 2018ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

2018 தீர்ப்பு என்ன சொல்கிறது?

அந்த வழக்கின் விசாரணையின்போது வெள்ளலூரில் சேர்ந்துள்ள குப்பைகள் படிப்படியாக அகற்றப்படும் அதற்கு மாறாக மாநகராட்சியில் 65 இடங்களில் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு குப்பைகள் சேகரிக்கப்படும். அதில் 20 மையங்கள் அமைப்பதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது என மாநகராட்சி நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

இந்த வழக்கில் தீர்ப்பளித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வெள்ளலூரில் குப்பை கிடங்களில் உள்ள பழைய குப்பைகளை 12 மாதங்களுக்குள் அகற்ற வேண்டும்.

மாநகராட்சி நிர்வாகம் அமைப்பதாக கூறியிருக்கும் சுத்திகரிப்பு மையங்களை நான்கு மாதங்களுக்குள் அமைக்க வேண்டும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் திடக்கழிவு மேலாண்மை கண்கானிப்பு குழு இந்த நடவடிக்கைகளை கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

'15.5 லட்சம் க்யூபிக் மீட்டர் அளவுக்கு மலைபோல...'

ஈஸ்வரன்
படக்குறிப்பு, ஈசுவரன்

பிபிசி தமிழிடம் பேசிய ஈசுவரன், ''கோவை மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு ஆயிரம் டன்னுக்கும் அதிகமான குப்பைகள் வருகின்றன. ஆனால் வெள்ளலூரில் 500 டன் குப்பைகளை மட்டுமே கையாளும் திறன் உள்ளது. இதனால் மீதமுள்ள குப்பைகள் குவிந்து 15.5 லட்சம் க்யூபிக் மீட்டர் அளவுக்கு மலைபோல் உருவானது. நாள்தோறும் வருகின்ற குப்பைகள் சுத்திகரிப்பட வேண்டும். எங்குமே குப்பைகள் தேங்கக்கூடாது என்பது பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு,'' என்றார்.

வெள்ளலூரில் குப்பை கிடங்கு இயங்கி வந்ததால் சுவாச பிரச்னை, தோல் சார்ந்த ஓவ்வாமை அதிகம் ஏற்படுதாக தெரிவிக்கிறார் வெள்ளலூரைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் மெரினா ஹாக்ஸ். பிபிசி தமிழிடம் பேசியவர், ''எங்கள் குடும்பத்தில் அனைவருக்குமே சுவாசப் பிரச்னை இருக்கிறது. எங்கள் ஊரில் கணக்கெடுத்ததில் பெரும்பாலான வீடுகளில் இந்த சிக்கல் உள்ளது. சில வீடுகளில் குழந்தைகளுக்கு கூட சுவாசப் பிரச்னை ஏற்படுகிறது.

குப்பை சுத்திகரிப்பு மையம் அமைக்கின்றபோது கான்கிரீட் பெல்ட் அமைத்து அதன் மீது குப்பைகளை குவிக்க வேண்டும். அப்போது மழை பெய்கின்றபோது குப்பை மூலம் தண்ணீர் கசிந்து நிலத்தடி நீர் மாசுபடாமல் இருக்கும். ஆனால் வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஓர் இடத்தில் மட்டும் தான் இந்த கான்கிரீட் பெல்ட் அமைக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் மண் மீது தான் குப்பைகளை கொட்டிச் செல்கின்றனர். இதனால் பல இடங்களில் கசிவு ஏற்பட்டுள்ளது.

கோனவாய்க்கால்பாளையம் என்கிற பகுதியில் நிலத்தடி நீர் தற்போதும் மஞ்சள் நிறத்தில் உள்ளது. ஒரு கி.மீ தொலைவில் உள்ள கிணற்றில் இருந்து எடுத்தாலும் மஞ்சள் நிறத்தில்தான் உள்ளது. நிலத்தடி நீர் அந்த அளவு பாதித்துள்ளது.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

வெள்ளலூர் குப்பை கிடங்கு அருகே பேருந்து நிலையம் வந்தால் பயணிகளுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் என்று சொல்கிறார்கள். அதே நிலை தானே இங்கு வசிக்கும் மக்களுக்கும். தற்போது அருகே உள்ள மலுமிச்சம்பட்டி பஞ்சாயத்தின் கீழ் வரும் பகுதிகளில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். குப்பைகளை ஏற்றிச் செல்லும் லாரிகளும் அவற்றை முறையாக மூடாமல் வழி நெடுகிலும் சிதறவிட்டு செல்வார்கள். மாநகராட்சி நிர்வாகம் கால தாமதம் செய்யாமல் தீர்ப்பாயத்தின் உத்தரவை விரைந்து அமல்படுத்த வேண்டும்,'' என்றார்.

பசுமை தீர்ப்பாயம் 12 மாதங்களுக்குள் உத்தரவை அமல்படுத்த வேண்டும் என தெரிவித்திருந்த நிலையில் மூன்று வருடங்களுக்கு மேல் ஆகியும் உத்தரவு முழுமையாக நிறைவேற்றப்படாததால் வழக்கு தொடர்ந்திருந்த ஈசுவரன் கோவை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.

வெள்ளலூர் குப்பை கிடங்கால் ஏற்படும் தண்ணீர் பிரச்னை

வெள்ளலூரில் உள்ள குப்பை எப்படி அகற்றப்படும்?

இந்த நிலையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் திடக்கழிவு மேலாண்மை கண்காணிப்பு குழுவின் தலைவர் ஜோதிமணி கோவைக்கு வந்து வெள்ளலூர் குப்பை கிடங்கை பார்வையிட்டார். அதன் பின் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மேயர், ஆணையர் மற்றும் கவுன்சிலர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தவர், ''தீர்ப்பாயத்தின் உத்தரவில் சட்டப்படி கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்துவிட்டது. தற்போது கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. விஞ்ஞான முறையில் குப்பைகளை அகற்ற வேண்டும். குப்பைகளை அகற்றினால் மட்டும் முடிந்துவிடாது. 10 அடி ஆழத்திற்கு இறங்கியுள்ள நச்சுக் கசிவுகளையும் தோண்டி எடுக்க வேண்டியுள்ளது. அப்படியே விட்டுவிட்டால் 50 ஆண்டுகள் கழித்து நிலத்திற்கு அடியில் மீத்தேன் வாயு உருவாகிவிடும்.

இந்த பணிகளை முழுமையாக முடிக்க மாநகராட்சி நிர்வாகம் 15 மாதங்கள் கேட்டுள்ளனர். கண்காணிப்பு குழு தலைவர் என்கிற முறையில் இந்த பணிகளை நானும் தொடர்ந்து கண்காணிப்பேன். ஆனால் பொதுமக்கள் சுத்திரிகரிப்பு மையம் (micro composite centre) அமைப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அசுத்துமான நீர்
படக்குறிப்பு, அசுத்துமான நீர்

தமிழ்நாட்டில் பல இடங்களில் இந்த நடைமுறை வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இதனால் பாதிப்பு ஏற்படாது என்பதை மக்கள் உணர வேண்டும். தற்போது 32 சுத்திகரிப்பு மையங்கள் கட்டப்பட்டு 12 மையங்கள் செயல்பட்டு வருவதாக கூறினர். மற்ற மையங்களையும் 4 வாரங்களுக்குள் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். எஞ்சிய 35 சுத்திகரிப்பு மையங்களையும் விரைவாக கட்ட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளோம். குப்பைகளை ஏற்றிச் செல்லும் லாரிகளும் முறையாக வழிகளில் சிந்தாமல் ஏற்றிச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்.

குப்பை கிடங்கால் சுற்றுவட்டார பகுதிகளில் என்னென்ன நோய் பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கின்ற என்பதும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. நிலத்தடி நீரும் மாசுபட்டு இருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயோ கேப்பிங் மற்றும் பயோ மைனிங் என்கிற இரண்டு முறை உள்ளது. பயோ கேப்பிங் முறை குப்பை குவியலை நிலத்தோடு மூடிவிடுவது. அது சரியான நடைமுறை இல்லை என்பதால் பயோ மைனிங் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. நிலத்தில் படிந்துள்ள குப்பைகளை முழுவதுமாக தோண்டி எடுத்து நிலத்தை மீட்பது. இந்த பணிகள் முடிந்து ஓர் ஆண்டு தேவைப்படும். அதன் பின் இயற்கையாகவே நிலத்தடி நீர் சரியாகிவிடும்'' என்றார்.

குப்பை மேடு

பிபிசி தமிழிடம் பேசிய ஈஸ்வரன், ''2018-ம் ஆண்டே பசுமை தீர்ப்பாயம் உத்தரவு வழங்கியிருந்தது. அதில் வெள்ளலூரில் புதிதாக குப்பைகளை சேகரம் செய்யாமல் தனியாக 65 சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து புதிதாக வருகின்ற குப்பைகள் அங்கு சேகரிக்கப்படும். வெள்ளலூரில் உள்ள பழைய குப்பைகள் முழுமையாக அகற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அதற்குப் பிறகும் வெள்ளலூரில் அளவுக்கு அதிகமாக குப்பைகள் கொட்டப்பட்டு வந்தன. சுத்திகரிப்பு நிலையங்களும் முழுமையாக செயல்பாட்டிற்கு வரவில்லை. கொரோனாவுக்கு முன்பே இதே நிலைதான் நிலவியது. தற்போது கண்காணிப்பு குழுவின் ஆய்விற்குப் பிறகு பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும்,'' என்றார்.

கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் பிபிசி தமிழிடம் பேசுகையில், ''வெள்ளலூர் குப்பை கிடங்கை கையாள்வது தொடர்பாக பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு தெளிவுபடுத்தியிருக்கிறது. அதனை செயல்படுத்துவதில் தான் கொரோனா பொதுமுடக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது 15 மாத கால அவகாசம் கேட்டுள்ளோம். அதற்குள் பணிகளை முடிப்பதற்கான வேலைகளை தொடங்கியுள்ளோம். மீதமுள்ள சுத்திகரிப்பு மையங்கள் அமைப்பதற்கான பணிகளும் தொடங்கப்பட உள்ளது. பசுமைத் தீர்ப்பாய உத்தரவு மற்றும் வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ள அனைத்து விஷயங்களும் உரிய காலத்திற்குள் முடிக்கப்படும்,'' என்றார்.

சிவப்புக் கோடு
காணொளிக் குறிப்பு, சிசேரியன் மூலம் குழந்தை பெறுவது அதிகரிப்பது ஏன்? காரணங்களும், தவிர்க்கவேண்டியவையும்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: