பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை குறைவதால் மனிதர்களுக்கு என்ன ஆபத்து? - சுற்றுச்சூழல் அறிவியல்

பட மூலாதாரம், Press Eye
பட்டாம்பூச்சிகளை பொறுத்தவரை, அவை பார்ப்பதற்கு அழகாக இருப்பதையும் தாண்டி அவற்றால் சூழலுக்கு நன்மைகள் பல விளைகின்றன. அத்தகைய நன்மைகளைப் பயக்கும் பட்டாம்பூச்சிகள் எண்ணிக்கையில் குறைந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இது பூமியின் சுற்றுச்சூழலில் என்ன விளைவை ஏற்படுத்தும்?
பட்டாம்பூச்சி, தேனீ, குளவி போன்ற மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் உயிரினங்கள் எண்ணிக்கையில் குறைவது உணவு உற்பத்தியை பாதிக்குமா?
இன்றைய சூழலில், பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை "கவலைக்குரிய வகையில் குறைவாக உள்ளதாகவும்" தொடர்ந்து குறைந்து வருவதாகவும் பிரிட்டனிலுள்ள சூழலியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
அதுவே, தமிழ்நாட்டில் மாநிலம் முழுமைக்குமாக பட்டாம்பூச்சிகள் கணக்கெடுப்பு பெரியளவில் நடத்தப்படுவதில்லை. மாவட்டவாரியாக சூழலியல் அமைப்புகள் வனத்துறையோடு இணைந்து ஒவ்வோர் ஆண்டும் மேற்கொள்கின்றன.
ஆனால், "இதைவிட இன்னும் விரிவான, பரவலான கணக்கெடுப்பு நடத்த வேண்டிய தேவை உள்ளது" என்று கூறுகிறார் பட்டாம்பூச்சிகள் ஆராய்ச்சியாளர் பாவேந்தன்.

பட மூலாதாரம், Getty Images
பூச்சிக்கொல்லிகளால் குறையும் பட்டாம்பூச்சிகள்
"இதுவரை கிடைத்துள்ள தரவுகளின்படி பார்க்கும்போது, பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துவிட்டதாகச் சொல்லும் அளவுக்கு எந்த வேறுபாடும் தெரியவில்லை. ஆனால், நகர்ப்புறங்களிலும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துகின்ற மலைப்பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களிலும் அவற்றின் எண்ணிக்கை குறைந்துள்ளது தெரிகிறது.
பாதுகாக்கப்பட்ட பகுதிகளைப் பொறுத்தவரை, அவை ஏற்கெனவே "பாதுகாக்கப்பட்டு வருவதால்" அங்கு பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கையில் பெரிய தாக்கம் தெரியவில்லை. ஆனால், "மனிதத் தலையீடுகள் அதிகமுள்ள, குறிப்பாக நகர்ப்புற சுற்றுச்சூழலில் அவற்றுக்குத் தேவையான தாவரங்களை தங்களுக்கே தெரியாமல் மனிதர்கள் அகற்றிவிடுகிறார்கள்," என்றார்.


அத்துடன், "பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படும் வேளாண் நிலங்களில் அந்த வேதிமங்களின் விளைவாக அவற்றின் எண்ணிக்கை குறைகிறது."
மேற்குத்தொடர்ச்சி மலையில் 340க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சி வகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றுள், "சுமார் 320 வகைகள் தமிழகத்தில் காணப்படுவது பதிவாகியுள்ளது," என்கிறார் பாவேந்தன். அடர்த்தியான காடுகள், பாதுகாக்கப்பட்ட காடுகளில் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை ஆரோக்கியமாக உள்ளது.
ஆனால், அதே நிலை கிராமப்புறங்களிலோ நகர்ப்புறங்களிலேயோ இல்லை. ஒரு கிராமம் மலைப்பகுதியிலோ அல்லது பாதுகாக்கப்பட்ட பகுதியிலேயோ இருந்தாலும்கூட, அங்கு பூச்சிக்கொல்லிகளும் செயற்கை உரங்களும் உற்பத்தியை அதிகரிப்பதற்காகப் பயன்படுத்தப்படுவதால் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது," என்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
மாறுபடும் வலசை
பட்டாம்பூச்சிகளின் வலசை மழைப்பொழிவைப் பொறுத்து மாறுபடும் என்கிறார் பாவேந்தன். தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உள்ள தன்னார்வ அமைப்புகள் ஒன்றிணைந்து, இந்திய பட்டாம்பூச்சி வலசைப்பாதை (Butterfly migration India) என்ற பெயரில் குழுவாக இதுகுறித்த தரவுகளை, கடந்த ஆறு ஆண்டுகளாகச் சேகரித்து வருகின்றன.
"வலசை என்பது பட்டாம்பூச்சிகளின் பெருக்கத்தைப் பொறுத்து மாறுபடும். அவற்றின் இனப்பெருக்கம், அவை இருக்கும் இடத்தில் நல்ல சூழல் மற்றும் உணவுக்கான தாவரங்கள் கிடைக்கும்போது நன்றாக நடக்கும். மழைப்பொழிவு இல்லையென்றால், தாவரங்கள் செழுமையாக இருக்காது, உணவு கிடைக்காது அது இடப்பெயர்வையும் பாதிக்கும். வடகிழக்கு பருவமழை தொடங்கும்போது கிழக்குத் தொடர்ச்சி மலையில் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும். அப்போது அங்கிருந்து மேற்குத்தொடர்ச்சி மலைக்கு இடம் பெயரும். ஆகவே, மழைப்பொழிவுக்கும் பட்டாம்பூச்சிகளின் வலசைக்கும் தொடர்புண்டு," என்றார்.
"பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவும் வலசை நடைபெறும். பட்டாம்பூச்சிகளின் இடப்பெயர்ச்சி அதிகமாக நடப்பதற்கும் பருவமழைக்கும் தொடர்புள்ளது. வலசை சரியாக நடைபெறாத ஆண்டுகளும் பதிவாகியுள்ளன, சில நேரங்களில் வலசையே நடைபெறாத நாட்களும் உள்ளன. மழைப்பொழிவு நன்றாக இருந்தால், அவற்றின் இனப்பெருக்கமும் ஆரோக்கியமாக நடந்து, இடப்பெயர்ச்சியும் நிகழும். இல்லையென்றால், பெரிதாக இருக்காது. 2016ஆம் ஆண்டில் வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனது. அந்த ஆண்டில் வலசையும் நடைபெறவில்லை.


அமெரிக்காவில் புகழ்பெற்ற மொனார்க் பட்டாம்பூச்சிகளின் வலசை கடந்த 10 ஆண்டுகளில் குறைந்துகொண்டே வருவது பதிவு செய்யப்பட்டது. கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளில் தான் சில முன்னேற்றங்கள் தெரிகின்றன. ஆனால், தென்னிந்தியாவை பொறுத்தவரை பட்டாம்பூச்சிகளின் வலசை குறித்த ஆய்வுகள் ஆரம்பக்கட்டத்தில் தான் இருக்கின்றன. ஆகவே, இதில் இன்னும் பல விஷயங்களை நாம் ஆராய்ந்து புரிந்துகொள்ள வேண்டியுள்ளது
பட்டாம்பூச்சிகளின் வலசை மற்றும் எண்ணிக்கையைப் பகுப்பாய்வு செய்ய பெரியளவிலான கணக்கெடுப்பு அவசியம். அப்போது தான் அதைத் தெளிவாகச் சொல்ல முடியும்," என்கிறார் பாவேந்தன்.
2020ஆம் ஆண்டில், இமயமலை பகுதியில் வாழும் பட்டாம்பூச்சிகளும் அந்துப்பூச்சிகளும் வெப்பநிலை உயர்வு காரணமாக மலையில் சராசரியாகப் பார்க்கும் பகுதியிலிருந்து சுமார் 1,000 மீட்டர் உயரத்தில் காணப்பட்டதாக 'ஸூவாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா' மேற்கொண்ட கணக்கெடுப்பில் தெரியவந்தது. அந்தக் கணக்கெடுப்பில் 49 வகை அந்துப்பூச்சிகளும் 17 வகையான பட்டாம்பூச்சிகளும் இதுவரை அவை காணப்படாத உயரத்தில் பதிவு செய்யப்பட்டன. சில அந்துப்பூச்சிகள், 2,000 மீட்டருக்கும் மேலான உயரத்தில் பதிவு செய்யப்பட்டன. இதற்கு காலநிலை நெருக்கடியால் உயரும் வெப்பநிலை ஒரு முக்கியக் காரணம் என்று கூறப்பட்டது..

பட மூலாதாரம், PA Media
பிரிட்டனின் பிக் பட்டர்ஃப்ளை கவுன்ட்
பிரிட்டனில் பட்டாம்பூச்சிகள் கணக்கெடுப்பு முயற்சி தொடங்கப்பட்டு, இதுவரையிலான 13 ஆண்டுகளில் இந்த ஆண்டு மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பட்டாம்பூச்சிகள் பதிவாகியுள்ளன.
இந்த ஆண்டின் வெப்பமான கோடையில் தெளிவான புள்ளிவிவரங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்ததாகவும் ஆனால் பல்வேறு வகை பட்டாம்பூச்சிகளைப் பார்க்க முடியாதது கவலையளிப்பதாகவும் காட்டுயிர் பாதுகாப்பு சார்ந்த தன்னார்வ நிறுவனமான பட்டர்ஃப்ளை கன்சர்வேஷன் கூறியுள்ளது.
பிரிட்டனின் மிகப்பெரிய மக்கள் அறிவியல் திட்டங்களில் ஒன்றான பட்டாம்பூச்சிகள் கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக சுமார் 100,000 பட்டாம்பூச்சிகள் பதிவு செய்யப்பட்டன.

மக்கள் அறிவியல் என்றால் என்ன?
உயிரினங்கள் கணக்கெடுப்பு, வாழ்விட தரவு சேகரிப்பு போன்ற அறிவியல் செயல்பாடுகளில் பொதுமக்களை ஈடுபடுத்துவதே மக்கள் அறிவியல். பறவைகள், பூச்சிகள், பட்டாம்பூச்சிகள், தாவரங்கள், ஊர்வனங்கள் என்று பல்வேறு உயிரினங்களைப் பற்றிய தகவல்களை, அவற்றைப் பார்க்கும் பொதுமக்கள் அதற்கென இருக்கும் தளங்களின் வழியே பதிவு செய்வார்கள்.
மக்கள் அப்படிப் பதிவேற்றும் தரவுகளைத் தொகுத்து, பகுப்பாய்வு செய்து அதன்மூலம் கிடைக்கும் அறிவியல் முடிவுகளை ஆய்வாளர்கள் வெளியிடுவார்கள். இந்தத் தகவல்கள் பல்வேறு அறிவியல் செயல்பாடுகளில் அறிவியலாளர்களால் பயன்படுத்தப்படும். இது மட்டுமின்றி, பொதுமக்கள் தாமாக முன்வந்து அறிவியல் ஆய்வுகளுக்கு உதவுவது, முடிவுகளைப் பகுப்பாய்வு செய்வது, சிக்கல்களைத் தீர்க்க உதவுவது போன்ற செயல்பாடுகளும் மக்கள் அறிவியலில் அடங்கும்.

இந்த அமைப்பின் அறிவியல் தலைவர் டாக்டர் ரிச்சர்ட் ஃபாக்ஸ், பட்டாம்பூச்சிகளின் வாழ்விடங்களைப் பாதுகாக்கவும் மீட்டெடுக்கவும் இன்னும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
"அவை செழித்து வளர்வதற்கான வாழ்விடங்கள் இல்லாவிட்டால் இன்னும் அதிகமான பட்டாம்பூச்சிகள் இல்லாமல் போகும்," என்று அவர் கூறினார்.
பிக் பட்டர்ஃப்ளை கவுன்ட் பட்டாம்பூச்சி கணக்கெடுப்பு, ஜோனா லம்லே மற்றும் சர் டேவிட் அட்டன்பரோ போன்ற பிரபலமானவர்களால் ஆதரிக்கப்படுகிறது.
ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மூன்று வார காலத்திற்கு தோட்டங்கள், பூங்காக்கள், கிராமப்புறங்களில் தாங்கள் பார்த்த பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் வகைகளைப் பதிவு செய்யுமாறும் பிரிட்டன் முழுவதுமுள்ள மக்களை பிக் பட்டர்ஃப்ளை கவுன்ட் கேட்டுக்கொள்கிறது.

பட மூலாதாரம், Getty Images
சுற்றுச்சூழல் மாற்றங்களால் பட்டாம்பூச்சிகளும் (Butterflies) அந்துப்பூச்சிகளும் (Moths) எப்படி பாதிக்கப்படுகின்றன என்பது பற்றிய தகவல்களைச் சேகரிக்க இந்த முடிவுகள் விஞ்ஞானிகளுக்கு உதவுகின்றன.
பட்டாம்பூச்சிகளின் உணவு, இனப்பெருக்கம், உறைவிடம் போன்ற தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள அனுமதிக்கும் வகையிலான வாழ்விடங்களை உருவாக்க பிரிட்டன் மக்கள் தங்கள் தோட்டங்களில் ஹோலி என்ற புதர்ச்செடி, பூக்கும் ஐவி செடி, எல்ம்ஸ், நெட்டில்ஸ் போன்ற தாவரங்களை வளர்க்க பரிந்துரைக்கின்றனர்.
ஒட்டுமொத்த எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், 2000ஆம் ஆண்டுக்கு முன்பாக ஸ்காட்லாந்தில் எப்போதாவது மட்டுமே பதிவு செய்யப்பட்ட ஹோலி ப்ளூ என்ற பட்டாம்பூச்சி வகை உட்பட சில குறிப்பிடத்தக்க வெற்றிக் கதைகளும் கிடைத்துள்ளன.
கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது ஹோலி ப்ளூ 120% அதிகரித்து ஸ்காட்லாந்து நிலப்பகுதியில் பரவியுள்ளது.
இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக வெப்பம் மிகுந்த கோடையாக இருந்தது, காமன் ப்ளூ, கேட் கீப்பர் போன்ற வகைகள் முறையே 158%, 58% அதிகரித்திருப்பதாகக் கருதப்படுகிறது.
ராயல் என்டமாலஜிக்கல் சொசைட்டி என்ற பூச்சியியல் அமைப்பின் தலைமையிலான ஒரு பாதுகாப்பு திட்டத்தின் விளைவாக உயிரினங்களை எப்படி அழிவிலிருந்து காப்பாற்றுவது என்பதை இந்த வெற்றி காட்டுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
பட்டாம்பூச்சிகளின் சூழலியல் சேவைகள்
"மகரந்த சேர்க்கையை நம்பியிருக்கும் தாவர வகைகளுக்கு பட்டாம்பூச்சிகள், தேனீக்கள், குளவிகள் போன்றவற்றின் இருப்பு மிகவும் முக்கியம். அவை குறையும்போது அவற்றுடைய மகரந்தச் சேர்க்கையை நம்பியிருக்கும் உணவு உற்பத்தியையும் அது பாதிக்கும்," என்கிறார் பாவேந்தன்.
பட்டாம்பூச்சிகளை சூழலியல் அளவுகோலாக ஆய்வாளர்கள் கருத்தில் கொள்கின்றனர். ஒரு சூழலியல் அமைப்பில் அவை காணப்படவே இல்லையென்றால் அங்கு நிச்சயம் ஏதோ பிரச்னை உள்ளதாகக் கருதப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் முன்பு அதிகமாகக் காணப்பட்ட பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை காலப்போக்கில் குறைந்துகொண்டே வரும்போது, அங்கு சூழலியல்ரீதியாக வாழ்விடச் சிதைவு நிகழ்வதற்கான குறியீடாக அந்த எண்ணிக்கைக் குறைவு கருதப்படுகிறது.
அவை மகரந்தச் சேர்க்கையை மேற்கொள்வதன் மூலம், பழங்கள், காய்கறிகள், பூக்கள் என்று பல்வேறு வகையான தாவரங்களின் உற்பத்தியிலும் பங்கு வகிக்கின்றன. பெரும்பாலான தாவரங்கள், இனப்பெருக்கத்திற்காக பட்டாம்பூச்சிகள், தேனீக்கள் மற்றும் குளவிகளையே சார்ந்துள்ளன.
தாவரங்களின் விதைப் பரவலில் மட்டுமின்றி, உணவுச் சங்கிலியிலும் அவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. முதன்மையான பங்கு என்றுகூடக் குறிப்பிடலாம். பல்லிகள், பறவைகள், சிலந்திகள், தவளைகள் போன்ற உயிரினங்களின் உணவில் ஒரு பங்காக உள்ளன. அதுவும் பட்டாம்பூச்சியின் நன்கு வளர்ந்த வடிவத்தை மட்டுமின்றி, புழு வடிவமாக இருக்கும்போது, கூட்டுப்புழுவாக மாறும்போது, அதிலிருந்து பட்டாம்பூச்சியாக மாறியபிறகும் என அவற்றின் வாழ்விலுள்ள அனைத்து கட்டங்களிலும் உணவாகச் செயல்படுகின்றன.
பட்டாம்பூச்சிகள் வாழ்விடம் மற்றும் காலநிலை நெருக்கடிக்கு மிகுந்த உணர்திறன் கொண்டவை என்பதால், வாழ்விடங்கள் இழப்பு, சிதைவு உள்ளிட்ட காலநிலை நெருக்கடியின் பரந்த விளைவுகளை அவதானிப்பதற்கான ஓர் அளவுகோலாகவும் பட்டாம்பூச்சிகள் பயன்படுகின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













