நாசாவின் டார்ட் விண்கலம்: டிமார்போஸ் சிறுகோளின் பாதை மாறியது உறுதி - விண்வெளி அறிவியல் அதிசயம்

டிமார்போஸ் சிறுகோள் மீது நாசாவின் டார்ட் விண்கலம் மோதியதால் 10,000 கி.மீ தூரத்திற்கு விண்ணில் சிதறல்கள் உண்டானதைக் காட்டும் படம்.

பட மூலாதாரம், CTIO/NOIRLAB/SOAR/NSF/AURA/T KARETA, M KNIGHT

படக்குறிப்பு, டிமார்போஸ் சிறுகோள் மீது நாசாவின் டார்ட் விண்கலம் மோதியதால் 10,000 கி.மீ தூரத்திற்கு விண்ணில் சிதறல்கள் உண்டானதைக் காட்டும் படம்.

பூமியிலிருந்து 1.1 கோடி கி.மீ தொலைவில் இருக்கும் ஒரு சிறுகோள் செல்லும் பாதையில் இருந்து, அதைத் திசை திருப்புவதற்கான தனது சமீபத்திய முயற்சி வெற்றியடைந்துள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கூறுகிறது.

முன்னதாக டிமார்போஸ் விண்கலம் மீது டார்ட் விண்கலம் மீது மோதியதால் விண்ணில் சுமார் 10,000 கிலோமீட்டர் தூரத்திற்கு சிதறல்கள் தடம் பதித்ததைக் காட்டும் படங்கள் வெளியாகியிருந்தன.

ஒரு பெரிய பாறையின் பின் வால் நட்சத்திரம் போன்று புகை பரவுவதை சிலியில் உள்ள தொலைநோக்கியில் படம்பிடிக்கப்பட்டது. இந்த அபாரமான புகைப்படம் மோதலுக்கு இரண்டு நாட்களுக்கு பிறகு சிலியில் உள்ள விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் எடுக்கப்பட்டது.

சிறுகோளின் பாதை விண்ணில் மாறியதை எப்படி கண்டுபிடித்தனர்?

டிமார்போஸ் எனப்படும் 160 மீட்டர் அகலமுள்ள விண்வெளிப் பாறையின் சுற்றுப்பாதையை டார்ட் விண்கலம் கடந்த மாத இறுதியில் தாக்கியபோது, அதன் பாதை மாற்றப்பட்டதை விஞ்ஞானிகள் இப்போது உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஹபிள் விண்வெளி தொலைநோக்கி மற்றும் டார்ட் விண்கலம் சிறுகோள் மீது மோதியபோது, அங்கிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்த சிறிய இத்தாலிய விண்கலமான 'லிசியாக்யூப்' (LiciaCube) ஆகியவற்றால் எடுக்கப்பட்ட படங்கள் மூலம் டிமார்போஸ் சிறுகோளின் இயற்கையான பாதை மாற்றப்பட்டுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் முடிவுக்கு வந்தனர்.

"பிரபஞ்சம் நம் மீது எதை எறிந்தாலும், அதை எதிர்கொள்ள நாசா தயாராக இருக்க முயற்சிக்கிறது என்பதை இந்தப் பணி காட்டுகிறது" என்று நாசாவின் தலைமை நிர்வாகி பில் நெல்சன் கூறினார்.

மோதலுக்கு பின் லிசியாக்யூப் விண்கலம் எடுத்த படம்

பட மூலாதாரம், Asi

படக்குறிப்பு, மோதலுக்கு பின் லிசியாக்யூப் விண்கலம் எடுத்த படம்

மோதலுக்கு முன், டிமார்போஸ் சிறுகோள் 780 மீட்டர் அகலமுள்ள டிடிமோஸ் சிறுகோளை சுற்றிவர சுமார் 11 மணிநேரம் 55 நிமிடங்கள் எடுத்தது. ஒரு பிரிட்ஜ் அளவில் இருக்கும் இந்த டார்ட் விண்கலம் மோதியபின், டிமார்போஸ் டிடிமோசை சுற்றி வருவதற்கான நேரம் 32 நிமிடங்கள் குறைந்து 11 மணிநேரம் 23 நிமிடங்கள் ஆகியுள்ளது.

டார்ட் விண்கலம் மோதியபின் டிமார்போஸ் சுற்றுவதற்கான நேரம் குறைந்தது 73 நொடிகள் மாறுபடும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், இப்போது அதைவிட 25 மடங்கு அதிக நேரம் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

ஒன்றை ஒன்று பிரியாத இரண்டு சிறுகோள்கள்

டிமார்போஸ் சிறுகோள் மீது மோதிய நாசாவின் டார்ட் விண்கலம்

டிமார்போஸ் (Dimorphos) எனப் பெயரிடப்பட்ட 160 மீட்டர் அகலமுள்ள சிறுகோள் மீது டார்ட் மோதியது. Double Asteroid Redirection Test என்பதன் சுருக்கமே DART ஆகும். இரட்டை சிறுகோள்களை திசைமாற்றும் பரிசோதனை என்பது இதன் பொருள்.

டிடிமோஸ் (Didymos) எனப்படும் மற்றொரு சிறுகோளைச் சுற்றி, டிமார்போஸ் சிறுகோள் சுற்றுப்பாதையில் ஏற்படும் மாற்றங்களை டார்ட் திட்டத்தின் வெற்றியை ஆராய்ச்சியாளர்கள் தீர்மானித்தார்கள்.

பூமியிலிருந்து 1.1 கோடி கி.மீ தொலைவில் இந்த டார்ட் விண்கலம் டிமார்போஸ் சிறுகோள் மீது மோதியது.

மணிக்கு 22,000 கி.மீ வேகத்தில் நகர்ந்த டார்ட் விண்கலம் முதலில் சிறிய பாறையையும் பெரிய பாறையையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டியுருந்தது. அதில் உள்ள நேவிகேஷன் சாஃப்ட்வேர் மூலம் சிறுகோள் மீது நேருக்கு நேர் மோதுவதை டார்ட் உறுதி செய்தது.

விண்கலம் கொண்டு மோதப்படுவதற்கு டிமார்போஸ் மற்றும் டிடிமோஸ் ஆகிய இரட்டை சிறுகோள்கள் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன.

மோதுவதற்கு முன்னர் டார்ட் விண்கலத்தால் எடுக்கப்பட்ட டிமார்போஸ் சிறுகோளின் படம்.

பட மூலாதாரம், NASA/JHU-APL

படக்குறிப்பு, மோதுவதற்கு முன்னர் டார்ட் விண்கலத்தால் எடுக்கப்பட்ட டிமார்போஸ் சிறுகோளின் படம்.

பரிசோதனைக்கு முன்பு பூமியில் சுற்றுவட்டப் பாதையில் இவற்றின் சுற்றுவட்டப் பாதை இல்லை. மேலும், விண்கலம் மோதியபின் அவற்றின் சுற்றுப்பாதையில் உண்டாகும் ஒரு சிறிய மாற்றம் ஆபத்தை அதிகரிக்காது என்று உறுதிசெய்யப்பட்டது. ஆனால் நமக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய விண் பாறைகள் உள்ளன.

பூமி மீது சிறுகோள்கள் மோதி பேரழிவு உண்டாகுமா?

பூமியுடன் மோதினால் பேரழிவை உண்டாக்க வல்ல 95% சிறுகோள்களை வானியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். (ஆனால், அவற்றின் பாதை வேறாக இருப்பதால் அவை பூமியுடன் மோத வாய்ப்பில்லை.) எனினும், பூமி மீது மோதி அழிவை உண்டாக்க வல்ல, ஒரு பிராந்தியம் அல்லது நகரத்தின் அளவே உள்ள, ஒப்பீட்டளவில் சிறிய விண் பொருட்கள் கண்டறியப்படவில்லை.

டிமார்போஸ் அளவுல்ல ஒரு பொருள், சுமார் ஒரு கிலோ மீட்டர் அகலமும், இருநூறு மீட்டர் ஆழமும் உள்ள ஒரு பள்ளத்தை உண்டாக்கும். அருகில் உள்ள பகுதிகளில் சேதம் கடுமையாக இருக்கும். எனவே ஒரு சிறுகோள் சற்று மெதுவாக அல்லது வேகமாக செல்லும்படி தூண்டப்படுமா என்று சோதிக்கவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பூமியுடன் மோதும் என்று எதிர்பார்க்கப்படும் வின் பொருட்களின் திசை பல ஆண்டுகளுக்கு முன்பே மாற்றப்பட்டால் அதன் வேகத்தில் பெரிதாக மாற்றம் இருக்க வேண்டியதில்லை.

சிவப்புக் கோடு
காணொளிக் குறிப்பு, டிஜிட்டல் கரன்சி நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்துமா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: